-இரா.சத்யப்பிரியன்

10. திருமலையும் ராமானுஜரும்
ராமானுஜ வைபவம் என்றாலே அதில் விசிஷ்டாத்வைதத்தின் ஸ்தாபிதம் இருக்கும். பாகவதப் பெருமக்களிடம் அவருக்கு உள்ள பக்தி இருக்கும். ஸ்ரீவைணவத்திற்காக அவருடைய புண்ணியத்தல யாத்திரை இருக்கும். அவர் இயற்றிய பாஷ்யங்களும் வியாக்கியானங்களும் இருக்கும். பிறப்பு, குலம் எதுவும் பாராத வைணவ பக்தி இருக்கும்.
இந்த தேசத்தில் அவர் காலடி படாத வைணவத் தலங்களே இல்லை என்று கூறலாம். வைணவக் கோவில்களில் வடமொழி வேதத்துடன் திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் மங்கள சாசனம் செய்யப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்து தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் ராமானுஜர்.
திருமலையில் ராமானுஜர் சற்றேறக் குறைய ஒருவருட காலம் தங்கியிருந்து பகவத் கைங்கரியம் செய்தார். திருமலையைக் கண்டதுமே அவர் கண்கள் பனித்தன. எம்பெருமானின் நினைப்பு எப்போதும் அவரிடம் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஒருமுறை பெரியநம்பியின் மகள் அத்துழாய்க்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ராமானுஜர் உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் அரிசியையோ தானியங்களையோ கொண்டு உணவு சமைத்து சாப்பிடுபவர். இதில் சில நிபந்தனைகள் உள்ளன. ஒருவேளை உணவுக்கான தானியங்களைத்தான் பிக்ஷையாகப் பெற வேண்டும். பிக்ஷை பெற்ற தானியம் முழுவதையும் சமைத்துவிட வேண்டும். மறுவேளைக்குக்கூட சேமித்து வைக்கக் கூடாது. தொடர்ந்து மூன்று வேளைக்குமேல் ஒருவீட்டில் பிக்ஷை கேட்கக் கூடாது. அப்படி ஒருநாள் பெரியநம்பியின் வீட்டு வாசலில் ராமானுஜர் நின்று பிக்ஷை கேட்கிறார். ராமானுஜரின் நாவில் எப்போதும் ஆண்டாளின் திருப்பாவை முணுமுணுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆண்டாளிடம் ராமானுஜருக்கு அப்படி ஒரு ப்ரீத்தி.
நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!
நூறு தடாவில் வெண்ணையும், நூறு தடாவில் அக்காரவடிசிலும் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்குப் படைப்பதாக ஆண்டாள் அன்று வேண்டிக்கொண்டாள் என்பதற்காக தன்காலத்தில் அதே அளவு வெண்ணெயையும் அதே அளவு அக்கார வடிசிலையும் ஆண்டாளுக்காக ஸ்ரீ ராமானுஜர் சாதித்தார் என்றால் அவருடைய பாகவதப் பிரியத்தை என்னென்று சொல்லுவது?
இப்படிப்பட்ட ராமானுஜர் உஞ்சவிருத்தி எடுத்து வரும்போது பெரியநம்பியின் வீட்டு வாசலில் நிற்கிறார். அத்துழாய் உஞ்சவிருத்திக்கு வந்த பிராமணரை வரவேற்கக் கதவை திறக்கிறாள். அத்துழாய் கதவைத் திறந்ததைப் பார்த்த மறுகணம் ராமானுஜர் மூர்ச்சையாகி விழுந்து விடுகிறார். அத்துழாய்க்கு என்ன செய்வதென்று புரியாமல் தந்தையிடம் ஓடிப்போய் ராமானுஜர் விழுந்ததைச் சொல்லுகிறாள்.
பெரியநம்பி மகளைப் பார்த்து சிரிக்கிறார். அத்துழாய்க்கு வியப்பு. வாசலில் ராமானுஜர் மூர்ச்சையாகிக் கிடப்பதை பதைபதைப்புடன் சொல்கிறோம், தந்தையார் இப்படி சிரிக்கிறாரே!
