-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2 :பகுதி 7
முரசு கொட்டி வந்த புதிய போர்முறை
மகாத்மா காந்தி அறிமுகம் செய்த புதிய போர்முறை ‘ஒத்துழையாமை இயக்கம்’ தொடங்கிய ஆண்டு 1920. அரசியல் கட்சிகளுக்கிடையே பிளவுகள் தோன்றின. முந்தைய ஆண்டே மிதவாத காங்கிரசார் தனித்துச் சென்றுவிட்டனர்; கல்கத்தாவில் தனி மகாநாட்டையும் நடத்தினர். அமிர்தசரஸ் காங்கிரசில் விவாதிக்கப்பட்ட- பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து சலுகைகள் பெறுவதா, அல்லது ஒத்துழையாமை இயக்கம் நடத்தி தங்கள் உரிமைகளைக் கோரி போராடுவதா? இது தான் பிரச்னை.
முதலில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து உரிமைகளை வேண்டிப் பெறுவோம் என்று தான் முடிவெடுத்தனர். ஆனால் பின்னர் அனுபவம் தந்த பாடத்தின் முடிவில் ஒத்துழையாமை கொள்கையையே பின்பற்றுவது என்ற முடிவுக்கு வந்தனர். அப்படியொரு முடிவு எடுக்கக் காரணிகளாக இருந்தவை ரெளலட் சட்டமும், பஞ்சாப் படுகொலையும் தான். முந்தைய காங்கிரசில், காந்தி அரசாங்கத்துடன் ஒத்துழைத்து உரிமைகள் பெறுவோம் என்று சொன்னபோது அதனை தீவிரமாக எதிர்த்து ஒத்துழைக்கக் கூடாது என்று வாதிட்டவர்கள் எல்லாம் இப்போது ஒத்துழைக்க வேண்டுமென்று பேசலானார்கள்.
1920-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி கல்கத்தா நகரில் சிறப்பு மாநாடு ஒன்றை காங்கிரஸ் நடத்தியது. அமெரிக்கா சென்றிருந்த லாலா லஜபதி ராய் நாடு திரும்பியிருந்தார், அவரே மாநாட்டுக்குத் தலைமை ஏற்றார். இந்த மாநாட்டில் மறைந்த லோகமான்ய திலகருக்கு அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தி அறிமுகம் செய்த ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவது என்று மற்றொரு தீர்மானம் கூறியது.
அப்போது முகமது அலி, ஸவுகத் அலி எனும் இவ்விரு இஸ்லாமியத் தலைவர்களும் காந்திஜியுடன் ஒற்றுமையுடன் செயல்பட்டார்கள். அதே ஆண்டு கடைசியில் வழக்கமாய் நடைபெறும் டிசம்பர் மாநாட்டுக்கு சேலம் சி.விஜயராகவாச்சாரியார் தலைமை வகித்தார். இந்த மாநாடு நாகபுரி நகரில் நடந்தது. இந்த நாகபுரி காங்கிரசிலும் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேறியது.
அந்த மாநாடு தொடங்கும் வரை காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்த சி.ஆர்.தாசும், லாலா லஜபதி ராயும், மாநாடு தொடங்கியதும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து முன்மொழியவும், வழிமொழியவும் ஒப்புக் கொண்டார்கள். இந்த மாநாட்டில் காந்திஜிக்கு பலத்த ஆதரவு காணப்பட்டது.
இதுதான் தொடக்கம்; காங்கிரசில் காந்திஜியின் சகாப்தம் வலுவாக, அசைக்க முடியாததாக, அவர் உயிர் வாழ்ந்த காலம் முழுவதும் தொடர்ந்து இருந்து வந்தது. இனி காங்கிரஸ் காலம், மகாத்மா காந்தியின் காலம்.
ஒத்துழையாமையின் முதல் மூன்று பகிஷ்காரங்கள்:
ஒத்துழையாமை இயக்கம் என்பது என்ன என்பதை மக்கள் சிறிது சிறிதாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தத் தொடங்கினார்கள். காந்திஜி வகுத்த போர்முறையில் மூன்று பகிஷ்காரங்கள் முதன்மை வகித்தன.
மூவகை புறக்கணிப்பு என்றால், முதலில் சட்டமன்றப் புறக்கணிப்பு, இரண்டாவது கல்லூரிகளைப் புறக்கணித்து வெளியேறுவது, நீதிமன்றங்கள் புறக்கணிப்பு என மூவகை புறக்கணிப்பு.
காந்திஜியின் அறைகூவலை ஏற்று மக்கள் திரள் திரளாக இந்தப் புறக்கணிப்புகளை தலைமேல் கொண்டு செயல்படுத்தி வந்தனர். ஏராளமானோர் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறினர். சன்னத்து பெற்ற பல வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை நீத்து போராட்டத்தில் குதித்தனர். பல ஊர்களிலும் தேசியக் கல்வியைப் பரப்ப தேசியப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அன்னியத் துணிகளை எதிர்த்து அவை தீயிலடப்பட்டு கொளுத்தப்பட்டன.
