வீரத் துறவியும் வீரக் கவிஞரும்

-நல்லி குப்புசாமி செட்டியார்

திரு நல்லி குப்புசாமி செட்டியார், சென்னையில் ‘நல்லி சில்க்ஸ்’ என்ற பிரமாண்டமான  பட்டு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர். வெற்றிகரமான வணிகராக மட்டுமல்லாது, கலை இலக்கிய செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் கொண்டவராகவும் திகழ்பவர்;  25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருப்பவர்; பாரதி அன்பர்; மொழிபெயர்ப்புத் துறையை மேம்படுத்த ‘நல்லி திசை எட்டும்’ என்ற காலாண்டிதழை நடத்தி வருபவர்; பத்மஸ்ரீ,  கலைமாமணி விருதுகளைப் பெற்றவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே...

சிகாகோவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து சென்றவர் சுவாமி விவேகானந்தர். மற்ற மதங்களிலிருந்து இந்து மதம் எப்படி வேறுபடுகிறது என்பதைத் தன் அருமையான பேச்சின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர்.

அதற்கு முன்பு வெளிநாட்டவர்கள் தெரிந்து வைத்திருந்த இந்து சமயச் செய்திகள், பக்தி மற்றும் சம்பிரதாயங்கள் சார்ந்தவை. விவேகானந்தர் அமெரிக்க மக்களிடம் இந்து மதத்தை ஒரு தத்துவப் பெட்டகமாகவே அறிமுகப்படுத்தினார். மகாகவி பாரதியாரும் இதையே செய்தார்.

சமய ஒழுங்கு எல்லோருக்கும் தேவை. ஆனால், அந்த ஒழுங்கு வெறும் சடங்குகளுடன் நின்றுவிடக் கூடாது. தத்துவ ஞானத்தை ஊட்டுவது மனிதம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் உலகத்தையும் புரிந்துகொள்ள உதவும். தத்துவ ஞானத்தைப் பெற சமயச் சார்பு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், சடங்குகள் சாராத சமய ஒழுங்கு தேவை என்பதை விவேகானந்தர் சொற்பொழிவுகளில் உணர்த்தியிருக்கிறார்.

அதற்குக் காரணம் அவர் தன் குருநாதராகிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தத்துவ விளக்கங்களை அத்யந்த சிஷ்யராக இருந்து அறிந்து கொண்டவர்.

கல்விக்கு உதவுவது தான தர்மங்களில் சிறந்தது. கல்வி அறிவை வளர்க்க வேண்டும்; அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவோடு வீரம் வேண்டும்; வீரத்துடன் கருணை வேண்டும்; மனம் திடமாக இருக்க வேண்டும் என்பனவற்றில், சுவாமி விவேகானந்தரும் மகாகவி பாரதியும்  உடன்படுகிறார்கள். இவர்களது ஒத்த கருத்துகளில் சிலவற்றை இங்கே காண்போம்.

விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘ஞான தீபம்’ என்ற பெயரில் 11 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து சில வைர வரிகளை எடுத்துத் தருவதும்,  அவை இன்றைய நடப்புக்கு எப்படிப் பொருந்தும் என்பதை விளக்குவதும் பரமஹம்ஸர் – விவேகானந்தரின் நூல்களைப் படித்தவர்களின் கடமை.

“குழந்தைப் பருவத்திலிருந்தே மனிதர்களின் மனத்தில் நல்ல ஆக்கப்பூர்வமான, உறுதியான உதவுகின்ற எண்ணங்களே தோன்ற வேண்டும். இப்படிப்பட்ட உறுதியான எண்ணங்களுக்கே மனத்தில் இடம் கொடுங்கள். உங்கள் சக்தியைப் பறித்து உங்களைப் பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் கொடாதீர்கள்”

(ஞானதீபம் 3, பக்கம் 210)

ஆங்கில நூலாசிரியர்கள் ‘பாஸிட்டிவ் திங்கிங்’ என்று சொல்வது இதுதான். பாரதியாரும் இதையே ‘எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும்’, ‘கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமைதல் வேண்டாம்’, ‘சக்தி தனக்கே கருவியாக்கு’ என்றெல்லாம் சொன்னார்.

வேறொரு சந்தர்ப்பத்தில் விவேகானந்தர் சொன்னார்:

ஆன்மிக உதவிக்கு அடுத்து வருவது அறிவு வளர்ச்சிக்கான உதவி. உணவு மற்றும் உடைகள் அளிப்பதைவிட  ‘வித்யா தானம்’ அறிவு தானம் எவ்வளவோ மேலானது. ஒருவனது உயிரைக் காப்பதைவிடச் சிறந்தது அது. ஏனென்றால், மனிதனின் உண்மையான உயிர்நாடி, உண்மையான வாழ்க்கை அறிவில் மட்டுமே அமைந்துள்ளது. அறியாமை என்பது மரணம். அறிவுதான் வாழ்வு. அறியாமையிலும் துன்பத்திலும் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிற வாழ்க்கை பயனற்றது.

(ஞானதீபம் 1, பக்கம் 162)

‘இதையே அன்ன சத்திரங்கள் கட்டுவதைவிட முக்கியமானது ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று பாரதியார் சொன்னார். அன்னசத்திரம் உணவு தானம். கல்வி தருவது வித்யா தானம்.

