சமுதாயச் சிற்பி ராமானுஜர் -2

-இரா.சத்யப்பிரியன்

2. குருவை மிஞ்சிய சிஷ்யன்

யாதவப்பிரகாசர் தனது சீடர்களுக்கு காலைநேரப் பாடங்களை போதித்த பின்  எண்ணெய்க் குளியல் எடுக்க எண்ணினார். அந்தக்கால குருகுலவாசத்தில் சீடர்களே குருவுக்குத் தேவையான சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  குரு ஆணையிடுவார். சீடர்கள் மறுக்காமல் சிரம் மேற்கொண்டு செய்வர். எண்ணெய்க் குளியலுக்கு ஆச்சாரியாரின் பாதாதி கேசம் ராமானுஜர் எண்ணெய் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு மாணவரும் உடனிருந்தார்.

மாணவன்: தேவரீர்.  இன்று காலையில் தாங்கள் நடத்திய பாடத்தில் பொருள் விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாக உள்ளது.

யாதவ: எந்தப் பாடம் ?

மாணவன்: சந்தோக்ய உபநிடத்தில் ஆறாவது பகுதியில் வரும் ஏழாவது மந்திரம்.

யாதவ: எங்கே அந்த மந்திரத்தை ஒருமுறை கூறு.

மாணவன்:  தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக -மேவமக்ஷிணி

யாதவ: இதில் உனக்கு என்ன சந்தேகம்?

மாணவன்: இதில் வரும் கப்யாசம் என்ற பதத்தின் பொருள் என்ன?

யாதவ: கப்யாசம் என்ற சொல்லை கபி + ஆசாம் என்று பிரி. கபி என்றால் குரங்கு என்று பொருள். ஆசாம் என்றால் பிருட்டபாகம். அதாவது குரங்கின் ஆசனவாயானது தாமரையைப் போல மலர்ந்திருக்கும் . அப்படிப்பட்ட சிவந்த கண்களையுடைய மகாவிஷ்ணு என்று பொருள்.

இந்த விளக்கத்தை ராமானுஜன் கேட்கிறான். எம்பெருமானுடைய கண்களை குரங்கின் பிருட்டபாகத்துடன் ஆச்சாரியார் உவமை கூறியவுடன் தாங்க முடியாத துக்கம் ராமானுஜனுக்கு ஏற்பட்டது. அந்தத் துக்கம் கண்களில் கண்ணீராக உடைத்துக் கொண்டு வந்தது. அப்படிப் பீறிட்டுக் கொண்டு வந்த கண்ணீர் சூடாக ஆச்சாரியாரின் திருமேனியில் பட்டது. ஆச்சாரியார் நிமிர்ந்து பார்க்கிறார். எம்பெருமானின் மீது இருந்த மாளாத காதல் காரணமாக ராமானுஜன் அழுதுகொண்டிருந்தான்.

யாதவ: ராமானுசா நான் அப்படி என்ன சொல்லி விட்டேன் என்று நீ அழுகிறாய் ?

ராமானு: மன்னிக்க வேண்டும் குருவே. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் நித்ய கல்யாண குணங்களைக் கொண்டவன். எனவே அவனுடைய கண்களைக் குரங்கின் பிருட்டபாகத்துடன் தாங்கள் ஒப்பிட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

யாதவ: இது நான் கூறிய விளக்கமில்லை. வழி வழியாக பல ஆச்சாரியர்கள் கூறி வரும் விளக்கம். ஆதிசங்கரர் கூட இதற்கு இப்படித் தான் விளக்கமளிக்கிறார்.

ராமானு: மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் கூறட்டும். என் பிரபுவை நான் குறைத்து ஒப்பிட மாட்டேன்.

யாதவ: அப்படி என்றால் இந்த செய்யுளுக்கு நீயே விளக்கம் கொடு.

