-இரா.சத்யப்பிரியன்

4. அரசிளங்குமரி
ஒருமுறை காஞ்சி மன்னனின் மகளுக்குத் தீராத மனோவியாதி ஏற்பட்டது. மற்ற மானுடப் பெண்களைப் போலன்றி மனப்பிறழ்வில் அதீதமாக நடந்துகொள்ளத் தொடங்கினாள். பார்க்கும் வைத்தியர்கள் அனைவரும் அரசிளங்குமரிக்கு பிரம்மராக்ஷஸ் பற்றிக் கொண்டிருக்கிறது எனவே பிரம்மராக்ஷசை விரட்டும் மாந்த்ரீகனைத்தான் அழைத்து வரவேண்டும் என்று கூறிவிட்டனர். யாதவபிரகாசருக்கு மாந்த்ரீக வைத்தியம் தெரியும் என்பதால் அரசன் அவரை அழைத்துவர ஆள் அனுப்பினான்.
யாதவபிரகாசர் அரண்மனையின் அந்தப்புரத்தில் அரசிளங்குமரியின் இல்லம் நோக்கிச் சென்றார். தனக்குத் தெரிந்த மந்திரங்களைப் பிரயோகித்தார். அவரை எள்ளி நகையாடிய பிரம்மராஷஸ் இடிச்சிரிப்புடன் கூறியது.
“யாதவப்பிரகாசரே! உனது மந்திரம் என்னிடம் பலிக்காது. நீ கற்ற மந்திரங்கள் என்னை விரட்டும் அளவிற்கு சக்தி உடையவையல்ல. நான் இங்கிருந்து அகல வேண்டுமென்றால் உனது சீடனான இராமானுஜனை இங்கே அனுப்பு” என்றது.
யாதவப்பிரகாசருக்கு இது பொறுக்கவில்லை. எனினும் அரசனின் ஆணையை நிறைவேற்றவில்லை என்றால் அதன் விளைவுகளை தான் சந்திக்க நேரும் என்பதால் இராமானுஜரை அரண்மனைக்கு அனுப்பினார்.
இராமானுஜர் அரண்மனைக்குச் சென்றார். அந்தபுரத்தில் அரசிளங்குமரியைச் சந்தித்தார். தனக்குத் தெரிந்த மந்திரங்களை கூறத் தொடங்கினார்.
பிரம்மராக்ஷஸ் பயங்கரமாக சிரித்துக் கொண்டு “நான் இந்த இளவரசியை விட்டு அகல வேண்டுமானால் உங்கள் பாதம் என்மீது பட வேண்டும் “ என்றது.
இராமானுஜர் , “ஹே! பிரம்ம ராக்க்ஷசே நீயோ ரூபமற்றவன். உன் மீது என் பாதங்கள் எப்படிப் படும்?” என்று வினவுகிறார்.
பிரம்மராக்ஷஸ் “சுவாமி ! தங்கள் திருப்பாதங்களை இந்த இளவரசியின் தலைமீது வையுங்கள். அது என்மீது படும்” என்றது.
இராமானுஜர் “ நீ இந்த அரசிளங்குமரியை விட்டு அகன்று விட்டாய் என்பதற்கு என்ன சாட்சி?” எனக் கேட்கிறார்.
அதற்கு பிரம்மராக்ஷஸ் “நான் இந்தப் பெண்ணைவிட்டு அகன்றதும் அந்தப்புரத்தின் அருகில் உள்ள அரசமரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்துவிழுவதைக் காணலாம்” என்றது
பிரம்மராக்ஷஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க இளவரசியின் சிரசின் மீது இராமானுஜர் தனது பாதத்தை வைத்தார். மறுகணமே வெளியில் இருந்த அரசமரத்தின் பெரிய கிளை ஒன்று பெருத்த சப்தத்துடன் முறிந்து விழுந்தது. இளவரசியும் மயக்கமுற்று எழுபவளைப் போல எழுந்துவிட்டாள். பிரம்மராக்ஷஸ் அவளைவிட்டு அகன்றதால் மீண்டும் பழைய நிலையை அடைந்தார். அரசனும் மகிழ்வுற்று இராமானுஜருக்கு சிறப்புச் செய்து அனுப்பினான்.
யாதவப்பிரகாசரின் பாடசாலை தொடர்ந்து நடந்தது. இராமானுஜரும் அவரிடம் தொடர்ந்து பாடம் கற்று வந்தார். ஒருநாள் சாந்தோக்ய உபநிடத்தில் ஒரு மந்திரத்திற்கு பொருள் கூறிக் கொண்டிருந்தார். “சர்வம் கல்விதம் பிரம்மம்” என்பது ஒரு சூத்திரம். “நேக நாநாஸ்தி கிஞ்சன” என்பது வேறொரு சூத்திரம். முதல் சூத்திரத்திற்கு இங்கு எல்லாமே பிரம்மம் என்ற அத்வைதக் கோட்பாடு விளங்கும்படியான விளக்கத்தை யாதவர் அருளினார். அடுத்த சூத்திரத்திற்கு இங்கு எதுவும் பலவாக இல்லை என்று, மீண்டும் அத்வைதக் கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கம் கூறினார். இதனை துவைதக் கொள்கையில் மனம் ஊறிப்போயிருந்த இராமானுஜரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
இராமானு: இதை நான் மறுக்கிறேன்.
