ஸ்வதந்திர கர்ஜனை- 2(9)

-தஞ்சை வெ.கோபாலன்

வைக்கம் மகாதேவர் ஆலயம்

பாகம்-2 :பகுதி 9

வைக்கம் போராட்டம்

1925-ல் காந்திஜி விடுதலையாகி வெளியில் வந்தவுடன் தேசபக்தர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. சட்டசபைக்குச் செல்ல வேண்டுமென்ற கட்சியார்  ‘சுயராஜ்ய கட்சியார்’ என அழைக்கப்பட்டனர். இந்த சுயராஜ்யக் கட்சியார் பல மாகாணங்களில் வெற்றி பெற்று மாகாண சட்டமன்றங்களுக்குள் சென்று விவாதங்களில் ஈடுபடலாயினர்.

மத்திய மாகாணம், வங்காளம் ஆகிய மாகாணங் களில் சுயராஜ்யக் கட்சியார் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டனர். அங்கெல்லாம் இரட்டை ஆட்சி முறை தொடங்கப்பட்டது. ஆட்சியில் சட்டமன்றத்தில் சில துறைகளும், கவர்னரின் நேரடிக் கண்காணிப்பில் சில துறைகளும் இயங்கும் முறைக்கு  ‘இரட்டை ஆட்சி முறை’ என்று பெயர். அப்படி அவர்கள் பெரும்பான்மை பெற்ற மாகாணங்களில் சுயராஜ்யக் கட்சி ஆட்சி ஏற்பட்டுவிட்டது.

ஆனால் வங்காளத்தில் சி.ஆர்.தாஸ் தன் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தும் தானும் மந்திரிசபை அமைக்க முன்வரவில்லை, எதிர்க்கட்சியினரான பிரிட்டிஷாரின் ஆதரவாளர்களுக்கும் ஆதரவளிக்கவில்லை.

சுயராஜ்யக் கட்சியினர் சட்டசபைகளுக்குள் சென்று அங்கு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தலைவலி கொடுக்க வேண்டுமென்று சொல்லி வந்தார்கள். அந்தத் தலைவலியை இப்போது வங்காளத்தில் கொடுக்கத் தொடங்கினார் சி.ஆர்.தாஸ். இந்தத் திட்டத்துக்கு காரணமான மாண்டேகு செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தத்தின் உயிர்நாடியை இவர்களுடைய நடவடிக்கை தகர்த்துவிட்டது. அதாவது பெரும்பான்மை பெற்று சட்டசபைக்குள் சென்று உள்ளுக்குள்ளிருந்தே ஒத்துழையாமையை நடத்துவது, சரியான ராஜதந்திரம் தான்.

***

அந்த ஆண்டில் தென்னாட்டில் மலையாள நாட்டில் உள்ள ‘வைக்கம்’  எனும் தலத்தில் ஹரிஜன மக்கள் சில குறிப்பிட்ட தெருக்களில் நடமாடுவதைத் தடுத்தது திருவாங்கூர் சமஸ்தான அரசு. கோயில் அமைந்துள்ள பகுதியில் இவர்கள் நடந்தால் தீட்டு என்பது அரசின் கருத்து.

1924-ஆம் வருஷம் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரையில் இந்த அரசாணையை எதிர்த்து சத்தியாக்கிரகப் போராட்டமொன்று நடந்தது. கேரள நாட்டுத் தலைவர்களில் சிலர் இதை தொடர் போராட்டமாக நடத்தி வந்தனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராக இருந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரும் இந்தப் போராட்டத்தில் சென்று கலந்து கொண்டார். அந்த வைக்கம் சத்தியாக்கிரக நிகழ்ச்சிகள் குறித்து சற்று விரிவாக இங்கு பார்க்கலாமே.

நம்மில் பலர் ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’ என்று ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்வதையும், பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரை  ‘வைக்கம் வீரர்’ என்ற அடைமொழியோடு குறிப்பிடுவதையும் கேட்டிருக்கிறோம். இல்லையா? அந்த வைக்கம் சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று  தெரியவில்லை. ஆர்வம் உள்ளவர்களுக்காக அந்த சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி சிறிது இப்போது பார்க்கலாம்.

