-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2 : பகுதி 10
சட்டசபைக்குள் முட்டல் மோதல்
காங்கிரசில் இரு பிரிவினர் இருந்தனர் என்பது ஊரறிந்த விஷயம் அல்லவா? அப்போதைய சுயராஜ்ய கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்தவர் சி.ஆர்.தாஸ். மிகத் திறமையான வழக்கறிஞர், வங்காளம் தந்த சிறந்த தேசபக்தர்களுள் ஒருவர்.
அரவிந்தரும் வங்கத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு புரட்சிக்காரராக விளங்கியவர். இவர் மீது அலிப்பூர் சதிவழக்கு என்ற பெயரில் ஒரு வெடிகுண்டு வழக்கைத் தொடுத்து இவரை எப்படியாவது சிறையில் தள்ளிவிட பிரிட்டிஷ் அரசு முயற்சி செய்து அவரை சிறைபிடித்தது. அப்போது அரவிந்தர் மீதான வழக்கில் அவர் சார்பாக வாதாடி வெற்றியும் பெற்றவர் சி.ஆர்.தாஸ்.
இவர் தன்னுடைய சொத்துக்களை யெல்லாம் நாட்டிற்காக எழுதி வைத்துவிட்ட பெருந்தகை. இப்படிப்பட்ட பெரிய மனசுடைய தேசபக்தரை நம்மிடையே நீண்ட நாட்கள் விட்டு வைக்க இறைவனுக்கு மனமில்லையோ என்னவோ, இவரை 1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டான்.
சி.ஆர்.தாஸ் என்றே அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் இறவாப் புகழ் பெற்று அமரர் ஆனார். சுயராஜ்யக் கட்சிக்கு இவரது இறப்பினால் பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டது. தலைமை தாங்கி நடத்தி வந்த பெருந்தலைவர் இல்லாததால் சுயராஜ்யக் கட்சி தன்னையே காங்கிரசுக்கு அர்ப்பணித்து அதோடு இணைந்துவிட்டது.
சட்டசபைப் பிரவேசத்தை காங்கிரஸ் அனுமதித்த பின்பு சட்டசபைக்கு மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள எல்லா ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் அதாவது கார்ப்பரேஷன், முனிசிபாலிடி போன்ற உள்ளூர் அமைப்புகளுக்குள்ளும் காங்கிரசார் வெற்றி பெற்று நுழைய முற்பட்டு விட்டனர். காங்கிரசின் பெருந்தலைவர்களும் ஆங்காங்கே ஊரக அமைப்புகளில் பதவிகளை அடைந்தனர்.
கல்கத்தா மாநகராட்சியின் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திர போசும், அலகாபாத் முனிசிபாலிடிக்கு ஜவஹர்லால் நேருவும், பிகாரில் பாட்னா முனிசிபாலிடிக்கு பாபு ராஜேந்திர பிரசாத்தும், குஜராத்தில் அகமதாபாத் நகரில் வல்லபபாய் படேலும், பம்பாயில் வித்தல்பாய் படேலும் தலைவர்களாகப் பதவியேற்றனர். வெள்ளைக்காரர்களே நிர்வாகம் செய்து வந்த இதுபோன்ற அமைப்புகளில் இந்திய தேசியத் தலைவர்கள் உட்புகுந்து நிர்வாகம் செய்யத் தொடங்கிய நிலையில் இவர்களுடைய நிர்வாகத் திறமை வெளி உலகுக்குத் தெரிய வந்தது.
இந்தத் தலைவர்கள் அனைவருமே மிகத் திறமையானவர்கள். அந்தந்த நகரங்களின் நிர்வாகம் சிறந்த முறையில் நடைபெறலாயிற்று. மக்கள்நலப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தனர். அப்படி இவர்கள் அடிப்படை நிர்வாகத்தை இங்கு கற்றதன் பயனாக பின்னர் நாட்டை ஆளும் முறை வந்தபோது அனைவரும் தங்கள் திறமைகளை வெளிக்கொணர முடிந்தது.
1925-ஆம் வருஷம் கான்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு கவியரசி சரோஜினி நாயுடு தலைவரானார்.
