-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2 :பகுதி 6
வணக்கத்துக்குரிய தலைவர்கள்
சென்ற பகுதியில் குறிப்பிட்ட ஐந்து பெருந்தலைவர்களைத் தொடர்ந்து மேலும் சில தலைவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடன் இந்தப் பகுதியைத் தொடங்குவோம்.
6. ஃபக்ருதீன் தயாப்ஜி
இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி மூன்றாம் ஆண்டிலேயே காங்கிரசுக்குத் தலைமை ஏற்றவர் இந்த ஃபக்ருதீன் தயாப்ஜி. தீவிரமான சிந்தனைகளைக் கொண்டவர் இவர்.
வழக்கம் போல அந்தக் கால காங்கிரசாரில் வழக்கறிஞராக இருக்கும் புகழ்மிக்கத் தலைவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வழக்கத்தையொட்டி இவரும் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார். இவர் 1906-ஆம் வருஷம் காலமானார்.
இன்றைய காங்கிரசார் ‘செக்யூலரிஸம்’ பேசி வருவதை நாம் அறிவோம். இவர்கள் அறிந்தோ அறியாமலோ அகில இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டில் ஒரு இந்துவும், இரண்டாவதில் ஒரு பார்சியும் மூன்றாவதில் ஒரு இஸ்லாமியரும் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த செய்தி இன்றைய காங்கிரசாருக்குத் தெரியுமோ இல்லையோ, இப்போது தெரிந்து கொள்ளட்டும்.
7. டபிள்யு.சி.பானர்ஜி
காங்கிரசின் முதல் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் இந்த உமேஷ் சந்திர பானர்ஜி. எந்தக் கொள்கைகளுக்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது என்பதை விரிவாக இவர் தன்னுடைய தலைமை உரையில் கொடுத்திருக்கிறார். அந்தக் கொள்கைகள்தான் காங்கிரசின் அஸ்திவாரமாக இருந்திருக்கிறது.
முதல் மாநாடு தவிர, இவர் மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது மாநாடுகளுக்கும் தலைமையேற்றிருக்கிறார். 1890-இல் இங்கிலாந்துக்குச் சென்ற காங்கிரஸ் தூது கோஷ்டியில் இவரும் இடம்பெற்றிருந்தார். 1906-இல் இவர் காலமானார்.

8. லோகமான்ய பால கங்காதர திலகர்
சுதந்திரப் போராட்ட காலத்தில் புகழ்மிக்க மூன்று லால் (Lal), பால் (Pal), பால் (Bal) ஆகியோரில் Bal என அழைக்கப்பட்டவர். மற்ற இருவர் லாலா லஜபதி ராய், விபின் சந்த்ர பால் ஆகியோர்.
“சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” என வீர முழக்கமிட்ட தீவிர காங்கிரஸ் தலைவர் இவர். சுதந்திரம் என பேசக்கூட பயந்திருந்த காலத்தில், சுதந்திரம் எனது பிறப்புரிமை என உரிமைக்குரல் கொடுத்தவர் இவர்.
மராட்டிய ராஜ்யத்தில் சுதந்திரக் கனலை எழுப்பிய தேசியத் தலைவர். இவரை மக்கள் ‘மகரிஷி’ என்றழைத்தார்கள். ‘லோகமான்ய’ என்றும், ‘மகராஜ்’ என்றும் மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். மக்கள் செல்வாக்கை அபரிமிதமாகப் பெற்றிருந்தவர். 1897-இல் பூனாவிலும், பம்பாயிலும் பிளேக் நோய் தொற்று நோயாகப் பரவியிருந்த காலத்தில் அந்த நோயை விரட்ட இரவும் பகலுமாகக் களத்தில் இறங்கி பாடுபட்டவர்.
