மகாவித்துவான் சரித்திரம்- 2(5)

-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்

5. திருவாவடுதுறை குருபூஜை நிகழ்ச்சிகள்

திருவாவடுதுறையில் நான் இவரைப் பார்த்தது

தை மாதத்தில் திருவாவடுதுறையில் நடக்கும் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தியினுடைய குருபூஜைக்கு இவர் வரக்கூடுமென்று தெரிந்தமையால் நான் இவரைப் பார்த்தற்கு அன்று அவ்வூர் சென்றேன்; அவ்வூர்க் காட்சி என் மனத்தைக் கவர்ந்தது. கூட்டத்தின் மிகுதியால் முற்பகலில் இவரது இருப்பிடம் தெரிந்து சென்று இவரைப் பார்க்க முடியவில்லை. பிற்பகலிற் சென்று தேடியபொழுது தெற்கு வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் சிலரோடு பேசிக்கொண்டு இவரிருத்தலைக் கண்டேன். அங்கே சென்று பக்கத்தில் நின்றபொழுது, “எப்பொழுது வந்தீர்? தேகஸ்திதி ஸெளக்கியமாக இருக்கிறதா? ஆகாரஞ் செய்தாயிற்றா?” என்றார். “இன்று காலையில் வந்தேன். தேகஸ்திதி சௌக்கியமாக இருக்கிறது. ஆகாரம் செய்தாயிற்று” என்று சொன்னேன்; அப்பால் இருக்கச் சொன்னபடி ஓரிடத்தில் இருந்து இவர் பேசுவனவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

உடன் இருந்தவர்கள் சென்ற பின்பு இவர், “இனிப் பாடங் கேட்க வரலாமே” என்று என்னிடம் சொன்னார்; “கேட்குங் காலத்தை எதிர்பார்த்தே ஒவ்வொரு நிமிஷமும் காத்திருக்கிறேன்” என்று சொன்னேன்; “மாயூரம் போனபின் அப்படியே செய்யலாம்” என்று சொல்லிவிட்டுப் பிற்பகலில் ஐந்து மணிக்குமேல் மடத்திற்குச் சென்றார். நானும் உடன் சென்றேன்.

தம்பிரான்கள் பாடங்கேட்டது

அப்பொழுது அங்கேயிருந்த குமாரசாமித் தம்பிரான், பரமசிவத் தம்பிரான் முதலியோர் எழுந்து நின்று இவரை வரவேற்றார்கள். இவரை அங்கே ஓரிடத்தில் இருக்கச்செய்து அவர்களும் இருந்தார்கள். சில நேரம் சம்பாஷித்துக் கொண்டேயிருந்துவிட்டு அவர்கள், “ஏதேனும் ஒரு நூலை நாங்கள் இப்போது பாடங் கேட்கலாமோ?” என்றார்கள்; இவர் கேட்கலாமென்று சொல்லவே அவர்கள் காசிக் கலம்பகம் கேட்கத் தொடங்கினார்கள்;  “*1காசிச்சாமி (பரமசிவத் தம்பிரான்) இருக்கும்பொழுது இக்கலம்பகம் நடைபெறுவது மிகவும் பொருத்தமுடையதே” என்று சொல்லிவிட்டு இவர் பாடஞ்சொன்னார்; இரவு எட்டு மணிக்குள் 10 பாடல்கள் படிக்கப்பட்டன. அப்பால் அவரவர்கள் தத்தம் இடஞ் சென்றார்கள்.

சுப்பிரமணிய தேசிகர் பரிசளித்தல்

பத்து மணிக்குமேல் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய பட்டணப் பிரவேசமும் கொலு முதலியனவும் நடைபெற்றன. அவை வந்தவர்களுடைய கண்களையும் மனங்களையும் கவர்ந்தன.

குரு பூஜைக்காக வந்திருப்பவர்களுள் மறுநாளும் இருந்து செல்லுபவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஊருக்குச் செல்ல விரும்புகிற மற்றவர்களை வருவித்து அவரவர்களுடைய தகுதிக்கும் அவர்கள் வைத்த பாதகாணிக்கைத் தொகைக்கும் ஏற்றபடி மரியாதைகளைச் செய்து அனுப்புவது ஆதீனகர்த்தருடைய வழக்கமாதலால் அன்று அங்ஙனமே கொடை நடைபெற்றுவந்தது. இப்புலவர்பிரான் தமக்காக அமைக்கப்பட்டிருந்த வீட்டின் இடைகழியில் வந்து சயனித்துக் கொண்டார். அப்போது சுப்பிரமணிய தேசிகரிடம் விடைபெற்றுக்கொண்ட பிரபுக்களிற் சிலரும் வித்துவான்களிற் சிலரும் இவரிடம் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டு விடைபெற்றுச் சென்றார்கள். அதனால் இவர் நித்திரை செய்யவேயில்லை.

