-சுவாமி சைதன்யானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரம்பரையில் வந்த துறவி; சுவாமி மதுரானந்தரிடம் தீட்சை பெற்றவர். குமரி மாவட்டம், வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர். குமரி மாவட்டத்தில் மாபெரும் ஹிந்து விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுவாமிஜி, தமிழகம் முழுவதும் ஹிந்து சமய வகுப்புகளை - அதற்கென ஒரு பாடத்திட்டம் உருவாக்கி - நடத்தி வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இனிய கட்டுரை இங்கே…

கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்தி இறைநிலையடையச் செய்ய யுக அவதார மூர்த்தியாக அவதரித்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் பாரதத்தை அடிமைப்படுத்த முயற்சி செய்து, நமது கலாசாரத்தை, மதத்தை மாற்றி, மேலைநாட்டுக் கலாசாரத்தை, மதத்தைப் புகுத்த பல வழிகளில் முயன்றனர்.
மனித வாழ்வின் லட்சியம், பிறவியின் நோக்கம் படித்துப் பட்டம் பெறுவது, பணம் சம்பாதிப்பது, பெண் இன்பம் அனுபவிப்பது என்ற கருத்தை மெக்காலே கல்வித் திட்டம் மூலம் பாரதத்தில் புகுத்த முயன்றனர். மேலும் உருவ வழிபாடு தவறு எனக் கூறி மதம் மாற்ற முயன்றனர்.
அதே காலகட்டத்தில் இந்த அசுரத்தன்மைகளை அழிக்க 1836-இல் அவதரித்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
படித்துப் பட்டம் பெறாமல், பணத்தை, பெண்ணைத் தீண்டாமல், உருவ வழிபாட்டின் மூலம் இறைக்காட்சி பெற்று ஆனந்தமாக வாழ முடியும் என்பதை வாழ்ந்து காட்டினார் அவதாரவரிஷ்டர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
உருவ வழிபாடு தவறு என தன் கல்வித் திட்டத்தின் மூலம் ஒரு மாய மயக்கத்தை உருவாக்கி இளைஞர்கள் பலரை மதம்மாற வைத்தான் ஆங்கிலேயன்.
அதைத் தன் வாழ்வு மூலம் தகர்த்தெறிந்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
அந்த அவதார வரிஷ்டர் மூலமூர்த்தி என்றால், அவரால் அவரது அவதாரப் பணிக்கென அழைத்து வரப்பட்ட சப்தரிஷிகளில் ஒருவரான சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அவதார நோக்கத்தை அவனியெங்கும் அறியச் செய்த உற்சவ மூர்த்தியாவார்.
உருவ வழிபாட்டின் மூலம் இறையருள் பெறலாம் என்பதை, மன்னரின் படத்தில் உமிழ மறுத்த மந்திரியின் செயல்மூலம் விளக்கினார் சுவாமி விவேகானந்தர்.
மக்கள், “ஏ கல்லே! மண்ணே! இரும்பே! செம்பே!’ என அழைத்து வேண்டுவதில்லை; ‘ஏ கிருஷ்ணா! ராமா! இறைவா!’ என அழைத்தே வேண்டுகின்றனர். இதை, ‘எல்லாம் அறியும் இறைவன் அறிந்து கொள்வான்’ என்று பறைசாற்றினார் சுவாமி விவேகானந்தர்.
ரிக்வேதம் கூறும், “ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி – பரம்பொருள் ஒன்றே, அதனை பண்டிதர்கள் பல பெயரிட்டு அழைக்கின்றனர்”என்று இந்து சமய உயர்தத்துவத்தை சிகாகோவில் கூறிய வீரத்துறவி, “எவ்வுருவில் வழிபட்டாலும் இறைநிலையடையலாம்; எனவே மதமாற்றம் தேவையில்லை” என்று முழங்கினார்.
“உலகின் அனைத்து நாடுகளாலும், அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு, புகலிடம் தேடி வந்த இஸ்ரேல் மரபினர்கள், ஜொராஸ்டிரிய மதத்தினர், ஹீப்ருக்கள், பாரசீகத்தினர் என அனைவருக்கும் ஆதரவளித்து அவர்கள் வழியிலேயே வழிபட அனுமதித்த நாட்டைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்”
-என்றார் சுவாமி விவேகானந்தர்.