இவர் ‘மராட்டா’, ‘கேசரி’ ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். மராட்டிய மாநிலத்தில் மகாகணபதி பூஜையை ஒரு தேசியத் திருவிழாவாக மாற்றி, இறையுணர்வோடு தேசபக்தியையும் மக்கள் மனதில் ஊட்டியவர். ஒரு சமயம் இரண்டு ஆங்கிலேயர்கள் காரில் பயணம் செய்கையில் கொலை செய்யப்பட்டனர். அதற்கு தாமோதர் சாபேக்கர், ஹரி சாபேக்கர் எனும் சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக தன் பத்திரிகைகளில் கொலையை நியாயப்படுத்தி இவர் எழுதிய கட்டுரைகளுக்காக இவரும் கைது செய்யப்பட்டார். 14-9-1897-இல் இவருக்கு 18 மாத கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திலகர் கைதை எதிர்த்து பிரபலமான மனிதர்கள் குறிப்பாக பேராசிரியர் மாக்ஸ் மில்லர், சர் வில்லியம் ஹண்டர், சர் ரிச்சர்ட் கராத், தாதாபாய் நெளரோஜி, ரமேஷ் சந்த்ர தத் ஆகியோர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு மனு அளித்தன் பேரில் இவர் அடுத்த ஆண்டில் அதாவது 6-9-1898-இல் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு முன்பாக 1897-இல் அம்ரோட்டி எனும் இடத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அப்படியொரு தீர்மானத்தைக் காங்கிரஸ் கொண்டு வந்தால் ஆங்கில அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்குமென்று அதனை நிறைவேற்றாமல் தவிர்த்து விட்டார்கள் காங்கிரஸ்காரர்கள்.
காங்கிரஸ் கட்சி திலகரின் விடுதலை கோரி போராட முன்வராத நிலையில், அந்த கட்சியில் இருந்த சில முக்கியத் தலைவர்களான சர் சங்கரன் நாயர், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் திலகரின் விடுதலைக்காக கடுமையாக வாதிட்டனர்.
ராஜ துவேஷ குற்றச்சாட்டின் பேரில் திலகருக்கு 6 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டு இவர் பர்மாவில் இருந்த மாண்டலே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மாண்டலே சிறைக்கு இவரை ‘ஹார்டிஞ்ச்’ எனும் பெயருடைய கப்பலில் கொண்டு சென்றனர். அதே காலகட்டத்தில் இவருடைய தீவிரவாத காங்கிரசில் அங்கம் வகித்த அரவிந்த கோஷ், வ.உ.சி. ஆகியோரும் சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
திலகர் சகாப்தம் முடிவுக்கு வந்த நிலையில் மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். காந்திஜியின் அந்த இயக்கத்துக்கு திலகர் தனது பரிபூரண ஆதரவைத் தெரிவித்தார்.
1-8-1920-இல் திலகர் பெருமான் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார். தனது சிறை வாழ்க்கையை வீணாக்காமல் அங்கு வேதசாரங்களையும், கீதோபதேசத்தையும் இரு பெரும் நூல்களாக எழுதி வெளியிட்டார்.
1906-இல் காந்திஜி தென்னாப்பிரிக்கப் போராட்டங்கள் பற்றி விவாதிக்க பூனா சென்று அங்கு திலகரையும் கோபாலகிருஷ்ண கோகலேயையும் சந்தித்துப் பேசுகிறார். பின்னர் அவ்விருவர் பற்றி காந்திஜி சொன்ன கருத்துக்கள் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியவைகளாகும்.
“திலகர் இமயமலையைப் போல் உயர்ந்தவர், கம்பீரமானவர், அவர் உயரத்தை வேறு யாராலும் எட்டிப் பிடிக்க முடியாதவர். கோபாலகிருஷ்ண கோகலே புனிதமான கங்கையைப் போன்றவர், நம்பிக்கையுடன் அந்நதியில் இறங்கி நீராடலாம்”.
மராட்டிய மாநிலத்தின் உயர்ந்த தலைவர்கள் இவ்விருவரும். மராட்டியப் பிரதேசத்தில் மதிக்கத்தக்க ‘சித்பவன்’ எனும் பிராமண பிரிவினைச் சேர்ந்தவர்கள் இவ்விருவரும். இவர்களில் கோகலே மிதவாதி எனவும் திலகர் தீவிரவாதி எனவும் அடையாளம் காணப்பட்டவர்கள். கோகலேக்கு, இருக்கும் அமைப்பிற்குள் முடிந்த சீர்திருத்தங்களை செய்துகொள்ள வேண்டுமென்பதும், திலகருக்கு இப்போதுள்ள அமைப்பை அப்படியே புரட்டிப் போட்டுவிட வேண்டுமென்ற துடிப்பும் இருந்தன. இப்படி காங்கிரசினுள் இருந்த இருவேறு கொள்கை உடையவர்களில் எந்தவிதப் பாகுபாடும் நாம் பார்ப்பதற்கில்லை.
