பாஞ்சாலி சபதம் – 1.2.9

-மகாகவி பாரதி

சகுனியின் ஏளனத்தை அடுத்து சூதாட தருமன் சம்மதிக்கிறான். அப்போது முந்தைய வழக்கத்தை தொடர்வது மரபு என்ற வாதத்தை  மகாகவி பாரதி கண்டிக்கிறார். ”முன்பி ருந்ததொர் காரணத் தாலே, மூடரே,பொய்யை மெய்என லாமோ?” என்கிறார். இறுதியில் “மதியி னும்விதி தான் பெரி தன்றோ?” என்று புலம்பலுடன் இக்கவிதையை நிறைவு செய்கிறார்...

முதல் பாகம்

1.2. சுதாட்டச் சருக்கம்

1.2.9. தருமன் இணங்குதல்


வேறு

வெய்ய தான் விதியை நினைந்தான்
      விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;
பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப்
      புலனி லாதவர் தம்முடம் பாட்டை
ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்
      ஐயகோ!அந்த நாள்முத லாகத்
துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள்
      துன்பம் இவ்வகை எய்தினர், அம்மா!       178

முன்பி ருந்ததொர் காரணத் தாலே,
      மூடரே,பொய்யை மெய்என லாமோ?
முன்பெனச் சொலுங் கால மதற்கு,
      மூடரே,ஓர் வரையறை உண்டோ?
முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்;
      மூன்று கோடி வருடமும் முன்பே;
முன்பிருந் தெண்ணி லாது புவிமேல்
      மொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ?       179

நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
      நேர்ந்த தில்லை எனநினைந் தீரோ?
பார்பி றந்தது தொட்டின்று மட்டும்
      பல பலப் பல பற்பல கோடி
கார்பி றக்கும் மழைத்துளி போலே
      கண்ட மக்க ளனைவருள் ளேயும்,
நீர்பி றப்பதன் முன்பு மடமை
      நீசத் தன்மை இருந்தன வன்றோ?       180

பொய்ய ழுக்கை அறமென்று கொண்டும்
      பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்,
ஐயகோ,நங்கள் பாரத நாட்டில்
      அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி,
      நூல்வ கைபல தேர்ந்து தெளிந்தோன்,
மெய்யறிந்தவர் தம்மு ளுயர்ந்தோன்
      விதியினாலத் தருமனும் வீழ்ந்தான்.       181

மதியி னும்விதி தான் பெரி தன்றோ?
      வைய மீதுள வாகு மவற்றுள்
விதியினும்பெரி தோர்பொரு ளுண்டோ?
      மேலை நாம்செயுங் கர்மமல் லாதே,
நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
      நான்கு திக்கி லிருந்தும் பன்மாசு
பதியு மாறு,பிறர்செயுங் கர்மப்
      பயனும் நம்மை,அடைவதுண் டன்றோ?       182

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s