ஆவூர்ப் பசுபதி பண்டாரத்திற்குப் பாடல் அளித்தது

அப்படியிருக்கையில், ஆவூர்ப் பசுபதிபண்டார மென்பவர் அங்கே வந்து இவரைப் பார்த்து நெடுநேரம் புகழ்ந்து பாராட்டிப் பேசிக் கொண்டேயிருந்தார். இவருக்கு மிகுந்த சிரமமிருந்தும் பழகியவராதலால் தமது சிரமத்தை அவர்பாற் சிறிதும் புலப்படுத்தவில்லை. அப்பால் அவர், “நீங்கள் மிகுந்த ச்ரமமடைந்திருப்பதாகத் தெரிகிறபடியால் நான் இப்போது பேசுவது ஸரியல்ல” என்றெழுந்து, “போய் வருகிறேன்” என்றார்; இவர் “சரி” என்றார்.

அடிக்கு ஒருதரம் திரும்பிப் பார்த்து, “போய் வருகிறேன், போய் வருகிறேன்” என்று சொன்னார். கடைசியில் இவர் அஞ்சலி செய்தார். அப்பால் அவர் சிறிது தூரம் சென்று யோசனை செய்துகொண்டே நின்று பின்பு மீண்டுவந்து இவர் சயனித்துக் கொண்டுவிட்டதைத் தெரிந்து கனைத்தார்.

உடனே இவர் எழுந்து, “என்ன விசேடம்? வந்த காரியத்தைச் சொல்ல வேண்டும்” என்று கேட்கவே அவர், “இப்போது எழுந்தருளியிருக்கும் ஸந்நிதானத்திற்குப் படித்தவர்களிடம் மிகுந்த பிரியமிருப்பதாகவும் அவர்களுள் *2 ஸாஹித்ய சக்தி உள்ளவர்களிடத்தில் அதிக மதிப்பு இருப்பதாகவும் கேள்வியுற்றேன். அதற்குத் தாங்களே ஸாட்சி. இந்த ஆதீனத்தில் மூன்று பட்டத்திலிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்களைப்போன்ற விதரணசாலிகள் யாருமில்லை. இங்கே குருபூஜா காலத்தில் எம்மவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் திட்டம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். குரு பூஜையின் மறு நாட்காலையில் எங்களையெல்லாம் தனியே ஓரிடத்தில் இருக்கச்செய்து எங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு தலைக்கு அரை ரூபாய் விழுக்காடு கொடுத்து அனுப்புவது வழக்கம். எங்களுடைய அதிர்ஷ்டம் அதற்குமேலே போவதில்லை. நான் கொஞ்சம் படித்தவனாக இருப்பதால் எனக்கு அந்தக் கூட்டத்திற் கலந்துகொள்ளப் பிரியமில்லை. மானம் போராடுகிறது. என்ன செய்வேன்! இந்த வருஷத்தில் தாங்கள் இங்கே விஜயஞ் செய்திருப்பது என்னுடைய அதிர்ஷ்டந்தான். என்னுடைய வித்வத்தின் திறமை உங்களுக்கு வெகு காலமாகத் தெரியும். என்னைப் போலவே பெரிய புராணம், திருவிளையாடல், ஸ்காந்தம் முதலிய காவ்யங்களுக்கும் பிரபந்தங்கள் பலவற்றிற்கும் அர்த்தஞ் சொல்லுதலிலும் தேவாரங்களைப் பண்ணோடு ஓதுதலிலும் ப்ரஸங்கஞ் செய்வதிலும் எங்களவர்களில் இக்காலத்தில் யாரையாவது நீங்கள் பார்த்திருப்பதுண்டா? இப்படிப்பட்ட நான் அந்தக் கோஷ்டியிற் சேரலாமா? சேர்ந்தால் என் வித்தைக்கு என்ன ந்யூனதை ஏற்படும்? தாரதம்யமறிந்து கொடுக்கிற இந்த இடத்துக்குத்தான் என்ன கெளரவம்? பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்? எல்லாவற்றையும் பற்றி யோசிக்கும்பொழுது என்னுடைய யோக்யதையை நன்றாகத் தெரிவிக்கும்படி ஒரு செய்யுள் செய்துகொண்டு இப்போதே தனியே சென்று பார்த்துவிட்டுப் போகலாமென்று எனக்குத் தோற்றுகிறது. அதற்கும் ஆதீனத்து மஹாவித்வானாக விளங்கிக்கொண்டிருக்கிற தங்களுடைய உடன்பாடு வேண்டும், அவ்விதம் செய்யாவிட்டால் சோபிக்க மாட்டாது” என்றார்.

