-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
7. பட்டீச்சுர நிகழ்ச்சிகள் -அ
பட்டீச்சுரம் சென்றது
இங்ஙனம் திருவாவடுதுறையிலிருந்த காலத்தில் “திருப்பெருந்துறைப் புராணத்தைப் பாடுதற்கு ஓய்வு நேரமில்லாமையால் அதனை அரங்கேற்றச் செல்லுதற்கு இவருக்கு இயலவில்லை. அப்பொழுது இவருக்கு உண்டான செலவுகள் அதிகம். அவற்றால் கடன் அதிகரித்துக்கொண்டே வந்தது. வேறிடத்திற் சென்று வாங்கிக் கொடுப்பதற்கும் இயலவில்லை. மிகுதியான செலவுள்ளவராதலால் அடிக்கடி பலவிடங்களிற் கடன் வாங்கிச் செலவழிப்பதும் ஏதேனும் நூல் அரங்கேற்றிய பின்பு கிடைக்கும் ஊதியத்தில் எஞ்சியதைக்கொண்டு அவற்றைத் தீர்ப்பதும் இவருடைய வழக்கம்.
அதனால் இவர், “ரூபாய் ஐந்நூறு கொடுத்தால் திருப்பெருந்துறைப் புராணம் அரங்கேற்றியவுடன் முதலையும் வட்டியையும் சேர்ப்பித்துவிடுவேன்; அவசியமாக வேண்டியிருக்கின்றது” என்று குமாரசாமித் தம்பிரான் முகமாக அப்பொழுது மடத்தின் காறுபாறாக இருந்த ஒருவரிடம் தெரிவித்தார். பிள்ளையவர்களுடைய அருமையை அவர் சிறிதும் அறியாமல், “எதை நம்பி இவருக்குப் பணம் கொடுக்கிறது?” என்று குமாரசாமித் தம்பிரானிடம் மந்தணமாகச் சொன்னதுடன், “இப்பொழுது கொடுப்பதற்குச் செளகரியமில்லை என்று சொல்லிவிடுக” என்றும் சொல்லி யனுப்பிவிட்டார். அன்புடையவராதலால் குமாரசாமித் தம்பிரான் அதனை அப்படியே இவரிடம் வந்து சொன்னார். அதனைக் கேட்ட இவருடைய மனம் மிகப் புழுங்கிவிட்டது. அவ்வருத்தத்தை மனத்திலேயே வைத்துக்கொண்டு சிலகாலம் அங்கேயிருந்தார். பின்பு வேறிடஞ்சென்று சிலதினமிருந்து அவ் வருத்தத்தை ஆற்றிக்கொண்டு வரலாமென்று எண்ணிப் பட்டீச்சுரம் போய்வருவதாகச் சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பித்துக் கொண்டு புறப்பட்டார். மாணாக்கர்களெல்லாம் பிரிவாற்றாமல் வருந்தினார்கள். நான் மட்டும் உடன் சென்றேன். இன்ன காரணத்தால் இவர் பட்டீச்சுரத்துக்குப் புறப்பட்டாரென்பது தேசிகருக்குத் தெரியாது.
திருப்பெருந்துறைப் புராணம் பாடிவந்தது
சென்றவர் ஐப்பசி மாதத்தின் இறுதிவரையில் பட்டீச்சுரத்திலேயே இருந்தார். அப்பொழுது தினந்தோறும் திருப்பெருந்துறைப் புராணத்தின் செய்யுட்கள் முறையே பாடப்பெற்று வந்தன. பழைய திருப்பெருந்துறைப் புராணங்களுள் ஒன்றில் படலந்தோறும் திருவாதவூரடிகள் தோத்திரம் ஒவ்வொன்று இருந்தது. அதனைக் கண்ட நான், நாட்டுப்படலஞ் செய்ய இவர் தொடங்குகையில் படலங்கள்தோறும் முதலில் திருவாதவூரடிகள் தோத்திரம் இருந்தால் நலமாயிருக்குமென்று தெரிவித்துக் கொண்டேன். அவ்வாறே இவர் பாடி அமைத்துவந்தார். முதன்முறை பாடல்களை எழுதிப் படித்துக்காட்டி ஏதேனும் திருத்தஞ் செய்ய வேண்டியிருந்தால் இவர் சொல்ல அங்ஙனம் செய்துவிட்டு ஆன பாகங்களைத் தினந்தோறும் வேறு பிரதியில் எழுதிக்கொண்டே வருவது அக் காலத்தில் எனக்கு வழக்கமாக இருந்தது. அதனால் பாடங் கேட்பதற்கு நேரமில்லை. அந்தப் புராணத்தை எழுதி அப்பொழுதப்பொழுது பொருள் கேட்டு வந்ததே என்னுடைய பயிற்சிக்கு அனுகூலமாக இருந்தது.
ஆறுமுகத்தா பிள்ளை எழுத்தாணியை ஒளித்துவைத்தது
அப்புராணத்தை மேலைப்பழையாற்றிலிருந்து எழுதிக் கொண்டுவருங் காலத்தில் ஒருநாட்காலையில் ஆகாரஞ் செய்துவிட்டு வரும்படி இவர் சொன்னமையால் அதற்காக ஏட்டையும் எழுத்தாணியையும் இவர் முன்னே வைத்துப் போய் ஆகாரஞ் செய்துவிட்டு விரைவாக வந்தேன். வந்தவுடன் இவர் பாடல் சொல்லத் தொடங்கினார். நான் ஏட்டை எடுத்து வைத்துக்கொண்டு எழுத்தாணியைப் பார்க்கையில் வைத்திருந்த இடத்தில் அது காணப்படவில்லை. “யாரேனும் எடுத்துச் சென்றிருக்கலாம்; விசாரித்து வாங்கிக் கொண்டு வருவேன்” என்று இவரிடம் சொல்லிவிட்டு அடுத்த பக்கத்திலிருந்த கணக்குப் பிள்ளையின் எழுத்தாணியை இரவலாக வாங்கி வந்தாவது எழுதலாமென்று எண்ணிக்கொண்டு போய் அவரைக் கேட்டேன். அவர், “இன்று எழுதும் வேலை ஒன்றும் இல்லாமையால் எழுத்தாணியை வீட்டில் வைத்துவிட்டு வந்தேன்” என்றார். ஒரு வகையான எழுது கருவியும் கிடைக்கவில்லை. அதனை அசட்டை செய்துவிட்டதாக இவர் எண்ணுவாரே யென்று அஞ்சி அங்கும் இங்கும் சென்று தேடி அலைந்து பார்த்து இவரிடம் தெரிவித்தேன்.