எந்தவொரு பழைய நிகழ்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளும்போது, அந்த நாளில் நிலவிய சமூக அமைப்பு, வாழ்க்கை முறை, மக்களின் கண்ணோட்டம் இவற்றை மனதில் கொண்டு அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்த நிகழ்ச்சியாகத் தான் அதைக் கவனிக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலைகள் எனும் எடைக்கல்லைக் கொண்டு அன்றைய நிகழ்ச்சிகளை, நடவடிக்கைகளை எடைபோடக் கூடாது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய தீண்டாமை, அதிலும் கேரளப் பகுதிகளில் நிலவிய ஆச்சாரம், இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிட முடியாதது.  எனவே 1924-25 ஆண்டு வாக்கில் கேரள பிரதேசமான வைக்கத்தில் தீண்டாமை எப்படி கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும், என்பதை மனதில் நிறுத்தி மேலே படியுங்கள்.

தீண்டாமை என்பது நமக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சாபக்கேடு. இதை கற்றறிந்த பலரும் சொன்னார்கள். இந்து மத சாஸ்திரங்களில் இதுபோன்ற தீண்டாமை கொள்கைகளுக்கு ஆதாரமே இல்லையென்று பல பெரியோர்கள் சொன்னார்கள்; யார் கேட்கிறார்கள்? அந்தந்தக் காலத்துக்கு சில கேடுகள் நம்மை வந்து ஒட்டிக் கொள்கின்றன. இன்றைய முன்னேறிய சமூகத்தில் வேரோடிவிட்ட சில சமுதாயக் கேடுகளும் இருக்கின்றன. இப்போது இங்கு அவற்றைப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை என்பதால் தீண்டாமையைப் பற்றி மட்டும் கவனிப்போம்.

இந்தியாவில் இந்து சமூகத்தில் இடைப்பட்ட காலத்தில் மனிதருக்குள் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, உயர்ந்த ஜாதி-  தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாட்டைக் கடைபிடித்து, மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரைத் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

இதன் காரணமாகவே, ஒப்பிலாத இந்த சமுதாயம் பலம் இழந்து, ஒற்றுமை கெட்டு, தாழ்ந்து போயிற்று. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகாத்மா காந்தி இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமானால் இந்த வேறுபாடுகளை முதலில் களைந்த பின்னர் தான் நாம் சுதந்திரம் பெறவோ, அதனைக் காப்பாற்றவோ முடியும் என்பதை உணரத் தொடங்கினார்கள்.

இந்தப் பின்னணியில்தான் 1924-25-இல் கேரளப் பிரதேசத்தில் வைக்கம் எனும் ஊரில் நடைபெற்ற போராட்டக் களத்தை நாம் பார்க்க வேண்டும்.

அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் எனும் தலம் ஒரு புண்ணிய க்ஷேத்திரம். இங்கு உள்ள சிவன் ஆலயத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகள். எல்லாப் பிரிவு மக்களும் இந்த நான்கு வீதிகளையும் பயன்படுத்திக் கொண்டு ஆலயத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள் ஒரு காலகட்டம் வரை.

திடீரென்று ஒரு நாள் இந்த மாட வீதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக் கூடாது என்று வைதீக இந்துக்கள் சிலர் தடை போட்டனர். நான் முன்பே குறிப்பிட்டபடி கேரள மாநிலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மிகக் கடுமையான தீண்டாமை உச்சத்தில் இருந்த காலம் அது. சமூக அந்தஸ்தில் நம்பூதிரிகள் மேலாகவும், ஈழவர்கள் எனப்படும் பிரிவினர் கீழ்தட்டிலும் வைத்துப் பார்க்கப் பட்டனர்.

தீண்டாமை எனும் கொடுமை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து கேரளத்தில் சற்று மாறுபட்டிருந்தது. அங்கு மேல் ஜாதியினர் தாழ்த்தப்பட்ட ஈழவர்களை பார்த்தாலோ, கிட்டத்தில் நெருங்கினாலோ, தீண்டினாலோ தீட்டு எனும் எண்ணம் பரவலாக இருந்து வந்தது.