“பாரதீயர்கள் முகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கோயில் கட்டித் தந்துள்ளார்கள். நீங்கள் முகமதியர்களிடமோ, மற்ற மதத்தினரிடமோ ஒரு கோயில் கட்டித் தரும்படி கேளுங்கள். அவர்கள் உங்களுக்காக கோயில் கட்டித் தருவதைவிட உங்கள் கோயில்களை இடிப்பதிலும், முடிந்தால் உங்களையே தீர்த்துக் கட்டவும்தான் முயல்வார்கள்” என்கிறார் வீரவிவேகி. இதுதான் உண்மைநிலை.
மற்ற மதங்கள், ‘தங்கள் வழி மட்டும் உண்மை’ எனக் கூறும் குறுகிய மனப்பான்மை உடையவை. எனவே தான் சுவாமிஜி அதனை எதிர்க்கிறார்.
அமெரிக்க நாட்டினரிடம்,
“நீங்கள் பயிற்சி அளித்து, கல்வி கற்பித்து, உடுக்க உடை தந்து, சம்பளமும் தந்து அனுப்பும் கிறிஸ்தவ மிஷினரிகள், எங்கள் நாட்டுக்கு வந்து என்னுடைய முன்னோர்களையும், என் சமயத்தையும் இழித்தும், பழித்தும், ஏசியும் வருகிறார்கள். ஹிந்துக்களாகிய எங்களது கோயில் அருகே நின்றுகொண்டு ஹிந்துக்களைப் பார்த்து, ‘பாவிகளே! நீங்கள் விக்கிரங்களைத் தொழுகிறீர்கள். ஆகவே நீங்கள் நரகத்துக்குப் போவீர்கள்’ என்று சொல்கிறார்கள்… “ஆனால் அதே மிஷனரிகள் எங்கள் தேசத்து முஸ்லிம்களிடம் சென்று அவ்வாறு சொல்வதில்லை. சொல்வதற்கான தைரியமும் இல்லை. ஏனெனில் அவ்வாறு சொன்னால், அந்த முஸ்லிம்கள் வாளை உருவிக்கொள்வார்கள். ஆனால், இந்த மூடர்கள் பேசிவிட்டுப் போகட்டும் என்று இந்து அப்பால் சென்றுவிடுவான்… “உங்கள் பாதிரிமார்கள் எங்கள் மீது வாரித் தூற்றும் புழுதிக்கு பதிலடியாக, எல்லா ஹிந்துக்களும் எழுந்து நின்று, ஹிந்து மகா சமுத்திரத்தின் அடியிலுள்ள எல்லா சேற்றையும் எடுத்து உங்கள் மீது வீசி எறிவார்களானால், அவ்வாறு எறிவதால் ஏற்படும் தீமையானது, நீங்கள் எங்களுக்குச் செய்து கொண்டுவரும் தீமையில் ஒரு சிறு அளவு கூட இராது… “கத்தி இல்லாமல் உங்கள் கிறிஸ்தவ மதம் எவ்விடத்தில் வெற்றி பெற்றுள்ளது? உலகம் முழுவதிலும் ஓர் இடத்தையாவது காட்டுங்கள். கிறிஸ்தவ சமய வரலாற்றில் ஏதேனும் ஓர் இடத்தைக் காட்டுங்கள். ஒரே ஒரு இடம் என்கிறேன், இரண்டு இடத்தைக் காட்டச் சொல்லவில்லை”.
– என்று கூறுகிறார்.
சுவாமிஜியின் அறிவார்ந்த பிரசாரத்தை எதிர்கொள்ள இயலாத கிறிஸ்தவ மிஷனரிகள், அவரைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றனர். அவர் விலைக்கு வாங்கப்பட முடியாதவர் என்று தெரிந்ததும், அவரைக் கொல்லவும் துணிந்தனர், இந்தக் கிறிஸ்தவப் பாதகர்கள்.