அவர் இன்ன எண்ணங்கொண்டு சொல்லுகிறாளென்பதை நன்றாக அறிந்தும் இவர், “அப்படியே செய்யலாம்” என்றார்.

பசு: அவசரத்தில் இப்போது செய்வதற்கு என்னால் முடியாது.

மீ: காலையில் இருந்து ஏதாவது பாடல் செய்து கொண்டு பார்த்துவிட்டுச் செல்லலாமே!

பசு: நாளைத் தினம் என் சிஷ்யரொருவருடைய கிரஹத்தில் ஒரு விசேஷம் நடக்கப் போகிறது. அதற்கு நானே நேரிற் போய்த் தீர வேண்டும். மற்றவர்கள் போனால் அந்தக் கிரஹஸ்தருக்கு அவ்வளவு திருப்தியாக இராது. என்ன பாருங்கள்! எங்களுடைய நிலைமை இப்படி இருக்கிறது!

மீ: ஆனால் இப்போதே ஒரு பாடல் செய்து கொண்டு ஸந்நிதானத்தினிடம் போய் வரலாமே.

பசு: எனக்கு ஸாஹித்யஞ் செய்வதிற் கொஞ்சங்கூட அப்யாஸமில்லை. இக்காலத்திலே கம்பராக விளங்குகின்றவர்களும் என்னிடத்தில் மிகுந்த ப்ரீதியுள்ளவர்களும் மஹோபகாரிகளுமாகிய தாங்களே ஒரு செய்யுள் செய்து கொடுத்தால் எனக்கு அது பரமோபகாரமாக இருக்கும்.

மீ: அப்படியிருக்கையில் ஸாஹித்ய விஷயத்தில் நீங்கள் ஏன் முயல வேண்டும்? ஸந்நிதானம் வேறுபாடாக நினைக்கக் கூடுமே.

பசுபதி பண்டாரம், ” இவ்வளவு கூட்டத்தில் அவர்கள் இதை எங்கே கவனிக்கப் போகிறார்கள்? கவனிக்கவே மாட்டார்கள். அவசியம் தாங்கள் ஒரு பாடல் செய்து கொடுக்கத்தான் வேண்டும்; கொடுத்தால் ஒரு ஜோடி வஸ்திரம் கிடைக்கும். பின்பு இந்த மடத்தில் நல்ல ஸ்தானத்தில் பதிவும் ஏற்படும். தங்களோடு வெகுநாளாகப் பழகிக்கொண்டே வரும் எனக்கு அது மஹத்தான ப்ரயோஜனமாக இருக்கும். தங்களை நினைந்து கொண்டே அந்த வஸ்திரத்தைப் பலநாள் தரித்துக்கொள்வேன். தங்களை *3 முதன்முதல் பட்டீச்சுரத்தில் நமச்சிவாய பிள்ளையவர்கள் முன்னிலையில் பிரகாசப்படுத்தியவன் நான்தானே? நான் போகுமிடங்களிலெல்லாம் தங்களைப் பெருமைப்படுத்திப் பேசுவது எனக்கு வழக்கம்” என்று மிகவும் மன்றாடி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

அன்பே ஓருருவமாக விளங்கும் இக்கவிநாயகர் ஒரு செய்யுளை இயற்றி அதனை ஒரு சீட்டில் எழுதுவித்து அவரிடம் கொடுத்து, “இந்தப் பாடலை நன்றாகப் பாடம் பண்ணிக்கொண்டு அங்கே சென்று சொல்லுங்கள்; பொருள் கேட்டால் தைரியமாகக் கூறுங்கள்; அதைரியம் வேண்டாம்” என்று சொல்லியனுப்பினார்.

பசுபதி பண்டாரம், “ஸங்கீதத்தில் எனக்கு அதிகமான பயிற்சியிருப்பதாலும் ஸந்நிதானத்திற்கு அதில் ப்ரியமுண்டென்று தெரிதலாலும் பாடலை ராகத்தோடு சொல்லி ஸந்நிதானத்தை ஸந்தோஷப்படுத்திவிடுவேன். அந்த விஷயத்தில் தங்களுக்குக் கவலையே வேண்டாம்” என்று சொல்லி எழுந்து ஊக்கத்தோடு விரைந்து சென்றார்.

இவர் பாடலாற் பசுபதி பண்டாரம் பரிசு பெற்றது

செல்லும்போதே பசுபதிபண்டாரம் பாடலை நன்றாக மனனம் பண்ணிக்கொண்டு ஒடுக்கத்தின் வாயிலை யடைந்தார். அழைத்தவர்களன்றி மற்றையோர் செல்லக் கூடாத சமயம் அது; சென்றால் வாயில் காப்போன் உள்ளே விட மாட்டான். ஆனாலும் அவருடைய முதுமையையும் உத்ஸாகத்தையும் முகமலர்ச்சியையும் தோற்றப் பொலிவையும் தைரியமாக வருதலையும் பார்த்தபொழுது, ‘இவர் மிகப் பழகியவராக இருக்கலாம்; ஏதோ முக்கியமான காரியமாகப் போகிறார்’ என்றெண்ணி அவன் யாதொரு தடையுஞ் சொல்லாமல் உள்ளே அவரை அனுப்பிவிட்டான். அவர் உள்ளே சென்று நின்றார்.