அன்னியத் துணிகளை எதிர்க்கும் அதே நேரத்தில் சுதேசித் துணிகளுக்கு வரவேற்பும் நூல் நூற்க ராட்டைகளும் அறிமுகமாயின. ஏராளமான தேச பக்தர்கள் ராட்டையில் நூல் நூற்பதை ஒரு வேள்வியாக நடத்தினர். எங்கு நோக்கினும், யாரை நோக்கினும் ஒரு ராட்டை அங்கு நூல் நூற்றல் என்று நாடே விழிப்புணர்வை எய்தியது.
இது மட்டும் போதுமா? இன்னமும் வேறு வகை போராட்டங்கள் தேவையா எனச் சிந்தித்து அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரிகளைக் கொடுக்காமல் இருந்து போராடினால் என்ன எனும் எண்ணமும் வளர்ந்து வந்தது.
இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் இளவரசருக்கு எதிர்ப்புக் காட்டப்பட்டது; கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. பெரும் தலைவர்கள் எல்லாம் போராட்டத்தில் பங்கு கொண்டனர். மோதிலால் நேரு, அவர் மகன் ஜவஹர்லால் நேரு, சி.ஆர்.தாஸ், லாலா லஜபதி ராய் முதலானோர் போராட்டங்களில் பங்கு கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டனர். நாட்டின் எல்லா சிறைகளிலும் தேசபக்தர்கள் குவியத் தொடங்கினர்.
அந்த நேரத்தில் அகமதாபாத் காங்கிரஸ் நடந்தது. சி.ஆர்.தாஸ் தலைவர் என அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர் சிறையில் இருந்ததால் தில்லியைச் சேர்ந்த ஹக்கீம் அஜ்மல் என்பார் தலைமை வகித்தார். இந்த மகாநாட்டிலும் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தும், போராட்டத்தை வேகப்படுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது ‘பர்தோலி’ எனுமிடத்தில் ஏழை விவசாயிகள் உணவுப் பயிர்கள் பயிர் செய்ய முடியாமலும், சாயத்துக்குப் பயன்படும் அவுரிச் செடிகளைப் பயிர் செய்ய அரசாங்கம் கெடுபிடி செய்ததாலும், உணவுக்குப் பஞ்சம் வந்து விவசாயக் குடிமக்கள் கும்பல் கும்பலாகச் சாகத் தொடங்கவும், செய்தி காந்திஜிக்கு எட்டியது.
அவர் பர்தோலி சென்று நேரடியாக அங்கு நிலவும் சிரமங்களை அறிந்துகொள்ள விரும்பினார். அங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் வரிகொடா இயக்கம் நடத்த முடிவு செய்தனர். இப்படியொரு வரிகொடா இயக்கம் நடத்தப் போவதாக காந்திஜி, வைஸ்ராய் ரீடிங் பிரபுவுக்குக் கடிதம் அனுப்பி விட்டார். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்த அகமதாபாத்தைச் சேர்ந்த வக்கீல், தன் வருமானம் கொழிக்கும் வக்கீல் தொழிலைத் துறந்துவிட்டு அரசியலில் குதித்திருந்த வல்லபபாய் படேலை காந்திஜி தேர்ந்தெடுத்தார்.
இவர் பின்னாளில் ‘இரும்பு மனிதர்’ என்று வர்ணிக்கப்பட்டவர். சுதந்திரத்துக்குப் பிறகு சுதேச சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைப்பதில் முக்கிய பங்காற்றியவர், சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் உயிர் வாழாமல் 1950-இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்தவர். அந்த படேல் பர்தோலி போராட்டத்தை முன்னின்று நடத்த முன்வந்தார்.
இப்படி ஒத்துழையாமை இயக்கம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கையில், காந்திஜி தன்னுடைய போராட்டத்தை இந்திய மக்கள் முழுமையாக, உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா அல்லது உணர்ச்சி வசப்பட்டு கட்டுப்பாட்டை இழக்கக் கூடியவர்களா என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஒன்று- அல்ல சோதனை ஒன்று – அவருக்கு ஏற்பட்டு விட்டது.

உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூருக்கு அருகில் செளரி சாவ்ரா எனும் ஊர் ஒன்று இருக்கிறது. அந்த ஊரில் காங்கிரஸ் தேசபக்தர்கள் ஒரு ஊர்வலத்தை நடத்தினர். அமைதியாகச் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தில் அவ்வூர் போலீஸ் நிலையம் அருகில் சில போலீஸ்காரர்கள் தொண்டர்களைச் சீண்டித் துன்புறுத்தினார்கள். காந்திய வழிகளில் ஊறித் திளைத்தவர்களா பொதுமக்கள்? அப்போதுதான் காந்திஜியின் அகிம்சை வழியையும், சத்தியாக்கிரக கோட்பாடுகளையும் அறிந்துகொள்ள முயன்று வருபவர்கள். அப்படிப்பட்டவர்களை போலீசார் ஆத்திரமடையும்படி சீண்டும்போது கூட்டமாக வரும் சத்தியாக்கிரகிகள் சும்மாயிருப்பார்களா? உணர்ச்சி வசப்பட்டு மனித இயல்பின்படி ஆத்திரத்தை வெளிக்காட்டத் தொடங்கி விட்டனர்.
