-பி.ஆர்.மகாதேவன்
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், தவறான அறுவைச் சிகிச்சையால் காலை இழந்து, நவ. 15-இல் உயிரையும் இழந்த, சென்னையைச் சார்ந்த இளம் கால்பந்து விளையாட்டு வீராங்கனை ப்ரியாவுக்கு (17) நமது கண்ணீர் அஞ்சலி.

அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டதும்
தலைமைச் செயலகத்து தட்டச்சு எந்திரம்
தானாகக் கண்ணீர் அஞ்சலியை
தடதடவென அச்சிட்டு வெளியிட்டது.
.
துண்டுச் சீட்டு முதல்வரின் எழுதுகோல்
துளியும் தாமதிக்காமல்
நிவாரண லட்சங்களைக்
கடகடவெனக் கையெழுத்திட்டுக் கொடுத்தது.
.
மருத்துவ, சுகாதாரத் துறை அமைச்சர்
உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவர்களை
உடனே பணியிடை நீக்கம் செய்தார்-
யார் என்பதைத் தெரிந்துகொண்டு.
.
எதிர்க்கட்சி பொம்மைக்கு
பேட்டரி போடப்பட்டதும்
இழப்பீட்டை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று
தலையை ஆட்டி ஆட்டிச் சொன்னது.
.
இன்னொரு கட்சித் தலைவர்
உச்சபட்ச இழப்பீடோடு
குடும்பத்தினர் அனைவருக்கும்
அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று
அன்பாக
தேவாலய மணி போல ஆர்ப்பரித்தார்.
.
அரசியல் மந்தையில் இருந்த
அத்தனை வளர்ப்பு மிருகங்களும்
ஒருமித்த குரலில் உரக்க அழுதன.
.
அல்பாயுசில்
அகாலத்தில்
அலட்சியத்தினால் உயிர் துறந்த
அன்புச் சகோதரியின்
நல்லடக்கம்
ஆரவாரத்துடன் நடந்து முடிவதற்குள்
அத்துணை நல்லெண்ண வசனங்களும்
அண்டவெளியில் நிரம்பின.
.
சற்றுத் தள்ளி இருந்த சுடுகாட்டில்
திறந்தவெளியில்
அநாதையாகக் காத்துக் கிடந்தன
பூர்வகுடிப் பிணங்கள்.
அவற்றின் மேல் முடிவற்றுப் பெய்து கொண்டிருந்தன
புறக்கணிப்பின் தொடர் மழைகள்.
.
சற்றே அதிகம் பெய்த கார்கால மழையில்
சாலையில் தோண்டப்பட்டு
மூடாமல் விடப்பட்ட பள்ளத்தில்
ஒரு பூர்வகுடி
நேற்றுதான் விழுந்து செத்திருந்தார்.
.
ஒதுங்கிச் சென்ற நடைபாதையில் பாய்ந்த
தூரத்து மின் கசிவினால்
துடிதுடித்துச் செத்திருந்தார்
இன்னொரு பூர்வகுடி.
.
முப்பத்தைந்து துண்டுகளாக
வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்
இன்னொரு இளம் வயது
பூர்வகுடிப் பெண்.
.
வீடு கட்ட வெட்டிய
சின்னஞ்சிறு பள்ளத்தில் விழுந்து,
அதைவிடச் சின்னஞ்சிறியதாக இருந்த
குட்டிச் சிறுவன் துடிதுடித்துச் செத்திருந்தான்.
.
தினம் தினம் சாகின்றன-
அலட்சியத்தால் ஆயிரம் பூர்வகுடி உயிர்கள்-
அத்தனை அரசு மருத்துவமனைகளிலும்.
.
அகாலத்தில் சாகும்
அல்பாயுசு பூர்வகுடிகளின் ஆன்மாக்கள்
தனக்கென ஒரு சொட்டு கண்ணீராவது உகுக்கப்படுமா என்று
விட்டுச்சென்ற அரசியல் உலகைச்
சுற்றிச்சுற்றி வருகின்றன.
.
கல்லறைத் தோட்டங்களில் கேமராக்கள் புடைசூழ
மண் அள்ளிப் போட்டு மூடப்படுவது
ஓடுகாலிகளின் பிணங்கள் மட்டுமல்ல;
ஒட்டுமொத்தப் பூர்வகுடிகளின்
உயிருள்ள
உணர்வுள்ள
உடல்களும்தான்.
.
மன்னித்துவிடு ப்ரிய சகோதரியே,
நீ பரிதாபத்துக்குரியவள்.
உனக்கு நேர்ந்தது
வேறு யாருக்கும் நேரக் கூடாது.
ஆனால்-
ஒரு சொட்டு கண்ணீருக்காக,
ஒரு ஆறுதல் வார்த்தைக்காக,
ஒரு மென் ஸ்பரிசத்துக்காக,
ஏங்கித் தவிக்கும்
பூர்வகுடி ஆன்மாக்களின் வலியை
நீயாவது புரிந்துகொள்.
.
பாவத்தின் சம்பளம் மரணமாக இருக்கலாம்.
பூர்வகுடி விசுவாசத்தின் சம்பளம்
இத்தனை புறக்கணிப்பாக,
இவ்வளவு கைவிடப்படலாக,
இத்தனை வலியாக இருக்கக் கூடாது.
.
வரவே போகாத
இறுதித் தீர்ப்பு நாளுக்காகக் காத்திருந்து
உன் ஆத்மா கிடந்து அழுக வேண்டாம்.
.
ப்ளீஸ் டோண்ட் ரெஸ்ட் இன் பீஸ்!
.
மறுபிறப்பு எடுத்து உடனே திரும்பி வா!
திருத்தப்பட வேண்டியவை
ஏராளம் இருக்கின்றன.
உன் இளம் கால்களால்
எட்டி உதைக்கப்பட வேண்டியவை
இங்கு
இன்னும் ஏராளம் இருக்கின்றன.
$$$