காங்கிரசுக்குத் தலைமை தாங்கிய முதல் பெண்மணி எனும் பெருமை அன்னிபெசன்டுக்குத் தான். அவருக்கு அடுத்ததாக வந்த பெண் தலைவர் கவியரசி சரோஜினி. இவருக்குப் பிறகும் ஒருவர் வந்தார் அவர் பெயர் நெல்லி சென்குப்தா. நம் காலத்தில் இந்திரா காந்தியும், அவரது மருமகள் சோனியா காந்தியும் அந்தப் பதவிக்கு வந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
கான்பூர் காங்கிரசில் அந்த ஆண்டு தலைவராக பதவி ஏற்றிருந்த காந்திஜி தன் அன்பிற்குரிய சரோஜினியிடம் பதவியை ஒப்படைத்தார்.
1926-ஆம் ஆண்டின் தொடக்கமே சட்டசபைப் பிரவேசம் எனும் திட்டத்திற்காக தன்னைத் தயார் படுத்திக் கொள்ளத் தொடங்கியது. சட்டசபைக்குப் போகலாம் எனும் முடிவு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதாவது 1923-லேயே எடுக்கப்பட்டிருந்தாலும், நாளாக நாளாக சட்டசபைக்குச் செல்வதிலும், அங்கு ஆட்சியாளர்களோடு முரண்டு பிடிப்பதிலும் மக்களுக்கு ஒருவித சலிப்புத் தோன்றிவிட்டது.
தில்லி சட்டமன்றத்தில் அந்த ஆண்டு வரவு- செலவு கணக்குகளை இரட்டை ஆட்சி முறை அடிப்படையில் தாக்கல் செய்துவிட்டு மோதிலால் நேரு வெளிநடப்பு செய்துவிட்டார். அப்படி அவர் வெளியேறியதால் நிர்வாகம் ஒன்றும் ஸ்தம்பித்துவிடவில்லை. வெள்ளைக்காரர்கள் தொடர்ந்து நிர்வாகத்தைத் தொய்வில்லாமல் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆக, இந்த இரட்டை ஆட்சிமுறை இந்தியர்களின் கைகளுக்கு ஒன்றும் பெரிய வலுவைத் தந்துவிடவில்லை என்பது தெளிவாகியது.
ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிதவாதிகள் அதாவது சுயராஜ்யக் கட்சியில் இருந்த பெருந்தலைவர்களுக்குள் கசப்பு உண்டாயிற்று. லாலா லஜபதி ராய், மோதிலாலின் செயலை விரும்பாமல் சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார்.
அதற்கு அடுத்த ஆண்டு 1926-இல் காங்கிரசுக்கு சென்னையைச் சேர்ந்த எஸ்.சீனிவாச ஐயங்கார் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் மிகச் சிறந்த அறிவாளி, நிர்வாகத் திறமையுள்ளவர். கெளஹாத்தி நகரில் நடந்த காங்கிரசுக்கு இவர் தான் தலைமையேற்றார். இவர் காலத்தில் காங்கிரஸ் மகாநாட்டையொட்டி ‘கதர் கண்காட்சி’ என்ற ஒன்று செயல்படத் தொடங்கியது. பின்னர் இது ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டின் போதும் கதர் கண்காட்சி நடத்துவது என்பது செயல் திட்டங்களில் ஒன்றாகிப் போனது.
இந்த கதர் கண்காட்சியின் நோக்கம், ராட்டை நூற்றல், கைத்தறித் தொழிலை வளப்படுத்துதல் போன்றவை. பல மாகாணங்களிலிருந்தும் பல்வேறு வகை கைத்தறி, கதர் ஆடைகள் இங்கு காட்சிக்கும் விற்பனைக்கும் கொண்டு வரப்பட்டன.