இவர்கள் இரு சாராரும் சிறந்த தேசபக்தர்கள்தான் அதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்விரு சாராரும் பரிபூரண சுதந்திரம் வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. இருப்பதில் சில சீர்திருத்தங்கள் வேண்டுமென்பதே அப்போதைய காங்கிரசாரின் விருப்பம்.
9. சுரேந்திரநாத் பானர்ஜி
தொடக்க கால காங்கிரஸ் தலைவர்களில் சுரேந்திரநாத் பானர்ஜி முக்கியமானவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர். அவரது சொற்பொழிவுகள் சக்தி வாய்ந்தவை; மக்கள் மனங்களில் ஊடுருவிச் சென்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. 1895-ஆம் ஆண்டு பூனா காங்கிரசுக்கும், 1902 அகமதாபாத் காங்கிரசுக்கும் தலைமை தாங்கியவர் இவர்.
இவர் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றும், அதற்கான வேலை கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நீதிபதியைப் பற்றி விமர்சித்ததற்காக இவருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை கிடைத்தது. வங்கப் பிரிவினையை எதிர்த்து இவர் போராடிய காலத்தில் இவர் போலீசாரால் தாக்கப்பட்டார்.
10. பண்டித மதன்மோகன் மாளவியா
இவர் காசி சர்வகலாசாலையைத் தோற்றுவித்தவர். சிறந்த ஆசாரசீலர். இவர் 1932-இல் லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்றார். அப்போது தன்னுடன் பல குடங்களில் கங்கை தீர்த்தத்தைத் தன்னுடன் எடுத்துச் சென்றார். அப்படிப்பட்ட ஆசாரசீலராக இருந்தும் தீண்டாமையை எதிர்த்துத் தீவிரமாகப் பிரசாரங்களில் ஈடுபட்டார். 1909-இல் லாகூர் காங்கிரசுக்கும் 1918-இல் தில்லி காங்கிரசுக்கும் இவர் தலைவராக இருந்தார். தன்னுடைய முதுமையான வயதில் இவர் காலமானார்.
11. லாலா லஜபதி ராய்
‘பஞ்சாப் சிங்கம்’ எனப் புகழப்பட்ட கெளரவமிக்க பெருந்தலைவர் லாலா லஜபதி ராய். சமூக சேவையிலும், நாட்டுப் பற்றிலும், பத்திரிகை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும் தலைசிறந்த தலைவராக, மக்கள் போற்றுகின்ற தலைவராக விளங்கியவர் இவர்.
1907-இல் இவர் பங்குபெறாத நிகழ்ச்சிகளே இல்லையெனும் அளவுக்கு தேச சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவரையும், பகத்சிங்கின் சித்தப்பா அஜித் சிங்கையும் பிரிட்டிஷ் அரசு நாடு கடத்தியிருந்தது. இருவரும் தண்டனைக் காலம் முடிவடைந்து தாய்நாடு திரும்பினர்.
1907-இல் இவர் தலைமையில்தான் நாகபுரியில் காங்கிரஸ் கூடுவதாக இருந்தது. ஆனால் மிதவாதிகளின் பிடிவாதத்தால் காங்கிரஸ் சூரத் நகருக்கு மாற்றப்பட்டு, காங்கிரசில் அடிதடியும் நடந்தது என்பதை முன்பே பார்த்தோம். லாலா, காங்கிரஸ் தலைவராக வருவதை மிதவாதிகள் குறிப்பாக கோபாலகிருஷ்ண கோகலே விரும்பவில்லை. கோகலே லாலாவை எச்சரித்தார், “நீங்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தொல்லைகள் கொடுத்தால், அரசாங்கம் உம்முடைய கழுத்தை நெறித்துவிடும் என்பதை உணர வேண்டும்” என்றார் அவர்.
