ஸ்வதந்திர கர்ஜனை – 2(13)

-தஞ்சை வெ.கோபாலன்

பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் – (பலிதானம்; 1931, மார்ச் 23)

பாகம்-2: பகுதி-13

பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு தியாகம்

இந்திய சுதந்திரம் மகாத்மா காந்தியடிகளின் வழிகாட்டுதலுடனும், காங்கிரஸ் இயக்கத்தின் கீழ் மக்கள் திரண்டு போராடியதாலும் கிடைத்தது என்பதோடு, ஆங்காங்கே நடந்த சில அதீதமான தியாகச் செயல்களும் காரணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டையும் அதில் ஜவஹர்லால் நேரு அறிவித்த ‘பூரண சுயராஜ்யம்’ கோரிக்கையையும், அடுத்து 26 ஜனவரி 1930-ஐ சுதந்திர தினமாக அனுசரிக்கச் சொன்ன அதே காலகட்டத்தில், தனியொரு இயக்கமாக, நாடு தழுவிய சுதந்திரப் போரின் பங்காக அல்லாமல் தனிப்பட்ட தேசபக்தியைக் காட்டித் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்கள் மூவரின் வரலாற்றை இங்கு சிறிது பார்க்கலாம்.

இப்படிப்பட்ட தியாகங்களைக் கவனிக்காமல் ஒதுக்கிவிட முடியாது. வன்முறை என்று முத்திரையிடப்பட்டாலும் அந்தச் செயல் தேசபக்தி எனும் அடித்தளத்தில் எழுந்தது என்பதையும் நினைவில் கொண்டு இந்த வீர வரலாற்றைப் பார்ப்போம்.

சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது லாகூரில் ஒரு மாபெரும் ஊர்வலத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றார் லாலா லஜபதி ராய் என்பதை முன்பே பார்த்தோமல்லவா? அந்த ஊர்வலத்தைத் தடிகொண்டு தாக்கிய சார்ஜண்ட் ஜான் சாண்டர்ஸ் என்பான் லாலாஜியை கண் மண் தெரியாமல் மார்பில் அடித்ததில் அவர் உயிருக்குப் போராடி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தக் கொடுமையை அறிந்த, அப்போது லாகூர் பல்கலைக் கழகத்தில் தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பகத் சிங், சுக்தேவ் தாபர், சந்திரசேகர ஆசாத், ஷிவ்ராம் ராஜகுரு எனும் நான்கு மாணவர்கள் லாலாஜியைக் கொன்றதற்கு பழிவாங்க வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

பகத் சிங் ‘ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன்’ எனும் ஒரு புரட்சி இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். அங்கு இவரைத் தவிர பல புரட்சியாளர்கள் இருந்தனர். அவர்களில் ராம் பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர ஆசாத், அஷ்பகுல்லாகான் போன்றவர்களும் இருந்தனர்.

அந்த இயக்கம் போலீஸ் கண்காணிப்பில் வந்தபின் அதன் பெயரை ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்’ என்று மாற்றிக் கொண்டனர். இளம் வயதில் அவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதை விரும்பாமல் அவர் கான்பூருக்கு ஓடிப் போனார்.

இந்நிலையில், லாலாவின் மரணத்துக்கு பதிலடியாக சாண்டர்ஸை பழி தீர்த்தனர் வீரம் மிக்க இளைஞர்கள்.  அதற்காக ஜான் சாண்டர்ஸ் எனும் அந்த போலீஸ் அதிகாரி எப்போது வருகிறான் எப்போது போகிறான் என்பதையெல்லாம் பின்தொடர்ந்து கவனித்து அவனை ஒருநாள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். சுட்ட பின்பு ஒருவரும் கண்டு கொள்ளவில்லை என்பதைத் தெரிந்து, சாதாரணமாக நடந்து தங்கள் பல்கலைக்கழகத்தினுள் சென்றுவிட்டனர்.