யாதவ: ஆச்சாரியானை மறுக்கும் போக்கு உன்னிடம் அதிகமாகி வருகிறது இராமானுஜா! மாற்றிக் கொள்.
இராமானு: அதற்காக ஆச்சாரியார் பிழைபடக் கூறி அதன்மூலம் அவருக்கு அவப்பெயர் ஏற்படுமேயானால் அதனை பொறுத்துக் கொண்ட சிஷ்யன் எங்கனம் சிறந்த சிஷ்யனாவான்?
யாதவ: சாமர்த்தியமாகப் பேசுவதாக அர்த்தமா?
இராமானு: நிஜத்தைச் சொன்னேன் சுவாமி.
யாதவ: அப்படி என்ன நிஜத்தைக் கண்டாய்? உன் விளக்கத்தைக் கூறு… பார்க்கலாம்.
இராமானு: ‘சர்வம் கல்விதம் பிரம்ம’ என்பதற்கு இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் பிரம்மம் என்று அர்த்தம் கொள்ளலாம். ஏனென்றால் பிரபஞ்சம் தோன்றுவது, சாஸ்வதமாக இருப்பது, மறைவது ஆகியவை இந்தப் பிரம்மத்தால்தான் நடைபெறுகிறது என்பதால் அது பிரம்மத்துடன் தொடர்புடையது என்று கொள்ளலாம். மீனுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பைப் பாருங்கள். மீன் நீரிலே பிறந்து அதிலேயே வளர்ந்து அதிலேயே மரிக்கின்றது. நீரில்லாமல் மீனால் எப்படி உயிர் வாழ முடியாதோ அதைப்போல பிரம்மமின்றி இப்பிரபஞ்சம் இல்லை. ‘நேக நாநாஸ்தி கிஞ்சன’ என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?
யாதவ: இங்கே எதுவும் பலவாக இல்லை என்பதே இதன் பொருள்.
இராமானு: தவறு சுவாமி.
யாதவ: என்ன தவறு கண்டாய்? இதற்கு உன் விளக்கம் என்ன?
இராமானு: ‘நேக நாநாஸ்தி கிஞ்சன’ என்பதற்கு இங்கு எதுவும் பலவாக இல்லை என்பதல்ல பொருள். உலகிலுள்ள பொருட்களுக்கு தனித்தனி தன்மை கிடையாது. ஜீவாத்மா என்ற ரீதியில் அவை அனைத்தும் ஒன்றே. எம்பெருமான் தனி ஒரு பொருளான பரம்பொருள் என்றால் உயிருள்ளவை – உயிரற்றவை என்ற மற்ற அனைத்து ஜீவராசிகளும் ஜீவாத்மா என்ற போர்வையில் அடங்குபவை. ஒரு முத்து மாலையை எடுத்துக் கொள்ளுங்கள். முத்துக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி என்பது போலத் தோன்றும். ஆனால் ஒரு ஊடுசரம் அவற்றை ஒன்றிணைத்து ஒரு மாலையாக்குகிறது. எனவே அந்த முத்துக்கள் அந்த மாலையைப் பொருத்த வரை தனித்தனி கிடையாது. அதைப்போல எம்பெருமான் நம் அனைவர்க்கும் ஊடுசரமாக இருக்கிறான் என்றுதான் இதற்குப் பொருள்.
இவ்வாறு தர்க்கம் நடைபெற்றது.
தன்னுடைய துவைதக் கோட்பாடுகளை தனியாக ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற பெயருடன் ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபிப்பதற்கு யாதவப்பிரகாசர் ஒரு கருவியாக இருந்தார் என்றுதான் கொள்ள வேண்டும். அப்படி ஸ்தாபிப்பதற்கு ஸ்ரீ ராமானுஜர் தனது உயிரைப் பணயம் வைக்க நேர்கிறது. இந்த உயிர்ப் பணயம் இவரது வாழ்க்கை நெடுகிலும் தொடர்கிறது. ஸ்ரீரங்கத்தில் ஒரு அர்ச்சகராலும், கிரிமிகண்டன் என்ற சைவ மன்னனாலும் இவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு எம்பெருமானின் அருளால் தப்பிப் பிழைக்கிறார்.
இராமானுஜர்மேல் கோபம் கொண்ட யாதவப்பிரகாசர் எங்கே தான் போதித்து வரும் அத்வைதக் கொள்கைக்கு பங்கம் நேருமோ என்ற அச்சத்தில் இராமானுஜரைப் பார்த்து “அப்பா இராமானுஜா! உனக்கு சொல்லித்தரும் தகுதி இனிமேல் எனக்கில்லை. எனவே நாளைமுதல் பாடம் கற்றுக் கொள்ள என்னிடம் வராதே “என்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் தண்டனிட்டு குருவை வணங்கி “அப்படியே ஆச்சாரியாரே “ என்று கிளம்பினார். அன்றிலிருந்து ஸ்ரீ ராமானுஜரும் யாதவப்பிரகாசரிடம் பாடம் கற்கச் செல்லவில்லை. ஆனால் இந்த ஆச்சாரியரே தனது சிஷ்யனிடம் தானே ஒரு சிஷ்யனாகச் நேர்ந்த அற்புதத்தை காலம் ஏற்படுத்தியது.
$$$
2 thoughts on “சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4”