மகாவித்துவான் சரித்திரம் – 2(8)

-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்

8. திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்றம்

விருத்தமும் கீர்த்தனமும்

பின்பு இப்புலவர் கோமான் தஞ்சையிலிருந்து பட்டீச்சுரத்திற்கு வந்து அங்கே சில தினம் இருந்தனர். அப்பால் திருவாவடுதுறைக்குப் புறப்படுகையில் முன்பு கூறிய பிரான்மலை ஓதுவார், பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் புதுக்கோட்டை மகாராஜாவாகிய இராமசந்திர தொண்டைமான் மீது இயற்றிய இங்கிலீஷ் நோட்டின் மெட்டுள்ள ஒரு கீர்த்தனத்தைப் பாடிக் காட்டினர். அந்த மெட்டில் ஒரு கீர்த்தனம் சுப்பிரமணிய தேசிகர் மீது செய்ய வேண்டுமென்னும் எண்ணம் இவருக்கு அப்போது உண்டாயிற்று. உடனே ஒரு விருத்தமும், அந்த மெட்டில் ஒரு கீர்த்தனமும் இவர் இயற்றினர். அவை வருமாறு:-

(விருத்தம்)

"தேடுகயி லாயபரம் பரைத்துறைசை மேயநமச்
      சிவாயன் றன்னைக்
கூடுதன்முன் னுள்ளபதி னால்வருமுற் றோன்றலெனக்       கொண்டா ரவ்வா
றூடுதவிர் தரக்கொண்டும் பிற்றோன்ற லெனவுங்கொண்
      டுவக்குங் கோமான்
நீடுபெரும் புகழமைசுப் பிரமணிய குருமணியை
      நினைந்து வாழ்வாம்."

[கூடுதன்னென்றது 16-ஆம் பட்டத்திலிருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகரை. அவருக்கு முன்னும் ஆதீனஸ்தாபகராகிய நமச்சிவாய மூர்த்திக்குப் பின்னும் இருந்த பதினால்வராவார்: (1) மறைஞான தேசிகர், (2) அம்பலவாண தேசிகர், (3) உருத்திரகோடி தேசிகர், (4) வேலப்ப தேசிகர், (5) முற்குமாரசாமி தேசிகர், (6) பிற்குமாரசாமி தேசிகர், (7) மாசிலாமணி தேசிகர், (8) இராமலிங்க தேசிகர், (9) முன் வேலப்ப தேசிகர், (10) பின் வேலப்ப தேசிகர், (11) திருச்சிற்றம்பல தேசிகர், (12) அம்பலவாண தேசிகர், (13) சுப்பிரமணிய தேசிகர், (14) அம்பலவாண தேசிகரென்பவர்கள். பிற்றோன்றலென்றது சின்னப்பட்டத்திலிருந்த நமச்சிவாய தேசிகரை.)

(கீர்த்தனம்)

ராகம் - கமாசு; தாளம் - ஆதி தாளம்.

பல்லவி)

துங்கஞ்சார் தருதுறை சையில்வளர்
சுப்பிர மணிய தயாநிதியே
துன்றும்பே ரருணனி பொழிதரு
சுத்தமெய்ஞ் ஞான கலாநிதியே

(அனுபல்லவி)

தூய நயசுகு ணக்கடலே
நேய வுயிர்மரு வற்குடலே
தொண்டென்றுங் கொண்டின்பம் கண்டென்றும்
பண்பொன் றினர்நிறை       (துங்கம்)

(சரணங்கள்)

1. மெய்கண்டான் சந்ததி யென்றும்
      விளங்கவி ராவிய சூரியனே
மெய்யொன்றா தாழ்பர சமயரை
      வென்றுநி லாவிய வீரியனே
வைகுங்கா மாதிய கரிசில்
      வளத்தவ ரேபெறு காரணனே
வையந்தா னாதிய பலவு
      மறுத்தவை மேலொளிர் பூரணனே
மாண்பார் புலவர்சி காமணியே
      காண்பார் பரவுசிந் தாமணியே
மஞ்சொன்றுங் கஞ்சந்தங் கஞ்சம்புஞ்
      சங்கொண் டொளிர் தரு       (துங்கம்)

