பாஞ்சாலி சபதம் – 1.1.24

-மகாகவி பாரதி

பீமனைத் தொடர்ந்து விஜயனும், நகுல சகாதேவரும் தங்கள் தனையனை எதிர்த்து வாதிடுகின்றனர். இதுகாறும் அண்ணனை எதிர்த்துப் பேசியிராத அவர்கள் இவ்வாறு பேசுவது நெஞ்சம் கொதித்ததால் என்கிறார் மகாகவி பாரதி. அவற்றுக்குப் பதில் அளிக்கும் தருமன், கைப்பிடி கொண்டு சுழற்றுவோனின் லாவகத்துகேற்பச் சுழலும் சக்கரம் போன்றது மானுட வாழ்க்கை என்கிறான்.  “தோன்றி அziவது வாழ்க்கை” என்ற தத்துவத்தை முன்வைக்கும் தருமன், தந்தை சொல் கேட்பது ராமன் காட்டிய வழி என்கிறான்....

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1. 24. தருமபுத்திரன் முடிவுரை

வேறு

வீமன் உரைத்தது போலவே-உளம்
      வெம்பி நெடுவில் விசயனும் அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே-நின்ற
      காளை இளைஞர் இருவரும்-செய்ய
தாமரைக் கண்ணன் யுதிட்டிரன்-சொல்லைத்
      தட்டிப் பணிவொடு பேசினார்;-தவ
நேமத் தவறலும் உண்டுகாண்,-நரர்
      நெஞ்சம் கொதித்திடு போழ்திலே.       136

அன்பும் பணிவும் உருக்கொண்டோர்-அணு
      வாயினும் தன்சொல் வழாதவர்-அங்கு
வன்பு மொழிசொலக் கேட்டனன்;-அற
      மன்னவன் புன்னகை பூத்தனன்;-‘அட!
முன்பு சுயோதனன் செய்ததும்-இன்று
      மூண்டிருக்குங் கொடுங் கோலமும்-இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன்-என்னைப்
      பித்தனென் றெண்ணி உரைத்திட்டீர்!       137

‘கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன்
      கணக்கிற் சுழன்றிடும் சக்கரம்-அது
தப்பி மிகையுங் குறையுமாச்-சுற்றும்
      தன்மை அதற்குள தாகுமோ?-இதை
ஒப்பிட லாகும் புவியின்மேல்-என்றும்
      உள்ள உயிர்களின் வாழ்விற்கே,-ஒரு
செப்பிடு வித்தையைப் போலவே-புவிச்
      செய்திகள் தோன்றிடு மாயினும்.       138

‘இங்கிவை யாவுந் தவறிலா-விதி
      ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி
வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும்
      ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு
சங்கிலி யொக்கும் விதி கண்டீர்-வெறுஞ்
      சாத்திர மன்றிது சத்தியம்-நின்று
மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள்
      வாழ்க்கை இதனைக் கடந்ததோ?       139

‘தோன்றி அழிவது வாழ்க்கைதான்-இங்குத்
      துன்பத்தொ டின்பம் வெறுமையாம்-இவை
மூன்றில் எதுவரு மாயினும்,-களி
      மூழ்கி நடத்தல் முறைகண்டீர்?-நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ-துன்பம்
      உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி
போன்று நடக்கும் உலகென்றே-கடன்
      போற்றி ஒழுகுவர் சான்றவர்.       140

‘சேற்றில் உழலும் புழுவிற்கும்,-புவிச்
      செல்வ முடைய அரசர்க்கும்-பிச்சை
ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்,-உயிர்
      எத்தனை உண்டவை யாவிற்கும்,-நித்தம்
ஆற்றுதற் குள்ள கடமைதான்-முன்வந்து
      அவ்வக் கணந்தொறும் நிற்குமால்-அது
தோற்றும் பொழுதிற் புரிகுவார்-பல
      சூழ்ந்து கடமை அழிப்பரோ? 141

‘யாவருக் கும்பொது வாயினும்-சிறப்
      பென்பர் அரசர் குலத்திற்கே-உயர்
தேவரை யப்ப முன்னோர் தமைத்-தங்கள்
      சிந்தையிற் கொண்டு பணிகுதல்;-தந்தை
ஏவலை மைந்தர் புரிதற்கே-வில்
      இராமன் கதையையும் காட்டினேன்:-புவிக்
காவலர் தம்மிற் சிறந்தநீர்-இன்று
      கர்மம் பிழைத்திடு வீர்கொலோ?’       142

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s