தம்மைக் கொல்ல நடந்த முயற்சியைப் பின்னாளில் சுவாமி விஞ்ஞானானந்தரிடம் கூறியிருக்கிறார்.
டெட்ராய்ட் நகரில் ஒரு விருந்திற்கு சுவாமிஜியை அழைத்தனர். சுவாமிஜியை எவ்விதத்திலும் தோற்கடிக்க முடியாத எதிரிகள் அவ்விருந்தில் சுவாமிஜிக்குக் குடிக்கக் கொடுத்த காப்பியில் விஷம் கலந்து வைத்தனர். அதைக் குடிக்க எடுத்தபொழுது அதில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தோன்றி, “இதைக் குடிக்காதே, விஷம் கலந்துள்ளது” எனக் கூறினார். எனவே சுவாமிஜி அந்த காப்பியைக் குடிக்காது வைத்தார்; உயிர் பிழைத்தார்; குரு அருளின் பெருமையை எண்ணி வியந்தார். கொடிய வஞ்சக எதிரிகள் ஏமாந்தனர். சுவாமிஜி தமது பணியாகிய இந்து மதப் பிரசாரத்தைச் செம்மையாக நிறைவேற்றினார்.
ஆனால் சுவாமிஜியின் கருத்துக்களால், பாரதத்திற்கு வரும் பாதிரிகளின் எண்ணிக்கை குறைந்தது.
சுவாமிஜியையே மதம் மாற்ற முயற்சித்தனர். அது குறித்து அவரே கூறுவது:
“கிறிஸ்தவ மதப் பிரசாரகர் ஒருவர் ஒருநாள் என்னிடம் வந்து, ‘நீ ஒரு மகா பாவி’ என்று கூறினார். ‘ஆம், உண்மை தான். அதனால் என்ன?’ என்றேன் நான்… “அவர் ஒரு மதப் பிரசாரகர். என்னை விடவில்லை. அவரைக் கண்டாலே நான் ஓடிவிடுவேன். அவர் என்னிடம், ‘உன்னைக் காப்பாற்ற நான் சிலவற்றை வைத்திருக்கிறேன். நீ பாவி. நீ நரகத்திற்குப் போப் போகிறாய்’ என்றார். மிக நல்லது, வேறு ஏதாவது உண்டா?’ என்று கேட்டேன்… “பிறகு அவரிடம், ‘ஆமாம் நான் நரகத்திற்குப் போவது சரி, நீங்கள் எங்கே போவீர்கள்?’ என்று கேட்டேன். நான் சொர்க்கத்திற்குப் போவேன்’ என்றார் அவர். நான் நரகத்திற்கே போகத் தீர்மானித்து விட்டேன்’ என்றேன் நான்…”
அந்தப் பாதிரியாருடன் சொர்க்கத்தில் இருப்பதைவிட நரகம் மேல் எனத் தீர்மானித்துவிட்டார் சுவாமிஜி.
சுவாமிஜி மேலும் கூறுகிறார்.
“நீங்கள் தொலைந்தீர்கள். எங்கள் மதத்தை நம்புங்கள், ஏசு உங்களைக் கரையேற்றுவார்’ என்றார் கிறிஸ்தவர். இது வெறும் மூட நம்பிக்கை அல்லாமல் வேறல்ல என்பது ஒருபுறமிருக்க, இதை உண்மை என்றே வைத்துக்கொண்டால், கிறிஸ்தவ நாடுகளில் கொடுமையும் பாவமும் இருக்கவே கூடாதே!”