அப்பொழுது அங்கே வந்த ஆறுமுகத்தா பிள்ளை என் காதிற் படும்படி, “ஏன் இவர் அலைகிறார்?” என்று பிள்ளையவர்களைக் கேட்டார்.
மீ: எழுத்தாணி வைத்த இடத்திற் காணப்படவில்லையாம்; பக்கத்திலுள்ளவரிடத்தும் இல்லையாம். அதனால் தான் அலைந்து தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆறு: இந்த மனுஷ்யர் மிகவும் அஜாக்கிரதைக்காரர். இவருடைய சோர்வைப் பலமுறை நான் அறிந்திருக்கிறேன். ஐயா அவர்களிடமும் சொல்லியிருக்கிறேன். இவரை வைத்துக்கொண்டு பாடஞ் சொல்லுவதிலும் எழுதச் சொல்லுவதிலும் யாதும் பயனில்லை.
மீ: தம்பி! சிரமப்படுத்த வேண்டாம். எங்கிருந்தாவது எழுத்தாணியை வருவித்துக் கொடுத்துவிட வேண்டும். கவலையை உண்டாக்கக் கூடாது. அவர் எழுத்தாணியை இங்கே என் முன்னே தான் வைத்துவிட்டுப் போனார்; நான் பாடலைப்பற்றி யோசனை பண்ணிக் கொண்டேயிருந்தமையால், அதைக் கவனியாமற் போனேன். தம்பியினுடைய ஆளுகைக்குட்பட்ட இந்த இடத்தில் எவன் வந்து எடுத்துப் போவான்?
ஆறு: இவர் சாப்பிடப் போகும்போது கையிற்கொண்டு போய் ஜாக்கிரதையாக வைத்திருந்து கொண்டுவருவதைவிட இவருக்கு என்ன வேலை? சாப்பாட்டிலிருக்கிற பிரியத்திற் சிறிது கூட ஐயா அவர்களுடைய காரியத்தில் இல்லையென்பது எனக்குத் தெரியும். அதனாலேதான் சொல்லுகிறேன். இவ் விஷயத்தில் ஐயா அவர்கள் ஒன்றும் சமாதானம் சொல்லக் கூடாது.
மீ: ஆகாரம் செய்துகொண்டு வரும்படி நான் வற்புறுத்திச் சொன்ன பிறகேதான் இவர் போனார். இவராகப் போகவில்லை.
ஆறு: எத்தனையோ நூற்றுக்கணக்கான பாடல்களை ஐயா அவர்கள் சொல்ல இவர் எழுதிக்கொண்டு வருகிறாரே. முன்னமே நான் சொல்லியபடி செய்யுளியற்றுதலில் இவர் பழகி வருவதாகத் தெரியவில்லையே. இதைப்பற்றி முன்னம் பலமுறை இவரிடம் சொன்னேனல்லவா? இன்னும் இவர் கவனியாமலிருந்தால் இவரை யார் மதிப்பார்? ஐயா அவர்களுடைய பேருக்கும் அது குறைவல்லவா? இப்போது எழுத்தாணி வேண்டுமென்று ஒரு பாடல் செய்வாராயின் நான் அதனை வருவித்துக் கொடுப்பேன். அது கிடைக்காவிட்டால் நல்லதாக வேறோர் எழுத்தாணியையாவது விலைக்கு வாங்கிக் கொடுப்பேன்.
மீ: செய்யுள் செய்வதற்கு என்ன தடையிருக்கிறது? இந்த அவசரத்தில் ஏன் கவலைப்படுத்த வேண்டும்? அவகாசங் கொடுத்தாற் செய்வார்.
ஆறு: அவகாசமென்ன? இப்பொழுதே செய்து காட்டினால்தான் இவர் அதிற் பயிற்சியுள்ளவ ரென்பதை நான் நம்புவேன்.
உடனே இக்கவிஞர் கோமான் என்னை நோக்கி, “நீர் அக்கருத்தையமைத்து ஏதேனும் ஒரு செய்யுள் செய்யும்” என்றவுடன் நான் செய்ய நினைந்து யோசிக்கத் தொடங்கினேன். ஆறுமுகத்தா பிள்ளை என்னைக் கவனித்தபடியே அந்தத் தோட்டத்திலுள்ள கொடி செடிகளைப் பார்த்துக்கொண்டு சுற்றிவரச் சென்றார். என்ன யோசித்தும் மனக்கலக்கத்தால் எனக்கு ஒன்றும் தோற்றவில்லை. ‘இந்தக் கஷ்டத்தில் வந்து அகப்பட்டுக் கொண்டோமே’ என்று மிக்க கவலையோடே இருந்தேன். என் முகவாட்டத்தையறிந்த இவ்வாசிரியர் ஆறுமுகத்தா பிள்ளையும் பிறரும் அறிந்து கொள்ளாதபடி என் காதில் மட்டும் படும் வண்ணம் மெல்ல, “எழுத்தாணி ஒன்றெனக்கின் றீ” என்று சொன்னார். அது வெண்பா ஒன்றன் ஈற்றடியாகவும் நான் எதற்காகத் தடுமாறிக் கொண்டிருக்கிறேனோ அக்கருத்து அமைந்துள்ளதாகவும் இருந்ததை யறிந்து ஆறுதலடைந்து கவனித்துக் கேட்டேன். பின்பு, “அழுத்தாணிப் பொன்னால் அமைந்தவுரு விற்றாம்” என்று கூறினார். அப்பால் “மெழுகில்” எனவும், “வழுவில் புராணம் வரைய” எனவும், “தழுவுபுகழ் ஆறுமுகத் தாளாளா என்றும்” எனவும் தனித்தனியாகச் சொல்லிவந்தார். மிகவும் ஜாக்கிரதையாகக் கேட்டுவந்த நான் அவை முறையே ஒரு வெண்பாவின் மூன்றாமடி, தனிச்சொல், இரண்டாமடி, முதலடி என்பவைகளாக இருத்தலை யறிந்து ஒழுங்காகப் பொருத்திப் பார்த்தேன். அவை,
"தழுவுபுக ழாறுமுகத் தாளாளா வென்றும்
வழுவில் புராணம் வரைய - மெழுகில்
அழுத்தாணிப் பொன்னா லமைந்தவுரு விற்றாம்
எழுத்தாணி யொன்றெனக்கின் றீ"
என்னும் அழகிய வெண்பாவாக அமைந்தன. இதை மனனம் பண்ணி அங்கேவந்த ஆறுமுகத்தா பிள்ளையிடம் சொன்னேன். உடனே அவர் எங்கேயோ போகிறவர் போலவே போய் அந்த எழுத்தாணியைக் கொணர்ந்து கொடுத்துவிட்டு, “இனிமேல் இப்படி அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது” என்று கண்டிப்பாகச் சொல்லிப் போயினர்.
