பாஞ்சாலி சபதம் – 1.1.3

-மகாகவி பாரதி

குருவம்சம் ஆண்ட ஹஸ்தினாபுரத்தின் சிறப்பை வர்ணிக்கும் பாடல்களுடன் பாஞ்சாலி சபதத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி. காப்பிய இலக்கணத்தின்படி, ஊர்ச் சிறப்புடன் தொடங்குதல் மரபு.

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.3. ஹஸ்தினாபுரம்

அத்தின புரமுண்டாம்;-இவ்
      அவனியி லேயதற் கிணையிலை யாம்;
பத்தியில் வீதிக ளாம்;-வெள்ளைப்
      பனிவரை போற்பல மாளிகை யாம்;
முத்தொளிர் மாடங்க ளாம்,-எங்கும்
      மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்;
நத்தியல் வாவிக ளாம்;-அங்கு
      நாடு மிரதிநகர் தேவிக ளாம்.       7

அந்தணர் வீதிக ளாம்;-மறை
      யாதிக ளாம்கலைச் சோதிக ளாம்;
செந்தழல் வேள்விக ளாம்;-மிகச்
      சீர்பெறுஞ் சாத்திரக் கேள்விக ளாம்;
மந்திர கீதங்க ளாம்-தர்க்க
      வாதங்க ளாம்;தவ நீதங்க ளாம்;
சிந்தையி லறமுண் டாம்;-எனிற்
      சேர்ந்திடுங் கலிசெயும் மறமு முண்டாம்.       8

மெய்த்தவர் பலருண் டாம்,-வெறும்
      வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்
உய்த்திடு சிவஞா னம்-கனிந்
      தோர்ந்திடு மேலவர் பலருண் டாம்.
பொய்த்தவிந் திரசா லம்-நிகர்
      பூசையும் கிரியையும் புலைநடை யும்
கைத்திடு பொய்ம்மொழி யும்-கொண்டு
      கண்மயக் காற்பிழைப் போர்பல ராம்.       9

மாலைகள் புரண்டசை யும்-பெரு
      வரையெனத் திரண்டவன் தோளுடை யார்,
வேலையும் வாளினை யும்-நெடு
      வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்,
காலையும் மாலையி லும்-பகை
      காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையும் தேர்ச்சி கொள் வோர்-கரி
      நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார்.       10

ஆரிய வேல்மற வர்,-புவி
      யாளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந் தோர்
சீரியல் மதிமுகத் தார்-மணித்
      தேனித ழமுதென நுகர்ந்திடு வார்,
வேரியங் கள்ளருந்தி-எங்கும்
      வெம்மத யானைகள் எனத்திரி வார்
பாரினில் இந்திரர் போல்-வளர்
      பார்த்திவர் வீதிகள் பாடுவ மே.       11

நல்லிசை முழக்கங்க ளாம்;-பல
      நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்;
தொல்லிசைக் காவியங்கள்-அருந்
      தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங் கள்
கொல்லிசை வாரணங் கள்-கடுங்
      குதிரைக ளடுபெருந் தேர்களுண் டாம்!
மல்லிசை போர்களுண் டாம்-திரள்
      வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண் டாம்.       12

எண்ணரு கனிவகை யும்-இவை
      இலகிநல் லொளிதரும் பணிவகை யும்
தண்ணறுஞ் சாந்தங்க ளும்-மலர்த்
      தார்களும் மலர்விழிக் காந்தங்க ளும்
சுண்ணமும் நறும்புகை யும்-சுரர்
      துய்ப்பதற்கு குரியபல் பண்டங்க ளும்
உண்ணநற் கனிவகை யும்-களி
      யுவகையும் கேளியும் ஓங்கின வே.       13

சிவனுடை நண்பன்என் பார்,-வட
      திசைக்கதி பதியள கேசன்;என் பார்;
அவனுடைப் பெருஞ்செல் வம்-இவர்
      ஆவணந் தொறும்புகுந் திருப்பது வாம்;
தவனுடை வணிகர்க ளும்-பல
      தரனுடைத் தொழில் செயும் மாசன மும்
எவனுடைப் பயமு மிலா-தினிது
      இருந்திடுந் தன்மையது எழில் நகரே.       14

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s