ராமானு: கப்யாசம் என்ற சொல்லை இப்படியும் பிரிக்கலாம். கம்+பீபதி+ஆசம். இதில் கப் என்றால் தண்ணீர் என்று பொருள். பிபதீ என்றால் குடித்தல் என்று பொருள். எனவே இதனை கம் ஜாலம் பிபதீ கபி: ஸுர்ய: என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் சூரியனால் மலர்ந்தது என்ற பொருள் வரும். எனவே சூரியனால் மலரும் தாமரையைப் போன்ற கண்களை உடையவன் எம்பெருமான் என்ற அருமையான விளக்கம் கிடைக்கும்.

யாதவ: உன் இலக்கண அறிவு பளிச்சிடுகிறது. என்றாலும் நீ அத்வைதத்தை மறுக்கிறாயோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது ராமானுஜா.

இவ்வாறு குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கிய ஸ்ரீ ராமானுஜர்,  ஸ்ரீபெரும்புதூரில் பொ.யு. ஆண்டு 1017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி அதாவது கலி ஆண்டு 4118-இல் சக ஆண்டு 938-இல் பிங்கள ஆண்டு சித்திரை மாதம் 12-ஆம் நாள், சுக்லபட்ச பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருடைய தந்தை ஆசூரி கேசவாச்சாரியார் ஆவார். தாயார் காந்திமதி அம்மையாவார்.

ஸ்ரீ பாகவதத்தின் பதினோறாவது ஸ்கந்தத்தில் “பெரிய பெரிய வைணவ பக்தர்கள் திராவிட நாட்டில் பாலாறு, காவிரி, தாமிரபரணி, பெரியாறு, வைகை என்ற ஆறுகள் பாயும் இடங்களில் தோன்றுவார்கள்’’ என்று கூறியுள்ளது. அது ராமனுஜரின் அவதாரத்தால் உண்மையாயிற்று.

கேசவாச்சாரியார் தனது குழந்தைக்கு  ‘ராமானுஜர்’ என்று நாமகரணம் சூட்டினார். அதே நேரம் காந்திமதியின் சகோதரி தீப்திமதியும் ஒரு ஆண் மகவை ஈன்றார். அதற்கு  ‘கோவிந்தன்’ என்று பெயரிட்டனர்.

இருவரும் உபநயனம் முதலிய சம்ஸ்காரங்கள் மூலம் வேதம் பயிலச் சென்றனர். ஆரம்பத்தில் அவரது தந்தையான கேசவாச்சாரியாரே வேத பாடம் செய்வித்தார். படிக்கும் பாடங்களை எளிதில் கிரகித்துக் கொண்டு மீண்டும் திருப்பி ஒப்புவிக்கும் மகனின் கூர்மையான அறிவினைக் கண்டு தந்தை அகமகிழ்ந்தார்.

ராமானுஜருக்கு அவரது பதினாறாவது பிராயத்தில் தஞ்சமாம்பாள்என்ற வடிவில் மிக அழகான பெண்ணை மணம் முடித்து வைத்தார்.

ராமானுஜருக்கு மணம் முடிந்த மறுவருடமே அவருடைய தந்தை கேசவாச்சாரியார் பரமபதம் அடைந்தார். எனவே கல்வியில் தன் மேற்படிப்படித் தொடர ராமானுஜர் காஞ்சிபுரம் செல்ல முடிவெடுத்தார்.

காஞ்சிபுத்தின் அருகில் திருப்புட்குழி என்ற இடத்தில் யாதவப்பிரகாசர் என்ற வேதவித்து மாணாக்கர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார் என்பதை கேள்விப்பட்ட ராமானுஜர் அவரிடம் பாடம் கற்கச் சென்றார்.

ஆரம்பத்தில் யாதவப்பிரகாசருக்கு ராமானுஜரால் பெரிய வில்லங்கம் வந்து சேரும் என்று தெரியாது. ராமானுஜரின் வேத அத்தியயனத்தைக் கண்டு வியந்து அவரைத் தனது மாணாக்கனாகச் சேர்த்துக் கொள்கிறார்.

