-மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் திரு. மயில்சாமி அண்ணாதுரை, கோவை மாவட்டம், கோதவாடி என்ற கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர். தனது கடும் உழைப்பால் முன்னேறி, பெங்களூரிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) ‘சந்திரயான்’ திட்ட இயக்குனராகச் செயலாற்றியவர். 2013-இல் கோவையில், சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்க விழாவில் பேசிய அன்னாரது கருத்துகள் இங்கே....

இந்த மண்ணிலேயே பிறந்து, இந்தக் காற்றையே சுவாசித்து, முழுக்க முழுக்க இங்கேயே உருவான ஒரு ஏழை ஆசிரியரின் மகனான என்னை, இங்கு, இன்று, உங்கள் அனைவரின் முன்பாக மேடையேற்றி அழகு பார்க்கும் அன்பானவர்களே, நான் இப்படி நிற்பது எனக்கு ஒருபுறம் கனவாகவும், மறுபுறம் கனவின் பலனாகவும், அதையும் தாண்டி வரப் போகும் நாட்களுக்கான ஒரு கட்டியமாகவும் தோன்றுகிறது.
நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் என்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் சேர்க்க எனது அப்பா முயன்றார், ஆனால் எனக்கு அப்போது அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. வருடங்கள் பல ஓடிய பின், ஒரு வருடத்திற்கு முன்பாக இதே இடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஒரு வாய்ப்பைக் கிடைக்கப் பெற்றேன். அப்போது எனக்குக் கிடைக்காது போன அந்தப் பழைய வாய்ப்பை நினைவு படுத்தினேன்.
அதைக் கேட்ட சுவாமிகள் புன்னகைத்தபடியே சொன்னார், “உங்களுக்கு முதலில் கிடைக்கப் பெறாத வாய்ப்பால், இந்தியாவின் முதல் நிலவுக்கலனான சந்திரயானில் பணியாற்ற வாய்ப்பும் அதன் பின் உங்கள் அப்பா விரும்பிய இந்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் அல்ல, பல்கலைக்கழகத்திலேயே மற்ற மாணவர்களுக்குப் பட்டமளிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறதல்லவா, இது ஒரு பெரிய சிறப்புத்தானே?” என்றார். மேலும், ‘Complete works of Swami Vivekananda’ என்ற 8 புத்தகங்களின் தொகுப்பையும் எனக்குக் கொடுத்தார்.
“The illiterate of 21st century will not be those who cannot read and write , but those who can’t learn, un-learn and re-learn” என்றார் ஆல்வின் டோஃப்லர்.
அதன்படி, அதுவரை நான் படித்துத் தெரிந்திருந்தவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தப் புத்தகங்களில், சுவாமி விவேகானந்தாவின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் படித்தேன்.
இதையே சிறுவயதில் படித்திருந்தால் என்னுள் என்ன நிகழ்ந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது படித்தபோது, சுவாமிகளின் ஆழ்ந்த ஞானத்தால் விளைந்த தூய எண்ணங்களில் பிறந்த, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த வைர வாக்கியங்கள், ஏதோ ஒரு மாய உலகிலிருந்த என்னைப் புரட்டிப் போட்டன.
எனக்கு மட்டுமல்ல, நமக்கெல்லாமே வழிகாட்டும்டியான சுவாமிகளின் வாழ்க்கை, நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
கோடானு கோடி மனிதர்களில் ஒருவராய்ப் பிறந்து, வெறும் முப்பத்தொன்பது வருடங்களே வாழ்ந்த, அதிலும் ஊடகங்களின் தாக்கம் அதிகமில்லாத, அந்நிய ஆட்சியின் கீழ் அடிமைத்தளையில் கட்டுண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், பத்து வருடங்களுக்கும் குறைவாகவே மற்றவர்களால் அறியப்பட்ட ஒரு இளம் சந்நியாசிக்கு , அவர் பூத உடல் மறைந்து 111 ஆண்டுகளுக்குப் பின்னும் ஊர்கூடித் தேரிழுக்கிறது என்றால், இதை ஒரு கனவு என்பதா? இல்லை, ஒரு கனவு நாயகனின் சாசுவதமான வாழ்வின் நிதர்சனம் என்பதா?
