ஹரிஜன்: பெயரில் என்ன இருக்கிறது?

-லா.சு.ரங்கராஜன்

அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் (1930- 2016), தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்;  மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர்.  ‘ஹரிஜன்’ என்ற சொல் பிறந்ததன் வரலாறு குறித்த அவரது கட்டுரை இங்கே….

“காந்தியடிகள் வர்ணாசிரமத்தை ஆதரித்தவராயிற்றே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் ‘ஹரிஜனங்கள்’ என்று பெயர் சூட்டுவானேன்?” என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும், கண்டனங்களுக்கும் அண்ணல் காந்தியடிகளே, பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளித்திருக்கிறார்.

வர்ணாசிரம தர்மத்தைப்பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகள் அடங்கிய ‘வர்ண வியவஸ்தா’ என்ற சிறு புத்தகம் 1934-இல் வெளிவந்தது. அந்நூலுக்கு அளித்த நீண்ட முன்னுரையில் மகாத்மா காந்தி தமது நிலைபற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்: 

“முற்காலத்தில் இந்து சமூகம் ஒத்திசைவாக இயங்கி வருவதற்கு நான்கு பிரிவினர் கொண்ட வர்ணாசிரம தர்மம் ஒரு மிகச் சிறந்த அமைப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது என்பது முற்றிலும் உண்மையே. அதேசமயம் அக்காலத்தில் எந்தப் பிரிவினர் உயர்ந்தவர், எவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு எழவில்லை. நான்கு வர்ணத்தினரும் சரிநிகர் சமானமானவர்களாகவே கருதப்பட்டனர். ஏனெனில், ஒட்டுமொத்த சமூகத்திற்கு அந் நான்கு பிரிவினரின் சரிநிகரான பணியும் சார்பு நிலையும் அத்தியாவசியமாக இருந்தன. ஆனால், போகப்போகப் பின் நாட்களில் உயர்வு – தாழ்வு மனப்பான்மை தலைதூக்கியது. இந்த மாற்றம் வர்ணாசிரம தர்மத்தை சின்னாபின்னமாக்கத் தொடங்கிற்று.

அந்தணர்கள்  பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் அடங்கிய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிவழியைக் கடைப்பிடித்த காலம் என்றோ மங்கி மறைந்துவிட்டது. இன்றைய குடும்பஸ்தர்களுக்கு பொருள் ஈட்டுவதும், சுகபோகங்களில் ஈடுபடுவதுமே அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கைக் குறிக்கோளாகிவிட்டது”.

காந்திஜி தமது முன்னுரையை இவ்வாறு முடிக்கின்றார்:

“நவீன சகாப்தத்தில் ஒருவருக்கொருவர் போட்டாபோட்டி போடுவதும், உலகாயத நாட்டங்களுமே வாழ்க்கையின் அம்சமாகிவிட்டன. எவரும் எந்தவிதமான வேலை வாய்ப்பையும் தேடிக் கொள்ளலாம் என்கிற தற்கால சூழ்நிலையில் வர்ணாசிரம முறை நடவாத காரியம்; சோம்பேறிகளின் பகற் கனவு. அந்நெறி முறையைத் திரும்பவும் உயிர்ப்பிக்கும் எண்ணம் குழந்தைத்தனமான மடமையே ஆகும்”.

‘ஜாதிப் பிரிவினைகளை அகற்ற வேண்டும்’ என்ற தலைப்பில் காந்தி மகான் தமது  ‘ஹரிஜன்’ (16-11-1935) இதழில் எழுதியுள்ள கட்டுரையில், “இன்று நிலவிவரும் ஜாதி அமைப்புகள் பண்டைய வர்ணாசிரம விதிமுறைகளுக்கு நேர்எதிரிடையான விகற்பங்களேயாம். அனைத்து மக்களும் ஒருமித்து, ஜாதிப் பிரிவினைகளை விலக்கிக்கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக வருமோ அவ்வளவுக்கவ்வளவு நாட்டிற்கு நல்லது” என்று ஐயந்திரிபற வலியுறுத்தியுள்ளார்.

மற்றொரு கட்டுரையில் காந்திஜி, “பிறப்பின் காரணமாக ஜாதி வித்தியாசங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நெறிகெட்ட வழக்கு, ஒழுக்கக் கேடானது. இத்தகைய ஜாதிப் பிரிவினைகளால் நாம் அவதியுற்றுத் தீமைக்கு ஆளாகிவிட்டோம். உயர்ஜாதி – கீழ்ஜாதி என்கிற மனப்பான்மை நமது சமூக வாழ்வை இழிவுபடுத்திவிட்டது” என்றெல்லாம் கடுமையாகச் சாடியுள்ளார். (‘ஹரிஜன்’, 2-5-1936).

‘பிறப்பினால் தீண்டத்தகாதோர் என்று சாத்திரங்களில் எங்கும் கூறப்படவில்லை. மேலும், பண்டைய வர்ணாசிரம தர்ம நியதிகளில் கலப்புத் திருமணத்திற்கும், சமபந்தி போஜனத்துக்கும் தடைகள் இருந்ததில்லை; ஸ்மிருதிகளிலும் வேறு நூல்களிலும் அவை குறித்துக் காணப்படும் தடைகள் மத்திய கால இடைச் செருகல்கள்’ என்பதும் காந்திஜியின் கருத்து. (‘ஹரிஜன்’, 16-11-1935).

