-மகாகவி பாரதி
பழம்பெரும் இதிகாசமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, பெண்ணுரிமைக் காப்பியமாக தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே ‘பாஞ்சாலி சபதம்’. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த அற்புதமான படைப்பு இது. இலக்கிய நயமும் கவிநயமும் கொண்ட இனிய கவிதைகளால் அமைந்த காப்பியம் இது. ‘பாஞ்சாலி சபதம்’ இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் முதல் பாகத்தில் - சூழ்ச்சி சருக்கம், சூதாட்டச் சருக்கம், இரண்டாம் பாகத்தில் அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களில் 412 பாடல்கள் உள்ளன. இந்நூல் நமது தளத்தில் தொடராக வெளியாகிறது...

ஸமர்ப்பணம்
தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும்
அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்கும்
இந்நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன்.
-ஆசிரியன்
$$$
முகவுரை
எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும் படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்.
காரியம் மிகப் பெரியது. எனது திறமை சிறிது. ஆசையால் இதை எழுதி வெளியிடுகிறேன். பிறருக்கு ஆதர்சமாக அல்ல, வழிகாட்டியாக.
இந்நூலிடையே திருதராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவனாகவும் சூதில் விருப்பமில்லாத வனாகவும் துரியோதனனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கிறேன். அவனும் மகனைப் போலவே துர்க்குணங்களுடையவன் என்று கருதுவோருமுளர். எனது சித்திரம் வியாச பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக இந்நூலை வியாச பாரதத்தின் மொழி பெயர்ப்பென்றே கருதி விடலாம். அதாவது கற்பனைதிருஷ்டாந்தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’ அதிகமில்லை. தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி.
தமிழ் ஜாதிக்கு புதிய வாழ்வு தர வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினாளாதலின் இதன் நடை நம்மவர்க்குப் பிரியந் தருவதாகும் என்றே நம்புகிறேன்.
ஓம். வந்தே மாதரம்!
-சுப்பிரமணிய பாரதி
$$$