ஸ்வதந்திர கர்ஜனை – 2(12)

-தஞ்சை வெ.கோபாலன்

வித்தல்பாய் படேல் (1873 – 1933 அக். 22)

பாகம்-2: பகுதி-12

போராட்டக் களம் தீவிரமடைந்தது

1928-ஆம் வருஷம் கல்கத்தாவில் நடந்த காங்கிரசுக்கு மோதிலால் நேரு தலைவராக இருந்தார். இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகக் கருதப்பட்டதற்குக் காரணம் இருந்தது. இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்ககூடிய மாநாடாக அது இருந்தது. நேருவின் தலைமையில் காங்கிரசின் வருங்காலத் திட்டம் பற்றி இதில் விவாதிக்கப்படவிருந்தது. இந்தியா ஒரு குடியேற்ற நாடு என்பதை பிரிட்டிஷ் அரசு ஒப்புக்கொள்ள வேண்டுமென்பது காங்கிரசின் விருப்பம்.

இந்தத் தீர்மானத்தை காந்திஜி விஷயாலோசனைக் கூட்டத்தில் முன்மொழிய, அதற்கு சுபாஷ் சந்திர போசும், ஜவஹர்லால் நேரும் சில திருத்தங்களைக் கொண்டு வந்தனர். அந்தத் திருத்தம் என்னவென்றால், 1927 சென்னை காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இந்தத் தீர்மானம் விரோதமாக இருக்கிறது என்பதால் இதனை நிராகரிக்க வேண்டுமென அவர்கள் பிரச்னை எழுப்பினர்.

விரிவான விவாதங்களுக்குப் பிறகு சில திருத்தங்களுடன் 1928 காங்கிரசில் காந்திஜியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநாட்டில் அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது சுபாஷும் ஜவஹரும் மறுபடி சில திருத்தங்களைக் கொண்டுவந்தனர்.

அவர்களே சம்மதித்து விஷயாலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்த தீர்மானத்தை மறுபடி அவர்கள் மாநாட்டில் எதிர்ப்பது காந்திஜிக்கு வருத்தத்தை அளித்தது. எனினும் அவருடைய தீர்மானம் இறுதியில் அவருடைய மனக்குமுறலை வெளிப்படுத்தும் விதமாக அவர் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி இங்கே.

“முஸ்லிம்கள் ‘அல்லா’ ‘அல்லா’ என்று உச்சரிப்பதைப் போல, இந்துக்கள் ‘ராமா’ ‘கிருஷ்ணா’ என அடிக்கொருதரம் சொல்வதைப் போல, நீங்களும் வேண்டுமானால் ‘சுதந்திரம்’ ‘சுதந்திரம்’ என்று உங்கள் உதட்டளவில் உச்சரித்துக் கொண்டே இருங்கள். ஆனால் உங்கள் வாக்குறுதிகளுக்கு ஒரு புனிதத் தன்மையை நீங்கள் அளிக்க முன்வராவிட்டால், அவை சக்தியற்ற வெறும் சொற்களாகவே இருக்கும். உங்கள் வாக்கைக் காப்பாற்ற நீங்கள் தயாராக இல்லாவிடில், சுதந்திரம் எங்கு இருக்கும்? சுதந்திரம் என்பது உறுதியான செயல்களால் ஆனதேயொழிய, வெறும் வார்த்தை ஜாலங்களினால் ஆனதல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டும்.”

-காந்திஜி இவ்வாறு தனது ஆற்றாமையைத் தன் பேச்சில் வெளிப்படுத்தினார். அந்தத் தீர்மானத்தின் சாரம் என்னவென்றால், “1928-ஆம் ஆண்டு காங்கிரஸ் தீர்மானத்தின் நோக்கத்தை 1929-ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்குள் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டு இந்தியாவுக்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்தை வழங்க முன்வராவிட்டால், பின்னர் காங்கிரசின் ஒரே லட்சியம் ‘பூரண சுயராஜ்யம்’ என்று அறிவிக்கப்படும் என்பதுதான்.

இந்தக் காலகட்டத்தில் இந்திய அரசின் மத்திய சட்டமன்றத்துக்கு வல்லபபபாய் படேலின் மூத்த சகோதரர் வித்தல்பாய் படேல் தலைவராக இருந்தார். சுயராஜ்யக் கட்சி என்ற பெயரில் காங்கிரசாரில் சட்டசபைப் பிரவேசத்தை ஆதரித்துப் பிரிந்து சென்றார்கள் அல்லவா, அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் இவர். இவரைப் பற்றிய ஒரு செய்தியை இங்கு சொல்லியாக வேண்டும்.