“இருள்வழி உலகம் சென்றே
இயல்வழி மறந்த நாளில்
பொருள்வழி மனிதர் உள்ளம்
புகைபடக் கிடந்த நாளில்
மருள்விழி மான்கள் போல
மனிதர்கள் நடந்த நாளில்
அருள்வழி விவேகா னந்தன்
அறமெனப் பிறந்தான் மாதோ!”
என்ற கவிஞர் கண்ணதாசனின் வாக்குப் படி, நரேந்திரனாக சுவாமி விவேகானந்தர் பிறந்த அந்த நாட்களில் இந்தியாவின் நிலைமை, இங்கு வாழ்ந்த இந்தியரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
தன்னிலை அறிவதே நோக்கமாயிருக்கும் அன்றைய ஞானிகள் நடுவே, தன்னைச் சுற்றியுள்ள மக்கள் நிலையறிந்து அவர் துயர் துடைக்கும் வழிவகை காண்பதே வாழ்வின் முக்கிய நோக்கமாய் இருத்தல் வேண்டும் என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரஹம்சர்.
அவரது அறிவுரையை ஏற்று, சுவாமிஜி ஆரம்பித்த ராமகிருஷ்ணா மிஷன் என்ற ஒரு லட்சிய விதை, இன்று ஆலமரமாய் வளர்ந்து விரிந்திருப்பதைப் பார்க்கிறோம்.
சிறிதாக ஆரம்பித்த இயக்கம் இன்று 176 கிளைகளுடன், இந்தியாவுக்கும் வெளியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கூட கிளை பரப்பி வளர்ந்துள்ளது.
நாம் விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வளாகம் கூட 83 வருடங்களுக்கு முன்பாக வெறும் ஐந்தே முக்கால் ரூபாயில் ஒரு மாணவனுடன் ஆரம்பிக்கப்பட்டு இப்படிப் பரந்து விரிந்து வளர்ந்துள்ளது தான்.
“தன்னைக் கட்டுதல், பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலன் வேண்டுதல் மற்றும் எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வை, இந்த நான்கே எவர்க்கும் கடமை” என்றார் விவேகானந்தர்.
இந்த வகையில் ஒவ்வொரு தனிமனிதனுள்ளும் மனிதத்தை உயிர்ப்பித்து, சக மனிதர்களையும் உய்விக்க உதவுவதே வாழ்வின் பொருள் என்றார் சுவாமிகள்.
இன்று நாம் அனைவரும் சேர்ந்து ஆரம்பித்து வைக்கும் சுவாமிவிவேகானந்தரின் இரதயாத்திரை தமிழகமெங்கும் சென்று இந்த விதையை இன்றைய இளைஞர்கள் மனதில் சரியாக விதைக்கட்டும்!
சுவாமிகளின் பேச்சுகளையும் எழுத்துக்களையும் ஏதோ எனக்கே எழுதியவை போல எனது மனதில் பலப் பல இடங்களில் உணர்ந்தது உண்மை.
ஓரிடத்தில் சுவாமிஜி சொல்கிறார்: “எந்த ஒரு நல்ல செயலும் முதலில் பரிகசிக்கப்படும்; நடுவில் எதிர்க்கப்படும்; முடிவில் அங்கீகரிக்கப் படும்.”
சந்திரயான் திட்டப் பணிகளும், அதன் பயணமும், கண்டுபிடிப்புக்களும், அதன் அங்கீகாரங்களும் கேலி, எதிர்ப்பு, அங்கீகாரம் என்ற இந்த வரைமுறைகளுக்குள் அடைபட்டதே.
ஒவ்வொருவரின் வாழ்விலும் வெவ்வேறு கட்டங்களில் இந்த மூன்றும் எதிர்ப்படும். அதே சமயம் அங்கீகாரம் என்ற மூன்றாவது நிலையை வாழ்வின் ஒரு தேக்க நிலையாக மாற இடம் கொடுக்கக் கூடாது. தோல்விகளை எப்படி வெற்றிக்கான படிகள் என்கிறோமோ, அதே மாதிரி மேற்சொன்ன மூன்று நிலைகளைக் கடந்து கிடைக்கும் வெற்றியும் நமது அடுத்தகட்டப் பயணத்திற்கான ஒரு படியாக நினைத்து முன்செல்ல வேண்டும்.