இப்படிப்பட்ட நிலைமைக் கண்டு காங்கிரஸ்காரர்கள் மகாத்மா காந்தியடிகளின் ஆலோசனையைக் கேட்டு அங்கு இந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்வது என்று முடிவு செய்தனர். சத்தியாக்கிரகம் நினைத்தவுடன் அந்த நாட்களில் தொடங்கிவிட முடியாது. அதிலும் வைக்கம் என்பது திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உள்பட்டது. சுதேச சமஸ்தானங்களில் சுதந்திரப் போராட்டம் விரைந்து நடக்காத காலம் அது. ஆகவே அங்குள்ள சீர்திருத்தக்காரர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது.

சத்தியாக்கிரக முகாம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் நாட்டின் பல பாகங்களிலிருந்து தொண்டர்கள் வந்து தங்க ஆரம்பித்தனர். இந்தப் போராட்டத்தை தலைமை வகித்து நடத்த கே.பி.கேசவ மேனன் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர் தவிர,  கேளப்பன் நாயர், டி.கே.மாதவன், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு, திருவனந்தபுரம் வக்கீல் குஞ்சுகிருஷ்ண பிள்ளை, சாத்தக்குடி நாயர், சிட்டேத்தில் சங்குப் பிள்ளை, செங்கணாச்சேரி பரமசிவம் பிள்ளை, மன்னத்து பத்மநாபன் நாயர் ஆகியோர் இதில் பங்கு கொண்டனர். இந்த மன்னத்து பத்மநாபன் பின்னாளில் கேரள முதன் மந்திரியாகவும் ஆனார் என்பதை  நினைவில் கொள்வோம்.

பஞ்சாபிலிருந்து ஆரிய சமாஜத்தினர் இங்கு முகாமிட்டு தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாடு காங்கிரசில் பெரும் தலைவராக விளங்கிய ஈரோடு வே.ராமசாமி நாயக்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் வைக்கம் போய்ச் சேர்ந்தனர். அந்தக் குழுவில் பங்கு கொண்டவர்களில் கோவை அய்யாமுத்து, ‘சமதர்சினி’  பத்திரிகை ஆசிரியர் பாலகிருஷ்ண பிள்ளை, சாமி சத்தியவரதன், கரூர் பி.கே.அய்யா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

கோவை அய்யாமுத்து,  ராஜாஜி, ஈ.வெ.ரா. ஆகியோருடன் நெருங்கிப் பழகிய நண்பர்; தமிழகத்தில் கதர் இயக்கத்தின் தந்தையாக இருந்தவர். ஈ.வே.ரா.வுடன் அவரது மனைவி நாகம்மையும் பங்கு கொண்டார்.

மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்தத் தொடங்கிய காலத்தில் ஈ.வே.ரா. அதில் தீவிரப் பங்கு கொண்டார். 1921-இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஓர் ஆண்டு சிறை தண்டனையும் பெற்றார். அப்போது அவர் கோவை, சென்னை ஆகிய சிறைகளில் இருந்தார். இவருடைய அண்ணனும் மறியலில் ஈடுபட்ட போராட்ட வீரர்.

ஈ.வே.ரா,  ராஜாஜியின் நெருங்கிய நண்பர். திருச்செங்கோடு புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைக்கும் பணியில் ராஜாஜிக்கு உறுதுணையாக இருந்தவர் ஈ.வே.ரா;  கதர் தொண்டில் ஈடுபட்டு கதர் மூட்டைகளைத் தோளில் சுமந்துகொண்டு தெருத் தெருவாக விற்று வந்தவர். ராஜாஜியின் ஆதரவோடு இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பதவி வகித்தார்.

வைக்கம் கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளிலும் வேலி அமைத்து போலீஸ் காவல் இருந்தது. போராட்ட முகாமிலிருந்து தொண்டர்கள் பலர் சென்று அந்த வேலிக்கருகில் நின்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். நாள் முழுவதும் அங்கு போராட்டக் காரர்கள் பஜனை செய்து கொண்டும், நூல் நூற்றுக் கொண்டும், கோஷங்கள் போட்டுக் கொண்டும் அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்கள் களைப்படைந்த பின்னர் வேறொரு கோஷ்டி அங்கு வந்து அதே வழியில் போராட்டம் நடத்துவர். இவர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டால், மற்றொரு கோஷ்டி வரும், கைதாகும். இப்படி பல மாதங்கள் சத்தியாக்கிரகம் நடைபெற்று வந்தது. மகாத்மா காந்தியடிகளின் வழிகாட்டுதலோடு போராட்டம் அமைதியாக நடைபெற்று வந்தது.

