–இரா.சத்யப்பிரியன்

3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்
பெரும் மகான்களின் வாழ்க்கையை உற்று நோக்கும்போது அவர்கள் பெரும்பாலும் தமது கோட்பாடுகளை நிறுவ வாதத்திறமையை வளர்த்துக் கொள்வதோடு புத்திசாதுரியத்தால் தங்களது இன்னுயிரையும் காத்துக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அப்படி ஒரு நிர்பந்தம் இராமானுஜர் வாழ்வில் ஏற்பட்டது. அதுவும் தான் பாடம் கற்றுக் கொண்ட குருவிடமிருந்தே வந்தது.
இராமானுஜரின் துவைதம் பற்றிய விளக்கங்கள் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு யாதவப்பிரகாசர் மனக்கிலேசம் அடைகிறார். அதுவே நாட்பட நாட்பட வன்மமாக உருவெடுக்கிறது. மிகவும் மோசமான முடிவுக்கு செல்கிறார். இராமானுஜரை உயிருடன் உலாவ விட்டால்தானே இது போன்று தனது வியாக்கியானங்களும், கீர்த்தியும் கெடுகிறது எனவே அவரைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறார். தனது சீடர்களை அழைத்து திட்டம் தீட்டுகிறார். காசிவரையில் புனித யாத்திரை மேற்கொள்ளப்போவதாகவும் அதில் இராமானுஜரையும் கலந்துகொள்ள அழைக்கலாம்; அவ்வாறு இராமானுஜர் உடன் வரும்போது அவரை காட்டுவழியில் அடித்து தாக்கிக் கொன்றுவிட்டு பழியை மிருகங்கள்மேல் போட்டுவிடலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர்.
இந்த விஷயம் இராமானுஜரின் சிற்றன்னை மகனான கோவிந்தனுக்குத் தெரியவருகிறது. கோவிந்தன் இராமானுஜரைத் தடுப்பதற்குள் அவர் பிரயாணத்தை மேற்கொண்டுவிடுகிறார். ஆயினும், கோவிந்தன் இராமானுஜரை தனிமையில் அழைத்து விஷயத்தைக் கூறுகிறார். தான் தெய்வத்திற்கும் மேலாக மதிக்கும் ஆச்சாரியார் தனது உயிருக்கு உலைவைக்கப் போகிறவர் என்பதைக் கேள்வியுற்று மனம் பதைக்கிறார். உள்ளம் வெம்புகிறார். இருப்பினும் இறைவனுக்குத் தொண்டுசெய்ய இந்த பூத உடலின் அவசியம் அறிந்து இரவோடு இரவாக அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிர்ப் பாதையில் பயணிக்கிறார்.
மறுநாள் யாதவப்பிரகாசரும் அவரது சீடர்களும் இராமானுஜரைத் தேடுகின்றனர். அவர்கள் கண்களுக்குத் தென்படாமல் போகவே தங்கள் கைகளினால் நேரவிருந்த அசம்பாவிதம் நிஜமாகவே மிருகங்களினால் ஏற்பட்டுவிட்டது என்று நம்பி ஒருவித நிம்மதிப் பெருமூச்சுடன் காசி எனும் புனிதத்தலம் நோக்கி யாத்திரையைத் தொடர்ந்தனர்.
காசியில் கங்கையில் குளிக்கும்போது இராமனுஜரின் ஒன்றுவிட்ட சகோதரனான கோவிந்தனுக்கு ஒரு பாணலிங்கம் கிடைக்கிறது. அதனைக் கொண்டுவந்து கோவிந்தன் காஞ்சியில் பிரதிஷ்டை செய்து மிகச் சிறந்த சிவபக்தனாக மாறுகிறார்.
ஆச்சாரியரால் கைவிடப்பட்ட இராமானுஜர் காட்டில் அலைந்து திரிந்து உண்ணை உணவின்றி, பருக நீரின்றி மிகவும் சோர்ந்து ஒரு மரத்தின் கீழ் சுருண்டு விழுகிறார்.
