-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2 :பகுதி 14
காந்தி – இர்வின் ஒப்பந்தம்
பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு என்ன சலுகைகள் வழங்கலாம், இந்தியாவின் தேவைகள் என்ன என்பது போன்ற விஷயங்களை இந்தியத் தலைவர்களுடன் விவாதித்து முடிவெடுப்பதற்காக, லண்டனில் வட்டமேஜை மகாநாடு என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது வழக்கம். அதில் இந்தியாவிலிருந்து பல பிரதிநிதிகள் சென்று வருவார்கள்.
1930-இல் ஒரு வட்டமேஜை மகாநாடு லண்டனில் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு இந்தியாவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாருமே செல்லவில்லை. காரணம் பெரும் தலைவர்கள் சிறையில் அடைபட்டிருந்தனர்.
இந்திய சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் பிரதிநிதிகள் யாரும் இல்லாமலே அந்த வட்டமேஜை மாநாடு நடைபெற்றது. ஆனால் பல்வேறு சில்லறைக் கட்சித் தலைவர்கள் போய் பிரதிநிதிகளாக உட்கார்ந்து கொண்டார்கள். ஆனால் மக்கள் பிரதிநிதிகளாய் வராத அவர்களை பிரிட்டிஷ் அரசும் மதிக்கவில்லை, இந்திய மக்களும் அப்படிப்பட்ட மக்களை ஒரு பொருட்டாக மதிக்கவும் இல்லை.
புதிய ஆண்டு (1931) பிறந்ததும் நல்லெண்ண அடிப்படையில் பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் தலைவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்தது. தாங்கள் கூட்டவிருக்கும் வட்ட மேஜை மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேண்டுமென்று பிரிட்டன் அழைப்பு விடுத்தது.
அப்போது மோதிலால் நேரு உடல்நலம் குன்றி அலகாபாத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் காந்திஜி அலகாபாத் சென்று அவரைச் சந்தித்தார். அந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அலகாபாத்தில் தன்னுடைய மாளிகையை காங்கிரசுக்கு நன்கொடையாகக் கொடுத்தார், மோதிலால் நேரு. அந்த மாளிகையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் காந்திஜிக்கும் வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கும் ஒரு பேச்சு வார்த்தை நடந்தது. அதன் முடிவில் 5-3-1931 அன்று ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு காந்தி-இர்வின் ஒப்பந்தம் என்று பெயர்.
இந்த உடன்படிக்கை மூலம், கடல்நீரிலிருந்து சொந்தத்துக்கு உப்பு காய்ச்சும் உரிமை மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. பிரச்னைகள் தீர மறியல் செய்யும் உரிமையையும் அரசு ஒப்புதல் அளித்தது. மகாத்மா காந்தியும், தென்னாட்டில் ராஜாஜியும் நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்துக்கு இது ஒரு வெற்றியாக அமைந்தது.
1932 வட்ட மேஜை மகாநாடு:
1931-ஆம் வருஷம் மார்ச் மாதத்தில் கராச்சியில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. பர்தோலியில் வெற்றிகரமாக சத்தியாக்கிரக போரை நடத்திக் காட்டிய வல்லபபாய் படேல் அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.
இந்த காங்கிரஸ் கூடுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத் தான் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். இந்த இளம் தேசபக்தர்களை தூக்கிலிட்டதால் அந்த மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகளும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் மீது ஆத்திரமும் கோபமும் கொண்டிருந்தனர். நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இம்மூவரும் தூக்கிலிடப் பட்டதற்கு கண்டனக் குரல் எழுந்த வண்ணம் இருந்தது. காங்கிரஸ் மாநாட்டுப் பிரதிநிதிகளின் துக்கத்தை பகத்சிங்கின் தந்தை வந்து மேடையேறி ஆறுதல் கூற வேண்டியதாகி விட்டது.