அப்போது சுப்பிரமணிய தேசிகர், “யார்?” என்றார்.

பசு: நான் அபிஷிக்தர்களைச் சார்ந்தவன்; தரிசனஞ்செய்து விட்டு விடைபெற்றுக் கொள்வதற்கே வந்தேன்.

சுப்: உங்கள் இனத்தவர்களுக்கெல்லாம் காலையிற் பணங் கொடுக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறது. ஆதலால் இப்போது போய்விட்டு நாளைக்காலையிற் *4 பன்னீர்க்கட்டிற்கு வாருங்கள்.

பசு: வித்வானாதலால் அந்தக் கூட்டத்திற் சேர எனக்குப் பிரியமில்லை.

சுப்: நீங்கள் வித்வானென்பதை நாம் இதுவரையில் அறிந்து கொள்ளவில்லையே.

பசு: அதற்கு ஸந்தர்ப்பம் வாய்க்கவில்லை. என்னிடத்தில் அன்புவைத்துச் சொல்லக்கூடியவர் யாரும் இல்லாமையால் ஸந்நிதானத்தின் ஸல்லாபம் எனக்கு இதுவரையில் நேரிற் கிடைக்காமற் போயிற்று. பரீக்ஷை செய்து பார்த்தால் என் யோக்யதை நன்றாகத் தெரியவரும்.

சுப்: உங்கள் கல்வியை அளந்தறிவதற்கு இது ஸமயமன்று. அவகாசத்தில் வந்தால் அதற்கு அனுகூலமாக இருக்கும். சொல்லிக்கொண்டு போவதற்காகப் பலர் காத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.

பசு: இவ்விடத்து ஆஞ்ஞையைப் பெற்றுக்கொண்டு இப்போதே புறப்பட வேண்டியவனாக இருக்கிறேன். காலையில் என் சிஷ்யரொருவர் வீட்டில் முக்கியமான காரியமொன்றிருக்கிறது. அந்த அவஸரத்தாலேதான் இப்போது வந்தேன். நான் செய்திருக்கும் பாடலைக் கேட்டருள வேண்டும். சொல்லும்படி கட்டளையிட்டாற் சொல்லுகிறேன். எப்படியாவது ஸந்நிதானத்தின் திருச்செவிகளுக்கு என் பாடல் விஷயமாக வேண்டுமென்பதுதான் எனது பிரார்த்தனை. பிரயோஜனத்தைக்கூட நான் எதிர்பார்க்கவில்லை.

சுப்: அப்படியானால் சீக்கிரத்தில் அதனைச் சொல்லலாம்.
பசுபதி பண்டாரம்,

(விருத்தம்)

*5 “எந்நாடும் புகழ்துறைசை வருகுருசுப் பிரமணிய எம்மா னேமுன்
இன்னாத புலியதளை யுடுத்தியிருந் திடுபொழுதில் ஏத்தி னோர்க்குப்
பொன்னாடை களையளித்தாய் பொன்னாடை புனைந்தவிந்தப் பொழுத டைந்தால்
என்னாசை தீர்ந்திடவே யெவ்வாடை யளிப்பைகொலென் றிங்குற் றேனால்”

என்ற பாடலை இசையுடன் மிக நன்றாகச் சொல்லிக் காட்டினர்.

அச்செய்யுளைக் கேட்டு இன்புற்றுப் புன்முறுவல் செய்து சுப்பிரமணிய தேசிகர், “ஐயா, இச்செய்யுளை இன்னும் ஒருமுறை சொல்ல வேண்டும்” என்று கட்டளையிடவே பசுபதி பண்டாரம் அவ்வாறே, பாடலைச் சொல்லி அதனை விரிவாக உபந்யஸிக்கும்படி உத்தரவிட்டாலும் செய்வதாகக் கூறினர்.

சுப்பிரமணிய தேசிகர், “வேண்டாம். நீங்கள் அர்த்தம் சொல்லாமலே பாடல் தன் பொருளையும் தன்னையும் நன்றாக விளக்குகின்றது” என்று சொல்லிவிட்டு உயர்ந்த வஸ்திரங்களைக் கொண்டுவரச் செய்து தாம்பூலத்துடன் வழங்கி அவரை நோக்கி, “இந்தச் செய்யுள்தான் உங்களுக்கு இந்த மரியாதையைச் செய்வித்தது” என்று சொன்னார். அதைப் பெற்று அங்கேயே அந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்து மிகுதியான ஸந்தோஷத்தை யடைந்து அவர் ஆதீனகர்த்தரவர்களை எல்லையின்றி ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தனர்.