பின்பு புராணச் செய்யுட்கள் *1 பல இடங்களிலே பாடப்பட்டு வந்தன.
பால சுந்தர முதலியார்
ஒருநாள் முற்பகலில் கும்பகோணம் நாகேசுவர ஸ்வாமி கோயில் வடக்கு வீதியில் ஒரு காரியமாக இவர் செல்லும்பொழுது, இவர் மேலே வெயில் பட்டது. அப்போது பின்னே வந்த கனவான் ஒருவர் தாம் பிடித்திருந்த குடையை இவரறியாமல் இவருக்குப் பிடித்து வருவாராயினர். சற்று நேரத்தின் பின்பு அதனை இவர் அறிந்து திரும்பிப் பார்த்தார்; “என்ன தம்பி! இப்படியும் செய்யலாமா? இப்போது எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்கவே அவர், “திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் வேலையா யிருக்கிறேன். தங்களைத் தரிசித்த இன்றைத் தினத்தைப் புண்ணிய தினமாகக் கொண்டாடுவேன். என் கை இன்றைக்குத்தான் நல்ல பயனை அடைந்தது” என்று சொல்லிச் சில நேரம் பேசிக்கொண்டே வந்தார். அப்பால் அஞ்சலி செய்துவிட்டுத் தம் பரிவாரங்களுடன் விடைபெற்றுச் சென்றார். அவரை இன்னாரென்று தெரிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம். அதனையறிந்த இக்கவிஞர் பிரான், “இவர் பாலசுந்தர முதலியாரென்பவர்; எஞ்ஜினீயர் வேலை பார்த்து வருகிறார்; தமிழ்ப்பாஷையிற் பிரீதியும் நல்ல பயிற்சியும் உள்ளவர்; தர்மிஷ்டர்; ஏழைகள்பால் இரக்கமுடையவர்; கொள்ளிடத்துக்கு வடபால் பொன்னியாறு என்ற ஓர் ஆறு இவரால் புதியதாக வெட்டப்பட்டுள்ளது. இவருடைய பெருமையை நினைந்து பாலசுந்தரபுரமென்று ஒரூரை இவர் பெயரால் அமைத்துச் சிலர் அதில் வசித்து வருகிறார்கள்” என்றார்.
இவருடைய கெளரவம்
இதுபோலவே தக்கவர்கள் சந்தித்த காலங்களில் இவருக்கு வலிந்து செய்த முகமன்கள் பலவற்றை நாங்கள் அவ்வப்பொழுது பார்த்திருக்கிறோம். பொருள் வருவாய் இல்லையென்ற குறைவு ஒன்றேயன்றி வேறு யாதொருவிதமான குறைவும் இவருக்கு இல்லை. தமிழ்க் கல்விமான்களுட் சக்கரவர்த்தி போலவே இவர் விளங்கினார். பெரிய செல்வவான்களும் பிரபுக்களும் வித்துவான்களும் தங்களைக்காட்டிலும் எவ்வகையிலும் உயர்ந்தவர்களுக்குச் செய்யும் மரியாதைகளை இவருக்குச் செய்துவந்தார்கள். நினைத்தால் லட்சக்கணக்கான திரவியம் இவருக்கு எளிதிற் கிடைத்து விடும். ஆனால் அதைப்பற்றி முயற்சிசெய்ய இவர் அதிகமாக நினைத்தவரல்லர்.
"வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்"
என்ற அருமைத் திருக்குறளுக்கு இலக்கியமாக இவர் எல்லாச் செல்வர்களுக்கும் மேலாகவே இருந்து விளங்கினார். தமிழ்மொழியிற் பிரியமும் மதிப்பும் அன்பும் உள்ளவர்களோடு மட்டுமே பழகுவார். பெரிய சபையிற் செல்வாராயின் அங்கே உள்ள எல்லோரும் எழுந்து நிற்பார்கள். சிலர் முன்னே வந்து அழைத்துச் செல்வார்கள். அவர்கள் முதல் ஸ்தானத்தைக் கொடுப்பதன்றி முதல் மரியாதையையும் இவருக்கே செய்வார்கள்.
கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி முதலிய ஊர்களிலுள்ள ஹைஸ்கூல்களிலும் காலேஜ்களிலும் படிக்கும் தமிழ் மாணாக்கர்கள் தங்கள் தங்கள் ஆசிரியர்களால் இவருடைய பெருமையைக் கேள்வியுற்றிருப்பார்கள். எந்த ஊரிலேனும் வழியில் இவரைச் சந்தித்தால் அச்சமுற்றுத் தங்களுடைய வணக்கத்தைப் புலப்படுத்தி ஒதுங்குவதன்றி இவருடைய பெருமையைப் பற்றித் தம்முள் அவர்கள் பேசிக்கொண்டே செல்லுவார்கள். இளைப்பாறுவதற்கு ஏதேனும் ஓரிடத்தில் இவர் இருப்பாராயின் தமக்கும் இவருக்கும் பழக்கமில்லாமலிருந்தும் அவ்விடத்திற்கு உரியவர்பால் நாங்கள் இவரை இன்னாரென்று சொன்னவுடன் திடுக்கிட்டு எழுந்து அவர்கள் பெரிய தட்டங்களிற் பழம் கற்கண்டு வெற்றிலை பாக்கு முதலியவற்றைக் கொண்டு வந்து நேரே வைத்து முகமன் மொழிகளைக் கூறி உபசரிப்பார்கள்.
நெருங்கிப் பழகுகிறவர்களுக்கு மட்டும் இவர் செல்வமில்லாதவரென்று தெரியுமேயன்றி வேறு யாருக்கும் இவருடைய உண்மை நிலை தெரியாது. பழகாதவர்களும் இவருடைய இயல்பையும் தோற்றப் பொலிவையுங் கண்டு இவரைப் பெருஞ்செல்வவானாகவே மதிப்பார்கள்.
வரன்முறையாகத் தமிழ்க்கல்வியின் பெருமையை அறிந்தவர்களும் அடக்கமுடையவர்களும் அக்காலத்தில் அதிகமாக இருந்தமையால் எந்த இடத்தும் யாவராலும் மதிக்கப் பெற்று இவர் விளங்கினார். படித்தவர்களும் ஏனையோர்களும் இவரைக் கண்டுவிட்டால் காணுதற்கரிய ஒரு தெய்வத்தைக் கண்டாற்போல எண்ணி வரவேற்று உபசரிப்பார்கள். அங்ஙனம் பிறர் நினைத்தற்குரிய ஓர் ஆச்சரியசக்தி இவர்பால் அமைந்திருந்தது.
‘அத்துக் கெட்டுவிடும்’
ஒரு சமயத்தில் ஆறுமுகத்தாபிள்ளை, தம்முடைய குடும்ப சம்பந்தமாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரமொன்று எழுதிக் கொடுக்கும்படி நேர்ந்தது. அதிற் கையெழுத்துப்போடத் தொடங்குகையில் அவர், “ஆறுமுகம் பிள்ளை யென்று போடவா? ஆறுமுகத்தா பிள்ளை யென்று போடவா?” என்று கேட்டனர். இவர், “ஆறுமுகம் பிள்ளை யென்றால் *2 அத்துக் கெட்டுவிடுமே; ஆறுமுகத்தா பிள்ளை யென்றே போடலாம்” என்றனர். கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.
‘மூன்றாவது தெரு’
அந்தப் பத்திரத்தில் ஸாட்சி போடவந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணம் சுண்ணாம்புக்காரத் தெரு. அதை நீற்றுக்காரத் தெருவென்றும் வழங்குவார்கள். ”இந்த இரண்டில் எந்தப் பெயரை என் பெயர்க்கு முன்னே சேர்க்கலாம்?” என்று அவர் கேட்ட பொழுது இவர், “இரண்டும் வேண்டாம்; *3 மூன்றாவது தெரு என்று போட்டுவிடும்” என்று சொன்னார். அதன் சமத்காரத்தை அறிந்து யாவரும் வியப்புற்றார்கள். அப்போது காலேஜில் படித்துக்கொண்டிருந்த (தஞ்சை வக்கீல்) கே.எஸ்.ஸ்ரீனிவாஸ பிள்ளை யென்பவர் அங்கே தியாகராச செட்டியாருடன் வந்திருந்தமையின் இவற்றைக் கேட்டு இன்புற்றதன்றித் தாம் தஞ்சையிலிருக்கும்பொழுது தம்மிடத்தில் வருபவர்களிடம் இச்செய்திகளை அடிக்கடி சொல்லிப் பாராட்டி இன்புறுவார்.
ஸ்ரீ பிரமவித்தியா நாயகி பிள்ளைத்தமிழ்
கபிஸ்தலத்தைச் சார்ந்த இராமானுசபுரமென்னும் ஊரிலுள்ள சிவப்பிரகாச பிள்ளை யென்னும் கல்விமானொருவர் பட்டீச்சுரம் வந்திருந்து இவரிடம் பாடங்கேட்டுக் கொண்டும் தாம் முன்னமே செய்து வைத்திருந்த திருவாவூர்த் திரிபந்தாதியைத் திருத்தஞ்செய்து கொண்டும் இருந்தனர்; அவர் அந்தப்பக்கத்து ஊர்களில் வியாபகராக இருப்பவர்; தாம் முன்னமே செய்து வைத்தும் அரங்கேற்றப்படாமலிருந்த *4 பிரமவித்தியாநாயகி பிள்ளைத் தமிழை இவர் மாயூரத்திலிருந்து வருவித்து அவருக்குக் காட்டி, “இதனை யாரிடமேனும் சொல்லி அரங்கேற்றுவிக்க வேண்டும். எனக்கு ரூபாய் ஐம்பது இப்பொழுது அவசரமாக வேண்டி யிருக்கின்றது. யாரிடத்தேனும் சொல்லி முடிவு செய்து பணத்தை வாங்கிக் கொண்டு வாரும். *5 தம்பிக்கு மட்டும் இது தெரிய வேண்டாம்” என்று சொல்லி அப்புத்தகத்தை அவரிடம் கொடுத்தனர். அவர் தமக்குத் தெரிந்த சிலரிடம் சொல்லிப் பார்த்தனர். அவரது முயற்சி பயன்படவில்லை.
