என்ன செய்தார் விவேகானந்தர்?

-ராஜாஜி

ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த சிறு பதிவின் மொழிபெயர்ப்பு இது.

இந்திய தேச பக்தர்களின் மரபில் விவேகானந்தருக்கு முன்னவர்களும் பெருங்காரியம் செய்தார்கள்.  ஆனால் நமது தேசியத் தாழ்வு மனப்பான்மைச் சிக்கலை அவிழ்த்தவர் விவேகானந்தரே.

வாழ்க்கையின் துறைகள் அனைத்திலும் சீர்திருத்தம் செய்தோர் பலர் இருந்தனர்; ஆனால் தேசமக்கள் ஓர் அடிப்படையான பலவீனத்தாலும் தாழ்வு மனப்பான்மையாலும் வருந்தினர்; அப்பிணியைத் தீர்ப்பது அவசியமாயிற்று.   இதனைப் பெரும் பயன் தரத்தக்க முறையிலே சாதித்தவர் சுவாமி விவேகானந்தரே.

“நீங்கள் எந்தச் செயலில் உண்மையான பெருமை பெற்றுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்; அந்த நெறியாலே இன்றும் மிக்க பெருமையை அடைய முயற்சி செய்யுங்கள்”

-என்று அவர் இந்திய மக்களுக்குக் கூறினார்.

அதுவே அவர் கொட்டிய முரசின் அழைப்பு ஒலி.

“உங்களது பெருமை ஞானப்பேற்றிலே உள்ளது. உங்களது சொந்த நலன் உண்மையாக நிறைவேறக் காத்திருப்பது அந்தத் துறையிலே தான்; உலகில் உங்களுக்குரிய இடம் அதில் தான் உள்ளது”.

கிறிஸ்தவ உலகிற்கு சுவாமிஜி, “இந்து மதத்தை இழிவாக நினைக்காதீர். மனிதன் தூயவனாய், பாவமற்றவனாய் இருப்பவன் என்றும்,  மயக்கத்தையும் பலவீனத்தையும் அவன் உதறிவிட்டால், தெய்வத்தன்மையை உணரவல்லவன் ஆவான் என்றும் அவனுக்கு அது கூறுகிறது. பாவத்திலே பிறந்துள்ளோம் என்று நாம் நம்பவோ, துயரப்படவோ அவசியமில்லை” என்று அறிவுறுத்துகிறார்.

ராஜாஜி

பயமிருந்த இடத்தில் தீரத்தை வைத்தார் விவேகானந்தர்.

இறை நம்பிக்கை எனும் உறவால் மனிதனை இணைத்தார்.

தத்துவத்தை ஆராய்ந்து தரிசனங்களுக்குள் இருந்த கொள்கை பற்றிய வேறுபாடுகளை ஒழித்தார்.

வேதாந்தத்தை பெருமையும் உறுதியும் வாய்ந்த ஒரு சமயமாக்கினார்.

அரசியல் உட்பட எல்லா முயற்சிகளும் ஞானத்துக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட வேண்டும் என விரும்பினார். இதில் மகாத்மா காந்திக்கு முன்னரே அக்கருத்தை அவர் பயன்படுத்தினார்.

இந்து மதத்தை போதிய அளவிற்கு உயர்த்த அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என எவரும் நம்ப வேண்டாம் என்றார். அதை முழுமையாகப் பார்த்தார். அது கம்பீரமான உண்மையாகிறது என உரிமை  பாராட்டினார்.

நம்மை உயர்த்திய இந்த அருள் பெற்ற ஞானிக்கு இமயம் முதல் குமரி வரை உள்ள மக்கள் தனது நன்றி கலந்த வணக்கத்தைச் செலுத்துகின்றனர்.

விவேகானந்தர் வழிபட்ட இறைவனை நம் செயல்கள் அனைத்திலும் கொணர்ந்து புகுத்துவோம். அப்போது இயல்பான முறையில் எல்லாக் கேடுகளும் உதிர்ந்துவிடும்.

நன்றி: விவேகானந்தரைக் கற்போம்! 
– ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை.

(*இன்று ராஜாஜி (1878 டிச. 10 - 1972 டிச. 25) பிறந்த நாள்)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s