அவரா சொன்னார்?

-பேரா.சோ.சத்தியசீலன்

அமரர் பேராசிரியர் ஸ்ரீ. சோ.சத்தியசீலன், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்; கம்பனில் ஆழ்ந்தவர்; தமிழகம் மட்டுமல்லாது, உலகமெங்கும் சென்று பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்த்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...

“After twelve years a teacher becomes a donkey”

“பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் ஆசிரியர் கழுதை ஆகிறார்”.

இப்படிச் சொன்னவர் யார் என்று நினைக்கிறீர்கள்?

தன்னுடைய ஆசிரியரை, குருவைத் தவிரத் தனக்கு வேறு தெய்வம் ஏதுமில்லை என்று வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் தான் ஒருமுறை இவ்வாறு கூறினார்.

என்னுள்ளே ஒரு பூகம்பமே ஏற்பட்டுவிட்டது!  “அவரா சொன்னார்?” என்ற கேள்வி என் உள்ளத்தில் ஒரு சூறாவளியையே உருவாக்கிவிட்டது!

ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தேன்.  சுவாமி விவேகானந்தர் ஏதோ ஒரு அழுத்தமான சிந்தனைப் புயலை நம்முள்ளே உருவாக்கி, ஆசிரியர் உலகிற்கு ஓர் அரிய வழிகாட்டுதலைச் செய்யவே இவ்வாறு கூறியிருப்பார் என்னும் கோணத்தில் என் மனம் நடைபோடத் துவங்கியது.

நானும் ஓர் ஆசிரியன் தானே! என்னையே பரிசோதனைத் துண்டாக்கிக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தேன்.

கல்லூரியில் தமிழாசிரியனாகப் பொறுப்பேற்றேன்.  கம்ப ராமாயணம் பாடம்.  முதலாண்டு ராமாயணப் பாடம் நடத்தும்போது, நானே வீடணனாக மாறி அறம் கூறினேன்.  நானே ராவணனாகி வீரமொழி பேசினேன்.  நானே கும்பகர்ணனாகி உணர்ச்சிப் பிழம்பாகி அண்ணனுக்கு அறிவுரை வழங்கினேன்.

மாணவர்கள் தங்களை மறந்து அறவுணர்வில் ஒன்றிப் போனார்கள்.  பாடத்தை உணர்வுப் பூர்வமாக உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டார்கள்.

இரண்டாமாண்டும் அதே பாடம்.  இந்த முறை ராமாயணப் பாடல்களின் பதவுரை, பொழிப்புரை, வினாக்கள் பற்றி தகவல்களைப் போதித்தேன்.

மூன்றாவது ஆண்டும் ராமாயணப் பாடமே! இந்த முறை வகுப்பில் மாணவர்களிடம் ஏதோ கடமைக்குப் பாடம் நடத்தி விட்டு, ராமாயணத்தில் இந்த ஆண்டு வினாக்கள் வராது! கவலை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்து விட்டேன்.

கழுதையின் இயல்பு என்ன?  தன் மீது எந்தச் சுமையை ஏற்றினாலும், கற்பூர மூட்டையானாலும், சாண மூட்டையானாலும் சுமந்து செல்லுமே ஒழிய எதைச் சுமக்கிறோம் என்ற எண்ணமோ, மகிழ்ச்சியோ, துயரமோ, கழுதையின் உள்ளத்தைப்  பாதிப்பதில்லை.

முதலாண்டு ஆழமான உணர்ச்சியும் உந்துதலும் உன் உள்ளத்தில் இருந்தன.

பேரா.சோ.சத்தியசீலன்

இரண்டாமாண்டு அதே ராமாயணம் நடத்தும் போது உணர்ச்சியில்லை! கடமைக்கு நடத்தினேன்.

மூன்றாமாண்டு ராமாயணம் ஏன் நடத்துகிறோம்? அதன்மூலம் மாணவர்களுக்கு எந்த விதமான அறவுணர்களை ஊட்டுகிறோம் என்னும் எண்ணமே இல்லாமல் பாடம் நடத்தி முடித்துவிட்டேன்.

எதைக் சுமக்கிறோம் என்னும் பிரக்ஞை சிறிதும் இல்லாத கழுதைக்கும்- என்ன போதிக்கிறோம், எதற்காக என்னும் உணர்வு சிறிதும் இல்லாத எனக்கும் என்ன வேறுபாடு?

ஆசிரியன் என்பன் மாணவர்களின் மன இருளைப் போக்கி, ஞானஒளியை ஊட்டி அவர்களின் நல்லுணர்வுகளை உயர்த்தும் தெய்வமாக இருத்தல் வேண்டும்.

வெறும் கடமைக்காக, வாங்கும் ஊதியத்திற்காக எந்த உணர்வுமில்லாமல் செயல்படும் ஆசிரியர்களைப் பற்றித்  தான் சுவாமி விவேகானந்தர் அவ்வாறு கூறினார் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

ஆனால் ஒரு செய்தி தான் இன்றுவரை எனக்குப் புரியவில்லை! மற்றவர்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப்படும் போது, நான் மட்டும் எப்படி மூன்றே ஆண்டுகளில் கழுதையானேன் என்பது தான் அது!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s