சாமிநாத தேசிகர் செய்த உதவி
அப்பால் திருவனந்தபுரம் காலேஜில் தமிழ்ப்பண்டிதராக இருந்த ஸ்ரீ சாமிநாத தேசிகருக்கு அப்புத்தகத்தை அனுப்பி மேலே கண்ட விஷயத்தைக் குறிப்பித்து ஒரு கடிதமும் எழுதினர். வழக்கம்போல் அக்கடிதத்தின் தலைப்பில் எழுதிய பாடல் வருமாறு:
(விருத்தம்) “அளிவளர் குணனு மேன்மே லருள் வளர் மனனு மோவாக் களிவளர் செயலு மேவுங் *6 கண்வளர் நோக்குந் தீரா ஒளிவளர் புகழும் வாய்ப்புற் றுருவளர் சிறப்பான் மிக்குத் தெளிவளர் சாமி நாத தேசிக னினிது காண்க."
அந்தக் கடிதத்தையும் புத்தகத்தையும் பார்த்த அவர் ரூபாய் ஐம்பதைத் தபால் மூலம் உடனே அனுப்பினர். பணத்தையும் கடிதத்தையும் பெற்ற இவர் அப்போது அடைந்த மகிழ்விற்கு எல்லை இல்லை. இவர் மிகப் பாராட்டி அக்கடிதத்திற்கு விடையனுப்பினார்.
என்னுடைய தந்தையார் பூஜை செய்து வந்த சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகத்தின் பொருட்டு எங்கள் விருப்பத்திற்கு இணங்கி அந்தச் சாமிநாத தேசிகருக்கு அதன் பின்பு இவர் எழுதி ஒரு கவேசிருங்கம் வருவித்துக் கொடுத்தார். ஒரு சமயம் ஆறுமுகத்தா பிள்ளை முதலியோர் அசோகந் தளிரைப் பார்க்க விரும்பினார்கள்; அது தெரிந்து இவர் கடிதம் எழுத அத்தளிர்கள் உடனே அவரால் அடுத்த தபாலில் அனுப்பப்பட்டன.
எனக்குப் பாலபோத இலக்கணம் வாங்கித் தந்தது
நான் பாடங்கேட்டுக்கொண்டு வந்த புத்தகம் முடிந்து விட்டமையால், பாலபோத இலக்கணத்தைப் படிக்க வேண்டுமென்று தெரிவித்துக்கொண்டேன். கும்பகோணத்திற்குச் சென்றிருந்த காலத்தில், அப்புத்தகத்தை எனக்கு இரவலாகக் கொடுக்கும்படி தியாகராச செட்டியாருக்கு இவர் சொன்னார். அவர், “நான் முதலில் வாசித்த புத்தகம் அதுதான். அதனாலேதான் எனக்கு இலக்கணத்தில் நல்ல பயிற்சியுண்டாயிற்று. அதனைப் பொன்போற் பொதிந்து வைத்திருக்கின்றேன். ஆதலால் அதை இரவலாகக் கொடுப்பதற்கு என் மனம் துணியவில்லை” என்று மறுத்து விட்டார். இவர் அதை அப்படியே மனத்தில் வைத்திருந்து மறுநாள் விடிய ஐந்து நாழிகையளவில் எனக்குத் தெரியாமல் மெல்ல எழுந்து கும்பகோணம் காலேஜில் இரண்டாம் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளை என்பவருடைய *7 வீட்டிற்குத் தனியே சென்று அவரை யெழுப்பி அவரிடமிருந்த பாலபோத இலக்கணத்தை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு செய்ய வேண்டிய அநுஷ்டானங்களை விடியற்காலத்தில் அரிசிலாற்றிற் செய்துமுடித்துவிட்டு அவருடன் செட்டியார் வீட்டுத் திண்ணையில் வந்திருந்தனர்.
தூங்கிக்கொண்டிருந்த நான் வழக்கம் போலவே எழுந்து பார்க்கும்பொழுது படுக்கையில் இவர் காணப்படவில்லை. “முன்னரே தனியே எழுந்து சென்று விட்டார்களே! நாம் தூங்கிவிட்டோமே!” என்று நெஞ்சொடு சொல்லிக்கொண்டு அஞ்சி வாயிற்பக்கம் வந்தேன். அப்போது அங்கே யிருந்த இவர் என்னை அழைத்து, “இது பாலபோத இலக்கணம்; வைத்துக்கொண்டு படியும்” என்று கொடுத்தார். நான் திடுக்கிட்டு அதனை வாங்கிக்கொண்டேன். இவர் அநுஷ்டானம் செய்திருத்தலையும் நாராயணசாமி பிள்ளை உடன் இருத்தலையும் அறிந்து அவருடைய வீட்டிற்கு இவர் சென்று அவருடைய புத்தகத்தை வாங்கி வந்திருக்கிறாரென்பதை அறிந்து இவ்வாசிரியப் பெருமானுடைய பேரன்பை நினைந்து உருகி ஸந்தியாவந்தனஞ் செய்து கொண்டு வந்து உடனே அதைப் பாடங்கேட்கத் தொடங்கினேன்; சில நாளில் அதை இரண்டு முறை பாடங்கேட்டு முடித்தேன். அதுவரையில் அவ்விலக்கணத்தை இவர் பாராதவராதலால் அதன் பெருமையையும் விசாகப்பெருமாளையருடைய ஞானத்தையும் பாராட்டினார்.
திரு ஆவூர்த் திரிபந்தாதியின் அரங்கேற்றம்
முன்பு கூறிய சிவப்பிரகாச பிள்ளை யென்பவர் தாம் இயற்றிய ஆவூர்த் திரிபந்தாதி முழுவதும் பிள்ளையவர்களால் திருத்தப்பட்ட பின்பு அதனை அரங்கேற்ற நிச்சயித்தார். அதனை அங்கீகரித்த ஆவூர்க்கோயில் தர்மகர்த்தா முதலியோர்கள் வந்து, “உடன்வருபவர்களையும் அழைத்துக்கொண்டு வந்து அரங்கேற்றுதலைச் சிறப்பிக்க வேண்டும்” என்று இப்புலவர் சிகாமணியைக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு இசைந்து இவர் ஆறுமுகத்தா பிள்ளை, சோழன் மாளிகை இரத்தினம் பிள்ளை முதலிய கனவான்களோடும் மாணாக்கர்களோடும் அவ்விடம் சென்றிருந்தார். இவர் வருவது தெரிந்து வேறு பலரும் அங்கே வந்திருந்தார்கள்.
