-பேரா.சாலமன் பாப்பையா
பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா (86), மதுரையில் வசிப்பவர்; தமிழ் மேடைப் பேச்சாளர்களுள் முத்திரை பதித்த பட்டிமண்டப நாவலர்; நகைச்சுவை மிகுந்த தனது பேச்சால் உலகத் தமிழர்களைக் கவர்ந்து வருபவர். மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணர்- சுவாமி விவேகானந்த பக்தர்களின் 18-வது மாநில மாநாட்டில் திரு.சாலமன் பாப்பையா ஆற்றிய உரையின் சுருக்கம் இது.

அன்பர்களே, துறவிப் பெருமக்களே, உங்கள் திருப்பாதங்களில் தலைவைத்து வணங்கித் தொடங்குகிறேன்.
‘இது எங்கள் பாரதம். என் உடல், பொருள், ஆன்மா அத்தனையும் எங்கள் பாரத மண்ணிற்கும், இப்பண்பாட்டு கலாச்சாரத்திற்காகவும் செலவிட வேண்டும்’ என்று எண்ணி ஓர் இளைஞன், சில ஆண்டுகள் அலைந்தார்.
இந்திய மாதாவின் உயிர்த்துடிப்பு அவருடையது. அந்த உயிர்த் துடிப்பின், கம்பீரத்தின் முழக்கத்திலே அவர் பேசுகிற பேச்சு, எழுந்த சங்கீதநாதம் ஒவ்வோர் இதயத்திலும் வீணையாய் மீட்டுகிறது.
ஓ! எத்தனை பெரிய நாடு இது! எத்தனை பெரிய தத்துவம் அது என்று நம்மை எண்ணிப் பார்க்க வைக்கும். அங்கே நீங்களும் நானும் நிற்கிறோம். நம் நாடு எழுந்து நிற்கிறது கம்பீரமாக.
எதை வழங்க வேண்டுமோ, அதை வழங்குவதற்காகச் சென்றவர், பிற மதங்களை வெறுக்காத மாண்பினைப் பல நாடுகளுக்கும் எடுத்துச் சென்றவர், எல்லா மதங்களும் உண்மை என்பதை எடுத்துச் சொல்ல வந்திருக்கிறேன் என்று கூறிய அந்தப் பெரிய ஜீவன் தான் விவேகானந்தப் பெருமான்.
அவர் முழங்கிய முழக்கம் இருக்கிறதே அது ஒரு காலமும் அழியாது. அது நிலைக்கும்.
ஆயிரமாயிரம் இளைஞர்களை அது காலந்தோறும் எழுப்பும் என்பதற்குச் சான்றுகளாய் வந்திருக்கிற உங்களைப் பார்க்கிற போது இந்தியா மறுபடியும் ஒரு மறுமலர்ச்சியை நோக்கி எழும் என்பது புரிகிறது. இந்தக் கூட்டம் அதற்கான அடையாளம்.
‘எல்லாத் திசைகளிலிருந்தும் காற்று வர வேண்டும். அதுபோல ஞானம் என்பதை கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் வடக்கிலும் இருந்து வரவிடுங்கள்; வரட்டும்’ என்று கூறிய துறவிகளின் நாடு இது.
பாரதி சொன்னது போல,
‘ஆத்திசூடி யிளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்,
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்,
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்,
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே…..’
என்ற பெருமையை உலகிற்கு உணர்த்தியது இம்மண். அதை உலகிற்கு உணர்த்தியவர் விவேகானந்தர்.
‘இந்தியா என் குழந்தைப் பருவத்தின் தொட்டில், என் இளமையின் நந்தவனம், என் முதுமையின் காசி க்ஷேத்திரம். இது என் நாடு. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடு. எங்கள் நாடு இது’ என்று கூறி எல்லா மக்களையும் இந்த மண்ணிற்காகப் பாடுபடச் செய்தவர் விவேகானந்தர்.
தன்னை விடுவிப்பது என்று நினைத்து வந்த துறவிகளுக்கு நடுவிலே, தன்னையும் விடுவித்து, இம்மண்ணையும் விடுவிப்பது தான் வாழ்க்கை என்று முதலில் கூறிய புரட்சித்துறவி, வழிகாட்டும் துறவி அவர்.
ஏழைகளை மறந்தது தான் நாம் செய்த பாவம்!
சுவாமிஜி எழுதுகிறார்:
நாம் யாரைப் புறக்கணித்து விட்டோம்? சாதாரண மக்களைப் புறக்கணித்துவிட்டோம். விளைவு? கடற்கரை ஓரங்கள் கபளீகரமாயின.
இந்நாட்டின் மன்னர்கள் யார்? எவன் சேரிகளிலே வாழ்ந்து கொண்டருந்தானோ, எவன் மரங்களை அறுத்துக் கொண்டு காட்டுவாசியாக இருந்தானோ, அவன் பாரதத்தின் புதல்வன் அல்லவா?
அவனை ஒன்றும் தெரியாதவனாக, அவனுக்கு ஒன்றும் தராமல், இங்கே வராதே என்று உள்ளேயே நுழைய விடாமலும் வைத்திருந்தால், அவன் எங்கே போவான்?