ஆனால் எப்போதும் கேலி, எதிர்ப்பு மற்றும் அங்கீகாரத்தையும் அதனதன் சாரத்தையும் புரிந்து கொள்வது நமது மனத்திற்கும் வாழ்விற்கும் நலம் பயக்கும். எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான படிப்பினை இது.
சுவாமி சொல்கிறார் “சுருங்கிக் கொண்டு போவது மரணம், விரிந்து கொண்டே போவது வாழ்க்கை”.
அந்த வகையில் நான்கு லட்சம் கி.மீ.க்கு அப்பாலுள்ள நிலவைத் தொட்ட பின் இந்த வருடம் 40 கோடி கி.மீ.க்கு அப்பாலுள்ள செவ்வாய்க் கிரகத்திற்கான இந்தியக் கோள் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் இன்று எனது குழுவுடன் நான் ஈடுபட்டுள்ளேன்.
சுவாமிஜியே சொல்கிறார், “என் வாழ்க்கையின் பேரவா இது தான்: ஒவ்வொருவருடைய வீட்டு வாசலுக்கும் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு போகக்கூடிய ஓர் இயக்கத்தை ஏற்படுத்தி அதை நடத்தி வைத்தல்; பின்னர் ஜனங்களைத் தங்கள் விதியைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் படி விட்டுவிடுதல். வாழ்க்கையின் மிக முக்கியமான பிரச்னைகளைப் பற்றி நமது மூதாதைகள் கொண்டிருந்த கருத்துக்களையும், பிற நாட்டினரின் எண்ணங்களையும் அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். பின்னர் தங்களுக்குத் தாங்களே முடிவு செய்து கொள்ளட்டும். ரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதே நமது வேலை; இயற்கைச் சட்டங்களின்படி அவை தாமாகவே மாறுதலடையும்”.
அப்படிப்பட்ட ஒரு ரசாயன மாற்றத்திற்கு இந்த ரதயாத்திரை உதவட்டும்!
சுவாமிஜி மேலும் சொல்கிறார், “ பிரபஞ்ச சக்தி முழுதும் நம்மிடமே உள்ளது. ஆயினும் சிலர் தங்கள் கைகளையே தங்கள் கண்கள் முன் வைத்துக் கொண்டு, எல்லாமே இருட்டு என்கிறார்கள்”.
ஆக நமது சக்தியை நாம் உணர்ந்தால் நிலவும் நம்கையருகே வரும். ஆம், எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும், “கையருகே நிலா” வரும்.
ஆம், புரிந்து கொள்ளுங்கள், இருட்டில் இருப்பவனை அவன் நிழல் கூடத் தீண்டுவதில்லை. இளைஞனே வெளிச்சத்திற்கு வா, உனது எழுச்சியை உலகம் காணட்டும்.
வெளிச்சம் நோக்கி நீ நடந்தால் வெண்ணிலவும் உன் பின்னால் வரும், வெளிச்சம் விட்டு நீ நடந்தால் உன் நிழல் கூட உன்னை முந்திச் செல்லும். நண்பனே இதை நீ உணர்ந்தால் உனது வாழ்க்கை வரலாறு ஆகும். ஆம், உலகம் உனது வரலாறு பேசும்.
“மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுமானால் நரகத்திற்குக் கூட செல்வதற்குத் தயாராய் இருங்கள். மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரை விடுவது மேல்” என்றார் சுவாமிஜி. அதனை இந்த ரத யாத்திரை மக்கள் மனதில் மறவாமல் பதிக்கட்டும்!
“உலகில் நல்லவர்கள், பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கிறது” என்றார் சுவாமிஜி. அதை இந்த ரத யாத்திரை நல்லவர் மனதில் நயமாகப் பதிக்கட்டும்!