அரங்கேற்றுவதற்கு முன்பு கோயிலாரைக்கொண்டு சிவசந்நிதியில் சிவப்பிரகாச பிள்ளைக்குப் பட்டுக்கட்டுதல் முதலிய மரியாதைகளை இவர் செய்வித்தார். அப்பால் அரங்கேற்றுதல் தொடங்கப் பெற்றது; தொடங்கிய தினத்தன்று சில பாடல்கள் படிக்கப்பட்டு இவர் மாணாக்கருள் ஒருவரால் பொருள் கூறி உபந்நியாஸம் செய்யப்பெற்றது. எஞ்சிய பாகம் படித்தலை மறுநாள் முதல் வைத்துக்கொள்ளலாமென்று நிச்சயித்து அங்கே ஆகாராதிகளை முடித்துக் கொண்டு எல்லோரும் மறுநாட் காலையிலே பட்டீச்சுரம் வந்துவிட்டார்கள். சிவப்பிரகாச பிள்ளையும் உடன்வந்தார்.
ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம்
வந்தபின்பு தங்களுடைய கெளரவத்துக்குத் தக்கபடி வஸதியான இடத்தையும் ஆகார ஸெளகரியங்களையும் முன்னதாகவே கவனித்து அமைக்கவில்லையென்று சிவப்பிரகாச பிள்ளைமீது ஆறுமுகத்தா பிள்ளைக்கு மிகுதியான கோபம் உண்டாயிற்று; அவரோடு பேசவில்லை; அவரை அங்கீகரிக்கக் கூடாதென்றும் எல்லோரிடமும் சொல்லி வந்தனர்.
“அரங்கேற்றுவதற்கு இன்று மாலையில் ஆவூருக்கு யாரும் போக வேண்டாம்; ஐயாவவர்களை மதியாமல் நடத்தின அவர் பழக்கத்தை இனி யாரும் வைத்துக்கொள்ளக் கூடாது” என்று எல்லாருக்கும் ஆறுமுகத்தா பிள்ளை வற்புறுத்திச் சொல்லிவிட்டனர். அதனை யறிந்த சிவப்பிரகாச பிள்ளை பல முறை நயந்து கேட்டுக்கொண்டும் அவர் முகங்கொடுக்கவில்லை. எப்படியாவது அவருடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிய சிவப்பிரகாச பிள்ளை,
(விருத்தம்) "அனம்படியுந் தடப்பட்டீச் சுரமதனில் வருவாருக் கனத்தை யிட்டுக் கனம்படியும் புகழாறு முகப்புனிதன் றனைப்போலக் காணே னென்று மனம் படிந்து வந்தவென்னை யறியாது வந்தபிழை வழியால் வந்த சினம்படியிற் படியில்லாப் படிக்கிணைநீ யெனப்படித்தல் திண்ண மாமே"
என்ற பாடலைச் சொல்லி, “என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும். உங்களுடைய கோபத்திற்கு நான் பாத்திரனல்லன்; என்னால் அது தாங்க முடியாது” என்று பலமுறை மன்றாடிக் கேட்டுக் கொண்டார்; கொண்டும் அவர் சிறிதும் தணியாமற் கோபக் குறிப்போடே முகங்கொடாமல் இருந்து விட்டார்.
ஆறுமுகத்தா பிள்ளை எதைப் பொறுத்தாலும் பிள்ளையவர்களுக்கு யாரேனும் அபசாரஞ் செய்தால் அதைப் பொறார். அதுதான் அவருடைய கோபத்திற்குக் காரணம். அப்பால் இன்னது செய்வதென்று தெரியாதவராகிச் சிவப்பிரகாச பிள்ளை ஆகாரம் பண்ணாமல் மிகவும் வருந்திக்கொண்டிருக்கும் நிலைமையை இவர் கேள்வியுற்றனர்; உடனே அவரை வருவித்து,
(விருத்தம்) “பரம்பரையே தமிழருமை யறிகுலத்தில் வந்துதித்த பண்பா நண்பு நிரம்பறிஞர் குழாந்தழுவப் பொலிந்தோங்கு சுகுணதயா நிதியே வாய்மை வரம்புநமச் சிவாயமுகின் மைந்தாநல் லாறுமுக மகிபா வென்மேல் திரம்பெறுவெஞ் சினங்கொள்ளேல் கொள்ளுவது தருமமென்பார் செகத்தில் யாரே"
என்னும் செய்யுளைப் பாடி அவர் கையிற் கொடுத்து, “நீர் இதைத் தம்பிக்குப் படித்துக் காட்டும்” என்று சொன்னார்; சிவப்பிரகாச பிள்ளை அங்ஙனமே செய்தனர். ஆறுமுகத்தா பிள்ளை கேட்டு நடையாற் செய்யுள் இன்னாரது என்பதைத் தெரிந்து கொண்டு கோபம் தணிந்தனர்; பிறகு சிவப்பிரகாச பிள்ளைக்கு ஆகாரஞ் செய்வித்தனர்.
