ஸ்வதந்திர கர்ஜனை – 2(11)

-தஞ்சை வெ.கோபாலன்

சர்தார் வல்லபபாய் படேல்

பாகம்-2 :பகுதி 11

அடக்குமுறை தாண்டவம்

சைமன் கமிஷன் இந்தியாவுக்கு விஜயம் செய்வதை எதிர்த்து இந்திய மக்கள் ஒன்று திரண்டு  ‘சைமனே திரும்பிப் போ’ என்று ஒரே குரலில் எதிர்ப்பதைக் கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் திகைத்துப் போய் நின்றது. நெல்லிக்காய் மூட்டைகள் என நம்பியிருந்த இந்திய மக்கள் இப்படி ஒருமித்த குரலில் எதிர்ப்புக் குரல் எழுப்பியது அவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது போலும். அவர்கள் தங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் அடக்குமுறைகளைக் கையாண்டு பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.

லாகூர் நகரத்தில் ஒரு பிரம்மாண்டமான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர் தேசபக்தர்கள். அந்தக் கூட்டத்துக்கு லாலா லஜபதி ராய் தலைமையில் மக்கள் திரண்டெழுந்து ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். பிரிட்டிஷ் போலீஸ் தங்களை அச்சுறுத்தி, தடியடி செய்து விரட்ட முடிவு செய்திருப்பதை அறிந்த தேசபக்தர்கள் வரிசையாக நடந்து அமைதியாகச் சென்று கொண்டிருந்தனர். ‘சைமனே திரும்பிப் போ’ எனும் கோஷம் மட்டும் வானை முட்ட எழுந்து கொண்டிருந்தது.

ஓகோ! எங்கள் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்காக கட்டுப்பாட்டோடு போவது போல் அணிவகுத்துச் செல்கிறீர்களோ? உங்களை விடுவதில்லை என்று போலீஸ் வெறிபிடித்தவர்களைப் போல பாய்ந்து தடியடி நடத்தினர். கூட்டத்தில் வந்தவர்கள் அனைவருக்கும், போலீசார் தாறுமாறாக அடித்ததில் பலத்த காயம்.

வயதில் முதியவரும் கூட்டத்தின் தலைவரும் பஞ்சாப் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவருமான லாலாஜியை சார்ஜண்ட் சாண்டர்ஸ் என்பான் தடிகொண்டு பலம் கொண்டமட்டும் தாக்கினான். அவன் அடித்த அடிகள் அவர் மார்பில் விழுந்தன. தொண்டர்கள் லாலாவை தடியடியிலிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. மிருக வெறியோடு சார்ஜண்ட் சாண்டர்ஸ் அடித்த அடியில் லாலா நினைவை இழந்தார். தொண்டர்கள் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சில நாள்களில் லாலாஜி உயிரிழந்தார்.

என்ன தான் காந்திஜி அகிம்சை முறையில் சத்தியாக்கிரகம் செய்ய வற்புறுத்திக் கொண்டு இருந்தாலும், லாலா லஜபதி ராயைப் போன்ற மாபெரும் தலைவர்களை மிருகத்தை அடிப்பது போல அடித்துக் கொன்ற காட்சியைப் பார்த்துக் கொண்டு கையைக் கட்டிக் கொண்டிருக்க முடியுமா? முடியாதல்லவா? ஆம், அதற்குப் பதிலடியாக, லாகூர் பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் சாண்டர்சை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தனர்.

பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய இளைஞர்கள் சமயம் பார்த்து அந்த சார்ஜண்ட் சாண்டர்சை சுட்டுக் கொன்றனர். அதுபற்றிய வீர சாகச வரலாற்றைத் தனியாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

சைமன் கமிஷன் லக்னோ நகருக்கு வருகை தந்தபோது அங்கு நடந்த கூட்டத்தை போலீசார் எந்தவித ஆத்திரமூட்டும் செயலும் இல்லாத நிலையில் தடியடி நடத்திக் கலைத்தனர். பலமுறை அவர்கள் தாக்கியதில் எண்ணற்ற தேசபக்தர்கள் காயம் அடைந்தனர். அலகாபாத்தில் நடந்த ஊர்வலத்தில் குதிரை மீதமர்ந்து போலீசார் கூட்டத்தினுள் புகுந்து கண்மூடித்தனமாகத் தொண்டர்களைத் தாக்கினர். அதில் ஜவஹர்லால் நேருவும், கோவிந்த வல்லப பந்த் உள்ளிட்ட பல தலைவர்களும் காயமடைந்தனர்.