மேலும் பாரதத்தை மாற்றிவிடலாம் என நினைப்போர் குறித்து அவர்,
“பாரதத்தை ஒரு நாளும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிவிட முடியாது என்று நான் கூறியதுண்டு. அதை இப்போதும் வற்புறுத்திக் கூறுகிறேன்… “இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. வேதநெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அதுபோல், எல்லாக் கிளை மதங்களும், ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப் பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்துவிட்டன… “கீழ் வகுப்பு மக்களின் நிலைமையைக் கிறிஸ்தவ மதம் சீர்படுத்துகிறது என்பதையும் நான் மறுக்கிறேன். தென்னிந்தியக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்களாக மட்டும் இல்லை, அவர்கள் தங்களை ஜாதிக் கிறிஸ்தவர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். அதாவது அவர்கள் தத்தம் ஜாதிகளில் ஒட்டிக் கொண்டே இருக்கிறார்கள்… “ஏசு பாரத நாட்டிற்கு வந்துவிட்டார் என்று சிலர் டமாரமடித்து வருகிறார்கள். அவர்களுக்காகவும் சொல்கிறேன். ஐயோ, என் நண்பர்களே! நீங்கள் நினைப்பது போல் ஏசுவும் வரவில்லை, யஹோவாவும் வரவில்லை. அவர்கள் வரப் போவதுமில்லை. இப்போது அவர்கள் தங்கள் வீட்டைக் காப்பாற்றுவதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டிற்கு வர அவர்களுக்கு நேரமே இல்லை… “நம் நாட்டில் அதே சிவ பெருமான் அமர்ந்து கொண்டு தான் இருக்கிறார்; அதே அன்னை காளி ஆட்டுப்பலியை ஏற்றுவருகிறாள்; வேணுகாணக் கண்ணன் புல்லாங்குழலை இசைக்கவே செய்கிறான். அதே சிவபெருமான் ஒருகாலத்தில் காளை வாகனத்தில் அமர்ந்து உடுக்கையை ஒலித்தபடி, ஒருபக்கம் சுமத்ரா, போர்னியோ, செலிப்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா இங்கெல்லாம் சென்றார். இன்னொரு பக்கம் திபெத், சீனா, ஜப்பான், சைபீரியா முதலிய நாடுகளுக்குச் சென்றார். இன்றும் பல நாடுகளுக்குப் பயணம் செய்தபடி உள்ளார். அதே காளிதேவி சீனாவிலும் ஜப்பானிலும் வழிபடப்பட்டு வருகிறாள். அவளையே ஏசுவின் தாய் மேரி என்று கிறிஸ்தவர்கள் வழிபடுகின்றனர்… “அதோ அந்த இமயத்தைப் பார்க்கிறீர்களே, அதன் வட பகுதியில் தான் கயிலாய மலை அமைந்துள்ளது. சிவபெருமானின் முக்கிய உறைவிடம் அது. பத்து தலைகளும் இருபது கைகளும் கொண்ட ராவணனால் கூட அதை அசைக்க முடியவில்லை. இந்த கிறிஸ்தவப் பாதிரிகள் அசைக்கப் போகிறார்களா என்ன? “கிறிஸ்தவப் பாதிரிகளே! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போய்த் தொலையுங்களேன். கையளவு மக்களாகிய உங்களுக்காக நாடே பொறுத்துப் பொறுத்து, நலிவுற்று நாகமாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மனம்போனபடி வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடிப் பார்த்து நீங்கள் ஏன் போகக் கூடாது? உலகம் தான் பரந்து விரிந்து கிடக்கிறதே! போவதற்கென்ன? “ஆனால் போக மாட்டார்கள். அதற்குரிய வலிமை அவர்களிடம் எங்கே? சிவபெருமானின் உப்பைத் தின்றுவிட்டு, அவருக்கே துரோகம் செய்துகொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள்… “கீழை நாடுகளிலுள்ள எங்களிடம் அழுத்தம் திருத்தமாக, ‘நாங்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ வேண்டும்’ என்று சொல்கிறார்கள். ‘ஏன் மதம் மாற வேண்டும்?’ என்று கேட்டால், ‘கிறிஸ்தவ நாடுகள் தான் மிகவும் செல்வச் செழிப்புடன் இருக்கின்றன’ என்கிறார்கள். நாங்கள் எங்களை ஒருமுறை பார்த்துக் கொள்கிறோம். இங்கிலாந்தையும் பார்க்கிறோம். உண்மை தான். உலகக் கிறிஸ்தவ நாடுகளில் இங்கிலாந்து மிகவும் செல்வம் நிறைந்த நாடாகத் திகழ்கிறது. ஆனால் அதன் கால்களில் 250 கோடி ஆரியர்களின் கழுத்துக்கள் நெரிபட்டுக் கிடக்கின்றனவே! “வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறோம். கிறிஸ்தவ ஐரோப்பாவின் செல்வம் எங்கிருந்து வந்தது? ஸ்பெயினிலிருந்து. ஸ்பெயின் எப்படிச் செல்வ வளம் பெற்றது? மெக்ஸிகோவின் மீது படையெடுத்து அடிமை கொண்டதிலிருந்து, சகமனிதர்களின் கழுத்தை வெட்டித் தான் கிறிஸ்தவ நாடுகள் செல்வவளம் மிக்கவை ஆயின. இத்தகைய விலைகொடுத்து இந்து ஒருநாளும் பணக்காரன் ஆக மாட்டான்… “கிறிஸ்தவ மதம் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தன்னை உலகத்திற்குத் தெரிவித்துக் கொள்வதில் கூட வெற்றிபெற முடியவில்லை. வாள்மூலம் கான்ஸ்டன்டைன் அதற்குத் தனது நாட்டில் ஓர் இடம் கொடுத்த நாள் முதல் ஆன்மிக அல்லது லௌதீக நாகரிக முன்னேற்றத்திற்கு கிறிஸ்தவ மதம் ஏதாவது உதவி செய்திருக்கிறதா? பூமி ஒரு சுற்றி வரும் கிரகம் என்று முதன்முதலாக நிரூபித்த ஐரோப்பிய அறிஞனுக்குக் கிறிஸ்தவ மதம் என்ன பரிசு அளித்தது? “எந்த விஞ்ஞானியையாவது எப்போதாவது கிறிஸ்தவ மதம் அங்கீகதித்திருக்கிறதா? குற்றவியல் மற்றும் சமூகவியல் சட்டங்கள், கலை, வியாபாரம் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கிறிஸ்தவ இலக்கியத்தால் முடியுமா? இப்போதும் சர்ச், மதம் அல்லாத இலக்கியத்தைப் பரவ விடுவதில்லை… “தற்காலக் கல்வியையும் விஞ்ஞானத்தையும் அறிந்த ஒருவன், இன்று உண்மைக் கிறிஸ்தவனாக இருக்க முடியுமா? புதிய ஏற்பாட்டில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எந்தக் கலையையோ விஞ்ஞானத்தையோ புகழ்ந்து ஒரு வார்த்தை கூடக் கிடையாது… “அறிவிலிகளான விவசாயிகளின் கூட்டம் இல்லையென்றால் கிறிஸ்தவ மதம் தன் இப்போதைய பரிதாபகரமான நிலையிலும் கூட ஒரு வினாடி இருக்க முடியாது; வேரோடு பிடுங்கப்பட்டிருக்கும். ஏனெனில் நகரவாசிகளான ஏழைகள் இப்போது சர்ச்சின் பரம விரோதிகள்… “துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும், அவல நிலையில் வாழும் பெண்களைப் பற்றியும் வாய்கிழியப் பேசுகிறார்களே தவிர, அவர்களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை… “அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? உங்களை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்தில் தான் உங்கள் நன்மை உள்ளது. அதற்குத் தான் நாங்கள் உதவ முடியும். நீங்கள் இந்துக்களாக இருக்கும்வரை உங்களுக்கு உதவுவதில் எந்தப் பயனுமில்லை என்பது தான்… “இவர்களுக்கு இனங்களின் வரலாறு தெரியாது. பாரதீயர்கள் தங்கள் மதத்தையும் சமுதாய அமைப்புகளையும் மாற்றுவார்களானால் பாரத நாடே இருக்காது. இதன் உயிர்நாடியே மதம்தான்… “ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை இழிந்தவர்கள், வெறுக்கத்தக்கவர்கள் என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும்படிப் பாடம் புகட்டுகிறர்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?”
