-மகாகவி பாரதி
அஸ்தினாபுர அரசவைக்கு பாண்டவர் வந்து அமர்ந்ததும், கவறாட்டத்தில் இணையற்ற புகழுடையவனான சகுனி தருமனை சூதாட்டத்துக்கு அழைக்கிறான். வில்லுறு போரில் வென்றவர்களான நீங்கள் வல்லுறு சூதுப்போரிலும் வெல்ல வேண்டும் என்று சகுனி அழைப்பதாக மகாகவி பாரதி கவிதை புனைகிறார்...

முதல் பாகம்
1.2. சூதாட்டச் சருக்கம்
1.2.4. சூதுக்கு அழைத்தல்
புன்தொழிற் கவறத னில்- இந்தப்
புவிமிசை இணையிலை எனும்புக ழான்
நன்றறி யாச்சகுனி,- சபை
நடுவினில் ஏறெனக் களித்திருந் தான்;
வென்றிகொள் பெருஞ்சூதர்- அந்த
விவிஞ்சதி சித்திர சேனனுடன்
குன்றுசத் தியவிர தன்- இதழ்
கூர்புரு மித்திரன் சய னென்பார். 164
சாலவும் அஞ்ச தரும்- கெட்ட
சதிக்குணத் தார்பல மாயம் வல்லோர்
கோலநற் சபைதனிலே- வந்து
கொக்கரித் தார்ப்பரித் திருந்தனரால்,
மேலவர் தமை வணங்கி- அந்த
வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை
ஆல முற்றிடத் தழுவிச்- செம்பொன்
ஆதனத் தமர்ந்தவப் பொழுதினி லே, 165
சொல்லுகின் றான்சகுனி,- ‘அறத்
தோன்றல்!உன் வரவினைக் காத்துளர் காண்
மல்லுறு தடந்தோளார்- இந்த
மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா;
வில்லுறு போர்த்தொழி லாற்- புவி
வென்று தங்குலத்தினை மேம்படுத்தீர்!
வல்லுறு சூதெனும் போர்- தனில்
வலிமைகள் பார்க்குதும் வருதி’என்றான். 166
$$$