வித்தல்பாய் படேல் சட்டமன்றத்தினுள் உறுப்பினராக நுழைந்த காலம் தொட்டு அவருக்குக் கிடைத்து வந்த ஊதியத்தில் ஒரு பகுதியை மகாத்மா காந்திக்கு அனுப்பி அவருடைய தேச நிர்மாணத் திட்டங்களுக்குச் செலவு செய்து கொள்ளும்படி செய்துவந்தார். வெளியில் தெரியாத மிக உயர்ந்த செயல்பாடு இது. சட்டமன்றத்தில் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் இந்திய சுதேசிகளுக்கு எதிரான ஒரு மசோதாவை தனக்கிருக்கும் விசேஷ உரிமையைப் பயன்படுத்தித் தோற்கடித்தவர் வித்தல்பாய் படேல்.

அப்படி அவரால் தோற்கடிக்கப்பட்ட மசோதா மீண்டும் 1929-ஆம் வருஷம் ஜனவரி மாதத்தில் சட்டசபையில் கொண்டு வரப்பட்டபோது, தலைவர் வித்தல்பாய் படேல் பேசியதன் சுருக்கம் இதோ:

“மீரட் நீதிமன்றத்தில் 31 பேர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்ட மன்றத்தில் அரசாங்கத் தரப்பில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த பொதுமக்கள் பாதுகாப்பு மசோதாவும் மீரட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 31 பேர் மீது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் ஒன்றானவையாக இருக்கின்றன.

மீரட் வழக்கில் குற்றவாளிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளும், இந்த மசோதாவில் குறிப்பிடப்படும் குற்றங்களும் ஒரே மாதிரியானவை என்பதால் இந்த விவாதத்தில் மீரட் வழக்கைக் குறிப்பிட்டுப் பேசாமல் இருக்க முடியாது. அப்படி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை சட்டமன்றத்தில் விவாதிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே மீரட் வழக்கு முடிவுக்கு வரும் வரையில் இந்த மசோதாவை விவாதிக்காமல் நிறுத்திவைக்க வேண்டும் அல்லது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுத்தான் ஆக வேண்டுமென்றால், மீரட் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும்.”

இப்படி அரசாங்கத்துக்கு வித்தல்பாய் படேல் தலைவர் என்கிற முறையில் கிடுக்கிப்பிடி போட்டும், அரசாங்கம் இரண்டையும் செய்யத் தயாராக இல்லை. அவர்கள் நிர்ப்பந்தம் செய்ததால் தலைவர் என்ற முறையில் மசோதாவைத் தள்ளுபடி செய்துவிட்டார். சபைத் தலைவரே அரசாங்கத்துக்கு எதிராக நடந்து கொண்டதில் அரசாங்கம் திகைத்தது.

இப்படி பல சந்தர்ப்பங்களில் வித்தல்பாய் படேல் பிரிட்டிஷ் அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறார். வித்தல்பாய் படேலைப் பற்றி இதுபோன்ற பெருமைப்படக் கூடிய பல நிகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு முறை அரசாங்க உள்துறை அமைச்சரை மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார். இந்திய சட்டமன்றம் உலகின் வேறு எந்த நாட்டின் சட்டமன்றத்துக்கும் செயல்பாட்டில் குறைந்தது அல்ல என்பதை இவருடைய காலத்தில் நிலைநாட்டினார்.

ஆனால் அது என்னவோ, மோதிலால், ஜவஹர்லால் ஆகியோரின் திறமை, பெருமை பரவியதைப் போல இந்த குஜராத் தலைவர்களான வித்தல்பாய் படேல், வல்லபபாய் படேல் ஆகியோருடைய பராக்கிரமங்கள் வெளிவரவில்லை.

என்ன காரணமோ? பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொல்லியதைப் போல,  “சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம்” என்று மீண்டும் சைமன் கமிஷன் பக்கம் போவோம்.

இந்தியாவுக்கு விஜயம் செய்து, மக்களின் எதிர்ப்பை கமிஷனுக்குத் தெரியாத வண்ணம் அரசாங்கம் என்னதான் மறைத்து வைத்தாலும் அவர்களுக்கு தெரியாமலா போய்விடும்?