“ உலக வாழ்வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டாம். வெற்றியோ தோல்வியோ போராடுங்கள்” என்றார் சுவாமிஜி. அதை இந்த ரத யாத்திரை, தோல்வி மனம் கொண்டவர் மனதில் போர்க்குணமாய் விதைக்கட்டும்!
“பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயர வேண்டும். இதுவே ஆன்மிகத்தின் பயன்” என்றார் சுவாமிஜி அதை இந்த ரத யாத்திரை பாமரனுக்கும் பண்பாளிக்கும் பரிவோடு பதிக்கட்டும்!
“தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை மிருகங்களாக்கி கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்” என்றார் சுவாமிஜி, அதை இந்த ரத யாத்திரை அறிஞர்கள் மனதில் அறமாகப் பதிக்கட்டும்!
“சுயநலம், சுயநலமின்மை இந்த இரண்டையும் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் வேறுஎந்தவிதமான வேறுபாடும் கிடையாது” என்றார் சுவாமிஜி, அதை இந்த ரத யாத்திரை சுயநலவாதிகள் மனதில் சுருக்கென்று தைக்கட்டும்!
“மனிதனை மறந்துவிட்டு இறைவனை மட்டுமே சிந்திக்கிற மதவாதிகளுக்கு நடுவே மனிதர்களிலே இறைவனைக் காண வேண்டும்” என்றார் சுவாமிஜி அதை இந்த ரத யாத்திரை மதவாதிகள் மனதில் மறவாது பதிக்கட்டும்!
சுவாமிகள் கூறுகிறார், “இந்தியாவை மேம்படுத்த 500 ஆண்கள் முயன்றால் அதற்கு 50 வருடங்கள் ஆகலாம் ; அதையே 500 பெண்கள் முயன்றால் ஒருசில வாரங்களிலேயே சாதித்து விடலாம். எனவே பெண்கள் இந்தப் பணியில் அதிகம் சேரச் சேர, மிக விரைவில் நமது இலக்கை அடைய முடியும். ஆம், தைரியமான சொற்கள், அவற்றை விட தைரியமான செயல்கள் இவையே வேண்டியவை. உன்னதமானவர்களே, விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள். துன்பத் தீயில் உலகம் வெந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தூங்கலாமா?” என்று. இந்த வீர வாக்கியங்களை நாம் துவக்கும் இந்த ரத யாத்திரை பெண்கள் மனதில் பெரிதாகப் பதிக்கட்டும்!
எது எப்படியிருந்தாலும் , நிலையற்றது இந்த மனித வாழ்வு என்ற நிலையை மாற்றி நிலையானதொரு நிலை காண முயல்வதே வாழ்க்கை என உணர்வோம்.
மகாபாரதத்தில் பீமன் தருமரிடம் சொன்னதாக சிறுவயதில் எனக்கு அம்மா சொன்ன ஒரு கதை. மேலோட்டமாகப் பார்த்தால், நாளை என்பதில் நம்பிக்கை இல்லாத மாதிரித் தோன்ற வைக்கும். ஆனாலும் அந்தக் கதை இன்றைய பொழுதை முழுமையான நாளாக்கும். அதன்மூலம் என்றென்றும் நம் பெயர் நிலைக்கும்படிச் செய்யும் உபாயம் கூறும்.
கதையை நீங்களும் கேளுங்களேன்…
தன்னிடம் தானம் கேட்டு வந்தவரிடம், “இன்று போய் நாளை வா, நான் நிறையத் தருகிறேன்” என்கிறார் தருமன்.
அதை அருகிலிருந்து பார்த்த பீமன் சொல்வார்:
“நாளை என்று தள்ளிப் போடாது இன்றே தகுதியானவர்களுக்குத் தேவை அறிந்து தருவோம். ஏனென்றால், நாளை என்பது உண்டா என்று இன்று யாருக்குத் தெரியும்?
நாளை என்று ஒன்று வந்தாலும் அப்போது நாம் இருப்போமா? தெரியாது. நாம் இருந்தாலும், நம்மிடம் கொடுக்கப் பொருள் இருக்குமா? தெரியாது.