-இவ்வாறு கூறும் சுவாமிஜி, “நம்மில் ஒருவன் மதம் மாறினால், நம்மில் ஒருவன் குறைகிறான் என்பது மட்டுமல்ல, ஒர் எதிரி அதிகமாகின்றான்” என எச்சரிக்கின்றார். மதமாற்றம் தவறு என்ற கருத்து சுவாமி விவேகானந்தருக்கு அவர்தம் குருவாம் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்தே கிடைத்தது.
மதமாற்றம் தவறு என்ற கருத்து சுவாமி விவேகானந்தருக்கு அவர்தம் குருவாம் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்தே கிடைத்தது.
”எம்மைச் சந்திக்க வந்த மைக்கேல் மதுசூதன தத்தர் என்ற வங்கக் கவிஞர், பணத்திற்காக மதம் மாறியவர் என்ற விவரம் தெரிந்ததும், என் வாயை யாரோ கட்டிப் போட்டது போல் உள்ளது. என்னால் எதுவும் பேச முடியவில்லை” எனக் கூறி அவரிடம் பேசவே இல்லை ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
சுவாமிஜியின் வாழ்வில் ஓர் அனுபவம்- தனது நண்பர் சின்ஹாவுடன் அவர் நிகழ்த்திய உரையாடல் இது….
“ஆருயிர் நண்பனே சின்ஹா! யாராவது உன்னுடைய தாயை அவமதிதால் நீ என்ன செய்வாய்?” “அவன் மீது தாவிப் பாய்ந்து நல்ல படிப்பினையைப் புகட்டுவேன் சுவாமி” “நன்றாக பதில் சொன்னாய். அதுபோலவே நமது நாட்டின் உண்மையான தாயாகிய உனது சொந்த மதத்தைப் பற்றி அவ்வளவு மதிப்பு உனக்கு இருக்குமாயின், எந்த ஒரு ஹிந்து சகோதரனும் கிறிஸ்தவனாக மதம் மாற்றப்படுவதை நீ ஒருக்காலும் சகிக்க மாட்டாய். “இருப்பினும் கூட தினந்தோறும் இது நடப்பதை நீ பார்க்கிறாய். பார்த்தும் பாராமுகமாக இருக்கிறாய். எங்கே உனது தேசபக்தி? “கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேருக்கு அந்த அநீதி சகியாமல் ரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?”
-இது சுவாமிஜி சின்ஹாவிற்குக் கூறியது மட்டுமல்ல. ஒவ்வொரு ஹிந்துவுக்கும் சொன்னது ஆகும்.
தமது சிறு வயது அனுபவத்தை கூறுகிறார் சுவாமிஜி:
“நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவப் பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில், நான் உங்கள் விக்ரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்? என்று கேட்டார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல் ‘உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்? என்று கேட்டார். ‘இறந்ததும் நீ தண்டிக்கப்படுவாய்’ என்று பதிலளித்தார் பாதிரி. ‘அப்படியே எங்கள் விக்கிரகமும், நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்’ என்று திரும்பச் சொன்னார் அந்த இந்து”.
சுவாமிஜி போன்ற ஓர் இந்துவிற்குத் தான் இத்தகைய உணர்வும் துணிவும் வரும்.
இந்து மதத்தை இழித்தும் பழித்தும் பேசினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் சுவாமிஜி வழிகாட்டுகிறார்.
சுவாமிஜி வந்த கப்பலில் இரண்டு பாதிரிகள் பயணம் செய்தனர். சுவாமிஜியுடன் வாதம் செய்து, கிறிஸ்தவ மதத்தின் மேன்மையை நிலைநாட்ட அவர்கள் விரும்பினர். ஆனால் சுவாமிஜியுடன் பேசியபோது நிலைமை விபரீதமாகியது; அவர்கள் தோற்கத் தொடங்கினர். அவருடன் பேசி வெற்றி காண முடியாது என்பதை அறிந்துகொண்ட அவர்கள் இந்து மதத்தைத் தாக்கிப் பேச ஆரம்பித்தனர்; இழிவாகப் பேசினர். சுவாமிஜி பொறுமையாக அனைத்தையும் கேட்டுக் கொண்டருந்தார்.
