-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2 :பகுதி 8
சட்ட மன்றங்களில் சுதேசிகள்
அகமதாபாத் நீதிமன்றத்தில் செளரி சாவ்ரா நிகழ்ச்சிகளுக்காக காந்திஜியைக் கைது செய்து வழக்கு தொடுத்தார்களல்லவா? அப்போது காந்திஜி அளித்த வாக்குமூலம் மிகவும் பிரசித்தமானது. அப்படி அந்த வாக்கு மூலத்தில் காந்தி என்ன தான் சொன்னார்?
அவர் சொன்னதன் மூலக் கருத்து, ராஜ விசுவாசியாக இருந்த தான் எப்படி ராஜத் துரோகியாக மாறினேன் என்பது தான். அந்த வாக்குமூலத்தின் முழு நகலும் நமக்குக் கிடைக்குமானால் அது மிக அரியதொரு ஆவணமாகத் திகழும்.
இந்த வழக்கு விசாரணை பற்றி கவிக்குயில் சரோஜினி தேவி எழுதுகிறார். அவர் சொல்கிறார்:
“கோவணாண்டி என்று பிரிட்டிஷாரால் வர்ணிக்கப்பட்டவரும், இப்போது பிரிட்டிஷ்காரர்களின் சட்டத்தின் முன்பாகக் குற்றவாளி எனக் கருதி இங்கு கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த பலஹீனமான உடல்வாகு உள்ள, ஆனால் எதற்காகவும் தன் கருத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதம் மிகுந்த, அமைதியான குணமுடைய காந்தி தன் விசுவாசமுள்ள சீடர் பாங்கர் பின்தொடர நீதிமன்றத்தினுள் நுழைந்தார். என்ன அதிசயம், காந்தி நீதிமன்ற அறைக்குள் நுழைந்த சமயம், மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அந்த மிகச் சாதாரண மனிதனுக்கு மரியாதை செய்தனர்.”
காந்திஜியின் தோற்றமோ, அவரது வேறு எதற்குமோ இல்லாத மரியாதை அவர் கடைப்பிடிக்கத் தொடங்கிய சத்திய வழியிலான போராட்டத்தைக் கண்டும் கேட்டும் மக்கள் அத்தகைய மரியாதையை அந்த மகானுக்குத் தெரிவித்த காட்சி, இந்திய வரலாற்றில் சிறப்பானதொரு தொடக்கமாகும்.
மகாத்மா காந்தியை இந்தியாவில் எந்தவொரு நீதிமன்றத்திலும் கொண்டுவந்து நிறுத்தி ஒரு குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி அதற்காக தண்டனை வழங்கியது என்பது அவர் வாழ்நாளில் முதலும் கடைசியுமாக இந்த வழக்கில் தான். வெள்ளைக்கார நீதிபதி உள்பட அனைவருக்கும் அது ஒரு புதிய, இதுவரை நடக்காத நிகழ்ச்சியாக இருந்தது.
1923-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாகபுரியில் ‘கொடிப் போராட்டம்’ எனும் ஒரு போராட்டம் தொடங்கியது. அது என்ன கொடிப் போராட்டம்? நாகபுரி நகரத்தில் கண்டோன்மெண்ட் என வழங்கப்படும் ஆங்கிலேயர் வசிக்கும் பகுதிக்குள் இந்திய தேசபக்தர்கள் தங்கள் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்படி அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் மூவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு இந்தியர்கள் போவதா? கூடாது என்று அதற்கு வெள்ளைக்காரர்கள் தடை விதித்தனர்.
நாகபுரியில் தொடங்கிய அந்த சிறு தீப்பொறி நாடு முழுதும் பரவி எங்கெங்கும் கொடிப் போராட்டம் நடக்கலாயிற்று. இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் நாகபுரிக்கு வந்து குவிந்தனர். இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய பொறுப்பு படேல் சகோதரர்களான வித்தல்பாய் படேல், வல்லபபாய் படேல் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
அவர்களுடைய திறமையான வழிகாட்டுதலின் பேரில், நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளமென வந்து குவிந்த தேசபக்தர்கள் கொடியைப் பிடித்துக் கொண்டு எந்தப் பகுதிக்குள் ஊர்வலம் போகக் கூடாது என்று தடை செய்தார்களோ, அந்தப் பகுதியில் ‘வந்தேமாதரம்’ சொல்லிக் கொண்டு ஊர்வலம் சென்று கைதாயினர்.
நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்று வந்தது. இதை அடக்குமுறை கொண்டு அடக்க முனைந்தால் மேலும் வலுப்பெறும் என்பது தெரியாதா என்ன அவர்களுக்கு? கடைசியில் பணிந்து வந்தார்கள். தேசபக்தர்களின் வெற்றி மக்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது.
1923-ஆம் வருஷம் சிறந்த கல்விமான் அபுல் கலாம் ஆசாத் தலைமையில் தில்லியில் ஒரு சிறப்பு காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் சட்டசபையை புறக்கணிப்பது என்று முன்பு செய்திருந்த முடிவு மீள்பரிசீலனை செய்த பின்னர், நாமும் சட்டசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு சபைக்குச் செல்வது என்று அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேறியது.