போலீஸ் இந்த மாணவர்களைத் தேடுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு,  லாகூரிலிருந்து கல்கத்தாவுக்கு ரயில் மூலம் முதல் வகுப்பில் போன ஒரு வங்காளி அதிகாரியுடன்  பகத் சிங்கும் வேலைக்காரன் என்று சொல்லி அவரோடு பயணம் செய்து கல்கத்தா சென்றுவிட்டார். ஜான் சாண்டர்ஸை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திகைத்து நின்றுவிட்டது.

வங்காளத்தைச் சேர்ந்த அந்த அதிகாரியும் அவர் மனைவியும் மாட்டிக் கொண்டால் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தே தேசபக்தி காரணமாக பகத் சிங்கை கல்கத்தா அழைத்துச் சென்று தங்கவைத்துக் கொண்டனர்.

கல்கத்தாவில் பகத் சிங்குக்குச் சில புரட்சிக்காரர்களுடன் நட்பு ஏற்பட்டு சிலகாலம் கழித்து ஆக்ரா வந்து சேர்ந்தார். அங்கு அவரும் அவருடைய நண்பர் ஒருவரும் ஒரு பழைய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கு வெடிகுண்டு செய்யக் கற்றுக் கொண்டனர்.

அப்படி அவர் அங்கு செய்த வெடிகுண்டுகளை எடுத்துக் கொண்டு பதுகேஷ்வர் தத் எனும் நண்பருடன் 1929-இல் தில்லி சென்றார். இருவரும் அப்போது பார்லிமென்டுக்குள் பார்வையாளர் காலரியில் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று பகத் சிங் எழுந்து பார்லிமென்டினுள் ஆட்கள் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து, தான் வைத்திருந்த கையெறி குண்டை வீசி எறிந்தார். கூடவே சில துண்டுப் பிரசுரங்களையும் பார்லிமெண்டினுள் வீசி எறிந்தார்.

குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஆனால் அதனால் யாரும் பாதிக்கப்படவில்லை. எவருக்கும் காயமும் ஏற்படவில்லை. குண்டை வீசிவிட்டு பகத் சிங் ஓடவில்லை. அங்கேயே நின்றுகொண்டு ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். போலீஸ் வந்து இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்று வழக்குத் தொடர்ந்தனர்.

பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகத் தான் குண்டு வீசியதாகவும் யாரையும் கொல்லும் நோக்கம் இல்லை என்பதை பகத் சிங் தெளிவாக எடுத்துரைத்தார். சிறையில் பகத் சிங் இந்திய அரசியல் கைதிகள் பிரிட்டிஷ் காரர்களுக்கு அளிக்கப்படுவதைப் போன்று வசதிகள் வேண்டுமென்று 116 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

பார்லிமென்டில் குண்டு வீசிய வழக்கு நடந்து கொண்டிருந்த போதுதான் லாகூரில் ஜான் சாண்டர்சைக் கொன்றதும் இவர்தான் என்பது தெரிய வந்தது. பிறகு அதற்கும் இவர் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

தனி நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு இவரது வழக்கு நடந்து இவருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் சென்று அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

லாகூர் சிறையில் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ்  ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஒரு நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள் 24-3-1931.

அப்போது லாகூரில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடக்கவிருந்தது. அதற்காக பல்லாயிரக் கணக்கில் காங்கிரஸ் தொண்டர்கள் வந்து குவிந்திருந்தனர். ஆகவே குறிப்பிட்ட நாளில் தூக்கு என்றால் கூட்டம் சிறையைச் சுற்றி மொய்த்துக் கொள்ளும் என்பதால் அதற்கு முந்தைய நாளான 23-3-1931 அன்று சிறை அறையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர் இவர்கள்.