வைக்கத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தை காந்திஜி ஆதரிக்கக் கூடாது என்று ஏராளமானோர் அவருக்குக் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் போராட்டத் தலைவர் கே.பி.கேசவ மேனன் கைது செய்யப்பட்டார். அவர் இடத்தில் மதுரை தேசபக்தரும், பிரபல காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ஜார்ஜ் ஜோசப் என்பவர் தலைமை வகித்து நடத்தினார். அப்போது காந்திஜி  ‘இந்து சமூகத்தில் வேரோடியுள்ள இந்த சமுதாயக் கேட்டை எதிர்த்து இந்துக்களே போராடட்டும், ஜார்ஜ் ஜோசப் கிறிஸ்தவர் என்ற பிரச்னை எழுப்பப்படும்.  ஆகவே அவர் இதில் நேரடியாக தலையிட வேண்டாம்’ என்று ஒரு கடிதம் எழுதினார்.

போராட்டத்தில் தெருக்களில் போட்டுள்ள வேலிகளை அப்புறப்படுத்த சிலர் முயன்றபோது, காந்திஜி அப்படிச் செய்ய வேண்டாம், வன்முறை நமது வழி அல்ல என்பதை ஒரு கடிதம் மூலம் தெரியப் படுத்தினார்.

‘வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது உண்ணாவிரதம் இருக்க வேண்டாம், உண்ணாவிரதம் யாருக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் ஒரு வறையறை உண்டு. ஒரு கொடுங்கோலனை எதிர்த்து நீங்கள் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது. அவர்களது உத்தரவுகளை ஏற்க மறுத்து கைது செய்தாலும் தண்டனை கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டுமேயொழிய, நீங்களே உங்களுக்கு உண்ணாவிரதம் என்ற தண்டனையைக் கொடுத்துக் கொள்ளக்கூடாது’ என்றார்.

மகாத்மா காந்தி வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நோக்கம் குறித்து தெளிவு படுத்தினார்.

“இந்துக்களைப் பொறுத்த மட்டில் இந்தப் போராட்டம் ஆழ்ந்த மத முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து மதத்தில் ஏற்பட்டுவிட்ட பெரும் மாசைத் துடைக்க நாம் முயற்சிக் கிறோம். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளை அனைவருக்கும் திறந்துவிட வேண்டுமென்று நாம் போராடுகிறோம். நம் குறிக்கோளை அடைய முதல் தொடக்கம் இந்தப் போர். நமது இறுதி லட்சியம் தீண்டாமைக் கொடுமையை அடியோடு ஒழித்து இந்து மதத்தைத் தூய்மைப் படுத்துவது. தீண்டாதவர்களின் நிலைமையை உயர்த்தி மற்ற மக்களுக்குச் சமமாக அவர்களை யும் ஆக்குவதுதான் நமது இறுதி லட்சியம்.”

1924-இல் தொடங்கிய போராட்டம் ஓராண்டுக்கும் மேல் நடந்தது. ஒவ்வொரு நாளும் பலர் போராடி கைதானார்கள். தொண்டர்கள் அணி அணியாக வைக்கம் வரத் தொடங்கினர்.

1925 பிப்ரவரி மாதம் மகாத்மா காந்தி தென்னகம் வந்தார். திருவிதாங்கூருக்குச் சென்றார். மகாத்மா வந்ததாலோ என்னவோ, திருவிதாங்கூர் சமஸ்தான அரசு அந்தச் சந்தர்ப்பத்தில், அதுவரை மேல்ஜாதியினருக்குக் கொடுத்து வந்த ஆதரவை நீக்கிக் கொண்டது. கோயிலைச் சுற்றி நான்கு தெருக்களிலும் போடப்பட்டிருந்த வேலிகள் அகற்றப் பட்டன.

போராட்டம் போகும் திசையை உணர்ந்து சநாதனிகளும் ஒதுங்கிக் கொண்டனர். போராட்டம் முடிவுக்கு வந்தது. வெற்றிப் பெருமிதத்துடன் தீண்டாதார் உள்பட மக்கள் அனைவரும் வைக்கம் தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு வலம் வந்தனர்.

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு 1924-இல் தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டும் பணி மகாத்மா காந்தியடிகளின் முயற்சியால் நிறைவேறத் தொடங்கியது.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(9)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s