அவர்களின் ஏக்கம் ஏளனமும் எல்லை மீறிய போது மெதுவாக எழுந்தார். நேராக ஒரு பாதிரியின் முன்னால் சென்றார். திடீரென்று அவரது சட்டையைப் பற்றிப் பிடித்து, வேடிக்கையாக- ஆனால் அழுத்தமாக- ‘இன்னும் ஏதாவது சொன்னால் அப்படியே தூக்கிக் கடலில் போட்டுவிடுவேன்’என்றார். பாதிரிகள் நடுங்கிப் போய்விட்டனர். சுவாமிஜியின் பிடியில் சிக்கியவர் பயந்துபோய், ‘விட்டுவிடுங்கள், இனி எதுவும் சொல்ல மாட்டேன்’ என்று கூறினார். அந்தப் பாதிரி அதன் பிறகு சுவாமிஜியிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டார்.
“என் நாட்டு மக்களுக்கு ஓர் உபதேசம் செய்ய விரும்புகிறேன். கீழான வசைமொழியில் திளைக்கின்ற பாதிரிகளை நான் நன்கு உணர்ந்து விட்டேன். அதனால் அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். அமெரிக்கர்கள் கூறுவது போன்று அவர்களை அளந்து விட்டோம்; அவர்களைப் புறக்கணிப்பதே அவர்களுக்கும் நாம் காட்டும் முறை… “பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்! “உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டுமெனில் அதைப் போதிக்கும் தகுதியுள்ள ஒரே நாடாகிய பாரதம் சிறப்புற்றுத் திகழவேண்டும். அப்பொழுதுதான் உலகம் காக்கப்படும்… “அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்தத் தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பௌத்தர்களின் சூன்ய வாதம், சமணர்களின் நாத்திக வாதம் ஆகிய அனைத்திற்கும இந்து மதத்தில் இடம் உள்ளது… “சிலர் சர்ச்சின் உருவ வழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்குமேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புக்கொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும் தான்… “இந்துவின் சமயமோ, தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும்… “இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்; மற்றவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று சம்ஸ்கிருதத் தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கும் படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். ‘நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறைநிலை பெற்றவர்களைக் காண்கிறோம்’ என்கிறார் வியாசர்… “இத்தகைய உயர் தத்துவங்களே பாரத ஆன்மிகம்… “உலகம் அழியாமல் காக்க, பாரதம் அழியாமல் காக்கப்படவேண்டும். பாரதம் அழியாமல் காக்க அதன் உயிர்நாடியாம் ஆன்மிகம் காக்கப்பட வேண்டும்!”
– என்பதே சுவாமிஜியின் கருத்து.

எனவே தான், “பாரதநாட்டில் அரசியல் பொருளாதாரக் கருத்துக்களைப் பரப்பு முன் ஆன்மிகக் கருத்துக்களின் வெள்ளம் பெருக்கெடுத்தோடச் செய்யுங்கள். காடுகளிலும் மடங்களிலும் மறைந்து கிடங்கும் வேத, உபநிடத, இதிகாச, புராணக் கருத்துக்களை கிராமங்கள் தோறும், குடிசைகள் தோறும் வாரி இறையுங்கள்” என அறைகூவல் விடுகிறார் சுவாமி விவேகானந்தர்.
“இப்பணி செய்ய பல்லாயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் முன்வர வேண்டும்” என நம்மைப் பார்த்து அறைகூவல் விடுக்கிறார் சுவாமிஜி.
இப்பணி செய்ய இன்றே துவங்குவோம். அவர், “நான் உங்களுள் தோன்றாத் துணையாக இருப்பேன்” எனக் கூறியதற்கிணங்க நாம் பணி செய்யத் துவங்கினால் நம் கரங்கள் மீது அவர் கரம் இருக்கும்.
ஆனால், அவரே தம் கரங்கள் மீது ஸ்ரீ ராமகிருஷ்ணர் கரங்கள் உள்ளதாகக் கூறியுள்ளாரே!
எனவே, நாம் பணிசெய்யும் பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகாநந்தர் இருவரின் அருளும் நமக்குக் கிடைக்கும்.
தொண்டு செய்து வென்று காட்டுவோம்!
$$$