அப்போது சுப்பிரமணிய தேசிகர், “ஐயா, வெளியில் அநேகர் காத்திருக்கிறார்கள்; அனுப்ப வேண்டும். விடைபெற்றுக் கொள்க” என்றார்.

உடனே அவர் எழுந்து ‘ஜன்னல்’ வழியே நிகழ்ந்தவற்றைக் கவனித்துக் கொண்டே யிருந்து, அருகில் வந்த தம்மவர் யாரையும் மதியாமல் மிக்க வேகமாகப் பிள்ளையவர்கள் விடுதிக்கு வந்தார்.

இக்கவிஞர் கோமான் நித்திரை செய்வதைக் கண்டு அவர் எழுப்பத் தொடங்கியபொழுது பக்கத்தில் நின்றவர்கள், “எழுப்ப வேண்டாம்” என்று சொன்னார்கள். அவர் கனைத்தார். போன அவருடைய நிலை எவ்வாறாயிற்றோ வென்ற கவலையுடன் கண்ணை மூடிக்கொண்டு மட்டும் இருந்த இவர் விழித்தெழுந்து, “ஐயா, வருக; ஏதாவது நீங்கள் நினைத்தபடி கிடைத்ததா?” என்று கேட்டார்.

பசுபதி பண்டாரம், “ஸந்நிதானத்தின் விவேகத்தை நான் என்னவென்று சொல்வேன்! வித்வான்களுடைய தாரதம்யத்தை அறிவதில் அவர்களைப்போல் ஒருவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லை. இன்றைக்குத்தான் என்னுடைய யோக்யதையை அவர்கள் அறிந்து கொண்டார்கள். ஓய்வுள்ள நேரத்திற் பேசிக்கொண்டிருந்தால் இன்னும் அதிகமாகக் கிடைக்கக்கூடும். என்னுடைய துரதிர்ஷ்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இவ்வளவு அநுகூலங்கள் உண்டானதும் தங்களாலேதான்” என்று சொல்லிவிட்டு அங்கே கிடைத்த வஸ்திரத்தை எடுத்து நீட்டி, “இதைத் தங்கள் அருமைத் திருக்கையினாலே கொடுக்க வேண்டும்” என்றார்.

மீ: (அதை வாங்கிப் பார்த்துவிட்டு மகிழ்ந்து) நீங்கள் பாடல் சொன்னீர்களா? ஸந்நிதானம் கேட்டருளியதா?

பசு: அந்தப் பாடலைச் சொன்னதனாலேதான் இவற்றை நான் பெற்றேன். இல்லாவிட்டால் இந்தச் சமயத்தில் அங்கே தலைநீட்ட முடியுமா?

மீ: ஸந்நிதானம் இன்னும் ஏதாவது கட்டளையிட்டதா?

பசுபதி பண்டாரம், “கொடுக்கும்பொழுது, ‘இந்தச் செய்யுள் தான் உங்களுக்கு இந்த மரியாதையைச் செய்வித்தது’ என்று ஸந்நிதானம் கட்டளையிட்டது” என்று சொல்லிவிட்டுச் சிரஞ்சீவிகளாக இருக்க வேண்டுமென்று இவரை வாழ்த்தி அந்த வஸ்திரத்தை வாங்கி விடைபெற்றுக்கொண்டு சந்தோஷத்துடன் ஊருக்குச் சென்றார்.

பலர் இவர் பாடலாற் பரிசு பெற்றது

அவர் சென்றபின் அடுத்த நிமிஷத்தில் அவருடைய சுற்றத்தாரும் முதியவருமாகிய ஒருவர் இவரிடம் வந்தார். ‘எதற்காக வந்தாரோ’ என்றெண்ணி அவரை இவர் விசாரித்தார். வந்தவர், “பசுபதி பண்டாரத்துக்குக் கொடுத்தது போலவே எனக்கும் ஒரு செய்யுளியற்றித் தரவேண்டும். தந்தால் மிகவும் உபகாரமாயிருக்கும்” என்று மன்றாடினார். இவர் பலவகையாக மறுத்தும் அவர் கேட்கவில்லை. பின்பு அவர் இவரிடம் ஒரு செய்யுள் பெற்றுத் தேசிகரிடம் சென்று வஸ்திர ஸம்மானம் அடைந்து சென்றார். இப்படியே உதயகாலம் வரையில் ஒருவர் பின்னாக ஒருவர் வந்து வந்து முயன்று இவர் இயற்றிக் கொடுத்த பாடல்களைப் பெற்றுத் தேசிகரிடம் சென்று சென்று அவற்றைச் சொல்லிக்காட்டி வஸ்திர ஸம்மானம் பெற்று வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் மரியாதை செய்யும்பொழுது தேசிகர், “இந்தப் பாடலே உமக்குத் தக்க ஸம்மானத்தை அளிக்கின்றது” என்று சொல்லிச் சொல்லிக் கொடுத்து விடுத்தார். வஸ்திரங்களின் மதிப்பு பாடல்களின் நயத்தால் ஒன்றற்கு ஒன்று அதிகமாகவே இருந்துவந்தது.