2. அடியார்தங் குறைமுழு தொழிதர
      ஆரருள் புரிகரு ணாலையனே
அலரேவா னிடைமரு வியபகை
      ஆதியி னாளுறு மாலையனே
கடியாரும் உறுகழு நீர்மலர்
      காமுறன் மேயபு யாசலனே
கருதாதா ரொருவரு மிலையென
      ஓர்பவர் பாசம்வெல் பூசலனே
கமழ்சித் தாந்தசை வப்பொருளே
      தமிழிற் காந்தனி மெய்த்தெருளே
கம்பங்கொன் றன்பென்றுந் தங்குஞ்சம்
      பந்தந் தந்தருள்       (துங்கம்)

3. வந்தெங்கும் பசுமுகில் தவழ்தரு
      மாகயி லாயப ரம்பரையாய்
மன்றின்கண் தனிநட நவில்பவ
      மாறலி லாகம நூலுரையாய்
நந்தொன்றுங் குழைமறை தரவகன்
      ஞாலம்வி ராயப ரம்பரனே
நங்கஞ்சுந் திருவடி வுளைமல
      நாளுமி லாமைநி ரம்பரனே
பரவமு தேயெனும் வானவனே
      குரவர்சி காமணி யானவனே
பந்தந்தங் கும்பண்பின் றென்றென்றுஞ்
      சென்றந் தணர்புகழ்       (துங்கம்)

[அனுபல்லவி: தொண்டு – கைங்கரியத்தை. சரணம்: (1) வையம் ஆதிய – பிருதிவி முதலிய தத்துவங்கள். அஞ்சம் – அன்னப் பறவை கள். புஞ்சம் கொண்டு – கூட்டம் கொண்டு. (2) அலர் ஏவான் – மன்மதன். மாலை – இயல்பு. கழுநீர் மாலை ஆசிரியர்களுக்கு உரியது. கம்பம் – நடுக்கத்தை. (3) நந்து – சங்கம், நங்கு – பழிப்பு.]

திருவாவடுதுறைக்கு வந்தது

அப்பாற் பரிவாரங்களுடன் இவர் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். வந்தவுடன் அவ்விருத்தத்தையும் கீர்த்தனத்தையும் சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பிக்கும்படி செய்தார். கேட்ட அவருக்கும் திருக்கூட்டத்தாருக்கும் அவை இன்பத்தை விளைவித்தன. மடத்திலுள்ள முதியவர்கள், தேசிகர் இரவில் ஆலயம் சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வந்து ஒடுக்கத்திற் பீடத்தில் வீற்றிருந்து அடியார்களுக்கு விபூதிப்பிரசாதம் அளிக்கும்பொழுது மேற்கூறிய கீர்த்தனத்தைப் பாடச்செய்ய விரும்பினார்கள். அவ்வண்ணமே ஓதுவார்கள் நாள்தோறும் அச்சமயத்திற் பாடி வருவாராயினர்.

சுப்பராய செட்டியார் கடிதம்

ஒருநாள் நாங்கள் பாடங்கேட்டுக் கொண்டிருந்த பொழுது சென்னையிலிருந்த சுப்பராய செட்டியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், “நான் திருச்சிராப்பள்ளியில் தங்களிடம் படித்துக் கொண்டிருக்கையில் வெஸ்லியன் மிஷன் ஸ்கூலில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் மாதச் சம்பளமாகிய ரூபாய் பதினைந்தைத் தங்களிடம் கொடுத்து வந்தனம் செய்து பெற்றுக்கொண்ட பொழுது தாங்கள் இந்தப் பதினைந்தைத் திரும்பவைத்தால் என்ன தொகையோ அதனைப்பெற்று வாழ்ந்திருக்க வேண்டுமென்று அருளிச்செய்தீர்கள். அந்தப்படியே தங்களுடைய பெருங்கருணையினால் எனக்கு இன்று ரூ. 50 சம்பளம் ஏற்பட்டது” என்று தெரிவித்திருந்தார். இவருடைய நல்வாக்குப் பலிதமாகுமென்பதைச் சிலராற் கேட்டிருந்த நாங்கள் அக்கடிதத்தால் அச்செய்தி உண்மையென்று அறிந்து மகிழ்ந்தோம்.