ஆவூர்த் திரிபந்தாதிச் சிறப்புப்பாயிரம்
அப்பால் இவரிடம் ஆறுமுகத்தா பிள்ளை வந்து, “ஐயா வவர்கள் மட்டும் ஆவூருக்கு எழுந்தருள வேண்டாம்; மற்றவர்கள் போய்வரலாம்” என்றனர். அதனால் சிவப்பிரகாச பிள்ளையுடன் நாங்களும் வேறு சிலரும் ஒவ்வொரு தினத்திலும் மாலையில் சென்று அரங்கேற்றி விட்டு வந்தோம். அது முதற் பத்து நாள் வரையில் அரங்கேற்றுதல் நடந்தது; கடைசிநாளன்று சிவப்பிரகாச பிள்ளையின் விருப்பத்தின்படி இவர் அந்த நூல் விஷயமாக,
(கட்டளைக் கலித்துறை) “தேடு மரியயற் கெட்டா திருந்துஞ்சிற் றம்பலத்தே ஆடு மழகர்தென் னாவூர்ப் பரம ரடிக்கணன்பும் பீடும் படைத்த சிவப்பிர காசப் பெயர்க்கவிஞன் நாடுங் கலித்துறை யந்தாதி நூறு நவின்றனனே"
என்ற ஒரு பாடலை இயற்றிக்கொடுத்து எல்லோரையும் அனுப்பினர். முடிவில் அது படிக்கப்பெற்றது. மாணாக்கர்களும் அந் நூலுக்குச் சிறப்புப்பாயிரங்களை இயற்றி அளித்தனர்.
‘இன்னும் சில வருஷம் படிக்கட்டுமே’
குடும்ப ஸெளகரியத்தை உத்தேசித்து, “எனக்கு ஏதாவது ஒரு வேலை செய்விக்க வேண்டும்” என்று ஒருநாள் சந்தித்தபொழுது தியாகராச செட்டியாரை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பால் ஒரு சமயம் பட்டீச்சுரத்துக்கு அவர் வந்தபோது, “கும்பகோணத்தில் எனக்கு வேண்டிய அன்பர்களாகிய மூவர் நேடிவ் ஹைஸ்கூலென்று புதிதாக ஒரு கலாசாலையை ஏற்படுத்தப் போகிறார்கள்; அதில் தமிழ்ப்பண்டிதர் வேலைக்கு ஒரு தக்கவரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்று என்னிடம் தெரிவித்தார்கள், பிரியமிருந்தால் நீர் அதனை ஒப்புக்கொள்ளலாம். இப்பொழுது சம்பளம் ரூ. 15 – கிடைக்கும்; செய்விக்கிறேன்” என்றார்.
அச்செய்தியை இவரிடம் தெரிவித்தேன். அருகில் நின்ற செட்டியாரைப் பார்த்து இப் பெருந்தகையார், “தியாகராசு, சாமிநாதையர் இன்னும் சில வருஷம் படிக்கட்டுமே; ஏன் அவசரப்படுகிறாய்? பின்னாலே கூடுமானால் இவரைக் கவனித்துக்கொள்” என்றார். அதனால் அம்முயற்சி நின்றது. பிற்காலத்தில் எனக்குத் தம் வேலையைச் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் செட்டியாருக்கு உண்டானதற்குக் காரணம் இவர் சொல்லிய இந்த வார்த்தை தானென்றெண்ணுகிறேன்.
துரைசாமி பிள்ளைக்காகச் செய்த செய்யுட்கள்
ஆறுமுகத்தா பிள்ளையின் குமாரராகிய துரைசாமி பிள்ளையை யாரேனும், ‘நீ யார்?” என்று கேட்டால் அவர், “திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து மஹாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய பேரனாகிய துரைஸாமி பிள்ளை” என்பார். அங்ஙனம் சொல்லும்படி ஆறுமுகத்தா பிள்ளை பழக்கியிருந்தனர்.
அவரை இவர் பட்டீச்சுரத்திலிருந்து ஒருமுறை சுப்பிரமணிய தேசிகரிடம் அழைத்துச் சென்றார். அப்பொழுது தேசிகர் அவரை, “நீ யார் அப்பா?” என்று கேட்க, அவர் மேற்கூறியவாறே விடை பகர்ந்தார். சில தினங் கழித்து மறுமுறை அவரையும் உடனழைத்துக்கொண்டு சென்றபோது,
"கண்ணான் மதனைக் கடிந்ததற்கேற் பப்புரப்பால்
பெண்ணா ளுறாச்சுப் பிரமணிய - அண்ணா
திருவா வடுதுறையாய் சிற்றடியே னின்ப
மருவா வடுமாற வை"
என்னும் வெண்பா வொன்றை இயற்றி அதனை அவர் சொல்லும்படி இவர் செய்வித்தனர்; அங்ஙனமே அவர் அதனைத் திருத்தமாகச் சொல்லவே தேசிகர் கேட்டு மெச்சினார்.
மற்றொருமுறை இவர் ஒரு பாடலியற்றிப் பாடம் பண்ணுவித்து அவரை அழைத்துச் சென்றபோது, “இப்போது ஏதேனும் பாடலுண்டோ ?” என்று தேசிகர் கேட்க அவர்,
(விருத்தம்) "மாமேவு புகழ்த்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய வள்ள லாய தூமேவு குரவன்பேர் சொற்றவுட னென்பிறப்புத் தொலைந்த தம்மா பாமேவு மிதுகண்டும் பிறப்பொழிப்பா னிவனென்று பலருஞ் சொல்வார் தேமேவு நலந்தெரியென் னாவினையே புகழாத செய்கை யென்னே"
என்ற பாடலைச் சொல்லி மகிழ்வித்தார்.
தனுக்கோடி முதலியாருக்குக் கடிதமெழுதியது
இவர்பால் அன்புடையவரான *8 தனுக்கோடி முதலியாரென்பவர், “எனக்குச் சம்பளத்தில் 20 ரூபாய் உயர்ந்திருக்கிறது. அது தங்களுடைய திருவருளே” என்று எழுதிய கடிதமொன்று ஒரு தினம் இவருக்கு வந்தது. இவர் சந்தோஷப் பெருக்கினால் அவருக்கு உடனே,
"ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு"
என்றதற்கேற்ப உங்களுக்குக் கிடைத்த செல்வம் ஏனையோர்க்கும் உரிய தன்றோ?” என்ற ஒரு விடைக்கடிதம் எழுதுவித்து அனுப்பினர்.
