-மகாகவி பாரதி
இளையவர் வழிதவறுகையில் அவர்களை அறிவுறுத்தி வழிநடத்துவதே பெரியோரின் இயல்பு. மாறாக, பொறாமைத் தீயில் வேகும் மருகன் துரியோதனனை மேலும் வீழ்ச்சி அடையச் செய்யும் வகையில் சூதாட்ட உபாயம் கூறுகிறான் தாய்மாமன் சகுனி. அதனை ‘நல்ல இங்கிதம்’ என்று கூறி கட்டித் தழுவுகிறான் துரியோதனன். தீயோர் சொல் முதலில் இனிக்கும்; பின்னர் கசக்கும் என்பது தானே உலக வழக்கம்?

முதல் பாகம்
1.1. அழைப்புச் சருக்கம்
1.1 7. சகுனியின் சதி
வேறு
என்று சுயோதனன் கூறியே-நெஞ்சம்
ஈர்ந்திடக் கண்ட சகுனிதான் ”அட!
இன்று தருகுவன் வெற்றியே; இதற்கு
இத்தனை வீண்சொல் வளர்ப்ப தேன்?-இனி
ஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான்:-அதை
ஊன்றிக் கருத்தொடு கேட்பையால்;-ஒரு
மன்று புனைந்திடச் செய்தி நீ – தெய்வ
மண்டப மொத்த நலங்கொண்டே. 53
‘மண்டபங் காண வருவிரென்-றந்த
மன்னவர் தம்மை வரவழைத்-தங்கு
கொண்ட கருத்தை முடிப்பவே-மெல்லக்
கூட்டிவன் சூது பொரச் செய்வோம்-அந்த
வண்டரை நாழிகை யொன்றிலே-தங்கள்
வான்பொருள் யாவையும் தோற்றுனைப்-பணி
தொண்ட ரெனச்செய் திடுவன்யான்,-என்றன்
சூதின் வலிமை அறிவை நீ. 54
‘வெஞ்சமர் செய்திடு வோமெனில்-அதில்
வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்?-அந்தப்
பஞ்சவர் வீரம் பெரிதுகாண்’-ஒரு
பார்த்தன்கை வில்லுக் கெதிருண்டோ?-உன்றன்
நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சி யாக்-கொள்ள
நீத மில்லை முன்னைப் பார்த்திவர்-தொகை
கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால்-வெற்றி
கொண்டு பகையை அழித்து ளோர். 55
‘நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி
நனிலத் தோர்கொடும் போர் செய்வார்:-அன்றி
ஓடும் குருதியைத் தேக்கவோ-தமர்
ஊன்குவை கண்டு களிக்கவோ?-அந்த
நாடும் குடிகளும் செல்வமும்-ஒரு
நாழிகைப் போதினில் சூதினால்-வெல்லக்
கூடு மெனிற்பிறி தெண்ண லேன்?-என்றன்
கொள்கை இது’வெனக் கூறினான். 56
இங்கிது கேட்ட சுயோதனன்-மிக
இங்கிதம் சொல்லினை மாமனே!’-என்று
சங்கிலிப் பொன்னின் மணியிட்ட-ஒளித்
தாமம் சகுனிக்குச் சூட்டினான்;-பின்னர்
‘எங்கும் புவிமிசை உன்னைப்போல்-எனக்
கில்லை இனியது சொல்லுவோர்’-என்று
பொங்கும் உவகையின் மார்புறக்-கட்டிப்
பூரித்து விம்மித் தழுவினான். 57
$$$