ராமானுஜருக்கும் அவரது குருவிற்கும் மீண்டும் ஒருமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த முறை அந்த கருத்து வேறுபாடு விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.

வேத பாடம் நடக்கிறது. யாதவப்பிரகாசர் தனது மாணாக்கர்களுக்கு  பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

யாதவ: கவனமாகக் கேளுங்கள். ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம.

ராமானு: சுவாமி இது எந்த உபநிடதத்தில் வருகிறது?

யாதவ: தைத்ரீக உபநிடதத்தில் வரும் மந்திரம்.

ராமானு: இதன் பொருள் என்ன சுவாமி?

யாதவ: (ஒரு பிரளயமே வரப்போகிறது என்பது தெரியாமல் ) ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் இவையே பிரம்மமாகும்.

ராமானு: இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை சுவாமி.

யாதவ: உன்னிடம் மறுத்துப் பேசும் குணம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது ராமானுஜா. உன்னை மாற்றிக் கொள்.

ராமானு: எடுத்ததற்கெல்லாம் மறுப்பது என் குணமில்லை சுவாமி. உங்களை மறுத்துப் பேசியதற்கு க்ஷமிக்க வேண்டும். இருப்பினும் தாங்கள் உபநிடதத்திற்கு தவறான பொருள் கூறிவிடக் கூடாது அல்லவா?

யாதவ: சரி நீயே மேதாவி என்று வைத்துக் கொள்வோம். உன்னுடைய விளக்கம், இந்த மந்திரத்திற்கு என்னவென்று கூறு.

ராமானு: ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் போன்றவை பிரம்மத்தின் குணங்களே அன்றி அவையே பிரம்மமாக வாய்ப்பில்லை. இதுதான் என் விளக்கம். இந்த உடலானது என்னுடையதானாலும் கூட இந்த உடல் நானாக மாட்டேனோ அதைப் போல இந்த குணங்கள் பரமனுடையவை என்றாலும் இந்த குணங்களே பரமனாக மாட்டா.

யாதவ: நீ அதிமேதாவியாகி விட்டாய் ராமானுஜா. இனிமேல் உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் யோக்கியதை எனக்கு இல்லை. இனிமேல் நாளைமுதல் நீ என் வகுப்புக்கு வர வேண்டாம்.

இருப்பினும் ராமானுஜரிடம் துவைதக் கோட்பாடு வேரூன்றிவிட்டது.

இறைவன்தான் எல்லாம் என்பது அத்வைதம். அதாவது இறைவன் வேறு ஜீவாத்மா வேறு என்ற துவைதக் கோட்பாட்டின் எதிர்ப்பதம் இந்த அத்வைதம். துவைதம் என்றால் இரண்டு என்ற சொல்லிலிருந்து வந்தது.

பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் மற்ற எல்லா ஜீவராசிகளும் தனித் தனி என்பது துவைத சித்தாந்தம். இந்த சித்தாந்தத்திலிருந்து ராமானுஜர் தன் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை.

சங்கரர் போன்ற முந்தைய குருமார்களின் வியாக்கியானங்களை மதியாமல் ராமானுஜர் புதிதாகக் கிளம்புகிறாரே என்ற ஆத்திரம் பொறாமையாக யாதவப்பிரகாசரிடம் உருவெடுக்கிறது. போதாதற்கு ராமானுஜர் தன்னுடைய இந்தப் புதிய விளக்கத்தின் மூலம் வேதவித்தகர்கள் நடுவில் பெரும் புகழும் அடைகிறார். இதுவேறு யாதவப்பிரகாசரின் கண்களை மறைக்கிறது. மிக மோசமான முடிவெடுக்கிறார்.

$$$

2 thoughts on “சமுதாயச் சிற்பி ராமானுஜர் -2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s