பிள்ளையவர்களாலேதான் அந்தப்பாடல்கள் செய்யப்பெற்றன வென்பதைத் தேசிகர் அவற்றின் நடையால் தெரிந்து கொண்டாரென்று நான் இங்கே எழுதுவது மிகை. பரிசு பெற்ற ஒவ்வொருவரும் வந்து வந்து இப்புலவர் சிகாமணியை வாழ்த்திவிட்டே செல்வாராயினர்.

பிறருடைய நன்மைக்காக இப் புலவர்திலகர் செய்யுட்களைச் செய்து கொடுப்பதும் அவற்றைப் பெற்றவர்கள் அவை தம்மாற் செய்யப்பட்டனவென்றே சொல்லித் தேசிகரிடத்து ஸம்மானம் பெற்றுச் செல்வதும் அக்காலத்தில் வழக்கமாகவே இருந்து வந்தன. இதனால் பிள்ளையவர்களிடத்தே இயல்பாக அமைந்துள்ள ஜீவகாருண்யமும் தேசிகருக்கு இவர்பாலிருந்த நன்மதிப்பும் யாவருக்கும் புலனாகும்.

இப்படி அன்றிரவில் பாடல் பெற்றுச் சென்று பரிசு பெற்றவர்கள் பலர். அவர்கள் கூறியனவாக அமைத்த செய்யுட்களில் இப்பொழுது தெரிந்தவை வருமாறு:

(விருத்தம்)

1. "தேமலி துறைசைச் சுப்பிர மணிய தேசிகோத் தமமுன மொருவற்
காமலி சீர்ச்சு தரிசன மளித்தாய் அஃதெவ ருக்குமின் றளிக்கும்
தூமலி நினது வள்ளன்மை யென்னைத் தூண்டிட வின்றுவந் தடைந்தேன்
பாமலி நினது புகழினை மதித்துப் பாடுவே னெனைப்புரந் தருளே."

   (சுதரிசனம் - சக்கரம், நல்ல தரிசனம். ஒருவற்கு - திருமாலுக்கு )

2. "குருவருக்கந் தனிலுயர்சுப் பிரமணிய தேசிகசீர்க் குணக்குன் றேமா
மருவருக்கை கதலிசெறி பொழில்வீழி மிழலையிலோர் வற்க டத்தில்
இருவருக்குப் படிக்காசன் றருளியநீ யதுபலர்க்கின் றீதல் தேர்ந்தேன்
அருவருக்கு மிடியெனைவிட் டறப்படிக்கா சுடனாடை அளிப்பாய் மன்னோ."

  (இருவரென்றது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரையும் திருநாவுக்கரசு நாயனாரையும்.)

(கட்டளைக் கலித்துறை)

3. தென்னாருஞ் சீர்ச்சுப் பிரமணி யப்பெயர்த் தேசிகவந்
தொன்னாரும் வேட்பப் பிரசங்கந் தான்பொழி யோர்முகிலே
பொன்னாரும் வீதி நவகோடி சித்த புரமுடையாய்
என்னாசை தீர நவகோடி யின்றிரண் டீந்தருளே."

  (பிரசங்கம் - உபந்யாஸம், தேனாகிய தண்ணீர்; கம் - நீர். நவகோடி
சித்தபுரம் - திருவாவடுதுறை. நவகோடி - புதிய ஆடை.)

(வெண்பா)

4. ஒன்றளித்தாற் கோடியென வுன்னுவேற் குக்கோடி
இன்றளித்தா லென்னவென வெண்ணுவனோ - நன்றுணர்வாய்
வண்ணமா டத்துறைசை வாழ்சுப் பிரமணிய
அண்ணலே யின்னே யருள்."

  (கோடி - நூறு லட்சம், புதிய ஆடை.)

5. ஆசையிலார்க் கேயொன் றளிப்பா யெனத்தெரிந்தும்
ஆசையுடை யாயென் றறிந்துவந்தேன் - ஆசையுடை
எங்கட்கொன் றீசுப் பிரமணிய வெம்மானே
வெங்கட் கலிநீங்க வே."

  (ஒன்று - முத்தி. ஆசையுடையாய் - பொன்னாடையை யுடையாய். ஆசையுடை ஒன்று - பொன்னாடை ஒன்றை.)