வழி நெடுக சிறைக் கைதிகள் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டபடி இருந்தனர். மிகவும் நிதானமாக எந்தவித பயமோ, தயக்கமோ இல்லாமல் வீரநடை போட்டுச் சென்றனர் கைதிகள். அவர்கள் முகத்தை மூட கருப்பு துணியைப் போர்த்தியபோது பகத் சிங் “அது தேவையில்லை, என் உயிர் போகும்போதும் என் தாய் நாட்டை தரிசனம் செய்தபடியே கண்களை மூடுவேன்” என்று தானே தூக்குக் கயிறை கழுத்தில் மாட்டிக் கொண்டார். தூக்குக் கயிற்றில் துடிக்காமல், போட்ட மறுகணமே அவர் உயிர் பிரிந்துவிட்டது என்று தூக்கிலிட்ட கொலையாளி பின்னர் தெரிவித்தார்.

சிறைக்கு வெளியே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், சிறையின் பின்னால் இருந்த ஒரு திட்டிவாசல் வழியாக ரகசியமாக பகத் சிங்கின் உடல் கொண்டுசெல்லப்பட்டு போலீசாரல் சட்லஜ் நதிக் கரையில் எரியூட்டப்பட்டது.

விஷயம் கேள்விப்பட்ட மக்கள் சட்லஜ் நதிக்கரைக்கு ஓடிவந்தனர். அவர்கள் ஓடிவருவதைப் பார்த்த போலீஸ் அவசரம் அவசரமாக பாதி எரிந்த நிலையில் பகத் சிங்கின் உடலை சட்லஜ் நதியினுள் இழுத்து விட்டுவிட்டனர்.

இந்த நாட்டின் மானத்தைக் காக்கத் தன்னுடைய இன்னுயிரை நீத்த அந்த மாவீரனுக்கு அப்போது வயது 23. இதுபோன்ற தியாகங்களால் மலர்ந்து இந்த சுதந்திரம் இன்று படும் பாட்டைப் பார்க்கும்போது, பாவம் அந்த தியாகிகள் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

இடையில் அந்த வீரனின் வரலாற்றை சற்றே அசை போட வேண்டியிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதுபவர்கள் இந்த வீரனின் வரலாற்றை, அவன் வன்முறைப் போரில் ஈடுபட்டான் என்பதற்காக ஒதுக்கி விடுவார்கள். நம்மால் அப்படி ஒதுக்க முடியவில்லை. தியாகங்களில் எல்லாம் மிகப் பெரும் தியாகத்தைச் செய்த இந்த வீர புருஷர்களை மனதார வணங்குவோம். வாழ்க அவர்கள் புகழ்!

இந்த இளைஞர்களை தூக்கிலிடாமல் சிறையில் வைத்திருக்க அப்போதைய தலைவர்கள் முயன்றிருந்தால் ஒருக்கால் அவர்களைக் காப்பாற்றியிருக்கலாமோ என்னவோ? போகட்டும் இந்த அளவில் நாம் மீண்டும் சுதந்திரப் போர் வரலாற்றுக்குள் வருவோம்!

1930-ஆம் வருஷம். பரிபூரண சுதந்திரம் கேட்டு நிறைவேற்றிய தீர்மானத்தை அடுத்து அதற்கான செயல்பாடுகளில் காங்கிரஸ் இறங்கியது. அந்த ஆண்டுக்கான புதிய காங்கிரஸ் கமிட்டி அமைக்கப்பட்டது. உடனே ஜனவரி 26-ஆம் தேதியை பூரண சுயராஜ்ய தினமாக அனுசரிக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. சுயராஜ்யம் என்றால் என்ன என்பதை மக்களுக்கு விளக்கப்பட்டது. மக்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகமும் புத்துணர்ச்சியும் ஏற்பட்டது.

தண்டி உப்பு சத்தியாக்கிரகம்

1930-ஆம் வருஷம் பிறக்கும் போதே கடுமையான போராட்டங்களைச் சந்திக்கத் தயாராகப் பிறந்தது.