இதற்கு முன்பு ‘மாற்றம் விரும்புவோர்’ – ‘மாற்றத்தை ஏற்காதோர்’ என்று இரு பிரிவாக இருந்தவர்கள் இந்த முடிவின்படி சட்டசபைக்குப் போவதற்கு மகிழ்வோடு ஒப்புதல் அளித்தனர். சட்டசபைக்கெல்லாம் போட்டியிட்டு ஆட்சியில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது; வெளியில் இருந்து போராட வேண்டியது தான் நம் கடமை என்றது ஒரு பிரிவு. சட்டசபைக்குள் சென்று அங்கு நம் குரலை எழுப்பி சாதிக்க வேண்டுமென விரும்பியது மற்றொரு பிரிவு. சென்னை மாகாணத்தில் சட்டசபைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்று ராஜாஜி போன்றோரும், சட்டசபைக்குச் செல்ல வேண்டுமென்று தீரர் சத்தியமூர்த்தி போன்றோரும் வாதாடி வந்தனர் என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்.
அதே ஆண்டின் இறுதியில் வழக்கம்போல் நடைபெற்ற காக்கிநாடா காங்கிரஸ் மெளலானா முகமது அலி தலைமையில் காங்கிரஸ் கூடியது. அந்த மாநாட்டில் சட்டசபைக்குச் செல்ல வேண்டாம் என்று முன்பு எடுத்த முடிவை மாற்றி சட்டசபைக்கு நுழைவதை ஆதரித்து தீர்மானம் நிறைவேறியது.
செளரி சாவ்ரா கலவர வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த காந்திக்கு 1924-இல் குடல் அழற்சி நோய் கண்டது. அதற்கான அவசர அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருந்ததால் அவருடைய தண்டனை காலத்தைக் குறைத்து தண்டனை முடிவடைய இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும்போதே, விடுதலை செய்யப்பட்டார்.
காக்கிநாடா காங்கிரசில் எடுத்த முடிவின்படி காங்கிரசார் எல்லா மாகாணங்களிலும் சட்டசபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றனர். அப்போதைய சட்டசபை தேர்தல் இப்போது போல வயது வந்தவர்கள் எல்லோருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் உண்டானது அல்ல. வாக்களிக்கும் உரிமை ஒருசில பிரிவினர்களுக்கு- குறிப்பாக, நிலவுடமையாளர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள் இப்படி ஒவ்வொரு பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு- அந்தந்தப் பிரிவில் போட்டியிட்டுப் போகவேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் நாட்டில் கதர் உற்பத்தி பெருமளவில் நடைபெற்றது. கைராட்டையில் நூல் நூற்று அதை சிட்டங்களாகக் கட்டி தறியில் கொடுத்து துணிகளை நெய்து அந்த சுதேசி ஆடைகளை அணியும் வழக்கம் அப்போது ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும் கதர் இயக்கம் திருப்பூர், கோவை போன்ற இடங்களில் மிகச் சிறப்பாக நடந்து வந்தது. கோவை அய்யாமுத்து, திருப்பூரில் ஆஷர் தம்பதியர் ஆகியோர் இதில் பங்கேற்றனர். சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் ஏராளமான கதர் உற்பத்தி நடந்து வந்தது இந்தக் காலத்தில்தான்.
காங்கிரசில் ‘திலகர் சுயராஜ்ய நிதி’ என்றொரு நிதி இருந்தது. அதிலிருந்து கதர் உற்பத்திக்காக மானியங்கள் தரப்பட்டு ராட்டையில் நூல் நூற்கவும், கைத்தறியில் கதராடை நெய்யவும் ஊக்கம் அளிக்கப்பட்டது. சட்டசபைக்குப் போகவேண்டாம் என்ற முடிவில் இருந்த பல தலைவர்கள் தாங்கள் சட்டமன்றங்களுக்குப் போட்டியிடாமல், இதுபோன்ற தேச நிர்மாண திட்டங்களில் கவனம் செலுத்தலாயினர்.
தில்லி முதலான சில இடங்களில் ஆங்காங்கே இந்து- முஸ்லிம் வேற்றுமைகளை வளர்த்து பூசலில் ஈடுபடத் தொடங்கியதை எதிர்த்து, இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்திஜி, டாக்டர் அன்சாரி இல்லத்தில் தில்லியில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இரு தரப்பாரும் ஒற்றுமையைக் கடைபிடிப்பதாகக் கொடுத்த உறுதிமொழிக்கிணங்க உண்ணாவிரதத்தை காந்தி முடித்துக் கொண்டார்.
1924-ஆம் ஆண்டின் இறுதியில் வழக்கமாக நடைபெறும் காங்கிரஸ் மாநாடு பெல்காமில் நடந்தது. அந்த மாநாட்டுக்கு முதலும் கடைசியுமாக காந்திஜி தலைமை வகித்தார்.
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(8)”