“அத்துழாய் ! நீ வருத்தப்பட வேண்டாம். இராமானுசன் ஒரு பரம பக்தன். நாராயணனையும் அவன் பாகவதர்களையும் தவிர அவன் நினைப்பில் வேறு சிந்தையே கிடையாது. அவன் வாய் எப்பொழுதும் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களை முணுமுணுத்தவாறே இருக்கும். நீ கதவைத் திறக்கும்போது ‘உந்து மகா களிற்றன்’ பாசுரத்தை பாடியிருப்பான். அதில் ஈற்றில் நந்தா கோபன் மகளே நப்பின்னாய் என்ற வரிகளைப் பாடிக் கொண்டிருக்கும்போது நீ கதவைத் திறந்திருப்பாய். உன்னை அப்படியே நப்பின்னையாகவே நினைத்துக் கொண்டு மூர்ச்சையாகியிருப்பான். பயப்படாதே! சிறிது நேரத்தில் அவனே தெளிந்து விடுவான்” என்றார் சாதாரணமாக.
அவருடைய நாராயணின் மீதான பற்று அத்தனை உயர்த்தியானது. எனவேதான் அவர் முதல்முதலாக திருமலைக்கு செல்லும்போது ஒருவிஷயத்தில் பிடிவாதமாக இருந்தார்.
ராமானுஜர் திருமலைக்கு வந்ததன் நோக்கம், அங்கு வசித்த பரம பக்தரும் பண்டிதருமான பெரியதிருமலை நம்பி என்பவரிடம் ராமாயணம் பாடம் சொல்லிக் கொள்ளத்தான். ராமானுஜரின் மிகச் சிறந்த குணங்களில் ஒன்று பாகவத விஷயங்களைக் கற்க வேண்டுமென்றால் அந்த விஷயத்தில் யார் நிபுணத்துவம் பெற்றிருக்கிறாரோ அவர் எங்கிருந்தாலும் அந்த ஊருக்குச் சென்று அவரை ஆச்சாரியராக ஏற்றுக்கொண்டு கற்பது என்பதாகும்.
திருப்பதியில் இருக்கும் பெரிய திருமலை ராமாயணத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதைப் புரிந்துகொண்ட ராமானுஜர் அவரைத் தேடி திருமலைக்கு வருகிறார்.
திருமலையில் அவரைச் சிறந்த முறையில் வரவேற்று மலைக்குச் செல்ல அழைக்கின்றனர். கைலாயத்தைப் பார்த்ததும் காரைக்கால் அம்மையாருக்கு ஏற்பட்ட அதே சிந்தனை ராமானுஜருக்கு ஏற்பட்ட்டது. பரமேஸ்வரன் குடிகொண்ட திருக்கயிலையை என் கால்களால் மிதிக்க மாட்டேன் என்று அம்மையார் தலையால் நடந்து சென்றதாகக் கூறுவார்கள்.
இங்கே ராமானுஜருக்கு வேங்கடவன் குடிகொண்ட திருமலையை தன் கால்களால் தீண்டுவதா என்ற தயக்கம் ஏற்பட்டது.தயங்கினார். மூன்று நாட்கள் கீழ் திருப்பதியிலேயே வாசம் செய்தார்.
இவரது உள்ளக்கிடக்கையை அறிந்துகொண்ட பெருமக்கள் “அய்யனே ! நீங்களே திருமலையின் மேல் கால்படலாகாது என்று கூறிவிட்டால் பின்பு வேறு யார் திருமலைக்கு வருவார்கள்? பின்பு பெருமாளின் புகழ் உலகெங்கும் பரவுவது எங்கனம்?” என்று விண்ணப்பிக்கவே இளைய பெருமாளும் மனம் மாறி திருமலையின் மேல் ஏறிச்சென்று வேங்கடவனை தரிசித்தார்.
பாகவத சம்பந்தம் வைணவர்களிடையே எந்த அளவுக்குப் போற்றப்படுகிறது என்பதற்கு திருமலையில் நடந்த ஒரு விஷயம் உதாரணம்.
ராமானுஜர் வருகிறார் என்று தெரிந்ததும் வயதில் மூத்தவரும் நன்கு கற்றவருமான பெரிய திருமலை ராமனுஜருக்கு தன் கைகளில் தீர்த்தத்தையும் பிரசாதத்தையும் எடுத்துவந்து அளிக்கிறார். ராமானுஜர் பதறிப் போகிறார். “என்ன ஒரு அபச்சாரம். இதை தாங்கள் தங்கள் கைகளினால் செய்ய வேண்டுமா? உங்களை விடச் சிறிய ஒருவரிடம் இதை அனுப்பியிருக்கலாமே?” என்று கேட்டார்.