லாலா எப்போதும் பதவியை எதிர்பார்த்து அலைபவர் அல்ல. ஆதலால் கோகலேயின் எதிர்ப்புக்கு பணிந்து விலகிக் கொண்டார். 1906-இல் இங்கிலாந்துக்குச் சென்ற தூதுக் குழுவில் லாலாவும், கோகலே இருவருமே சென்றார்கள். 1920-இல் நடந்த சிறப்பு காங்கிரஸ் மாநாட்டில் இவர் தலைமை வகித்தார்.
1927-இல் இங்கிலாந்திலிருந்து சைமன் கமிஷன் இந்தியா வந்தது. அதை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கூட்டங்களைக் கலைக்க பிரிட்டிஷ் அரசு வன்முறை அடக்குமுறைகளைக் கையாண்டது. பலரும் கைதானார்கள், ஏராளமானோர் போலீசாரால் தாக்கப்பட்டு காயமடைந்தார்கள். அலஹாபாத்தில் நேருவும் கூட போலீஸ் தடியடியில் காயமடைந்தார். லாகூரில் லாலாஜி தலைமையில் சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. அப்போது நடந்த போலீஸ் தடியடியில் லாலா பலமாகத் தாக்கப்பட்டு உயிர் துறந்தார். இவருடைய மரணத்துக்கு பழிதீர்க்கவே அப்போது லாகூரில் படித்துக் கொண்டிருந்த பகத்சிங், அவர் தோழர்கள் சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் சார்ஜெண்ட் சாண்டர்சை சுட்டுக் கொன்று தூக்குமேடை ஏறினார்கள்.
மிஸ் மேயோ எனும் அமெரிக்கப் பெண்மணி தான் எழுதிய ‘இந்தியத் தாய்’ எனும் நூலில் இந்தியாவைப் பற்றி கீழ்த்தரமாக விவரித்து எழுதியிருந்தார். அவரைக் கண்டித்து மிகக் கடுமையாக லாலாஜி பதில் கொடுத்தார். இவர் ஒரு ஆரிய சமாஜி.
12. சர் ஃபெரோஸ் ஷா மேத்தா
முதன் முதலாக காங்கிரசைத் தொடங்கியவர்களுள் சர் ஃபெரோஸ் ஷா மேத்தாவும் ஒருவர். காங்கிரசுக்குக் கொள்கைகளை உருவாக்கியவருள் இவரும் ஒருவர். 1890-இல் கல்கத்தா காங்கிரசுக்குத் தலைமை வகித்தவர் இவர். காங்கிரசை உருவாக்கிய பின் பல ஆண்டுகள் அதில் ஒரு தூணாக விளங்கியவர். 1907-இல் சூரத் காங்கிரசில் நடந்த பிளவுக்கும் இவர் முக்கிய காரணமாக இருந்தவர். மிதவாதத் தலைவர் இவர்.
1909-இல் லாகூரில் நடக்கவிருந்த காங்கிரசுக்கு இவர் இரண்டாவது முறையும் தேர்வானார். காங்கிரஸ் கூடுவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் இவர் ராஜிநாமா செய்துவிட்டதால், இவர் இடத்தில் மதன் மோகன் மாளவியா லாகூர் காங்கிரசின் தலைவரானார்.
13. சேலம் சி. விஜயராகவாச்சாரியார்
சேலம் நகரத்தில் பிரபலமான வழக்கறிஞராக இருந்தவர் சி.விஜயராகவாச்சாரியார். 1887-இல் நடந்த சென்னை காங்கிரசில் முதன் முதலாகப் பங்கேற்றார். சூரத் காங்கிரசில் நடந்த கலவரத்தை அடுத்து இவர் காங்கிரசில் ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டார். இரு பிரிவினரும் ஒற்றுமையடைந்த பின்னர் மீண்டும் காங்கிரசில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 1920-இல் நாகபுரி காங்கிரசுக்கு இவர் தலைமை வகித்தார்.
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(6)”