திருமாளிகைத் தேவர் பூஜை

ஒருதினம் மடத்திற் பகற் போசனம் ஆன பின்பு இவர் மடத்தின் முகப்பிலிருக்கையில் மடத்திற்குள்ளே மணியோசை கேட்டது. அந்த ஓசைக்குக் காரணம் என்ன வென்று அங்கே உள்ளவர்களை இவர் வினாவியபொழுது திருமாளிகைத் தேவருக்கு நடக்கும் பூஜாகாலத்தில் அடிக்கப்படும் மணியோசை யென்று சொன்னார்கள். அப்பொழுது இவர் சுப்பிரமணிய தேசிகருக்கு,

“பேசு புகழ்ச்சுப் பிரமணிய தேசிகன்பொன்
வீசு கழற்கடியேன் விண்ணப்பம் - நேசம்
வருதிரு மாளிகைத்தே வன்பூசை யாயே
கருதுபந்தி யாதல்வழக் கம்”

என்னும் வெண்பாவை எழுதுவித்தனுப்பினார்.

மடத்திற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் திருமாளிகைத் தேவருக்குப் பூஜை செய்பவர் ஆதிசைவராதலால் ஸ்ரீ கோமுத்தீசுவரர்க்கு உச்சிக்காலமான பின்பு அர்ச்சகர் அங்கே வந்து பூஜைசெய்வது வழக்கம். அன்றைத்தினம் என்ன காரணத்தாலோ கோயிலில் தாமதித்து உச்சிக்காலம் நடந்தமையின் அவர் அகாலத்தில் வந்து பூசிப்பாராயினர்.

இப்பாட்டைக் கேட்டவுடன் மறுநாள் தொடங்கிக் காலையிலேயே வந்து பூஜை செய்யும்படி தேசிகர் ஸ்ரீ கோமுத்தீசுவரர் கோயில் அர்ச்சகர்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டார். அவர்கள் அங்ஙனமே செய்வாராயினர். அப்படியே இன்றும் நடைபெற்று வருகின்றது.

இரத்தினம்பிள்ளையின் உதவி

முன்பு அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழை அரங்கேற்றிய பொழுது இவருக்கு மடத்திலிருந்து போடப்பட்ட ஏறுமுக உருத்திராட்ச கண்டியானது பணத்திற்கு முட்டுப்பாடு வரும்போதெல்லாம் அடகு வைக்கப்பட்டிருக்கும்; பணங்கிடைத்தபின் கடன்காரர்களிடத்தில் வட்டியும் முதலுங் கொடுத்து மீட்கப்படும். அந்தப்படியே அது மாயூரத்தில் ஒருவரிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது. புராணம் அரங்கேற்றுவதற்காகத் திருப்பெருந்துறைக்குப் போகும்பொழுது அதனை மீட்டுத் தரித்துக் கொள்ளவேண்டுமென்று நாங்கள் தெரிவித்துக்கொண்டோம். அப்போது கையிற் பணம் இல்லாமையால் கடன் வாங்கி மீட்பதற்கு இவர் தீர்மானித்தார். சோழன்மாளிகை இரத்தினம் பிள்ளையிடம் ரூ. 300 வாங்கிவர வேண்டுமென்றும் திருப்பெருந்துறைப்புராணம் அரங்கேற்றி வந்தவுடன் அத்தொகையை வட்டியுடன் தாம் சேர்ப்பித்து விடுவதாகச் சொல்லவேண்டுமென்றும் கூறி என்னை அவரிடம் அனுப்பினார். அப்படியே நான் போய்த் தெரிவித்தவுடன் அத்தொகையை அவர் கொடுத்தார்.