‘சசோதரனே வா! இது உன் பண்பாடு. உனக்கென்று ஒரு நாகரிகம் உண்டு. உனக்கென்று ஒரு கலாச்சாரம் உண்டு’ என்று கூறி அதை நாம் கற்றுத் தர வேண்டும்.
ஏழைக்கு எந்த வடிவில் இறைவன் இருக்கிறான்?
‘சொக்கலிங்கம் எங்கே இருக்கிறான். சோத்துக்குள் அல்லவா இருக்கிறான்! பிரம்மம் எங்கே இருக்கிறது. சோற்றில் அல்லவா இருக்கிறது!’
அப்படி என்றால் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்.’ உழைக்கிற மனிதனை நாம் வணங்குகின்ற தெய்வமாக ஆக்க வேண்டும்.
அது மட்டுமல்ல. சாதி, இந்து மதத்தின் ஏற்பாடல்ல. அது ஒரு சமுதாய ஏற்பாடு. கிறிஸ்தவத்தை சாதியம் விழுங்கிவிட்டது. பகுத்தறிவும் நாத்திகமும் சாதியை ஒழித்து விடுவதென்று கூறி கொடிகட்டி எழுந்தன. ஆனால் இப்போது அவர்கள் தான் ‘சாதிவாரியாகக் கணக்கெடு’ என்கிறார்கள். பகுத்தறிவும் நாத்திகமும் பறந்து போய்விட்டன.
சலுகைகளும் வேலைவாய்ப்புகளும் கல்வி வாய்ப்புகளும் சாதியை நிரந்தரமாக்கி வைத்துவிட்டன. எவரெல்லாம் இதை வேண்டாம் என்று சொன்னார்களோ, அவர்களே அந்த வேலைவாய்ப்புகளையும், சலுகைகளையும் கொண்டுவந்து வைத்துவிட்டு- பஸ்மாசுரன் போல, வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கின்ற கதையாக மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள்.
‘நான் ஓர் இந்தியன், ஓவ்வோர் இந்தியனும் என் சகோதரன் என்று கர்வத்துடன் சொல்’ என்று விவேகானந்தர் எல்லோரையும் பார்த்து கூறச் சொல்கிறார் என்றால், இதன்மூலம் ஒரு தெளிவான பாடத்தை நமக்குத் தந்திருக்கிறார்.
அரசு தவறு செய்தால் தட்டிக் கேட்டார்கள் அன்று, ஆனால் இன்று….?
தர்மம் கோயில்களில் பேசப்படவில்லை; பள்ளிகளிலே கூறப்படவில்லை; கல்வி நிறுவனம் என்பது காசு சேர்ப்பதற்கான ஸ்தாபனம் என எப்போது வருகிறதோ அப்போது பாரதம் சிரமப்படுகிறது.
முன்னர் மன்னர்களிடத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காகத் துணிந்து பேசினார்கள். சங்க காலத்தில் சோழனின் பிள்ளைகளைக் கொல்ல முயன்ற மன்னனிடம், “நீ மண்ணுக்குள் நிறுத்தியிருப்பது குழந்தைகள்; கபடம் அறியாதவர்கள். என்னைப் பார்த்தும் சிரிக்கிறார்கள். யானைகளைப் பார்த்தும் சிரிக்கிறார்கள். இவர்களைக் கொன்றால் நீ தோற்றுவிடுவாய். இது தேவையா?” என நேருக்கு நேர் சொன்னார்கள்.
‘நீதி கேட்க வாருங்கள் என்று அரசியல் அல்ல, கட்சிகள் அல்ல, இந்தியா அழைக்கிறது. (முன்னே அமர்ந்திருக்கும்) இந்தத் துறவி மக்கள் அழைக்கிறார்கள்’ என்று சொன்னால், ஒரு கம்பீரம் வராதா? இந்த நாடு ஒன்று சேராதா?
ஆனால் இன்று, ஒன்றுபட்ட பாரதம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டதே!

பெருமக்களே, ‘இந்துக்களின் ஆன்மிகம், பௌத்தர்களின் கருணை, கிறிஸ்தவர்களின் செயல்திறன், இஸ்லாமியர்களின் சகோதர நேசம் இவை அனைத்தோடும் நாம் வாழ வேண்டும்’ என்றார் விவேகானந்தர்.
“ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் இனி இருக்க வேண்டியது, ‘உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்” என்றார் விவேகானந்தர்.
இந்திய மண் ஈசுவரனின் சொத்து; மகேஸ்வரனின் சொத்து, எல்லோரும் எல்லாம் தரும் மகேசன் அவன். அவன் தந்த சொத்தைக் கட்டிக்காக்க வேண்டும்.
வாருங்கள்! நாம் எல்லாரும் அப்பெருமகன் காட்டிய வழியிலே வீறுநடை போட்டுச் செல்வோம். ஓர் எழுச்சிமிக்க, மறுமலர்ச்சி மிக்க பாரதம் இந்த மண்ணிலே தோன்றும்.
அதை எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாது. ‘எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்’ என்ற புதிய சக்தி தோன்றும். அந்தச் சக்தியின் வீச்சு நம் பாரதத்திலிருந்து எழும்.
நன்றி: விவேகானந்தரைக் கற்போம்! –தொ.ஆ: சுவாமி விமூர்த்தானந்தர், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை- 2012.
$$$