ஜி.பி.பந்த் என்று அறியப்பட்ட அந்த மூத்த தலைவர் நல்ல பெருத்த உடல்வாகு உள்ளவர். போலீஸ் அடித்த அடியில் அவர் கழுத்து நரம்புகள் சிதைவுற்று தலை ஆடிக்கொண்டே தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டியதாயிற்று.

லக்னோவில் போலீசார் செய்த அட்டூழியத்துக்கு கணக்கு வழக்கு இல்லை. தொண்டர்களைத் தாக்குவதற்கென்றே பயிற்சி பெற்ற பெரிய போலீஸ் பட்டாளம் அங்கு குவிக்கப்பட்டிருந்தது. லக்னோவில் சைமனுக்கு கிராம அதிகாரிகள் சார்பில் ஒரு விருந்து கொடுப்பதாகச் சொல்லி ஒரு பூங்காவில் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அங்கு சைமன் விருந்து உண்ணும் சமயத்தில் தேசபக்த தொண்டர்கள் எங்கிருந்தாவது திடீரென்று வந்து கருப்புக் கொடி காட்டியோ, அல்லது  ‘திரும்பிப் போ’  கோஷமோ போடாமல் இருக்க சுற்றுவட்டாரத்து சாலைகளில் யாரையும் நடமாட விடவில்லை. எங்கும் வெறிச்சோடிக் கிடந்த நிலையில் அமைதியான பூங்காவில் சைமனுக்கு விருந்து நடந்தது.

இத்தனை முன் ஜாக்கிரதை ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு விருந்து நடக்கும் சமயம் சர் ஜான் சைமன் தன்னுடைய கமிஷன் உறுப்பினர்களுடன் அங்கு விஜயம் செய்தாரோ இல்லையோ, எங்கிருந்து தான் அத்தனை பலூன்கள் வான்வெளியில் பறக்கத் தொடங்கின. அத்தனையும் கருப்பு நிறம், அவற்றில் எல்லாம்  ‘சைமனே திரும்பிப் போ’  என்ற வாசகங்கள். வெள்ளையர்கள் அனைவரும் சர் ஜான் சைமன் உள்பட அனைவரும் திகைத்துப் போய் இந்த அதிசயக் காட்சியைப் பார்த்தார்கள்; ஏற்கனவே வெளிறியிருந்த அவர்கள் முகமெல்லாம் அவமானத்தால் சிவந்தன.

எப்படி நேர்ந்தது இது? யார் இதனைச் செய்திருக்க முடியும் என்று அங்குமிங்குமாய் ஓடித் தேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் கையில் யாருமே சிக்கவில்லை. வெள்ளையன் தடுக்குக்குள் நுழைந்தால் நம்மவர்கள் கோலத்தினுள் நுழைந்து விளையாடிவிட்டார்கள்.

சர் ஜான் சைமன் பாட்னா நகருக்கு ரயில் மூலம் வந்து சேர்ந்தார். அங்கு ரயில் நிலையம் முன்பாக சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு மேல் எதிர்க்குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்யக் காத்திருந்தனர். வெள்ளையர்களும் சும்மாயில்லை. எங்கிருந்தெல்லாமோ கூலிக்கு ஆட்களை லாரிகளில் (இப்போதைய அரசியல் பேரணிகளுக்கு ஆள் கொணர்வது போல) கொண்டுவந்து இறக்கிய வண்ணம் இருந்தனர். அப்படி வெள்ளையர்கள் கொண்டு வந்து இறக்கிய மக்கள் எல்லாம் அங்கிருந்த தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டு ‘சைமனே திரும்பிப் போ’ என்று கோஷமிடத் தொடங்கினர்.