சேவாகிராம ஆசிரமப் பொறுப்பாளர் நரஹரி பரீக் என்பாருக்கு 1945 மே 6 அன்று எழுதிய நீண்ட கடிதத்தில் காந்திஜி, “தற்போது நிலவும் ஜாதி, உட்-ஜாதிப் பிரிவுகள் அகன்றபின், நாம் சற்றும் தயங்காமல் அதி – சூத்திரர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுவே எனது அண்மைக்கால இறுதியான எண்ணம்.  இது ஒரு முக்கியமான கடிதம் – பிரதியெடுத்து நமது அலுவலகப் பதிவேட்டில் குறித்து வைக்கவும்” என்று முத்தாய்ப்பு வைக்கிறார் மகாத்மா காந்தி.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜனங்கள்’ என்று 1931-இல் காந்திஜி பெயரிட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காந்திஜி இவ்வாறு விளக்கம் அளித்தார்:

“தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நபர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘எங்கள் குலத்தவர்களை  ‘அந்தியஜாஸ்’ என்று குறிப்பிடுவது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. மாறாக, நீங்கள் ஏதாகிலும் ஓர் புதிய பெயரை புனைந்தளியுங்களேன்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு முன்பாக வழக்கிலிருந்த  ‘பங்கிகள்’, ‘பறையர்கள்’ பெயர்களும் தாழ்த்தப்பட்டோருக்குப் பிடித்தமில்லாமலிருந்தது! ஆகவே ‘அந்தியஜாஸ்’ (கடைசி மக்கள்) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டனர்.

சுவாமி சிரத்தானந்தர் தான் முதன்முதலில் ‘தலித்’ என்ற பெயரை உபயோகித்தார் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால்,  தீண்டாமை எனும் கொடிய நச்சு நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும்வரை, எந்தப் புதுப் பெயரும் சில காலத்திற்குப் பிறகு வெறுக்கத் தக்கதாகிவிடும். எது எப்படியோ, அந்தியஜாஸ் அல்லது தலித் என்ற சொற்களுக்குப் பதிலாக வேறு தகுந்த பெயரை எவரேனும் சிபாரிசு செய்து எனக்கு எழுதுங்கள்’ என்று ‘நவஜீவன்’ (7-6-1931) இதழில் கேட்டிருந்தேன். பலர் பல்வேறு பெயர்களைப் பரிந்துரைத்தனர்.  ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜகந்நாத் தேசாய் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினன், ‘ஹரிஜன்’ என்கிற பெயரைப் பிரஸ்தாபித்து எனக்கு எழுதிய கடிதத்தில், “பல கிராமங்களில் ஏற்கெனவே ‘ஹரிஜனா’ என்ற பெயர் வழக்கில் உள்ளது. மேலும், மிகச் சிறந்த குஜராத்தி பக்திக் கவிஞரான நரசிங் மேத்தா தமது அந்தியஜா பக்தர்களை ஹரிஜனங்கள் (திருமாலின் புத்திரர்கள் – கடவுளின் குழந்தைகள்) என்று குறிப்பிட்டு வந்தார்’ என்று விளக்கமாக எழுதியிருந்தார்.

ஆகவே, ‘ஹரிஜன்’ என்ற சொல் புதிதல்ல. குஜராத்தி பக்தி கீதங்களின் பிதாவாகக் கருதப்படும் நரசிங் மேத்தாவினால் ஏற்கெனவே புனையப்பட்டது. தவிர, ‘சமூகத்தால் கைவிடப்பட்ட ஜனங்களும் ஹரியின் மக்களே’ என்ற அர்த்தமும் அப்பெயரில் தொனிக்கிறது” 

                                         (‘ஹரிஜன்’ 7-6-1931) 

 1946, பிப்ரவரி 4 அன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி பேசுகையில், “ஹரிஜன சேவையில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு எனக்கு 125 வருட ஆயுசு அருளுங்கள் இறைவா’ என்பதே எனது பிரார்த்தனை. நீங்களெல்லாம் தீண்டாமை எனும் பாவத்தைக் களைத்தெறியாத வரை நமக்கு மெய்யான சுயராஜ்யம் கிட்டாது; நமது மதமும் வெகுநாள் நீடிக்காது” என்று அறிவுறுத்தினார். (“தி ஹிந்து’ 4-2-1946).

“பெயரில் என்ன இருக்கிறது?” என்ற தலைப்பில் தமது 14-4-1946 தேதியிட்ட ‘ஹரிஜன்’ வார இதழில் மகாத்மா காந்தி இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறார்:

“ஹரிஜன் என்ற பெயர் புனிதம் வாய்ந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட நபரால் பிரஸ்தாபிக்கப்பட்டது. சிறந்த பக்திக் கவிஞரால் ஏற்கெனவே ஏற்கப்பட்ட பெயர் அது. எப்பெயராயினும், தாழ்மை மனப்பான்மை அகல வேண்டும் என்பதே முக்கியம். அது இன்றுவரை மிகமிக மெதுவாகத்தான் அகன்று வருகின்றது.

ஒவ்வொரு இந்துவும் உயர்வு – தாழ்வு மனப்பான்மையை உள்ளார்ந்த உணர்ச்சியுடன் அறவே விலக்கிக்கொண்டு நடைமுறையில் அனைவருமே ஹரிஜனங்களாக மாற வேண்டும். அப்போது நாம் எல்லோருமே கடவுளின் மெய்யான குழந்தைகளாகி விடுவோம். அதுவே ‘ஹரிஜன்’ என்பதன் மெய்ப்பொருள்”.


  • நன்றி: தினமணி (17.12.2012)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s