கல்வி கற்பதனால் மட்டும் உயர்ந்த நிலையை அடைந்துவிட முடியாது. கல்வி அறிவு வளர்ச்சிக்கு வழி செய்ய வேண்டும். அறிவு எப்படி இருக்க வேண்டும்? ஒருவனின் அறிவு பிறரது அறிவைத் தூண்டுவதாக அமைய வேண்டும். வெறும் அறிவு என்பது பயனில்லாதது. அறிவு கருணையுடன் சேர்ந்தே இருக்க வேண்டும். அந்த அறிவு தான் அறிவாளிக்கும் அவனைச் சேர்ந்த மக்களுக்கும் பயன்தரக் கூடியது.

அறிவு மற்றும் இதயத்தின் சங்கமம் வேண்டும். இதயம் மிக உன்னதமானது. அதன் வழியாக வாழ்க்கையின் சிறந்த அகத் தூண்டுதல்கள் பிறந்துள்ளன. கருணையே இல்லாமல் அறிவு மட்டுமே நிறைய இருப்பதைவிட, அறிவு சிறிதும் இல்லாமல் கருணை சிறிதேனும் இருப்பதை விரும்புகிறேன். நெஞ்சில் ஈரம் உள்ளவனுக்கே நல்ல வாழ்க்கையும் முன்னேற்றமும் உரியன. அறிவு மிகுந்த ஆனால் நெஞ்சில் ஈரமே இல்லாதவனின் வாழ்வு வறண்டு போகிறது, அவன் அழிகிறான்.

(ஞானதீபம் 3, பக்கம் 284)

இதையே பாரதியாரும், வலிய அறிவு வேண்டும்; மகத்தான அறிவு வேண்டும், ‘சுடர்மிகும் அறிவு’, ‘மானிடம் பயனுற’ உதவியாக இருக்க வேண்டும் என்றும் ‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம்’ என்றார்.

அன்பைப் பற்றி விளக்கும்போது விவேகானந்தர் கூறுவது:

“நாம் யாரையும் வெறுக்கக் கூடாது. இந்த உலகம் தொடர்ந்து நன்மை மற்றும் தீமைகளின் கலப்பாகவே இருக்கும். பலவீனர்களிடம் இரக்கம் கொள்வதும், தவறு செய்பவர்களிடம்கூட அன்பு செலுத்துவதும் நம் கடமை. இந்த உலகம் ஒரு பரந்த நன்னெறிக்கூடம். அதில் மேலும் மேலும் ஆன்மிக வலிமையானவர்களாக நாம் அனைவரும் பயிற்சி பெற வேண்டும்”.

(ஞானதீபம் 1, பக்கம் 127)

மனிதர்களிடம் ஒற்றுமை நிலவ இதுவே சரியான வழி. இதையே பாரதியாரும்  ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ என்று பாடினார்.

நல்லி குப்புசாமி செட்டியார்

“மிருகத்தை மனிதனாகவும் மனிதனைக் கடவுளாகவும் உயர்த்தும் கருத்தே மதம்” என்றார் விவேகானந்தர்.

(ஞானதீபம் 6, பக்கம் 427)

‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினார் பாரதியார்.

“இந்த உலகம் ஒரு பயிற்சிக்கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்கே நாம் இங்கு வந்திருக்கிறோம்” 

-என்றார் சுவாமி விவேகானந்தர்.

(ஞானதீபம் 6, பக்கம் 428)

பாரதியார் இதையே தான் ‘உடலினை உறுதி செய்’ என்று ‘புதிய ஆத்திசூடி’யில் சொன்னார்.

எப்படிப்பட்டவர்கள் இன்று நாட்டுக்குத் தேவை? நூறு வருடங்களுக்கு முன்பே இப்படிச் சொன்னார் சுவாமி விவேகானந்தர்:

துணிச்சலும் வீரமும் மிக்கவர்களே இப்போது நமக்குத் தேவை. நம் தேவையெல்லாம் ரத்த வேகம், நரம்புகளில் வலிமை, இரும்பை ஒத்த தசைகள், எஃகை ஒத்த நரம்புகள். பலவீனப்படுத்துகின்ற கருத்துகள் தேவையில்லை. இவை எல்லாவற்றையும் தவிர்த்து விடுங்கள்; வலிமையாக இருங்கள்; சொந்தக் கால்களில் நில்லுங்கள்.

(ஞானதீபம் 5, பக்கம் 127)

‘வலிமை, வலிமை என்று பாடுவோம் என்றும் வாழுஞ்சுடர்க் குலத்தை நாடுவோம்’ என்று பாரதியார் இதையே சொன்னார். வலிமை வெளிப்படாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல என்பது பாரதியாரின் கருத்து. ‘வீரனுக்கே இசைவார் திரு மேதினி எனும் இரு மனைவியர்’ என்பார் பாரதியார். அதாவது உலகின் மீது ஆட்சியும் செல்வத்தின் மீது ஆட்சியும் வீரத்தினால் மட்டுமே விளையும் என்பார்.

துணிச்சலாகக் கருத்துகளைச் சொன்னதனாலும், மக்கள் துணிச்சலாக இருக்க வேண்டும் என்று சொன்னதனாலும் விவேகானந்தரை ‘வீரத் துறவி’ என்கிறோம். பாரதியாரை ‘வீரக் கவி’ என்கிறோம். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும் பிறருக்கு உதவியாக வாழவும் இந்த இரு மகான்களும் நம் வழிகாட்டிகளாக அமைவார்களாக!.

  • நன்றி: தினமணி (10.09.2012)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s