காசையும் செலவழித்து இவர்களைக் கொண்டு வந்து சேர்த்ததற்கு நல்ல பலன் என்று நொந்து போயினர் வெள்ளையர்கள். ஏமாற்றமும் அவமானமும் பிரிட்டிஷ் அதிகாரிகளைப் பிடுங்கித் தின்றன. இப்படி இந்திய தேசபக்தர்கள் பெரும் கூட்டமாகக் கூடி சைமனுக்கு எதிர்ப்பைக் காட்டுகையில் விரல்விட்டு எண்ணக்கூடிய அரசாங்க அதிகாரிகள் மட்டும் சைமனை உத்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.

சரி! இந்த இந்திய மக்கள் தான் இப்படி எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே, இவர்களை சைமனின் கண்களில் காட்டாமல் மறைத்து ஒளித்து அழைத்துச் சென்றுவிட எவ்வளவோ முயன்றும் அதிகாரிகளால் முடியவில்லை. சைமன் இந்த ஆர்ப்பாட்டத்தை நேருக்கு நேர் பார்க்கும்படி ஆயிற்று. வெளியில் மக்கள் கொதித்தெழுந்து தங்கள் உயிரையும் திரணமென மதித்துப் போராடும்போது, இங்கு எதுவுமே நடக்கவில்லை.  நாடே அமைதியாக இருக்கிறது, சைமனின் விஜயம் மாபெரும் வெற்றி என்று பிரகடனப்படுத்த நினைத்திருந்த வெள்ளையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் பாட்னாவில் நடந்தது.

அதிகாரிகளும் மக்களுடைய கோபத்தைப் புரிந்து கொண்டனர். இந்திய மக்களின் உள்ளக்கிடக்கை என்ன என்பதையும் சைமன் தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாய் அமைந்தது. இந்திய மக்கள் தன்னையும் வரவேற்கவில்லை, தான் வந்திருக்கும் நோக்கத்தையும் வரவேற்கவில்லை என்பதை நன்கு புரிந்து கொண்டார் சைமன்.

இந்திய பெருங்குடி மக்களில் செல்வந்தர்கள், வெள்ளையர்களுக்கு பெருத்த ஆதரவைக் கொடுக்கும் பெரும் நிலப் பிரபுக்கள் இவர்களுக்கெல்லாம் ‘சர்’ பட்டம் கொடுத்து குளிப்பாட்டி வைத்திருந்ததல்லவா ஆங்கில அரசு. அவர்களாவது வந்து சைமனுக்கு வரவேற்பு கொடுத்திருக்கலாமல்லவா? பம்பாயில் வந்து இறங்கியபோது பம்பாயில் இருந்த 22-க்கு மேற்பட்ட ‘சர்’ பட்டம் பெற்ற செல்வந்தர்களில் ஒருவர் கூட வந்து சைமனை வரவேற்கவில்லை. அந்த அளவுக்கு இந்த  ‘சைமன் எதிர்ப்பு’ மக்கள் உள்ளங்களில் ஊடுருவி இருந்தது.

1928-இல் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தில்லியில் ஒரு சர்வகட்சி மாநாடு கூடி இந்திய அரசியல் நிர்ணயத் திட்டமொன்றைத் தயாரித்தார்கள். அதாவது இந்திய அரசியல் சட்டம் போன்றதொரு திட்டத்துக்கு இது ஒரு முன்னோடி. இதன் பூர்வாங்க வேலைகளைக் கவனிக்க மோதிலால் நேருவின் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

அதே ஆண்டில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு நிகழ்ச்சி பர்தோலி சத்தியாக்கிரகம். 1928-இல் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கம்  ‘பர்தோலி சத்தியாக்கிரகம்’ என பெயர் பெற்றது. விவசாய மக்களின் பிரச்னைக்காக வல்லபபாய் படேல் தலைமையேற்றுப் போராடிய இந்தப் போராட்டம் மகாத்மா காந்தியின் முழு ஆதரவையும் பெற்றது.

மகாத்மா காந்தி ஏழை எளிய விவசாயிகளின் பிரச்னைக்காக இருவேறு போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். முதலாவது பிகாரிலுள்ள சம்பாரன் எனுமிடத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கான போராட்டம், மற்றது குஜராத்தில் கேடா எனுமிடத்தில் நடந்தது. இவ்விரு போராட்டங்களின் பயனாக விவசாயிகளின் வாழ்வாதாரமும், உரிமைகளும், பொருளாதார மேம்பாடும் காப்பாற்றப்பட்டன. இந்த வெற்றிகளின் பயனாக மகாத்மாவின் தலைமையில் நடக்கும் போராட்டங்கள் மூலம் மக்கள் பயனடைய முடியுமென்ற நம்பிக்கை பிறந்தது.