‘உடுக்கையும் பம்பையும் இல்லாதது தான் குறை’
பிறர் பேசுங்காலத்தில் ஏதேனும் குற்றம் காணப்படின் அவர்கள் ஒப்புக்கொள்பவர்களாக இருந்தால் இவர் மெல்லச் சொல்லித் திருத்துவர். அல்லராயின் அவர்கள் எது சொன்னாலும், “சரி, சரி ; ஆம், ஆம்” என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்.
“காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு” (திருக்குறள்- 215)
என்பது இவருடைய பெரும்பான்மையான கொள்கை. தாம் தடுத்துச் சொல்வதனால் யாதொரு பயனுமில்லை யென்பது இவருடைய கருத்து.
ஒரு சமயம் கும்பகோணத்திற் பெரிய உத்தியோகஸ்தராக இருந்த ஒரு கல்விமானுக்கும் இவருக்கும் மிக்க பழக்கமுண்டாயிற்று. அவர் பலமுறை வற்புறுத்தி அழைத்தமையால் இவர் ஒரு நாள் பிற்பகலில் அவருடைய வீட்டிற்குச் சென்றனர். அப்போது தியாகராச செட்டியார், ஆறுமுகத்தா பிள்ளை முதலியோர்களும் உடன் சென்றார்கள். அந்த உத்தியோகஸ்தர் மகாவித்துவானாகிய இவராலே பற்பல அரிய விஷயங்களை அறிந்து கொள்ளலாமென்று நினையாமல் தாம் பலநாளாகச் சேகரித்து வைத்திருந்த வடமொழி தென்மொழியிலுள்ள நூல்களுக்கு வரன் முறையாகவன்றி நூதன முறையாகப் பொருள் செய்துகொண்டு, “இராமாயணத்திற்கு அர்த்தம் இவ்வாறு சொல்ல வேண்டும்; பாரதத்திற்கு அர்த்தம் இதுதான். அவற்றிற்கு இதுவரையில் எல்லோரும் சொல்லி வருபவை பிழையான பொருள்கள்” என்று விபரீதமாகவே சொல்லி வந்தார். கேட்டுக் கொண்டிருந்த இவர் அவருடைய நிலைமையை அறிந்து யாதோர் ஆட்சேபமும் செய்யாமல் சில சமயத்தில், “ஆம், ஆம்” என்றும் சில சமயத்தில், “சரி, சரி” என்றும் மொழிந்து வந்தார்.
இரவில் மணி பன்னிரண்டுக்கு மேலாயிற்று. உடனிருந்த தியாகராச செட்டியாருக்கு அந்த உத்தியோகஸ்தர்மேல் கோபம் உண்டானதன்றி அகாலம் ஆய்விட்டபடியால் அப்பாற் சென்று இத்தனை பேர்களுக்கும் எப்படி ஆகாரம் செய்விப்பதென்ற கவலையும் ஏற்பட்டது. நிறுத்த வேண்டுமென்று சொல்வதற்கும் அஞ்சினவராகிக் கடுகடுத்த முகத்தோடு ஒன்றும் சொல்லாமலே இருந்தார். அந்த உத்தியோகஸ்தர் தம்மிடம் வருபவரோடு இவ்வாறே நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அகாலத்தில் அனுப்பி விடுவது வழக்கம். அவர் ஒருவேளை இவர்களுடைய ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் உடன்சென்ற எங்களுக்கு இருந்தது.
பின்பு அந்த உத்தியோகஸ்தர் வழக்கம்போல், ”சரி; நேரமாய்விட்டது; உங்களுக்குச் சிரமமாக இருக்கும்” என்று சொன்னார். அக்குறிப்பை யறிந்து இவர் புறப்பட்டு அந்த வீட்டின் வெளியே வந்தவுடன் செட்டியார் இவரை நோக்கி, “உங்களிருவர் கையிலும் *9 உடுக்கையும் பம்பையும் இல்லாததுதான் ஒரு குறை” என்று சொன்னார். இவர் பக்கத்தில் யாரேனும் அயலாருளரோவென்று கவனித்துவிட்டு, “என்னப்பா உபத்திரவஞ் செய்கிறாய்? அவ்வாறு சொல்லாமல் நான் வேறு என்ன செய்கிறது? அவருக்கே தெரிய வேண்டுமல்லவா? சில சமயங்களில் இந்த மாதிரியான மனுஷ்யர்களிடமும் போகும்படி நேரிடுகிறது; எல்லாம் கால விசேஷமே; படிப்பை யார் கவனிக்கிறார்கள்? தங்கள் கௌரவத்தையும் தங்கள் படிப்பையுமே பெரிதும் பாராட்டுகிறார்கள்; அதை ஒட்டித் தான் நாமும் போக வேண்டியிருக்கிறது; என்ன செய்யலாம்?” என்று செட்டியாரிடம் சொன்னார்.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. பாடிய இடங்கள்: ஆறுமுகத்தா பிள்ளையின் வீடு, அவருடைய மேலைப் பழையாற்றுச் ‘சவுகண்டி’, திருமலைராயனாற்றங்கரையின் வடபாலுள்ள அரசமரத்தின் நிழலிலுள்ள மேடை, பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றக் கோயில்களுடைய கோபுரவாயிலின் இடைகழித் திண்ணைகள், இன்னும் இவர் உலாத்தும் இடங்கள்.
2. அத்து – ஹத்து, அதிகார எல்லை.
3. மூன்றாவதென்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல்.
4. முதற்பாகம், பக்கம் 314 பார்க்க.
5. ஆறுமுகத்தா பிள்ளைக்கு.
6. கண் – தாட்சணியம்.
7. அது தியாகராச செட்டியார் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்துக்குமேல் இருக்கும்.
8. முதற்பாகம் பக்கம், 195 பார்க்க.
9. உடுக்கையடிப்பவன் சொல்லச் சொல்ல எதிரிலுள்ளவன் பம்பையை முழக்கிவிட்டு ஆமாம் ஆமாம் என்று சொல்லுவான்.
$$$