இங்கே நடந்த அத்தனை விஷயங்களையும் சைமன் கமிஷன் கவனித்துக் கொண்டுதான் இருந்தது. கமிஷன் இந்தியா வந்துவிட்டு மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பியது. இங்கிலாந்தில் தேர்தல் வருகிறது, அதற்கு முன்பாக சைமன் கமிஷன் இந்தியா சென்று திரும்ப வேண்டுமென்றுதானே அவசர அவசரமாக சைமனை இந்தியாவுக்கு அனுப்பினார்கள்.

இவர் தன் வேலையை முடித்துக் கொண்டு இங்கிலாந்து திரும்பிய போது அங்கு தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடைந்து தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. லேபர் கட்சி என அழைக்கப்பட்ட புதிய ஆளும் கட்சியின் பிரதமராக ராம்சே மக்டனால்ட் என்பவர் பதவி ஏற்றார். வெட்ஜ்வுட் பென் என்பவர் இந்தியா மந்திரியானார். இந்தியாவைப் பொறுத்த வரை இவ்விரு கட்சிகளில் எது வந்தாலும் ஒன்று தான் என்ற எண்ணம் தான் நிலவியது.

இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்தியாவில் எந்தவித மாற்றமும் இல்லை. வழக்கம் போல இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டு தான் இருந்தது. பிரிட்டிஷ் அரசின் போலீஸ் அடக்குமுறை வெறியாட்டத்தை நடத்திக்கொண்டு தான் இருந்தது.

அந்தச் சமயம் தில்லி சட்டசபையில் பார்வையாளர் மாடத்திலிருந்து அவைக்குள் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அப்படி வெடிகுண்டு வீசிய தேசபக்தன் அங்கிருந்து ஓடவோ, தப்பிக்கவோ முயற்சி செய்யவில்லை. அங்கேயே நின்றுகொண்டு கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல மாபெரும் புரட்சி வீரர் பகத் சிங் தான் அது.

பகத் சிங்கும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை விசாரித்ததன் பயனாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பம்பாய் ஆகிய பல இடங்களில் சோதனைகள் நடந்தன. பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குக்கு ‘மீரட் சதி வழக்கு’ என்று பெயர்.  ‘மாடர்ன் ரெவ்யூ’ எனும் பத்திரிகையின் ஆசிரியர் ராமானந்த சட்டர்ஜி என்பார் கைது செய்யப்பட்டார். கல்கத்தாவில் சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டார். அங்கு அவர் மீது ‘கல்கத்தா சதி வழக்கு’ எனும் பெயரில் ஒரு வழக்கு நடந்தது.

சுதந்திரப் போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்ற பல தேசபக்தர்கள் பல்வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். வீட்டை இழந்து, தாய் தந்தையரை இழந்து, மனைவி பிள்ளை குட்டிகளைப் பிரிந்து தனித்து அந்தமான் சிறையின் கொடுமைகளை இந்த தேசபக்தர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகச் சகித்துக்கொண்டு உயிர் வாழ்ந்தார்கள்.

இன்று லட்சம் கோடி, கோடி கோடி என்று பொதுப் பணத்தை கொள்ளையடிக்கும் பேர்வழிகள் ஒரு விநாடி, ஒரே ஒரு விநாடி இந்த தேசபக்தர்கள் பட்ட சிரமங்களை, துன்பங்களை சிந்தித்துப் பார்க்கும் உணர்வு இருக்குமானால்…. போகட்டும், கடவுள் பார்த்துக் கொள்வார்.

அந்தமான் சிறையில் நடந்த கொடுமைகளை வர்ணிக்க வார்த்தையில்லை. எழுத்தால் சொல்ல முடியாத பல துன்பங்களைச் சந்தித்தனர். அனைவருக்கும் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், சில காலம் முன்பு வெளியான ‘சிறைச்சாலை’ எனும் திரைப்படத்தைப் பாருங்கள், தெரியும். மோகன்லால், பிரபு ஆகியோர் நடித்த படம். அதில் ஓம்பூரி வீர சாவர்க்கராக வருவார். தயவு செய்து பாருங்கள். அன்று தேசபக்தர்களுக்குக் கிடைத்த பரிசுகள் என்னவென்பது புரியும்.

லாகூர் சிறையில் அரசாங்கம் செய்த கொடுமைகளை எதிர்த்து 63 நாட்கள் உண்ணா நோன்பிருந்து ஜதீந்திரதாஸ் என்பார் தன் இன்னுயிரை ஈந்தார்.

இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையில், டிசம்பர் கடுங்குளிரில், லாகூரில் காங்கிரஸ் மாநாடு கூடியது. அந்த காங்கிரசுக்கு ஜவஹர்லால் நேரு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

முந்தைய ஆண்டில் (1928) கல்கத்தாவில் நடந்த காங்கிரசுக்கு மோதிலால் தலைவர், அடுத்த ஆண்டின் (1929) தலைவர் அவர் திருமகனார் ஜவஹர்லால் நேரு. அதுவரை காங்கிரசுக்குத் தலைமை தாங்கியவருள் ஜவஹர்லால் தான் வயதில் மிகவும் இளையவர். லாகூர் காங்கிரசில் தந்தையிடமிருந்து தலைமைப் பொறுப்பை அவர் மகன் ஜவஹர் வாங்கிக் கொண்ட காட்சியை பொதுமக்கள் அதிகம் விரும்பி ரசித்தனர்.

முந்தைய கல்கத்தா காங்கிரசில் ஒரு தீர்மானம் நிறைவேறியது அல்லவா, அதாவது காங்கிரசின் ‘குடியேற்ற நாடாக’ அங்கீகரிக்க காலகெடு விதித்து அடுத்த டிசம்பர் 31க்குள் அது நிறைவேற்றப்படாவிட்டால் ‘பூரண சுயராஜ்யமே  எமது கோரிக்கை’ என அறிவிப்போம் என்று சொன்னார்கள் அல்லவா?

அந்த காலக் கெடு 1929 டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு முடிந்து போயிற்று. ஜவஹர் தலைமையில் நடந்த லாகூர் காங்கிரசில் ‘இந்திய மக்களின் ஏகோபித்த கோரிக்கை பூரண சுயராஜ்யமே’ எனும் தீர்மானம் நிறைவேறியது. அந்தப் பெருமைக்கு உரியவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு.

இன்னொரு தீர்மானத்தின் மூலம் இந்த பூரண சுயராஜ்ய கோரிக்கையினை அடைய நடத்தப் படும் போராட்டம் குறித்து மகாத்மா காந்தி முடிவு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த லாகூர் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட ‘பூரண சுயராஜ்ய’ தீர்மானத்தையொட்டி 26 ஜனவரி 1930 இந்திய குடியரசு தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. அன்று பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தீர்மானம் செய்த இந்தத் தேதி, 1950-இல் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது இந்தத் தேதி நினைவுகூரப்பட்டு இந்திய குடியரசு தினமாக 26 ஜனவரி கொண்டாடப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.

பல்வேறு காரணங்களால் இந்த லாகூர் காங்கிரஸ் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மிக முக்கியமானது என்பதை இப்போது பார்க்கலாம்.

முதலாவதாக இளைஞரும், சோஷலிச கொள்கையில் பிடிப்பு உள்ளவருமான ஜவஹர்லால் நேரு காங்கிரசின் தலைமைப் பதவிக்கு வந்ததால் காங்கிரசினுள் இடதுசாரிக் கொள்கைகள் வலுப்பெறத் தொடங்கின.

இரண்டாவதாக லாகூர் காங்கிரசில்தான் முதன்முதலாக ‘பரிபூரண சுயராஜ்ய’ கோரிக்கை எழுப்பப்பட்டது. சுயராஜ்யம் என்பது ஆங்கில தளையிலிருந்து முற்றிலும் விடுபட்ட நம்மை நாமே ஆண்டுகொள்ளும் முழு சுதந்திரம் என்பது அறிவிக்கப்பட்டது.

மூன்றாவதாக இந்த லாகூர் காங்கிரசில் தான் காங்கிரஸ் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ளாது எனும் முடிவு எடுக்கப்பட்டது.

நான்காவதாக 1928-இல் காங்கிரசில் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைக்கப்பட்ட மாதிரி அரசியல் அமைப்புத் திட்டம் முழுவதுமாகக் கைவிடப்பட்டது.

ஐந்தாவது இந்தியா முழுவதிலுமுள்ள காங்கிரசார் 1929 டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ‘பூரண சுயராஜ்ய உறுதிமொழி’ ஏற்றுக் கொள்வதென்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.

ஆறாவதாக ‘இந்திய சுதந்திர தினமாக’ 26 ஜனவரி 1930 அன்று கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

ஏழாவதாக பூரண சுயராஜ்யத்தை அடைவதற்காக சிவில் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்குவது என்றும் அதற்கான செயல் திட்டத்தை மகாத்மா காந்தி முடிவு செய்வார் என்றும் தீர்மானமாகியது இந்த லாகூர் காங்கிரசில்.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

One thought on “ஸ்வதந்திர கர்ஜனை – 2(12)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s