-ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ்.
தமிழகத்தின் ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவரான (டி.ஜி.பி) திரு. ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்தபோது, அத்துறையை வெளிப்படையான அமைப்பாக மாற்றினார். நேர்மையின் சின்னமாக அரசு அதிகாரிகள் விளங்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். சந்தனக் கடத்தல் கும்பல் தலைவன் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படைக்கு தலைவராக இருந்தபோது மலைவாழ் மக்களுக்கு சேவை செய்யும் சேவகர்களாக காவல்துறையினரை மாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் 15வது ஜெயந்தியின்போது திரு. ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். எழுதிய கட்டுரை இங்கே…

இந்தியாவை அகண்ட பாரதமாகவும், ஒரு தேசமாகவும் இந்திய மக்களை இணைத்தவர்கள் என்ற பட்டியலில் மூன்று முக்கியமான சான்றோர் உள்ளனர். ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி. இவர்கள் தான் இந்தியாவை ஒன்றாகப் பார்த்தனர்; ஒரே கலாசாரத்தில் உருவாகிய மக்களை இணைத்தனர்.
கேரளாவின் காலடியில் இருந்து இந்தியாவின் நான்கு திசைகளிலும் சென்று சமுதாய தர்மத்தை நிலைநாட்டினார் ஆதிசங்கரர். அதன் பின்பு சுவாமி விவேகானந்தரும் மகாத்மா காந்தியும் தான் இந்தியாவின் பல இடங்களுக்குச் சென்று ஒருமைப்பாட்டிற்கு வழிவகுத்தனர்; ஒருமைப்பாடு பட்டுவிட க்கூடாது என்று பாடுபட்டனர்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள் இந்தியர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தியதோடு, ஆன்மிகத்திற்கும், ஆத்திகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை சாமானியர்களுக்கும் புரியும் வகையில் விரிவாக விவரித்துள்ளார்.
“தெய்வம் நீ என்று உணர்” என்று பாரதி முழங்கியது சுவாமி விவேகானந்தரின் “தன்னிற் பிறிதில்லை தெய்வம்” என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது. ‘அச்சம் தவிர்’ என்றார் பாரதி. ‘அச்சமின்மையே உண்மையான மதம்’ என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.
அருட்பிரகாச வள்ளலார், ‘பசித்தவர்களுக்கு பக்தி இருக்காது’ என்றார். ‘பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது தான் உண்மையான மனிதநேயம்’ என்ற சுவாமி விவேகானந்தரின் கொள்கையை வள்ளலார் நடைமுறைப்படுத்தினார்.
சுவாமி விவேகானந்தர் ‘மதநெறி தேவை; ஆனால் மதவெறி கூடாது’ என்றார். ஜாதி என்பது ஒரு சதி, ஜாதியும் மத வெறியும் சமுதாயத்திற்கு அழிவு என்று தான் சென்ற இடத்தில் எல்லாம் உணர்த்தியுள்ளார். அத்தகைய முற்போக்குக் கொள்கைகளை தமிழ்ச் சமுதாயத்தில் நிலைநாட்டியவர்களே பெரியார், அண்ணா. கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் சிந்தனையாளர்களைச் சிந்திக்கவைத்து அவர்களுடைய சிந்தனைகளுக்குக் கருவூலமாகவும் ஊற்றாகவும் முன்னோடியாகவும் விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்.
Awake, Arise என்று கூறி, ‘விழித்துக்கொள், கடமையைச் செய்’ என்று இளைஞர்களுக்கு நல்வழி புகட்டினார். பல கதைகளைக் கூறி தனது கருத்துக்களை மக்களிடம் சென்றடையச் செய்வார் சுவாமி விவேகானந்தர்.
ஒரு எஜமானரின் அழகிய தோட்டத்தில் இரு தோட்டக்காரர்கள். ஒருவர் உண்மையாக உழைப்பவர். மற்றொருவர் உண்மையாக உழைக்காமல் எஜமானர் வரும்போது மட்டும் அவர்களுக்கு பணிவிடை செய்து, தான்தான் அனைத்து வேலைகளையும் செய்ததாக, வேலையே செய்யாமல் தன்னை முன்னிறுத்திக் கொள்வார். உண்மையாக உழைப்பவர் அமைதியாக தமது பணிகளைச் பொருள் ஈட்டிக் கொடுப்பார். இதில் அமைதியாக தமது வேலையைச் செய்தவரே உயர்ந்தவர். உலகமே ஒரு தோட்டம், கடவுளே தோட்டத்தின் எஜமானர். எவர் ஒருவர் தமது பணிகளைச் செவ்வனே செய்கிறாரோ அவரையே இறைவன் நேசிப்பார்.
சுவாமி விவேகானந்தர் ‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று பாகுபாடு இல்லை; எவர் மற்றவர்களுக்குப் பாடுபடுகிறாரோ அவர் தான் உண்மையாக உயர்ந்தவர்’ என்றார்.
தொன்றுதொட்டு நாட்டில் ஊறிய பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள்- இவற்றைத் தகர்த்தெறிய வேண்டும். நல்ல நேரம் கெட்டநேரம் என்றில்லை. உழைப்பதற்கு எந்த நேரமும் பொன்னான நேரம் தான்.