தங்களை வம்புக்கிழுத்த போலீஸ்காரர்களைத் தாக்க ஆரம்பிக்க, அந்த போலீஸ் நிலையத்தில் இருந்த எல்லா போலீஸ்காரர்களும் சேர்ந்துகொண்டு ஊர்வலத்தில் வந்தவர்களை தடிகொண்டு தாக்கிக் காயப்படுத்தினர். ஊர்வலத்தில் முன்னால் சென்றவர்களுக்கும் பின்னால் நடக்கும் வன்முறை தெரிய வந்ததும் அத்தனை பேரும் போலீஸ் நிலையத்தைத் தாக்கத் துவங்க, போலீஸ்காரர்கள் நிலையத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டு கதவுகள், ஜன்னல்களை அடைத்துக் கொண்டுவிட்டனர். பொதுமக்கள் கூட்டம் காவல் நிலையத்தைத் தாக்கி தீ வைத்துவிட்டனர். அந்தத் தீயில், நிலையத்தினுள் மாட்டிக் கொண்ட போலீசாரில் 21 கான்ஸ்டபிள்களையும் ஒரு சப் இன்ஸ்பெக்டரையும் தீக்கு இரையாக்கி விட்டனர். காந்திஜியின் அறிவுரைப்படி சென்ற அகிம்சை ஊர்வலம், அவரே எதிர்பாராத விதத்தில் வன்முறையில் முடிந்தது.
இதனை அறிந்த காந்திஜிக்கு அதிர்ச்சி. தன்னுடைய போர் முறைகளைக் கையாளும் தகுதி இன்னமும் நம் மக்களுக்கு வரவில்லை என்பதை உணர்ந்தார்; வருந்தினார். தான் அறிமுகப் படுத்திய ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக நிறுத்தி வைத்தார். காங்கிரசின் மற்ற தலைவர்கள் காந்திஜியிடம் போராட்டத்தை நிறுத்த வேண்டாமென்று எவ்வளவோ எடுத்துரைத்தும் காந்தி மறுத்துவிட்டார்.
தன்னுடைய போராட்ட வழிமுறைகள் கடுமையாக சற்றும் இம்மி பிசகாமல் நிறைவேற்றப்பட வேண்டும், எந்த காரணம் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் ஈடுபட்டுவிடக் கூடாது; எந்தத் துன்பத்தை எதிரிகள் கொடுத்தாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு நம் கொள்கை சத்திய வழியிலானது. அதை என்ன காரணத்தாலும் விட்டுக் கொடுக்க இயலாது என்று உறுதியோடு போராட வேண்டுமென்பது காந்திஜியின் எண்ணம்.
அப்படி மக்கள் அனைவரும் மகாத்மாவைப் போல அவர் கொள்கைகளை உள்ளது உள்ளபடிக்கு ஏற்றுக் கொண்டு செயல்படுத்த முடியுமா என்ன? முடியவில்லை, அதனால் தான் அவர் போராட்டத்தை நிறுத்தி வைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் இளமையும், வேகமும் நிறைந்திருந்த ஜவஹர்லால் நேரு, காந்திஜி போரை நிறுத்தியதில் உடன்படவில்லையே தவிர, பின்னாளில் நல்ல அனுபவமும், காந்திய சிந்தனைகளில் மூழ்கித் திளைத்து முத்தெடுத்த காலத்தில் அப்படி காந்தி நடந்து கொண்டதை பாராட்டிப் போற்றியிருக்கிறார். மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து நிலைமையை முடிவு செய்ததில் காந்திஜிக்கு இருந்த திறமை, சத்தியத்தின் மீதிருந்த அழுத்தமான நம்பிக்கை இவற்றைப் போற்றி எழுதியிருக்கிறார்.
இந்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட காந்திஜி ‘இமாலயத் தவறு செய்துவிட்டேன்’ என்று அறிக்கை விட்டார். செளரி சாவ்ராவில் போலீஸ் நிலையம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதமும் இருந்தார். இப்படிப்பட்ட உண்ணாவிரதங்கள் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ள காந்திஜி கடைபிடித்த வழியாகும். தேச மக்களை அகிம்சை வழிப் போராட்டத்தை நடத்தத் தயார் செய்யும் வரை காத்திருப்பதாகச் சொன்னார் காந்தி.
இதுதான் சமயம் என்று பிரிட்டிஷ் அரசு காந்திஜியைக் கைது செய்து சிறையில் இட்டது. அகமதாபாத் நீதிமன்றத்தில் அந்த பிரசித்தமான வழக்கு நடைபெற்றது. காந்திஜி ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் ராஜ விசுவாசியாக இருந்த தான் இப்போது ராஜத் துரோகியாகிவிட்டதாகத் தெரிவித்தார்.
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(7)”