இந்த சூழ்நிலையில் லண்டனில் கூட்டப்பட்ட வட்ட மேஜை மாநாட்டுக்கு யார் போவது? இந்தியத் தலைவர்கள் ஆத்திரத்தில் இருந்ததால் அங்கு போய் பேச்சு வார்த்தை நடத்தும் சூழல் இருக்கவில்லை. இறுதியாக மகாத்மா காந்தியடிகள் மட்டும் அந்த வட்டமேஜை மாநாட்டுக்குப் போவதாக முடிவாகியது. அதில் அவர் மட்டுமே இந்திய தேசபக்தர்கள் சார்பில் கலந்து கொண்டவர்.
1932-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி ‘ராஜபுதானா’ எனும் கப்பலில் காந்திஜி லண்டன் புறப்பட்டார். அவருக்கு உதவியாக காந்திஜியின் செயலாளர் மகாதேவ தேசாய், பியாரிலால், தேவதாஸ் காந்தி, மீராபென் என்று இந்தியப் பெண் பெயரைத் தாங்கியிருந்த மிஸ் ஸ்லேட், ஜி.டி.பிர்லா, மதன்மோகன் மாளவியா, சரோஜினி தேவி ஆகியோர் உடன் சென்றனர்.
காந்திஜி கப்பலில் ஆடம்பர வகுப்பு எதிலும் போகாமல் சாதாரண மக்கள் பயணம் செய்யும் கடைசி வகுப்பில் பயணம் செய்தார். செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி கப்பல் இங்கிலாந்தை சென்றடைந்தது. லண்டன் சென்ற காந்திஜி அங்கு ஏழைமக்கள் வசிக்கும் பகுதியொன்றில் நண்பர் ஒருவரின் விருந்தினராகத் தங்கினார்.
காந்திஜி லண்டனில் தங்கியிருந்த நாட்களில் அங்கு வாழ்ந்த ஏழை, எளிய, தொழிலாளர்களோடு நன்கு பழகினார். அங்கு வாழ்ந்த குழந்தைகளோடு குழந்தையாக விளையாடவும் செய்தார். அந்த நாட்டின் புகழ்பெற்ற அறிஞர் பெர்னாட்ஷாவைக் கண்டு சந்தித்து அவரோடு உரையாடினார்.
அப்போது இங்கிலாந்து அரசரைக் காண காந்தியடிகள் சென்றார். அப்போது அவர் சாதாரணமாக அணிந்திருக்கும் ஆடையோடு அரசரைப் பார்க்க அனுமதிக்க முடியாது, அதற்கென்று விசேஷ உடைகளை அணிந்து கொண்டு தான் மன்னரை தரிசிக்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்தனர்.
ஆனால் காந்திஜி ‘அரசரைப் பார்ப்பது என்றால் நான் எப்போதும் அணியும் இந்த இரு துண்டு துணிகளை அணிந்துதான் செல்வேன், இல்லையேல் அரசதரிசனமே வேண்டாம்’ என்றார். இறுதியில் அவர்கள் பணிந்து வந்தார்கள். காந்தி எப்போதும் அணியும் உடையுடன் சென்று மன்னரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டார். அரை நிர்வாண பக்கிரி என்று அவரைப் பரிகசித்த இங்கிலாந்தின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியதாயிற்று.
மகாத்மா காந்தியை அறவே பிடிக்காத தலைவர் சர் வின்ஸ்டன் சர்ச்சில். காந்தியை ‘அரை நிர்வாண பக்கிரி’ என்று வர்ணித்தவரும் அவர்தான். அப்படிப்பட்டவர் காந்தியைச் சந்திக்கவில்லை. காரணம் காந்தியோடு விவாதித்தால் அவர் சொல்வதைத் தான் கேட்டு மனம் மாறிவிடுமோ எனும் அச்சம் அவருக்கு. காந்தி லண்டனில் இருந்த நேரம் அவர் வேறு எங்கோ போய் தங்கிக் கொண்டார்.