அப்போதெல்லாம் நாட்டில் இத்தனை மாநிலங்கள் கிடையாது அல்லவா? மாகாணங்கள் மிகக் குறைவு. ஆகையால் வெகு சில மாகாண சட்ட மன்றங்களே இருந்த நிலையில் அவற்றுக்கு காங்கிரஸ்காரர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் பெரிதாக ஒன்றும் சாதித்ததாகத் தெரியவில்லை. எந்தவொரு விஷயத்திலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவே இறுதி என்பதால், இவர்கள் சபையில் பேசலாம், தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம், விவாதிக்கலாம் அவ்வளவே. இறுதி முடிவு எஜமானர்கள் கையில்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் நிறைவேற்றும் தீர்மானங்கள் எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை. வரவு- செலவு திட்டத்தை காங்கிரசார் நிராகரித்தாலும் அதையும் மீறி ஆட்சியாளர்கள் அதை அமல் படுத்திவிடுவார்கள். சட்டசபையில் எத்தனை முறை அரசாங்கத் தீர்மானங்களைத் தோற்கடித்தாலும், அசுரன் தலைபோல அது மீண்டும் மீண்டும் கொண்டுவரப்பட்டு கடைசியில் வைஸ்ராயின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடும். இப்படியொரு இரட்டை ஆட்சி முறையில் என்ன தான் சாதித்துவிட முடியும்?
1927-ஆம் வருஷம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வைஸ்ராய் இர்வின் பிரபுவிடமிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த சமயத்தில் காந்திஜி தென் இந்தியாவில் மங்களூரில் இருந்தார். அவருக்கும் அந்த அழைப்பு வரவே, ஏதோ மிக முக்கியமான அவசர விஷயம் என்று நினைத்து தன்னுடைய பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு தில்லிக்குப் பயணமானார்.
எல்லா தலைவர்களும் சென்று நவம்பர் 5ஆம் தேதி தில்லியில் வைஸ்ராயைச் சந்தித்தனர். அப்போது அவர் அந்தத் தலைவர்களிடம், இந்தியாவுக்கு எப்படிப்பட்ட ஆட்சி அமைக்க அனுமதி தரலாம் என்பது பற்றி விசாரித்து அறிவதற்காக சைமன் எனும் ஆங்கிலேயர் தலைமையில் ஒரு கமிஷன் நியமிக்கப் பட்டிருப்பதாகவும், அந்த கமிஷன் இந்தியாவுக்கு வந்து இங்குள்ளவர்களைச் சந்தித்துத் தனது அறிக்கையை பிரிட்டிஷ் அரசுக்குக் கொடுக்க இருப்பதாவும் லண்டனில் இருக்கும் இந்தியா மந்திரி அனுப்பிய கடிதத்தை எல்லா தலைவர்களிடமும் இர்வின் பிரபு கொடுத்தார்.
அந்தக் கடிதத்தின் பிரதியொன்றை வைஸ்ராயிடமிருந்து பெற்றுக்கொண்ட காந்திஜி அவரிடம் இது குறித்து மேலும் ஏதேனும் செய்திகள் இருக்கிறதா என்று வினவ, வைஸ்ராய் வேறொன்றும் கிடையாது என்று சொல்லிவிட்டார். ‘இதைச் சொல்லவா தன்னை மங்களூரிலிருந்து தில்லிக்கு வரவழைத்தார் இந்த வைஸ்ராய். ஒரு அணா அஞ்சல் தபால் மூலம் இந்தச் செய்தியை எனக்குத் தெரிவித்திருக்கலாமே’ என்று வைஸ்ராயின் செயலுக்காக வருத்தப்பட்டார் காந்திஜி.
வேலை மெனக்கெட்டு மங்களூரில் தன்னுடைய பணிகளையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு, ஏதோ என்னவோ என்று ஓடிவந்தால், ‘ஒன்றுமில்லை, சைமன் என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் வருகிறது’ என்று செய்தி சொல்லியல்லவா அனுப்பிவிட்டார் என்று வருந்தினார் காந்திஜி.
1927 நவம்பர் மாதம் 5-ஆம் தேதி காந்திஜியிடம் இந்த விவரம் சொல்லப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் அதாவது நவம்பர் 8-ஆம் தேதி, சைமன் கமிஷன் அமைக்கப்பட்டிருப்பது, அது இந்தியா வந்து இந்திய மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் என்ற செய்தியை அரசாங்கம் வெளியிட்டது. மூன்று நாட்கள் இடைவெளியில் இந்தத் தகவல் பத்திரிகை செய்தியாக அவசர அவசரமாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று வினவினார் அன்னிபெசன்ட்.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த விஷயத்தில் அத்தனை அவசரம் காட்டக் காரணம் என்னவென்பது புரிந்தது. அங்குள்ள ஆளும் கட்சி 1929-இல் இங்கிலாந்தில் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். அதற்குள்ளாக இந்த வேலையை முடித்து விட்டால் தங்கள் சாதனையைச் சொல்லி வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு.