6. "ஒன்றளிப்பா யென்றுணர்ந்து மோரிரண்டு கோடிதமை
இன்றளிப்பா யென்றெண்ணி யான்வந்தேன் - நன்றிமிகுத்
தித்தா ரணிமுழுது மெண்சுப் பிரமணிய
அத்தா வவற்றை யருள்."

  (ஒன்று - முத்தி.)

7. "இல்லேனென் றாரு மியம்ப விருப்பேனை
வல்லே யுடையேனா வாழ்வருள் - நல்லோர்கள்
பேசும் புகழ்ச்சுப் பிரமணிய தேசிகநற்
றூசுஞ்செம் பொன்னுமளித் து."

  (இல்லேன் - வீட்டிலிருப்பேன், வறியேன். உடையேன் – உடையை யுடையேன், செல்வமுடையேன். தூசு - ஆடை.)

இவ்வாறு முறையே கல்விப் பொருள், செல்வப் பொருளாகியவற்றைத் தானம் செய்யும் இரு பெருவள்ளல்களுடைய வள்ளன்மையைப் புலப்படுத்தி ஏழையர்களுடைய இரவும் அந்த நன்னாளினது இரவும் விடிந்தன.

சுப்பிரமணிய தேசிகர் பாராட்டியது

இக் கவிஞர்பிரானுக்கு அந்த இராமுழுதும் நித்திரையே இல்லை. ‘இந்நிகழ்ச்சியால் ஸந்நிதானத்தின் திருவுளத்தில் ஏதேனும் வேறுபாடான எண்ணம் நம்மைப்பற்றி உண்டாயிருக்குமோ’ என்ற கவலையை அடைந்து அவ்வாறு இருக்குமானால் எப்படியாவது அதைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று நினைந்து காலையில் அநுஷ்டானம் செய்துகொண்டு தேசிகரைத் தரிசித்தற்குச் சென்று வழக்கம்போலவே அவரை வந்தனம் செய்தெழுந்தார். அப்பொழுது தேசிகர் புன்னகை கொண்டு, “என்ன பிள்ளையவர்கள்! இராத்திரி வெகு வேடிக்கைகள் பண்ணிவிட்டீர்களே; மிகவும் சிரமமாக இருந்திருக்குமென்றும் தூக்கம் கெட்டிருக்குமென்றும் எண்ணுகிறோம்” என்று பாராட்டிக் கூறி அழைத்து நெற்றியில் திருநீறிட்டுப் பக்கத்திலிருக்கும்படி செய்தார். பின்பு அங்கேயிருந்த பிரபுக்களையும் வித்துவான்களையும் நோக்கி, “இவர்கள் இருப்பது ஆதீனத்திற்கு மிகவும் கெளரவமாகவே இருக்கின்றது. என்ன பாக்கியமிருந்தாலும் இதற்கு ஈடாகாது. குறைந்த கல்வியுடையோரையும் கெளரவிக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிற இவர்கள் குணம் யாருக்கு வரும்! ஆதீனத்தின் அதிர்ஷ்டமென்றே சொல்ல வேண்டும்” என்று முதல்நாள் நிகழ்ந்தவற்றைச் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்தனர். அப்பொழுது இவர்,

"கடிப்பிகு கண்முரசங் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்"

  (நாலடியார், 100)
 
"ஆர்த்தசபை நூற்றொருவ ராயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயி னுண்டென் றறு"

  (ஒளவையார் பாடல்)

என்ற செய்யுட்களைக் கூறி, “எல்லாவற்றிலும் கொடை சிறந்ததென்பது யாவருக்கும் தெரிந்ததே. அதனாலேதான் வித்தைகளும் ஸாஹித்யங்களும் மேன்மேலும் பெருகிவருகின்றன. அக்கொடை இல்லையாயின் யாதும் இல்லையாய் விடும்;

‘பெயற்பான் மழைபெய்யாக் கண்ணு முலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடற் றண்சேர்ப்ப
என்னை யுலகுய்யு மாறு'

   (நாலடியார், 97)

என்னும் ஆன்றோர் வாக்கு இதற்குப் பிரமாணமன்றோ? எல்லாம் ஸந்நிதானத்தின் வண்மையாலுண்டாகும் விசேஷங்களேயன்றி அடியேன் போல்பவரால் உண்டாவது யாது?” என்று மிக்க விநயத்துடன் சொன்னார்.