நான் அதனைப் பெற்றுக்கொண்டு புறப்படுங் காலத்தில் அவர், “இத்தொகையை ஐயா அவர்களிடம் மீட்டும் பெறுவதாக எனக்கு உத்தேசமே இல்லை. ஏதாவது என்னால் இயன்றதை அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு நெடுநாளாக இருந்தது. அந்த எண்ணத்தைப் பூர்த்தி பண்ணும்படி நேர்ந்த இந்தச் சமயத்துக்கு என்னுடைய வந்தனத்தைச் செலுத்துகிறேன். என்னுடைய வேண்டுகோளை அவர்களிடம் ஸமயம் பார்த்துத் தெரிவிக்க வேண்டும்” என்று சொல்லி என்னை விடுத்தனர். நான் மீண்டு வந்து அவருடைய வேண்டுகோளைத் தெரிவித்ததுடன் தொகையையும் இவரிடம் சேர்ப்பித்தேன். அத்தொகையைக் கண்டு இரத்தினம் பிள்ளையினுடைய அன்பின் மிகுதியை நினைந்து நன்றி பாராட்டி அவருக்கு ஒருகடிதம் எழுதுவித்தார்; வழக்கம்போலவே அக்கடிதத்தின் தலைப்பில் எழுதிய செய்யுள் வருமாறு:

(விருத்தம்)  

“சீர்பூத்த விசும்பினிடை யொருபோகிக் குரியபணி செய்து மேவும்
நீர்பூத்த விரத்தினமோ பழசையிடைப் பலவாய நியம மேய
வார்பூத்த வொருதனியோ கிக்குரிய பணிகள்பல வயங்கச் செய்யும்
ஏர்பூத்த விரத்தினமோ எதுசிறந்த தறிந்துரைமின் இயல்வல் லோரே”

[ஒரு போகி – இந்திரன். நீர்பூத்த இரத்தினம் – சிந்தாமணி. பழசை – பழையாறு. பலவாய நியமம் – பல கோயில்கள்; அவை திருப்பட்டீச்சுரம் முதலிய ஊர்களிலுள்ள சிவாலயங்கள்; நியமம் என்பதற்கு ஒழுக்க மென்பது மற்றொரு பொருள். தனியோகி – சிவபெருமான். பணிகள் – திருப்பணிகள். இரத்தினம் – இரத்தினம் பிள்ளை. அவர் மேற்கூறிய கோயில்களுக்குத் தருமகர்த்தாவாக இருந்து வருவாயை விருத்தி செய்து திருப்பணிகளையும் இயற்றி நித்திய பூஜை முதலியவற்றையும் ஒழுங்காக நடத்திக் கும்பாபிஷேகங்களும் செய்வித்தமையின் இங்ஙனம் கூறப்பெற்றார்.]

இரத்தினம் பிள்ளை அளித்த அத்தொகையைக் கடன் வாங்கினவரிடம் சேர்ப்பித்துக் கண்டியை மீட்டு இவர் தரித்துக் கொண்டனர்.

திருப்பெருந்துறைக்குப் புறப்பட்டது

ஒரு நல்ல தினம் பார்த்துத் தேசிகரிடம் விடைபெற்றுக் கொண்டு திருவாதிரைத் தரிசனத்துக்கு இவர் திருப்பெருந்துறை போய்ச் சேரவேண்டுமென்ற எண்ணத்துடன் ஸ்ரீமுக ஆண்டு மார்கழி மாதத்தின் முதலிற் (1873 டிஸம்பரில்) புறப்பட்டனர். கூடவே சென்றோர் பழனிக்குமாரத் தம்பிரான், அரித்துவாரமங்கலம் சோமசுந்தர தேசிகர், சுப்பையா பண்டாரம், கும்பகோணம் பெரியண்ண பிள்ளை, *1 சவேரிநாதபிள்ளை, தில்லை விடங்கன் வேலுஸாமி பிள்ளை முதலியோர். நானும் சென்றேன்.

செல்லும்பொழுது திருவிடைமருதூர்க் கட்டளை மடத்தில் தங்கி அங்கேயிருந்த நெல்லையப்பத் தம்பிரானென்பவரால் உபசரிக்கப்பெற்றார். அப்பாற் புறப்பட்டு மேற்கே சாலைவழியிற் செல்லும்பொழுது, “ஏதாவது படித்துக்கொண்டுவரலாமே” என்று சொன்னார். கையில் வெங்கைக்கோவை ஏட்டுப் பிரதியிருந்தமையால் அதனைப் படித்துப் பொருள்கேட்டுக்கொண்டே சென்றோம். இவர் அதிலுள்ள நயங்களைச் சுவைபட எடுத்துக்காட்டியதுடன் நூலாசிரியருடைய பெருமைகளை இடையிடையே பாராட்டிக்கொண்டும் வந்தார்.