பிரிட்டிஷ் அரசு நியமித்த சைமன் கமிஷனில் இந்தியர் எவரும் உறுப்பினராக இல்லை. இந்திய மக்களின் எண்ணங்களை, உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய இந்தியர் எவரும் உறுப்பினராக இல்லாத அந்த கமிஷனை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆகையால் எல்லா கட்சியினரும் சைமன் கமிஷனைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்து விட்டனர். காங்கிரஸ் கட்சியும் தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த கமிஷன் அமையாததால் தாங்களும் இதை எதிர்ப்பதாக அறிவித்தனர்.
ஏற்கனவே புண்பட்ட எங்கள் நெஞ்சில் கோல் கொண்டு குத்துவது போலிருக்கிறது இந்தச் செயல் என்று அன்னிபெசன்ட் அறிவித்தார். 1927-இல் சென்னையில் டாக்டர் அன்சாரி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு காந்திஜி வரவில்லை. சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தால், அது போகுமிடங்களில் எல்லாம் நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்பாட்டம் செய்யவேண்டுமென்று அந்த காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்தியர்களின் ஒரே கோரிக்கை ‘பரிபூரண சுதந்திரம்’, இதற்கு மாற்றாக எந்தவித சீர்திருத்தங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே சைமன் கமிஷனை இந்தியா முழுவதும் எதிர்ப்போம் என்றது சென்னை காங்கிரஸ்.
அதற்குப் பிறகு இந்திய அரசியலில் ஒரு பரபரப்பு நிலவியது. இங்கிலாந்திலிருந்து வரும் சைமன் கமிஷனை எதிர்ப்போம் என்று இந்தியாவில் இருந்த எல்லா கட்சிகளும், தமிழ்நாட்டில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி என்ற ஒன்றைத் தவிர, மற்ற அனைவரும் ஒரே குரலில் ‘எங்கள் கோரிக்கை பரிபூரண சுயராஜ்யமே தவிர சீர்திருத்தங்கள் அல்ல, ஆகவே சைமனை எதிர்ப்போம் என்று உரக்கக் கூவினர்.
என்ன வேடிக்கை பாருங்கள், இந்தியா முழுவதும் திரண்டெழுந்து சைமனை எதிர்க்கும்போது, தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி மட்டும் ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசிக் கொண்டு இருக்கவே விரும்பியது என்பது மிகப் பெரிய கொடுமை. இது தென் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைக்குனிவு.
1928 பிப்ரவரி 3-ஆம் தேதி சைமன் கமிஷன் குழுவினர் பம்பாயில் வந்து இறங்கினர். அன்றைய தினம் இந்திய நாடு முழுவதிலும் எங்கும் ஹர்த்தால், பணிகள் முடங்கின. மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் ஊர்வலங்களும், எதிர்ப்புக் கூட்டங்களும் நடத்தித் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தார்கள். சென்னையில் நடந்த கூட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதில் மூவர் உயிர் இழந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். கல்கத்தா நகரத்தில் மாணவர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டு ஏராளமான பொருள் சேதமும், மாணவர்களுக்குக் காயமும் ஏற்பட்டன.
இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தபின் முதன்முதலாக சைமன் கமிஷன் விஜயம் செய்ய வேண்டிய இடம் தில்லி. ஆகையால் தில்லி நகரம் முழுவதும் ‘சைமனே திரும்பிப் போ’ என்று எழுதப்பட்ட ஏராளமான விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டக் காரர்களும் கைகளில் இந்த வாசகம் எழுதப்பட்ட அட்டையைத் தாங்கிக் கொண்டிருந்தனர். இந்தியா முழுவதும் அன்று இப்படிப்பட்ட அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட மக்கள் எழுச்சியின் விளைவுகள் என்ன? அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(10)”