பிரிட்டிஷ் அரசு இந்திய கடற்கரைகளில் எடுக்கப்படும் உப்புக்கு கடுமையாக வரிவிதித்தது. நம் ஊர் கடற்பிரதேசங்களில் எல்லாம் பெளர்ணமி காலங்களில் கடல் பொங்கி கரையைத் தாண்டி வெகுதூரம் கடல்நீர் உட்புகுந்துவிடும். அப்போது பள்ளமான இடங்களில் கடல்நீர் தேங்கிவிடும். அது ஒருசில நாளில் வெயிலில் காய்ந்து ‘கிறிஸ்டல்’ உருவாகி உப்பாக மாறும். அவற்றை அங்குள்ள மக்கள் திரட்டி எடுத்துக் கொண்டுபோய் பயன்படுத்துவார்கள்.

விலைக்கு வாங்குவதானாலும் உப்பு மிக மிக குறைந்த விலையில் தான் விற்கப்படும். அப்படிப்பட்ட உப்பை, நம் கடலில், நம் மக்கள் எடுத்துக் கொடுக்கும் உப்புக்கு பிரிட்டிஷார் அநியாய வரி விதித்ததை மக்கள் விரும்பவில்லை. காந்தியும் யோசித்தார். ஏன் இப்படி?

வெள்ளைக்காரர்கள் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வியாபாரத்துக்காகப் பல பொருட்களையும், கனரக இரும்பு, கம்பிகள், பொறியியல் கருவிகள் என்று ஏராளமாகக் கொண்டு வருவார்கள். அப்படி கப்பல் கடலில் வரும்போது அதன் அடிபாகத்தில் மண்ணை நிரப்பி சமநிலையில் மிதவை இருக்குமாறு செய்வார்கள். சும்மா மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு வருவதற்குப் பதிலாக இங்கிலாந்தில் உற்பத்தியான உப்பைக் கொண்டுவந்து இங்கு விற்றார்கள். அந்த உப்பின் விலை மிக அதிகம்.

இந்திய உப்பு மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும்போது அதிக விலைக்கு இங்கிலாந்து உப்பை வாங்குவார்களா என்ன? உடனே அவர்கள் உப்புக்கு இணையாக நம் ஊர் உப்பும் விற்கும்படிக்கு வரியை மிக அதிகமாக உயர்த்தி விற்றார்கள். எல்லாத் தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடியது அல்லவா இந்த உப்பு விலை உயர்வு?

மகாத்மா காந்தி இந்த பிரச்னைக்காக போராடுவது என்று முடிவெடுத்தார். அதன் விளைவுதான் 1930-இல் மகாத்மா குஜராத் கடற்கரை ஊரான தண்டிக்கு பாதயாத்திரையாகச் சென்று உப்பு எடுத்துப் போராடியது. அதன் விளைவு அவரே எதிர்பார்த்ததற்கு மேலாக வெற்றிகரமாக முடிந்தது.

அதையடுத்து தமிழ்நாட்டில் சென்னையிலும் தேசபக்தர்கள் உப்பு எடுத்துக் கைதானார்கள். திருச்சி முதல் வேதாரண்யம் வரையிலான தூரத்தை நூறு தொண்டர்களுடன் நடந்தே சென்று அகத்தியம்பள்ளியில் உப்பு எடுத்து ராஜாஜி முதலான நூற்றுக் கணக்கான தொண்டர்கள் கைதானார்கள். மகாத்மா காந்தி தன்னுடைய சபர்மதி ஆசிரமத்திலிருந்து 1930 மார்ச் 12-ஆம் தேதி புறப்பட்டு 79 தொண்டர்கள் புடைசூழ தண்டி நோக்கிப் பயணமானார்.

24 நாட்கள் நடந்து சென்று காந்திஜி தண்டியை அடைந்தார். அங்கு கடற்கரையில் உப்பளத்தில் உப்பை அள்ளி உப்பு சட்டத்தை உடைத்து போரை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாடு முழுவதும் இந்தப் போராட்டம். தடியடி, கைது இவை தொடர்ந்தன. மக்கள் தொண்டர்கள் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டு கைதானார்கள்.