ஒரு பழைய நண்பர்

அங்ஙனம் செல்லுகையில், கும்பகோணத்திற்குக் கிழக்கே அஞ்சுதலை வாய்க்காலின் தலைப்புள்ள இடத்தை யடைந்தவுடன் அவ்விடத்தில் ஒரு முதியவர் எதிரே வந்தார். அவருக்குப் பிராயம் சற்றேறக்குறைய அறுபத்தைந்து இருக்கலாம். அவர் ஒரு பெரிய மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டும் எண்ணெய்க் கலயமொன்றைக் கையில் எடுத்துக்கொண்டும் வந்தார்.

அவர் இவரைக்கண்டு விரைவாக அருகில் வந்து, “என்னப்பா மீனாட்சிசுந்தரம்! செளக்கியமாக இருக்கிறாயா?” என்றார்.

“நீ செளக்கியந்தானா? எங்கே போகிறாய்?” என்று இவர் கேட்கவே அவர், “நீ மிகுந்த சிறப்போடு விளங்குகிறாயென்பதைப் பலபேர் சொல்லக் கேட்டுச் சந்தோஷமடைந்து கொண்டே இருக்கிறேன். நீ நல்ல புண்ணியசாலி. அநேகம் பேர்களுக்குப் பாடஞ் சொல்லுகிறாயென்றும் கேள்விப்பட்டேன். இன்னும் நல்ல செளக்கியத்திலி ருக்கும்படி உன்னைச் செய்விக்க வேண்டுமென்று தாயுமானவரைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருக்கிறேன். நான் உன்னோடு படித்தவன்தான்; என் அதிர்ஷ்டம் இப்படி இருக்கிறது. என் மகளுக்குப் பிரஸவகாலமாம்; அதற்கு வேண்டிய மருந்துகளை நானே வாங்கி வரவேண்டுமென்று மருமகப்பிள்ளை எழுதினார்; அதற்காக எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறேன். என்ன செய்வேன்! திருச்சிராப்பள்ளி எங்கேயிருக்கிறது? மாப்பிள்ளை ஊர் எங்கேயிருக்கிறது பார்! ஊரைவிட்டுப் புறப்பட்டு மூன்று நாள் ஆய்விட்டன. வழியில் தங்கித் தங்கி வருகிறேன்; என் கஷ்டத்தை நான்தானே அனுபவிக்கவேணும். மறுபடி ஒருசமயம் வந்து உன்னைப் பார்க்கிறேன். நீ எங்கேயோ ஒரு முக்கியமான காரியமாகப் பலபேரோடு போகிறாயென்று தோன்றுகிறது; நல்லது, போய்வா” என்று சொல்லி இவரிடம் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்.

மீனாட்சிசுந்தரமென்று அவர் அழைத்ததைக் கேட்ட நாங்கள் இவரோடு இந்த மாதிரி ஒருமையாகப் பேசி அளவளாவினவர்களை அதுவரையில் பார்த்திராமையால் வியப்புற்று அவரை இன்னாரென்று தெரிந்துகொள்ளுதற்கு நினைந்து இவருடைய முகத்தைப் பார்த்தோம்; அந்தக் குறிப்பை இவர் அறிந்து, “இவர் என் தகப்பனாரிடத்தில் என்னோடு பள்ளிக்கூடத்திற் படித்துக் கொண்டிருந்தவர். தொண்டை மண்டல வேளாளர். நான் திரிசிரபுரம் வந்த பின்பு அடிக்கடி நூதனமாகப் பெற்றுள்ள ஏட்டுச் சுவடிகளை வாங்கி வாங்கிச் சென்று அதி சீக்கிரத்தில் முற்றும் படித்துவிட்டு ஜாக்கிரதையாகத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அந்நகரத்தில் இருந்தவரையில் நான் படித்த புத்தகங்களை யெல்லாம் தவறாமல் ஒவ்வொன்றாக வாங்கிச்சென்று படித்தவர் இவர். ஒரு நூலுக்காவது இவருக்குப் பொருள் தெரியாது. பொருள் தெரிந்துகொண்டு படிக்கவேண்டு மென்ற விருப்பமும் இவருக்கு இல்லை. சில சமயங்களில் நான் சந்திப்பதுண்டு. இப்படியே பேசி முடிப்பார். இவரது வறுமை நிலையை உத்தேசித்து ஏதேனும் நான் கொடுக்க முயன்றால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டு விரைந்து சென்று விடுவார். அதைக் குறித்துப் பேசத் தொடங்கினாற் கோபமும் அவருக்கு வந்துவிடும். ஒருபொழுதும் நானிருக்கும் இடத்திற்கு அவர் வந்ததுமில்லை; ஏதாவதொன்றை என்னிடம் பெற்றுக்கொண்டதுமில்லை. பிறரிடத்தும் அப்படியே. அதனால்தான் இப்பொழுது நான் ஒன்றும் கொடுக்கத் துணியவில்லை. கபடமில்லாத மனத்தினர். நல்ல குணமுடையவரே. இளமையிற் பேசியது போலவே அவர் ஒருமையாகப் பேசுவது எப்பொழுதும் வழக்கம்” என்று அன்புடன் சொன்னார்.

வழியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்

அப்பாற் கும்போணம், பாபவிநாசம், தஞ்சாவூர், முத்தாம்பாள்புரம் (ஒரத்தநாடு), பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, காலகம் என்னும் ஊர்கள் வழியே சென்று திருப்பெருந்துறையை இவர் அடைந்தார்.

சில சமயங்களில் வண்டியினின்றும் இறங்கி நாங்கள் சாலையிலே நடந்து செல்லுவோம்; அப்போது பாடங் கேட்டுக்கொண்டும் போவோம். முத்தாம்பாள்புரத்தில் முன்பு தஞ்சை அரசரால் ஏற்படுத்தப்பட்டிருந்த பெரியதொரு தர்ம ஸ்தாபனத்தில் தமிழ்ப் பாடம் சொல்லுதற்கு உபாத்தியாயராக நியமிக்கப்பெற்றிருந்தவரும் திருக்கண்ணபுர ஸ்தலபுராணம் முதலியவற்றைச் செய்தவருமாகிய வித்துவான் நாராயணசாமி வாத்தியார் என்பவருடைய குமாரர் வந்து இவருக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய சௌகரியங்களைச் செய்வித்தனர்.

இடையிலே உள்ள இடங்களுக்குச் சென்றபோது இவருடைய வரவையறிந்து அங்கங்கேயுள்ள தமிழபிமானிகள் வந்து வந்து, “இங்கே சிலதினமிருந்து எங்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும்” என்று குறையிரந்தார்கள். “திருவாதிரைத் தரிசனத்திற்குத் திருப்பெருந்துறைக்குச் செல்லுகிறேன். அங்கே சிலதினம் இருப்பேன். இருந்துவிட்டுத் திரும்பிவரும்போது நேர்ந்தால் இங்கே தங்கிச் செல்வேன்; இப்போது அவகாசமில்லை” என்று அவரவர்களுக்கு ஸமாதானம் கூறினர்.

*2 வேம்பத்தூர்ப் பிச்சுவையர்

அப்பால் திருப்பெருந்துறையை அடைந்து அதன் தெற்கு வீதியிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இவர் பரிவாரங்களுடன் தங்கினார். இவர் அங்கே வந்து விட்டதை ஸ்ரீ ஆத்மநாதஸ்வாமி கோயிற் கட்டளை ஸ்தானத்திலிருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தம்பிரானுக்குத் தெரிவிப்பதற்குப் பழனிக்குமாரத் தம்பிரானும் நானும் கட்டளை மடத்திற்குச் சென்றோம். அப்பொழுது மடத்தின் வெளியே உள்ள ஒரு மண்டபத்தில் நாட்டுக்கோட்டை நகரத்துத் தனவைசிய கனவான்கள் சிலரோடும், வேம்பத்தூர்ப் பிச்சுவையர் முதலிய தமிழ்ப்பண்டிதர்களோடும் இருந்து வன்றொண்டச் செட்டியார் பேசிக்கொண்டிருந்தார். பிச்சுவையர் பாடல் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். அதைக் கவனித்த என்னை நோக்கி, “இவர்தாம் வேம்பத்தூர்ப் பிச்சுவையர்” என்று பழனிக்குமாரத் தம்பிரான் தெரிவித்தனர். அவர் பாடல் சொல்லுதலைக் கேட்டுக்கொண்டே சிறிது நேரம் நின்றுவிட்டு உள்ளே சென்று சுப்பிரமணிய தம்பிரானைப் பார்த்துப் பிள்ளையவர்கள் வந்திருப்பதை நாங்கள் தெரிவித்தோம். இவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்த அவர் அதனைக்கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அச்சமயத்தில்,