வட்டமேஜை மாநாட்டில் காந்திஜி ஆற்றிய உரையின் சுருக்கம் இதோ:
“இந்தியாவின் மாபெரும் அரசியல் கட்சியான காங்கிரசின் ஒரு எளிய பிரதிநிதியாக, மிகுந்த அடக்கத்துடன் உங்கள் முன்பாக வந்திருக்கிறேன். காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் என்ன, அதனை அடைய எந்த விதங்களில் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவை பற்றி நான் உங்களிடம் எடுத்துச் சொன்னால்தான் எங்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பற்றியும் அதனை நிறைவேற்ற நாங்கள் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்களைப் பற்றியும் நீங்கள் புரிந்து கொண்டு எங்களிடம் இரக்கம் கொள்ள முடியும். இந்திய நாட்டில் பழம்பெரும் ஸ்தாபனமாக விளங்குவது காங்கிரஸ். அதன் வயது இப்போது ஐம்பது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தபோதும், எத்தனையோ பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தபோதும், ஆண்டுதோறும் நடத்துகின்ற மாநாட்டை மட்டும் நடத்தத் தவறியதே இல்லை. அது எங்கள் தேசிய கடமையாக இருந்து வந்திருக்கிறது. ‘காங்கிரஸ்’ எந்த ஜாதியாருக்கோ, மதத்தாருக்கோ அல்லது வேறு எந்த பிரிவினருக்கோ பிரதிநிதியாக இல்லை. இந்திய மக்கள் அனைவருக்கும், நிலவும் அத்தனை கொள்கைகளுக்கும், எல்லா உரிமைகளுக்கும் பிரதிநிதியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இயக்கம் ஒன்றை இந்தியாவில் நிறுவ வேண்டுமென்கிற எண்ணம் முதன்முதலில் ஓர் ஆங்கிலேயரின் மனத்தில் தான் உதித்தது என்பதை மகிழ்வோடு இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் நன்கு அறிந்த ஆலன் ஆக்டேவியன் ஹியூம் தான் அந்த ஆங்கிலேயர். காங்கிரசின் தந்தை அவர். அந்த இயக்கத்தை மிகுந்த அக்கறையுடன் போற்றி வளர்த்த பெருமை ஃபெரோஸ்ஷா மேத்தா, தாதாபாய் நெளரோஜி போன்ற பெரும் பார்சி அறிஞர்களுக்கு உண்டு. இந்த இயக்கத்தில் தொடக்க காலம் முதல் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பங்கு பெற்று வருகின்றனர் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே காங்கிரஸ் பலதரப்பட்ட பிரிவினர், வகுப்பினர், மதத்தினர் என வேற்றுமையின்றி அனைவருக்கும் பிரதிநிதியாக இருக்கிறது என்பதை நான் இங்கு சொல்ல வேண்டும். முஸ்லிம்களும், பார்சிகளும் இந்த இயக்கத்தின் தலைமைப் பதவியில் இருந்திருக்கின்றனர். காளிசரண் பானர்ஜி எனும் கிறிஸ்தவரும் தலைவராக இருந்திருக்கிறார். இன்றைய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 15 பேரில் நால்வர் முஸ்லீம்கள், டாக்டர் அன்னிபெசண்ட் ஒரு ஐரிஷ் பெண்மணி. இவர் காங்கிரசின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சரோஜினியும் பின்னர் தலைவராக இருந்திருக்கிறார். ஆக பெண்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. காங்கிரஸ் தீண்டாமைக்கு எதிரானது. ஒவ்வொரு மாநாட்டிலும் சமூகநல மாநாடு என்று ஒரு நிகழ்ச்சி உண்டு. காலஞ்சென்ற ரானடே இந்த தீண்டாமையை ஒழிக்க ஓயாது பாடுபட்டு வந்திருக்கிறார். 1920-இல் தொடங்கி காங்கிரசின் கொள்கைகளில் தீண்டாமை ஒழிப்பு, சர்வமத ஒற்றுமை இவை நடைமுறை படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்திய சமஸ்தானங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் காங்கிரஸ் பாடுபட்டு வந்திருக்கிறது என்பதை சமஸ்தானாதிபதிகள் உணர்வர். இவற்றையெல்லாம் விட ஏழு லட்சம் கிராமங்களில் பசி, பட்டினி என்று வாழும் பல கோடி ஏழை மக்களின் பிரதிநிதியாகவும், காங்கிரஸ் இருந்து வருகிறது. பேசத் தெரியாத இந்த ஊமை ஜனங்களுக்காகக் குரல் கொடுத்து எல்லா தியாகங்களையும் செய்ய காங்கிரஸ் தயாராக இருக்கிறது. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெறவும் பாதுகாவலராக காங்கிரஸ் இருக்கிறது என்பதை உங்கள் முன்பு எடுத்துச் சொல்ல இங்கு வந்திருக்கிறேன்.”