நாளை நம்மிடம் பொருளிருந்தாலும் அதைக் கொடுக்கத் தேவையான மனம் நம்மிடம் இருக்குமா? தெரியாது.
நாளை நம்மிடம் பொருளும் மனமும் இருந்தாலும், வாங்குவதற்குத் தேவையுள்ளவர்கள் இருப்பார்களா? தெரியாது.
அப்படியே தேவையுள்ளவர்கள் இருந்தாலும், தகுதியுள்ளவர்களாக அவர்கள் இருபார்களா? தெரியாது. எனவே அண்ணா, தகுதியானவர்களுக்குத் தேவையறிந்து இன்றே இருப்பதைக் கொடு”
– இந்தக் கதையும், உரையாடலும் நாளையென்பதில் நம்பிக்கை வைக்காமல் பேசிய பேச்சல்ல. நிலையற்ற வாழ்வை நிலையாக்கும் நெறிமுறை.
மற்றவர்களுக்குக் கொடுக்கப் போகும் பொருளுக்கு மட்டுமல்ல, எந்தவொரு நல்ல செயலுக்கும், நம்மால் முடியும் பட்சத்தில் தள்ளிப் போடாமல் உடனுக்குடனே செய்ய வேண்டும் என்ற நல்ல பழக்கம் தேவையானது.
நாளை என்பதில் நம்பிக்கை வைப்போம். அப்படியே இன்றைய நாளை முழுதாய் வாழ்வோம். மனமுவந்து முழுதாய்ச் செய்வோம். இது பொதுநலம் மட்டுமல்ல, ஒரு நல்ல தன்னலமும் கூட என்பதை உணர்ந்து செய்வோம்.
நம்மை ஒரு கௌரவமான மனிதனாக வாழச் சந்தர்ப்பம் கொடுத்த இந்த உலகத்திற்கும், இந்தச் சமுதாயத்திற்கும், நமது சுற்றத்திற்கும் நாம் திரும்பக் கொடுக்கும் ஒரு நன்றிக் காணிக்கை இது என உணர்வோம்.
ஆக, சுவாமி விவேகனந்தரின் இந்த ரத யாத்திரை, சிறப்பாக அதன் பணியை முடிக்க அனைவரும் அவரவர்களுக்கு முடிந்த வகையில்,
தொண்டால், தொடர் நடையால்,
பொருளால், பணக் கொடையால்
உணவால் , உடல் உழைப்பால்
உணர்வால், உயர் மொழியால்
உடனே மிக உடனே சுவாமிகளின் இந்த ரத யாத்திரையில் முனைப்பாய்க் கலந்து கொள்வோம். மற்றவர்களையும் கலந்துகொள்ள ஊக்குவிப்போம்!
“தூய்மை, பொறுமை, வைராக்கியம் – இவை மூன்றும் வெற்றிக்குத் தேவை. அதைவிட முக்கியம் அன்பு” என்றார் சுவாமிகள். அதே வழியில் விவேகானந்த ரத யாத்திரையை தூய்மையுடன், பொறுமையுடன், வைராக்கியத்துடன், மிகுந்த அன்புடன் தொடங்கி நடத்துவோம். முழு வெற்றி அடைவோம். அந்த வெற்றி, முழுத் தமிழகமும் பெறட்டும். தமிழகத்தில் ஒரு எழுச்சியை இந்த யாத்திரை உருவாக்கட்டும்!
நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதை நம்புங்கள். இன்று இங்கு கூடியுள்ள நாமெல்லோரும், நாளைய விடியலுக்கான செயல் ஒன்றின் பங்காளிகள் என்பதையும் இந்தக் கணத்தில் நம்புவோம்!
மின்சாரம் ஒன்று தான். மின்விளக்கில் நுழைந்தால் வெளிச்சமாகிறது, குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டுகிறது, சமையலறையில் மாவரைக்கிறது, கிணற்றில் நீரிரைக்கிறது, தொழிலகங்களிலோ ஏற்றுவது, இறக்குவது, அறுப்பது, அரைப்பது, உடைப்பது, துடைப்பது, தூக்குவது, தூற்றுவது, வண்ணம் பூசுவது, வடிவை மாற்றுவது என ஏராளமான செயல்களுக்கும் கவித்துவமாகக் காரணமாவதும் அதே மின்சாரம் தான்.