(வெண்பா) 

"இன்றொண்டர் சூழ எழிலார்நின் சேவைசெய
வன்றொண்ட ரோடுகன வான்கள் சிலர் - இன்றொண்டு
பித்தற்கே செய்சுப் பிரமணிய நின்னோலக்
கத்திலே வந்திருந்தார் கள்"

என்னும் பாடலைச் சொல்லிக்கொண்டே பிச்சுவையர் வந்தார்; அவருடனிருந்த மற்றவர்களும் வந்தார்கள்.

வன்றொண்டர் முதலியவர்கள் வந்து வந்தனம் செய்து தம்பிரானிடம் விபூதிப்பிரசாதம் பெற்றுக்கொண்டார்கள். பிச்சுவையர் நிமிஷப்பொழுதிற் கவிசெய்யும் ஆற்றலைக் குறித்து வியந்து கொண்டே நாங்கள் இக்கவிஞர்பிரான் இருந்த விடுதிக்குச் சென்றோம்.

அவ்விடத்திற் கோயிலார் மரியாதையுடன் வந்து பிரசாதங்களை இவரிடம் கொடுத்துத் தரிசனத்திற்கு வரவேண்டுமென்று அழைத்தார்கள். உடனே இவர் ஆலயத்துக்குச் சென்றார். சுப்பிரமணிய தம்பிரான் அங்கே வந்து இவரை வரவேற்று முன்னே நின்று தரிசனம் செய்வித்தார். அன்றைத் தினம் திருவாதவூரடிகள் கொண்டருளியிருந்த மந்திரிக்கோலக் காட்சி எங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.

தரிசனமான பின்பு பிள்ளையவர்களுக்குத் தம்பிரானவர்களாற் காளாஞ்சிகள் கொடுக்கப்பெற்றன. அவற்றை இவர் வாங்கி வேறொருவரிடம் கொடுப்பதற்குத் திரும்பினார். உடனே அங்கே நின்ற வேம்பத்தூர்ப் பிச்சுவையர் வந்து அவற்றை அன்புடன் வாங்கிக்கொண்டனர்; அவரைக்கண்டு இவர், “துவடுக நாததுரை எப்பொழுது வந்தது?” என்று கேட்டனர்.

*3 ‘துவடுக நாததுரை’ என்று அவரைச் சொன்னதன் காரணத்தை நாங்கள் இவரிடம் பின்பு கேட்டுத் தெரிந்து கொண்டோம். அப்பால் இவர் தமக்கு அமைத்திருந்த விடுதிக்குச் சென்றார். இவருடைய வரவைக் கேட்டதும் அங்கே திருவிழாவிற்கு வந்திருந்த பண்டிதர்கள் பலர் வந்து பார்த்து ஸல்லாபஞ் செய்து கொண்டு உடனிருந்தார்கள்.