-இப்படியொரு சொற்பொழிவை வட்டமேஜை மாநாட்டில் காந்திஜி நிகழ்த்தினார்.
காந்திஜியை பம்பாயில் கப்பலேற்றி லண்டனுக்குச் செல்ல அனுப்பிவிட்டு, இந்தியாவில் சத்தியாக்கிரகிகளுக்கும் தேசபக்தர்களுக்கும் எதிராக கடுமையான அடக்குமுறையை வைஸ்ராய் வெல்லிங்டன் பிரபு கையாளத் தொடங்கிவிட்டார்.
மாநாடு முடிந்து காந்திஜி நாடு திரும்ப சில நாட்கள் இருக்கும் நிலையில் கான் அப்துல் கபார்கானும் அவர் சகோதரரும் அவர்களுடன் செஞ்சட்டை வீரர்களும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு விட்டனர்.
காந்திஜியின் பாதம் இந்திய மண்ணில் பட இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில், ஜவஹர்லால் நேரு, ஷெர்வானி, புருஷோத்தமதாஸ் தாண்டன் முதலான உ.பி. தலைவர்கள் கைதாயினர். இப்படி நாடு முழுவதும் சிறைச்சாலையில் தேசபக்தர்கள் குவிந்தனர். வட்டமேஜை மாநாட்டில் எந்தப் பலனும் இல்லாமல் காந்திஜி வெறும் கையுடன் டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி காலை கப்பலில் பம்பாய் வந்து இறங்கினார்.
காந்திஜிக்கு சிறப்பானதொரு வரவேற்பு பம்பாயில் ஆசாத் மைதானத்தில் கொடுக்கப்பட்டது. காந்திஜி வைஸ்ராய்க்குப் பல கடிதங்களை எழுதினார். ஆனால் அவரோ அசைந்து கொடுக்க மறுத்து விட்டார். இந்த சூழ்நிலையில் வேறு வழியில்லை என்ற நிலையில் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூடி மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்தது.
1932 ஜனவரியில் காங்கிரஸ் சட்ட விரோத இயக்கமென அறிவிக்கப்பட்டது. அலுவலகங்கள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டிசம்பர் 4-இல் காந்திஜி கைது செய்யப்பட்டு எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் அன்சாரி, வல்லபாய் படேல் ஆகியோர் பாதுகாப்புக் கைதிகளாக வைக்கப்பட்டனர்.
பல இடங்களிலும் ‘வரிகொடா இயக்கம்’ தொடங்கியது. அரசாங்கத்தின் அட்டூழியங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் ரகசியமாக வெளியிடப்பட்டன. அன்னியப் பொருள்கள் பகிஷ்காரம் தொடர்ந்தது. கள்ளுக் கடைகள் முன்பாக தொண்டர்கள் மறியலில் ஈடுபடலாயினர். ஆங்காங்கே தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடந்தன.
இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியில் 1932 ஏப்ரலில் தில்லி, சாந்தினி சவுக்கில் காங்கிரசின் கூட்டம் நடந்தது. நாடெங்கிருந்தும் 500 பிரதிநிதிகள் வந்திருந்தனர். அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்காக தேர்தலில் தனித் தொகுதிகள் ஒதுக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. அப்படி மக்களைப் பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்குமானால் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, காந்திஜி அறிவித்தார்.
$$$
Yes. Gandhi had rightly opposed the special constituencies for SC/STs. Even now the same caste politics is going on. Now who will oppose it?
LikeLike