தான் உண்மையென்று கருதும் நாராயணன் தன்னை ஒருபோதும் கைவிட மாட்டான் என்ற திடமான சித்தம் இராமானுஜரிடம் இருந்தது. இறைவன் தனது தொண்டர்களைக் காப்பாற்ற பலநேரங்களில் மனிதவடிவில் வருவதுண்டு. அப்படி பரமேசுவரன் மனித உருவில் வந்து மதுரையம்பதியில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். இராமானுஜருக்கும் அப்படி ஒரு தெய்வக்காட்சி வேட்டுவ தம்பதியர் உருவில் கிட்டியது.
வழியில் வேற்று மனிதர்களை சந்திப்பதும் அவர்கள் நமக்கு உதவுவதும் அதன் பின்னர் நமது நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போவது உண்டு. அவ்வாறு உதவி செய்தவர்களை நாம் தெய்வமாக நினைப்பதுமுண்டு. ஆனால் இங்கே இராமானுஜர் வாழ்வில் அமானுஷ்யமாக ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.
இராமனுஜரை வழியில் சந்தித்த வேட்டுவத் தம்பதியர் அவருடைய குலம், கோத்திரம் முதலியவற்றை விசாரிகின்றனர். அவர்களும் புனித யாத்திரை மேற்கொண்டு காஞ்சிபுரம் வழியாக இராமேசுவரம் வரை செல்வதாகவும் தங்களுடன் வந்தால் ஒருவருக்கொருவர் உதவியுடன் இருப்பதோடு விரைவில் காஞ்சிபுரமும் சென்றுவிடலாம் என்றும் கூறுகின்றனர். இராமானுஜரும் இதற்கு சம்மதித்து அவரகளுடன் பயணம் மேற்கொள்கிறார்.
அவர்கள் மூவரும் நடந்தபடியே ஓர் இடத்தை அடைகின்றனர். நன்றாக இருட்டி விட்டது. களைப்பு மிகுதியால் வேடனின் மனைவி தாகத்திற்கு தண்ணீர் பருகக் கேட்கிறாள். வேடுவன் காலையில் விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விடுகிறான். அந்த மூவரும் அந்த இரவை அந்தக் காட்டில் கழிக்கின்றனர்.
மறுநாள் காலையில் கண்விழிக்கும் இராமானுஜர் சுற்றும்முற்றும் பார்க்கிறார். ஒரு பெரிய கிணறு தெரிகிறது. உள்ளே குளிர்ந்த நீர் நிறைந்து இருந்தது. உள்ளே செல்வதற்கு வசதியாகப் படிகள் இருந்தன. உள்ளே சென்று கை கால் முகம் கழுவிக்கொண்டு குடிக்க தண்ணீர் கேட்ட வேட்டுவ பெண்ணிற்கு நீர் முகர்ந்து கொண்டுவந்து கொடுத்தார். இவ்வாறு மூன்றுமுறை நீர் முகர்ந்துவந்து கொடுத்தும் அவள் தாகம் தீரவில்லை. நான்காவது முறையும் இராமானுஜர் நீர் முகர்ந்து வருவதற்கு அந்தக் கிணற்றின் படிகளில் இறங்குகிறார். அப்போதுதான் அந்த அமானுஷ்யம் நிகழ்கிறது.
நீர் முகர்ந்துவந்த இராமானுஜர் சுற்றும் முற்றும் அந்த வேட்டுவத் தம்பதிகளைத் தேடினார். கண்பார்வை செல்லும்வரையில் அவர்கள் தென்படவேயில்லை.என்ன ஆச்சரியம். இது என்ன இடம் என்று பார்க்கிறார். அது ஒரு நகரம் போல காட்சியளிக்கிறது. மாடங்களுடன் கூடிய வீடுகள், இறைவனின் திருக்கோவில்கள், வேதம் முழங்கும் பாடசாலைகள் என்று அவருக்கு மிகவும் பரிச்சயப்பட்ட நகரம்போல காட்சியளிக்கிறது.