பெண்களும் அதிக அளவில் இந்தப் போரில் கலந்து கொண்டு சிறை சென்றார்கள். போலீஸ் அடக்குமுறையும் அராஜகமும் அளவில்லாமல் இருந்தது. பெண்களைக் கூட கண்மண் தெரியாமல் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம்

தமிழ்நாட்டில் நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்துக்கு பொறுப்பாளராக இருந்தவர் வேதாரண்யத்தைச் சேர்ந்த தேசபக்தர் வேதரத்தினம் பிள்ளை.

திருச்சியிலிருந்து 100 தொண்டர்களுடன் ராஜாஜி தலைமையில் காவிரியின் வடகரையோடு நடந்தே வந்து 16 நாள் கழித்து வேதாரண்யம் சென்று அடைந்தனர். அவர்கள் சென்ற வழிகளில் யாரும் அவர்களுக்கு உணவு தரக் கூடாது என்று தஞ்சை ஜில்லா கலெக்டர் தார்ன் என்பார் உத்தரவிட்டிருந்தார்.

அதனால் மக்கள் தொண்டர்களுக்கு உணவை ஒரு மூட்டையாகக் கட்டி வழியில் மரங்களில் தொங்கவிட்டு, அந்த மரத்தின் எண்ணை ஒரு சீட்டில் எழுதி ராஜாஜியிடம் கொடுத்துவிடுவார்கள். உணவு நேரத்தில் அந்த மூட்டை உணவை தொண்டர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள்.

ராஜாஜியின் தொண்டர்படை நடந்து செல்லும்போது நடந்த சில சுவையான சம்பவங்களைப் பார்ப்போம்.

சத்தியாக்கிரகிகள் தஞ்சைக்கு வரும்போது வழியில் வெண்ணாற்றங்கரை எனும் இடத்தில் ஒரு வீட்டில் வாழைமரம் தோரணங்கள் கட்டி மேளம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு ஏதோ வீட்டு விசேஷம் என்று போலீஸ் அலட்சியமாகப் போய்விட்டார்கள். ஆனால் தொண்டர்கள் வந்ததும் அனைவரையும் உட்கார வைத்து விருந்து படைத்துவிட்டார்கள், தஞ்சாவூர் தேசபக்தர்கள் வெங்கடகிருஷ்ண பிள்ளை, டாக்டர் கோபு ஆகியோர்.

தொண்டர்கள் கும்பகோணம் சென்றபோது அங்கு காந்தி பூங்கா இருக்குமிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு திருக்கருகாவூர் பந்துலு ஐயர் என்பார் தலைமை வகித்தார். அப்போது சுயமரியாதை இயக்கத்தார்  சிலர் வந்து கலவரம் செய்து மண்ணை எடுத்து வீசி கூட்டத்தைக் கலைக்கப் பார்த்தனர்.

அவர்கள் ஒரு துண்டுப் பிரசுரத்தை வீசினர். அதில் ராஜாஜியைப் பார்த்து, “நீர் சக்கரவர்த்தி என்று பெயருக்கு முன் போட்டிருக்கிறீரே நீர் எந்த ஊர் சக்கரவர்த்தி?” என்று இருந்தது. ராஜாஜி பேசும்போது சொன்னார், இப்போது என்னுடைய கவனம் முழுவதும் உப்பு சத்தியாக்கிரகம் தான், ஆகையால் நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் உங்களுக்குப் பதில் சொல்லப் போவதில்லை, காலம் வரும் அப்போது சொல்கிறேன், நான் எந்த ஊர் சக்கரவர்த்தி என்று- இப்படி பதில் சொன்னார் ராஜாஜி.

பின்னர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஆன பின்பு அவர்களுக்குச் சொல்லாமல் சொன்னார் தான் இந்தியாவின் சக்கரவர்த்தி தான் என்று.