மகாத்மா காந்தி இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு முதன்முதலில் 1920-இல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். லட்சக் கணக்கான இந்தியர்கள் அவருடைய போராட்ட அழைப்பை ஏற்று கல்லூரிகளை விட்டு வெளியேறினர்; அரசுப் பணிகளிலிருந்தும், நீதிமன்றங்களிலிருந்தும் ஏராளமானோர் வெளியேறி விட்டனர். அரசாங்கம் கொடுத்த கெளரவ பட்டங்களைப் பலர் துறந்தனர். பிரிட்டிஷாரின் துணிமணிகளை பகிஷ்கரித்தனர். போராளிகளை  ‘சத்தியாகிரஹிகள்’ என்றழைத்தனர். இவர்கள் பிரிட்டிஷ் சட்டங்களுக்கு எதிராக அமைதியாகப் போராடினர். அடக்குமுறைகளுக்குப் பணியாமல், அதே நேரம் தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் எந்த கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டார்கள்.

அப்படி அவர்கள் அமைதியாகப் போராடியபோதும், பிரிட்டிஷ் அடக்குமுறை காரணமாக பலரும் உயிரிழக்கவும், பலத்த காயமடையவும், உடலின் அங்கங்கள் சேதமடையவும் நேரிட்ட்து; பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு கஷ்டங்களை அனுபவித்தனர்.

1922-இல் செளரிசௌராவில் சத்தியாக்கிரஹிகள் சென்ற ஊர்வலத்தில் சில போலீஸ்காரர்கள் செய்த விஷமம் காரணமாக அந்த போலீஸ் நிலையம் கொளுத்தப்பட்டும் பலர் உயிர் இழக்கவும் நேர்ந்த நிகழ்ச்சியை முன்பே பார்த்தோமல்லவா? அந்த வன்முறைச் சம்பவத்தை அடுத்து காந்திஜி தன் போராட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டார்.

ஆனாலும், காந்திஜி அந்த ஆண்டு கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பதையும் முன்பே பார்த்தோம். அவருடைய உடல்நிலை காரணமாக அவர் 1924-இல் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம். பர்தோலியில் இப்போது நடந்த போராட்டத்துக்கு வல்லபபாய் படேல் தான் ஹீரோ.

1925-இல் குஜராத் மாநிலம் பர்தோலி எனும் தாலுகாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, பயிர்கள் எல்லாம் நாசமாகி, உணவுப் தானியங்கள் உற்பத்தி இல்லாமல் விவசாயிகள் பசியும் பட்டினியுமாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சற்றும் இரக்கமில்லாமல் பம்பாய் மாகாண அரசு மக்களுக்கு விதிக்கப்பட்ட வரியில் மேலும் 30 சதவீதம் அதிகரித்தார்கள். மாகாணத்தின் பல அமைப்புகள் இந்த வரி உயர்வை திரும்பப் பெற வேண்டுகோள் விடுத்தும் அரசாங்கம் செவி சாய்க்க மறுத்தது. ஒரு பக்கம் மக்கள் பசி பட்டினியால் இறந்து கொண்டிருக்க, அரசாங்கம் அதிக வரிவிதித்து அவர்களின் சாவை துரிதப்படுத்திக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளிடம் இருந்த சொத்தின் மதிப்பை விட அரசு விதித்த வரிகள் அதிகம்.  அதில் அவர்கள் சாப்பிடுவது எங்கே?

இந்தச் சூழ்நிலையில் மக்களின் நிலைமையை நன்குணர்ந்த நரஹரி பாரிக், ரவிசங்கர் வியாஸ், மோகன்லால் பாண்டியா போன்ற சமூக ஆர்வலர்கள் அப்போது குஜராத்தின் பலம் வாய்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான வல்லபபாய் படேலிடம் போய் புகார் செய்தனர். இதற்கு முன்பும்கூட கேடா எனும் இடத்தில் இதுபோன்ற சூழ்நிலையில் படேல் தான் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்து வைத்தார். அப்போது அகமதாபாத் நகரின் முனிசிபாலிடி சேர்மனாக இருந்தார். அப்போது குஜராத்தில் படேலின் புகழ் உச்சத்தில் இருந்தது –  இப்போதைய நரேந்திர மோடியைப் போல.

