-மகாகவி பாரதி
மகாகவி பாரதி, தான் நடத்திய இந்தியா பத்திரிகையில் எழுதி வெளியிட்ட செய்தி இது. இந்தியா – 28.08.1906 இதழில் 5-ஆம் பக்கத்தில் இச்செய்தி வெளியாகி உள்ளது.

ஸ்வாமி விவேகாநந்தரின் தேசபக்தியானது அபரிமிதமென்பதை நாம் இங்கே குறிப்பிடுவது அவசியமில்லை. இந்த மஹரிஷி ’கிழக்குத் திசையும் மேற்குத் திசையும்’ என்பதாக பெங்காளி பாஷையிலே ஒரு திவ்விய உபந்நியாசம் எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி இம் மாதத்திலே கிடைத்த ‘வாணி விலாஸிணி’ பத்திரிகையில் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பிலே மூல உபந்நியாசத்தின் ரஸமும் பெருமையும் குறைந்திருக்க வேண்டுமென்பது அவசியமேயெனினும், இதுகூடப் படிப்பவர் மனது பிரமிக்கும்படியாகச் செய்கின்றது. இதை முழுதும் மற்றொரு முறை நமது பத்திரிகையிலே எடுத்துப் பிரசுரம் செய்ய நிச்சயித்திருக்கிறோ மாதலால், இங்கு அதைப் பற்றி விரிவாக எழுத விரும்புகின்றோமில்லை. ஆனால், அந்த உபந்நியாசத்திலே ஸ்வாமி தமது தேசபக்தியை நன்கு விளக்கியிருக்கிறார்.
“வீரர்களாயிருங்கள். பூமியை அனுபவியுங்கள். கண்டவர்களெல்லாம்காலால் மிதித்தும், காறியுமிழ்ந்தும்அவமானப்படுத்துகிற இந்தப் பேடி வாழ்க்கை எத்தனை காலம்வாழுப் போகிறீர்கள். இதுவும் ஒருவாழ்க்கையா?”
என்று மகா ஆக்கிரகத்துடன் ஸ்வாமி கேட்கிறார்.
ஸர்வ ஸந்நியாசியாகிய விவேகாநந்தர் தமது நாட்டிலே மட்டும் ஒருவிதமான அதிகப்பற்று வைத்திருந்தமை அவரது பெருந்துறவுக்குப் பொருந்துமாவென்று சிலர் ஐயுறலாம். இதே விஷயந்தான் அவருடைய சிஷ்ய சிகாமணிகளில் ஒருவராகிய ஸ்ரீ நிவேதிதா தேவியின் மனதிலும் பலவித ஆலோசனைகளுக்கிட முண்டாக்கி யிருக்கிறது.
ஸ்ரீ நிவேதிதா தேவி, சென்ற சில மாதங்களாக ‘பிரபுத்த பாரதம்’ என்ற பத்திரிகையிலே விவேகாநந்தரைப் பற்றி வரிசையாக எழுதிக்கொண்டு வருகிறார். இம் மாதத்துப் பத்திரிகையிலே நிவேதிதா தேவி ஸ்வாமியின் தேசபக்திக்கும் ஸந்யாஸத்திற்குமுள்ள விரோத வியற்கையைப் பற்றி விஸ்தாரமாகப் பேசுகிறார். இதையெல்லாம் இங்கே விவரமாக எழுத முடியாத போதிலும், அதன் கருத்தைக் கீழே தருகிறோம்.
விவேகாநந்தரின் இயற்கையிலே சுதேசபக்தி வேர் ஊன்றிப் போய்விட்டது. மஹா பலங்கொண்டவளாகிய பாரத மாதா தனது பலத்தைத் தானே யறியாதவளாகி அடிமை நிலைகொண்டு நிற்பதை அவரால் பார்த்துச் சகிக்க முடியவில்லை. ஆனால் இந்த சொற்ப பாசங்கூட மாயா சம்பந்தமானது என்பதை அவரே நன்றாக அறிந்திருந்தார். அவர் மட்டுமென்ன? அவரது பரம குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூட அதைப் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறார்:
’விவேகாநந்தருடைய மனசை ஒரு லேசான மாயைப் படலம் சூழ்ந்திருக்கிறது. அதை ஈசன் இவருடைய மனதில் ஒரு நன்மையைக் கருதி வைத்திருக்கிறார். ஆனால், அது மிகவும் லேசான படலம். அதை எந்த நிமிஷத்திலும் விவேகாநந்தர் கிழித்தெறிந்து விடுவார்‘ என்று ராமகிருஷ்ணர் திருவாய் மலர்ந்தருளினர்.
ஆனால் நம்மவரின் அதிருஷ்டத்தாலும் ஈசனுடைய திருவருளாலும் மற்றெல்லா மாயைப் படலங்களையும் அறுத்தெறித்து விட்ட விவேகாநந்தர் சுதேசப் பற்றை மட்டிலும் நெடுங்காலம் கொண்டிருந்தனர். ஆனால், பரம ஸந்நியாசியைத் தவிர மற்றவர்களனைவரும் பூமிப் பற்றில்லாத விஷயத்தில் பிணங்களுக்குச் சமானமாவார்க ளென்பதை இம் மஹரிஷி மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்,
எனினும், கடைசிக் காலத்தில் அவர் மனதில் சுதேசி விரோதிகளிடங்கூட ‘ஏகத்வம்’ பாராட்டத் தொடங்கிவிட்டார், 1858-ம் வருஷத்துச் சிப்பாய்க் கலகத்தின்போது ஒரு சந்நியாசியை ஓர் ஆங்கிலேய ஸோல்ஜர் குத்திக் கொன்று விட்டான். அந்த சந்நியாசி 15 வருஷ காலமாக மவுன விரதம் பாராட்டி வந்தவர். 15 வருஷகாலம் வாய் மூடியிருந்த மேற்படி சந்நியாசி இந்த ஆங்கிலேயன் குத்தியவுடனே, “நீ கூட அவனே (பிரமமே)” என்ற சொல்லிவிட்டுப் புன்னகையுடன் சரீரத் தியாகம் புரிந்துவிட்டனர். இவரையே தமக்கு முன்மாதிரியாக ஸ்வாமிகள் கூறுவதுண்டு.
நன்றி: கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்- தொகுதி 1; பதிப்பாசிரியர்: சீனி.விசுவநாதன்; பக்கம்: 491-493.
$$$