தொண்டர்கள் திருத்துறைப்பூண்டி சென்றபோது அங்கு கோபாலகிருஷ்ண நாயுடு என்பார் இல்லத்தில் தொண்டர்கள் தங்கினார்கள். போராளிகளுக்கு இடம் கொடுத்தார், உணவளித்தார் என்பதற்காக அவரை பொதுக்கூட்டம் நடக்கும் மேடையில் வந்து போலீஸ் கைது செய்தார்கள். காரணம், கைதை எதிர்த்து பொதுமக்கள் கலவரம் செய்வார்கள், இவர்கள் அனைவரையும் கைது செய்துவிடலாம், போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்று போலீசார் நினைத்தனர்.

ஆனால் ராஜாஜி எழுந்து மக்களைப் பார்த்துச் சொன்னார், அவரை கைது செய்தால் நீங்கள் கலவரம் செய்வீர்கள் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. நீங்கள் அப்படி எதையும் செய்துவிடாதீர்கள். நாளை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்போது நான் போய் வெளியே கொண்டு வருவேன். இப்போது அமைதியாக கூட்டத்தை நடத்துங்கள் என்றார். கூட்டம் அமைதியாகியது. போலீசாரின் தந்திரம் பலிக்கவில்லை.

வேதாரண்யத்தை அடுத்த அகத்தியம்பள்ளியில் விடியற்காலையில் சில தொண்டர்களுடன் சென்று ராஜாஜி உப்பை அள்ளினார். அங்கிருந்த காவல்காரர், ”ஐயோ சாமி! என் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிட்டீர்களே, என்னை வேலையிலிருந்து தூக்கிவிடுவார்களே”  என்று கதறினார்.

ராஜாஜி அவரை சமாதானப்படுத்தி, போய் உப்பு ஆபீசரை அழைத்துவரச் சொல்லி தானே கைதானார். அகத்தியம்பள்ளி உப்பு ஆபீசிலேயே மன்னார்குடியிலிருந்து  வந்த மாஜிஸ்டிரேட் வழக்கை விசாரித்தார். ராஜாஜியை எந்த சட்டப் பிரிவின் கீழ் தண்டிப்பது என்பது அவர்களுக்கே குழப்பமாக இருந்த நிலையில், ராஜாஜியே அவர்களுக்கு எந்த சட்டப்பிரிவின் கீழ் தனக்கு தண்டனை கொடுக்கலாம் என்பதை எடுத்துக் கொடுத்தார். ராஜாஜிக்கு ஆறுமாத சிறைத் தண்டனை கிடைத்தது.

அவரை ரயில் மூலம் திருத்துறைப்பூண்டி வழியாக திருச்சி கொண்டு சென்றனர். வழியில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு வெள்ளைக்காரர் வண்டியில் ஏறி ராஜாஜியிடம் வந்தார். அவர் அருகில் வந்தவுடன் ராஜாஜி கேட்டார், “நீங்கள்தான் கலெக்டர் தார்ன் என்பவரோ?” என்று. அவர் “ஆம் நான் தான் தார்ன்” என்றார். பின்னர் கலெக்டர் ராஜாஜிக்கு காபி பிடிக்கும் என்பதால் காபி வரவழைத்துக் கொடுத்தார். அப்போது ராஜாஜி சொன்னார், “சத்தியாக்கிரகிகளுக்கு உணவோ, குடிக்க தண்ணீரோ கொடுக்கக் கூடாது என்று சட்டம் போட்ட நீங்களே இப்போது எனக்கு காபி வாங்கித் தருகிறீர்களே?” என்றதும் தார்ன் தலைகுனிந்து சிரித்தார். இப்படி தென்னாட்டிலும் உப்பு சத்தியாக்கிரகத்தை நடத்தி முடித்தார் ராஜாஜி.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை – 2(13)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s