தன்னிடம் தூது வந்தவர்களிடம் படேல் ஒளிவு மறைவின்றிப் பேசினார். அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும்போது ஏற்படக்கூடிய விளைவுகளை  மக்கள் தாங்கிக் கொள்வார்களா? அதனால் விளையக் கூடியவற்றை எதிர்கொள்ளத் தயார் என்றால் தான் தலையிடுவதாகச் சொன்னார். பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த எல்லோரும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் தான் போராடுவதாகச் சொன்னார். மக்கள் சம்மதித்தனர்.

படேல் சொன்னார்,  “போராட்டத்தின்போது அரசாங்கம் உங்கள் சொத்துக்களைக்கூட ஜப்தி செய்யலாம். போராளிகளை சிறையில் அடைக்கலாம். இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்வீர்களா?” என்றார். மக்கள் சரி என்றனர்.  “எந்த மோசமான நிலைமையையும் தாங்கள் எதிர்கொள்ளத் தயார், எந்த நிலையிலும் அரசுக்கு அடிபணிய மாட்டோம்” என்று உறுதி தந்தனர்.

படேல் இந்த விஷயத்தை காந்திஜியிடம் கொண்டு போனார். காந்தியோ படேல் என்ன நினைக்கிறார் என்று கேட்க, அவர் எதையும் தாங்கும் இதயம் தனக்கும் தம் மக்களுக்கும் உண்டு என்றார். அப்படியானால் சரி,  போராட்டத்தைத் துவக்குங்கள் என்று காந்தி ஆசி கூறினார்.

ஆனால் அதில் ஒரு நிபந்தனை என்றார் காந்தி. அது என்ன நிபந்தனை? இந்தப் போராட்டத்தில் காங்கிரசோ அல்லது காந்தியோ தலையிட மாட்டார்கள். இந்த போராட்டம் பர்தோலி மக்கள் மட்டுமே பங்கு கொள்வதாக இருக்கும் என்றார் காந்திஜி.

படேல் பம்பாய் கவர்னருக்கு மக்கள் படும் சிரமங்களைச் சுட்டிக்காட்டி வரிகளைக் குறைக்கும்படி கடிதம் எழுதினார். ஆனால் கவர்னர் அவர் கடிதத்தை அலட்சியம் செய்ததோடு, வரி வசூலிக்கும் தேதியையும் அறிவித்தார். உடனே வரி கேட்டால் தர முடியாது என்று மறுத்து விடுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறினார் படேல். பர்தோலி பகுதிக்குப் பல தொண்டர்களை நியமித்து போராட்டத்தை வழிநடத்த உதவி செய்யக் கூறினார். எந்தக் காரணம் கொண்டும் விவசாயிகள் வன்முறையில் இறங்கக் கூடாது என்று உத்தரவிட்டார். வரி வசூலை நிறுத்துவதோடு, அபகரிக்கப்பட்ட சொத்துக்களை திரும்பக் கொடுக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்றார் படேல்.

அரசாங்கம் பயங்கரமான அடக்குமுறையை ஏவிவிட்டது. நாட்டின் பிறபகுதிகளிலிருந்து வரிவசூல் செய்ய அடியாட்களைக் கொண்டு வந்தது. ஒருவழியாக 1928-இல் பம்பாய் சட்டமன்ற பார்சி உறுப்பினர் ஒருவருடைய தூதினால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களைத் திரும்பத் தந்தார்கள். அந்த ஆண்டுக்கும், அடுத்துவரும் ஆண்டுக்கும் 30 சதவீதம் வரி உயர்வு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் மூலம் படேல் ‘பர்தோலி வீரர்’ என அழைக்கப்பட்டார். இந்த பர்தோலி சத்தியாக்கிரகப் போரின் முடிவு தான் மகாத்மா காந்தியை 1930-இல் தண்டியில் உப்பு எடுக்கும் போராட்டத்தைத் துவக்கக் காரணமாக இருந்தது.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை – 2(11)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s