முன்னொரு காலத்தில் போர்முனையில் மனமொடிந்த பார்த்தனுக்கு கீதை சொல்லி வீரமூட்டிய கண்ணனின் அந்த ரதம் போல, நாமெல்லாம் ஒன்றுகூடி இன்று துவக்கும் சுவாமி விவேகானந்த ரதம் இளைஞர்களின் ரத்த நாளங்களில் தேவையான புது ரத்தம் பாய்ச்சட்டும்! மூளையில் புத்துணர்ச்சியூட்டட்டும்! நரம்பு மண்டலத்தில் நல்லூக்கம் வளர்க்கட்டும்! கண்களுக்குப் புது வெளிச்சம் காட்டட்டும்!
விழித்தெழுந்திருங்கள், நமது பாரதத்தாய் புத்திளமை பெற்று, முன்னெப்போதையும் விட அதிக மகிமையுடன் தன் நித்திய சிம்மாசனத்தில் வீற்றிருப்பதைக் கண்டு மகிழுங்கள்.

எழுங்கள், எழுங்கள்! நீளிரவு களிந்தது, பொழுது புலர்ந்தது, கடல் ஆர்ப்பரித்து வருகிறது! அதன் உத்வேகத்தைத் தடுக்க எதனாலும் ஆகாது. எழுங்கள் தோழர்களே, எழுங்கள்! ஆர்ப்பரிக்கும் உங்களின் இளைய பட்டாளம் அகிலத்தை வசீகரிக்கட்டும்!
சிங்கத்தின் பாய்ச்சலும், சிறுத்தையின் சீற்றமும், சிறுமை கண்டால் உங்களுக்குள் தோன்றட்டும்!
ஆழியின் வேகம் செயலிலும், ஆழ்கடலின் அமைதி பொறுமையிலும், பிரபஞ்ச விரிவு ஞானத்திலும், சூரியனின் சூடு கோபத்திலும், பனியின் குளுமை தாயிடத்திலும், மலரின் மென்மை சேயிடத்திலும், என்று பண்பால், படிப்பால், அன்பால், அறிவால், கருத்தால், குணத்தால், சொல்லால், செயலால், எல்லாம் சேர்ந்து முழு மனிதனாவோம். காற்றும், வானும், ஆழ்கடலின் ஆழமும் நமது வசமாகட்டும்!
அந்தப் பொன்னான காலம் எனது கண்முன் தெரிகிறது. ஆம், வாருங்கள் தோழர்களே! சுவாமி விவேகானந்தரின் 170-வது பிறந்த நாளைக் கொண்டாடும்போது இந்த வார்த்தைகள் நிஜமாகட்டும்!
அது தான் சுவாமிஜிக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். ஒவ்வொருவரும் இதை உணரும்போது ஒரு சமுதாயமாக வாருங்கள் சுவாமி விவேகானந்தாவின் 170வது பிறந்த நாளை நாம் கொண்டாடும் போது இந்த வார்த்தைகள் நிதர்சனமாகட்டும். அது தான் சுவாமிகளுக்கு நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடன்.
ஒவ்வொருவரும் இதை உணரும்போது, ஒரு சமுதாயமாக நமது வணக்கங்கள் சுவாமிஜியின் 150-வது ஆண்டு விழாவில் மிகச் சிரப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
குறிப்பு: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழா நினைவாக, தமிழ்நாடு ராமகிருஷ்ணா மடம், மிஷனின் கிளைகளும், ராமகிருஷ்ண பாவ பரிஷத்தும் இணைந்து சுவாமி விவேகானந்த ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றன. இதன் தொடக்க விழா, கோவை- பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கடந்த 2013, ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற்றது. அந்நிகழ்வில், விவேகானந்த ரதயாத்திரையைத் துவக்கிவைத்து ‘சந்திரயான்’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆற்றிய பேருரை இது…. நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (ஆகஸ்ட் 2013)
$$$