ஒரு அரசன் துறவியிடம் சென்று “வாழ்க்கையில் நாம் பழகும் மனிதர், உரித்த நேரம், முக்கிய பணி -இவற்றில் முக்கியமான நபர் யார், முக்கியமான நேரம் எது , முக்கியமான பணி எது?” என்று ஞானியிடம் கேட்டார். அதற்கு, “இந்தக் கேள்விகளுக்கு பதில் எளிதானது. நீ இப்பொழுது யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாயோ அவர் தான் முக்கியமான நபர், தற்காலம் தான் முக்கியமான நேரம், இப்பொழுது நீ செய்து கொண்டிருக்கும் பணியே முக்கியமான பணி” என்றார் ஞானி.
இதை மனதில் நிறுத்தி இளைஞர்கள் தங்கள் நேரத்தை உபயோகமான வகையில் அமைத்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி கைகூடும்.
தன்னம்பிக்கையும், அச்சமின்மையும் இரு முக்கியமான கோட்பாடுகள் என்று மீண்டும் மீண்டும் உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். பகவத்கீதையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர் அவர். கீதையில் கிருஷ்ண பகவான் ‘அர்ஜுனனுக்கு தைரியமாக வருவதை எதிர்கொண்டு அதர்மத்தை எதிர்த்துப் போராடி தர்மத்தை நிலைநாட்டு’ என்று “கலைப்யம் மாஸ்ம கம பார்த்த” என்று கூறிய விவேகத்தை மீண்டும் மீண்டும் இளைஞர்களுக்கு சுவாமிஜி அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, தீர்க்கமான கேள்விகள் கேட்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அலெக்ஸாண்டர் என்ற மாவீரனை உருவாக்கியவர் அவரது ஆசிரியர் அரிஸ்டாட்டில். அலெக்ஸாண்டர் நுணுக்கமான கேள்விகளைக் கேட்க பயிற்சி பெற்றதால், தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடிந்தது. “Critical questioning is the capacity to raise incisive and ever uncomfortable questions”.
மௌனம் சாதிப்பவதை விட கோழைத்தனம் வேறொன்றுமில்லை. டைட்டானிக் கப்பல் மூழ்கியது ஏன் தெரியுமா? அது கட்டப்படும்பொழுது பல சந்தேகங்கள் எழுந்தன. அவை ஆராயப்படவில்லை. கேள்விகள் கேட்கப்படவில்லை. அதுவே காரணம்.
சாதாரண traffic பிரச்னையை எடுத்துக் கொண்டால்கூட, நெரிசல் ஏன் ஏற்படுகிறது என்று சரியாக யாரும் ஆராய்வதில்லை. சாலை அளவு வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப விரிவடையவில்லை என்பது பொதுவான காரணம். ஆனால் அதற்குத் தீர்வு அந்தந்த நெரிசல் இடங்களைப் பொருத்தது என்பது முக்கியம். சாலையை அகலப்படுத்தினால், விரைவில் போய்விடலாம் என்று அதிக வாகனங்கள் குவிந்து முன்னைவிட அதிக நெரிசல் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு பிரச்னையையும் தீர ஆராய்வதற்கும் முடிவுகள் எடுக்க உகந்த கேள்விகள் கேட்கப்பட வேண்டும். இளைஞர்கள் கடினமான கேள்விகள் கேட்டால் தான் அறிவு வளரும்.
தன்னம்பிக்கையின் சின்னம்
விவேகானந்தர் தனது சென்னைவிஜயத்தின் போது “ஊக்கம் மிக்க, அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்யக்கூடிய நூறு இளைஞர்கள்/யுவதிகளைக் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன்” என்று விடுத்த சவால், தாரக மந்திரமாக உலகெங்கிலும் ஒலிக்கிறது.

நமது இளைஞர்களிடம் திறமை இருக்கிறது, செழுமை இருக்கிறது, வன்மை உள்ளது, திண்மை திளைக்கிறது. ஆனால் இல்லாதது பொறுமை. ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற சான்றோர் வாக்கிற்கு ஏற்ப நிதானமாக ஆழ்ந்து பணி செய்தால் வெற்றி நிச்சயம். செய்கையைத் தூண்டுவது அறிவு, செயலாக்கத்திற்குத் தூண்டுவது திறமை, செயல்பாட்டின் அடிப்படை நேர்மை. இதுவே இளைஞர்களுக்கு வழிகாட்டி. இயலாமை என்பது பொய், முயலாமை என்பதே மெய் என்று, முயற்சி திருவினையாக்கும் என்று அறிவுறுத்தினார் விவேகானந்தர்.
“உரிமை மேல் ஆண்மை பாராட்டாதார் சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்தோர் சீதம்” என்ற மனோன்மணிய வாக்கியத்திற்கு ஏற்ப கேள்வி கேட்கும் உரிமையை சரியாகப் பயன்படுத்துவோம்.
கடந்த நூற்றாண்டின் உண்மையான எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர். அவருடைய பெயரிலேயே விவேகமும், ஆனந்தமும் உள்ளன. வேகமாகப் பணியினைச் செய்வதில் உண்மையான ஆனந்தம் கிடைகிறது என்பதை அவருடைய விவேகானந்தர் என்ற பெயரே அறிவுறுத்துகிறது.
விவேகானந்தரின் 150 ஜெயந்தி கொண்டாட்டம் நம்மை விழிப்படையச் செய்யும் மார்க்கம். நாட்டை உயர்த்துவோம்; ஊழலை ஒழிப்போம்; உழைப்பை மூச்சாகக் கொள்வோம், மக்கள் சேவையில் ஈடுபடுவோம் என்று இந்நேரத்தில் உறுதி கொள்வோம்.
வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்த் திருநாடு!
$$$