அதற்கு பெரிய திருமலை என்ற அந்த முதியவர் , பண்பாளர் “என்னைவிடச் சிறியவனை தேடிப் பார்த்தேன். அப்படி எவரும் கிடைக்கவில்லை . எனவேதான் நானே கொண்டு வந்தேன்” என்கிறார். இறைவனுக்கு ஆற்றும் தொண்டில் தன்னை மிக எளிமையாகக் காட்டிக் கொள்வதில் ஒரு வைணவனுக்கு எவ்வளவு ஆனந்தம் பாருங்கள்.
ராமானுஜரும் திருமலையில் ஒரு வருட காலம் தங்கி பெரிய திருமளையிடமிருந்து ராமாயணம் முழுவதையும் கற்றுக் கொண்டார்.
திருமலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததா? என்று ஐயப்படும் அளவிற்கு ஒரு விஷயம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதில் காலகுழப்படிகளும் உள்ளன.
ராமானுஜர் திருமலை சன்னிதியிலுள்ள அர்ச்சாவதாரம் அதாவது சிலைத்திருமேனி நாராயண அம்சமே என்று நிறுவியதாக வழங்கப்படும் கதை. இதனைக் கட்டுக்கதை என்றும் விலக்கி விடவும் முடியாது. வைணவர்களின் குருபரம்பரையிலும் ஸ்ரீ ராமானுஜ வைபவத்திலும் இதற்கான சான்றுகள் உள்ளன.
ராமானுஜர் முதன்முதலாக திருமலைக்கு வந்து பெரிய திருமலையிடம் ராமாயணம் கற்றுக் கொள்ளும்போது இந்த நிகழ்ச்சி நடக்கவில்லை. பின்னர் ராமானுஜர் சாரிசாரியாக அடியார்களை அழைத்துக் கொண்டு திக்விஜயம் செய்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
திருமலையில் உள்ள சிலைத்திருமேனி நாராயணனின் அம்சமென்றும், சிவனின் அம்சமென்றும் ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்தது. இரண்டு சமயத்தினரும் கச்சைகட்டிக் கொண்டு வீதியில் கோஷம் எழுப்புகிறார்கள். தொண்டைமன்னனுக்கு இது பெரிய தலைவலியாகப் போய் பொறுப்பை ராமானுஜரிடம் விட்டு விடுகிறான்.
ராமானுஜர் கரிய திருமேனி முன் நின்று சைவர்களின் அடையாளமான திருநீற்றை ஒரு இலை நிறைய வைக்கிறார். நாரண அம்சமான சங்கு சக்கரங்களையும் முன்வைக்கிறார். பிறகு சிலைத்திருமேனி முன்பு நின்று “எம்பெருமானே ! நீ நாரண அம்சம் என்றால் சங்கு சக்கரத்தை உன் மேனியில் தரித்துக்கொள். சிவனின் அம்சமென்றால் திருநீற்றைப் பூசிக் கொள்” என்று கூறி சன்னிதியின் கதவை அடைத்துவிட்டு வருகிறார்.
இரவு முழுவதும் அனைவரும் காத்திருக்கின்றனர். மறுநாள் திருப்பள்ளியெழுச்சி பாடி சன்னிதி கதவு திறக்கப்படுகிறது. எம்பெருமான் தன சிலைத்திருமேனியில் இரண்டு தோள்களிலும் சங்கு சக்கரங்களை ஏந்திக் கொண்டு நின்றார். பக்தர்கள் மெய்சிலிர்த்து அந்தச் சிலைமேனி நாராயணின் அம்சம் என்று ஒப்புக்கொண்டனர்.
ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது பல வைணவத்தலங்களை ஒரு ஒழுங்குமுறைக்குக் கொண்டுவருகிறார். திருவரங்கத்தை அவர் புனர்நிர்மாணம் செய்து வழிப்படுத்தினார். அதைப்போலத் தான் இந்த நிகழ்ச்சியும் நிகழ்ந்திருக்க வேண்டும்.
- பகுதி- 11
$$$
2 thoughts on “சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10”