எதிரில் வந்த ஒருநபரிடம் அந்த ஊரைப்பற்றி விசாரிக்கிறார்.
வந்த நபர் அந்த நகரம் காஞ்சிபுரம் என்றும் அங்கு இராமானுஜரை அவர் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் கூறுகிறார். மேலும் இராமானுஜர் நீர்முகர்ந்த கிணறு பல நோய்களைத் தீர்க்கும் தன்மையுள்ளது என்கிறார்.
இராமானுஜருக்கு மெய்சிலிர்க்கிறது. பெருமாளும் தாயருமே வேடுவர்களாக வந்து தம்மைக் காத்து உரிய இடத்தில் சேர்ப்பித்திருக்க வேண்டும் என்று நம்பினார். நாராயணின் மீதான பக்தி வேரூன்றியதற்கு இந்த நிகழ்ச்சி இராமானுஜர் வாழ்வில் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
இராமானுஜர் திரும்பி வந்ததை ஊரே கொண்டாடுகிறது. இராமானுஜரின் தாயாரும் சிறிய தாயாரும், மனைவியும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். தனக்கு நேர்ந்த அனைத்தையும் தனது வீட்டுப் பெண்களிடம் கூறிய இராமானுஜர் அவற்றை வெளியில் சொல்ல வேண்டாம், அதனால் தனது ஆச்சாரியாரின் பெயருக்குக் களங்கம் நேரிடும் என்கிறார். என்னே ஓர் உன்னத உள்ளம் அந்த மகானுக்கு.
புனிதயாத்திரையை முடித்துக் கொண்டு யாதவப்பிரகாசர் தனது சிஷ்யர்களுடனும் இராமானுஜரின் சகோதரர் கோவிந்தனுடனும் காஞ்சி வந்தடைந்தார். அவருடைய மனதில் இராமானுஜருக்கு தாம் இழைத்த இன்னலின் காரணமாக எழுந்த குற்றவுணர்ச்சி அவரை யாத்திரை முழுவதும் வாட்டியவண்ணம் இருந்தது. காஞ்சிபுரம் வந்ததும் இராமானுஜர் உயிருடன் இருப்பதை அறிந்ததும் மற்ற அனைவரைக் காட்டிலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தது யாதவப்பிரகாசராகத்தான் இருக்க வேண்டும்
ஆச்சாரியார் முன்பு ஒன்றுமறியாதவர் போல இராமானுஜர் போய் நிற்கிறார்.. யாதவப்பிரகாசர் அவரைத் தழுவியபடி மீண்டும் பாடம் கற்றுக் கொள்ள ஆணையிடுகிறார். இராமானுஜரும் பழைய விஷயங்களை மனதில் கொள்ளாமல் மறுநாளிலிருந்து அவரிடம் பாடம் கற்றுக் கொள்ளச் செல்கிறார்.
இதற்கு நடுவில் இராமானுஜரின் துவைதக் கோட்பாட்டு வியாக்கியானங்கள் அவருக்கு பெரும்புகழை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. வைணவப் பெரியவர்களில் அந்தக் காலத்தில் சிறந்து விளங்கிய ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தபோது துவைதக் கொள்கைகளை நிறுவிய இராமானுஜரைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்து பார்த்தார். அப்போதே அவர் மனதில் ஒரு தீர்மானம் விழுந்து விடுகிறது. அந்தத் தீர்மானத்தை பிறிதொரு அத்தியாயத்தில் கூறுகிறேன்.
துவைதம் என்ற தோணியைப் பற்றிக் கொண்டு வாழ்க்கை என்ற கடலில் இராமானுஜர் சந்தித்த சவால்களைச் சொல்லுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.இதுபோன்ற அறிவில் சிறந்தவர்களின் பார்வை இராமானுஜர் மேல் விழவிழ யாதவப்பிரகாசர் மேலும் பொறாமைத் தீயில் கருகத் தொடங்கினார். இவருடைய பொறாமை உச்சத்தை அடையும்வண்ணம் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
$$$
2 thoughts on “சமுதாயச் சிற்பி ராமானுஜர் -3”