காசிக் கலம்பகம் முதலியன பாடஞ் சொன்னது

பின்பு இவர் விடைபெற்றுக் கொண்டு உடனே கொலுமண்டபத்திற்கு விரைந்து வந்து அங்கே நின்ற மடத்துக் காரியஸ்தரொருவரை யழைத்து என்னைச் சுட்டி, “இவருக்குக் காலையாகாரம் பண்ணுவித்து அனுப்ப வேண்டும்” என்றார். அவர் அழைத்துச் சென்று அப்படியே செய்வித்து அனுப்பினார். ஆகாரஞ் செய்துகொண்டபின் விரைவிற் சென்று இவரைப் பார்த்தேன். அப்பொழுது காசிக்கலம்பகத்தின் எஞ்சிய பாகத்தின் பாடம் அங்கே நடைபெற்று வந்தது. அதனைக் கேட்டுக்கொண்டே இருந்ததில் அரிய விஷயங்கள் பல எனக்குத் தெரியவந்தன. அன்று பதினொரு மணிக்குள் அந்த நூல் முற்றுப்பெற்றது.

பிற்பகலில் நெடுந்தூரத்திலிருந்து வந்த ஒருவர் சோழமண்டல சதக ஏட்டுப்பிரதி யொன்றை இவரிடம் கொடுத்தார். பெற்று அதைப் படிக்கும்படி சொன்னார். நான் அப்படியே செய்தேன். கேட்டு அரிய விஷயங்கள் சிலவற்றை எனக்குப் புலப்படுத்திக் கொண்டே வந்தார்.

“சீக்கிரத்தில் வந்து இவ்விடத்திலேயே இருந்துகொண்டு எங்களுக்குப் பாடஞ் சொல்ல வேண்டும்” என்று தம்பிரான்களிற் சிலரும் மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயர் முதலிய சிலரும் இவரைக் கேட்டுக்கொண்டார்கள். இவர் அப்படியே செய்வதாக அவர்களுக்கு வாக்களித்துவிட்டு என்னைப் பார்த்து, “நீர் ஊர் போய் வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு நேரே மாயூரம் வந்து படித்துக் கொண்டிரும்; நான் இங்கே வரும்பொழுது உடன்வரலாம்” என்று விடைகொடுத்து அனுப்பினார்.

மாயூரத்திற் பாடஞ் சொன்னது

நான் ஊர் சென்று சிலதினம் அங்கே இருந்துவிட்டு அப்பால் என் புஸ்தகங்களை யெல்லாம் எடுத்துக்கொண்டு மாயூரஞ் சென்றேன். அதற்குள் இவரும் அங்கே வந்து மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தார். அங்கே நிகழ்ந்த பாடம் துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகள் பிரபந்தத் திரட்டில் நால்வர் நான்மணிமாலை முதலியன; நானும் உடனிருந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

நான் திரு அம்பர்ப்புராணம் கேட்டது

இரண்டு தினஞ்சென்ற பின்பு அதற்கு முன்னமே பாடத் தொடங்கி முற்றுப் பெறாமலிருந்த திரு அம்பர்ப்புராணச் சுவடியை எடுத்து வரும்படி எனக்குச் சொன்னார். எடுத்துச் சென்றேன். அதை முதலிலிருந்தே படிக்கச் சொல்லிப் பொருளுஞ் சொல்லி வந்தார். சில தினத்தில் அதிலெழுதியிருந்த பாகம் முற்றுப்பெற்றது. அந் நூலை இடையிடையே திருத்தச் சொன்னபடி திருத்திக்கொண்டே படித்தேன்; “எழுதுகிறவர்களில் நான் சொன்னபடியே எழுதுவோருமுண்டு; வேறுபடத் திருத்தித் தம் மனம் போனவாறே அங்கங்கே எழுதுபவருமுண்டு. இப்புத்தகத்தை இதுவரையில் எழுதி வந்தவர் இரண்டாம் வகையைச் சேர்ந்தவராதலால், ஐயமுற்றுப் படிப்பித்து இப்பொழுது திருத்தும்படி செய்தேன்” என்று திருத்துவித்ததற்கு இவர் காரணஞ் சொன்னார்.அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  இவர் காசியில் பல வருடங்கள் இருந்தவர்; அங்ஙனம் இருந்து வந்த துறவிகளைக் காசிச்சாமி யென்று அழைப்பது வழக்கம்.
2.  இவர் பேச்சில் ஸம்ஸ்கிருதச் சொற்கள் விரவி வரும்.
3.  இதன் முதற்பாகம், 29 – ஆம் பக்கம் பார்க்க.
4.  இது மடத்தின் ஒரு பாகம்.
5.  ‘முன்’ என்றது சிவமாக இருந்த காலத்தை யென்பர்; ஆசிரியரைச் சிவமாகப் பாவிக்க வேண்டுமென்ற முறைபற்றி இச்செய்யுள் இயற்றப் பெற்றது. இதே கருத்து பின் உள்ள பாடல்களிலும் காணப்படும்; குருபூஜையில் பட்டணப் பிரவேசகாலம் முதலியவற்றில் ஆதீனத் தலைவர்கள் பீதாம்பரம் தரிப்பது மரபு.


$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s