மறுநாட் காலையிற் பிச்சுவையர் தாம் ஆலவாயடிகள் திறத்துச் செய்திருந்த நிரோட்டக யமகவந்தாதியை இவரிடம் படித்துக்காட்டிப் பொருள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, “இது பிழை, அது பிழை” என்று உடனிருந்த *4 பழனிக்குமாரத் தம்பிரான் அடிக்கடி ஆட்சேபஞ் செய்தனர். பிச்சுவையர் உடனுடன் அந்தப் பதங்களை மாற்றி மாற்றி வேறு வேறு பதங்களை யமைத்துச் சிறிதும் வருத்தமின்றி முடித்துக்கொண்டே வந்தார். இதைக் கண்ட இக்கவிஞர்கோமான் தம்பிரானை நோக்கி, “சாமீ, நிரோட்டகத்தில் யமகமாகப் பாடல்கள் செய்திருக்கும் அருமையைச் சிறிதும் பாராட்டாமல் ஒவ்வொரு பாடலிலும் பல ஆட்சேபங்கள் செய்துகொண்டே செல்வது நன்றாக இல்லை. ஆட்சேபிக்க ஆட்சேபிக்க ஆலோசனை செய்யாமல் உடனுடன் வேறு பதங்களை அமைத்து விரைவில் இவர் முடித்து விடுவதைப் பார்த்து இவருடைய திறமையைப்பற்றி வியக்க வேண்டாமா? மேலே சொல்லும்படி தாராளமாக விட்டுவிடுக. ஊக்கத்தைக் குறைக்கக்கூடாது” என்று சொல்லவே அவர் ஆட்சேபியாமல் சும்மா இருந்துவிட்டனர். பின்னர் அந்நூல் முற்றும் படித்துக் காட்டப்பெற்றது.

இப்படியே வந்தவர்களுள் ஒவ்வொருவரும் தினந்தினம் தாங்கள் செய்துவைத்திருந்த நூல்களை இவரிடம் படித்துக் காட்டித் திருத்திக்கொண்டனர். இவரும் சலிப்பில்லாமற் கேட்டு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி ஆதரித்து வந்தார்.

அங்கே வந்திருந்த சிங்கவனம் சுப்புபாரதியார் முதலியவர்களிடம் ஆகாரம் முதலிய விஷயங்களிற் கவனித்துக் கொள்ளும்படி இவர் என்னை ஒப்பித்தனர்.

சின்னச்சாமி வீரப்பனானது

பின்பு கட்டளை மடத்தின் கீழ்புறத்திலுள்ள ‘சவுகண்டி’யில் இவருக்கு இருப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே இவர் பரிவாரங்களுடன் இருந்து வருவாராயினர். சின்னச்சாமி படையாச்சியென்ற மடத்து வேலைக்காரனொருவன் திருவாவடுதுறை மடத்திலிருந்து இவருடன் அனுப்பப்பட்டிருந்தான். அந்த வேலைக்காரனைத் தவசிப்பிள்ளைகள், “அடே சின்னச்சாமி” என்று அடிக்கடி கூப்பாடு போட்டு அழைத்தலையும், “அங்கே போடா, இங்கே வாடா” என்று சொல்லுதலையும் கேட்ட இவர் அவர்களை அழைத்து, “இங்கே கட்டளைச்சாமியைப் பெரியசாமி யென்றும் உதவியாக இருந்துவரும் ஸ்ரீகாசிநாதசாமியைச் சின்னச்சாமியென்றும் ஸ்தலத்தார் மரியாதையாக வழங்கி வருவது உங்களுக்குத் தெரியுமே. ஆதலால் அவனை இன்று முதல் சின்னச்சாமி யென்றழையாமல் வீரப்பனென்றழையுங்கள்” என்று சொன்னார்; அன்றியும் அவனை அழைத்து, “உன்னை இன்று முதல் சின்னச்சாமியென்று அழைக்க மாட்டார்கள்; வீரப்பனென்றே அழைப்பார்கள்; அழைக்கும்போது நீ ஏனென்று கேட்டு, சொன்ன வேலைகளைச் செய்ய வேண்டும்” என்று அறிவித்தார். அதுமுதல் அவன் அவ்வாறே அழைக்கப்பட்டுப் பார்க்க வேண்டிய வேலைகளைப் பார்த்து வந்தான். இதனால் இவருடைய கவனம் ஒரு சிறு விஷயத்திலும் செலுத்தப்பட்டமை விளங்குகின்றது.

புராண அரங்கேற்ற ஆரம்பம்

நல்லதினத்திற் புராணம் அரங்கேற்ற ஆரம்பிக்கப் பெற்றது. அப்போது தம்பிரானவர்கள் பல இடங்களுக்குச் சொல்லியனுப்பினமையால் சமீபமான இடங்களிலிருந்த சில ஜமீன்களின் பிரதிநிதிகளும், சேர்வைகாரர்கள் முதலியவர்களும், பெரிய மிராசுதார்களும், புதுக்கோட்டை அறந்தாங்கி முதலிய இடங்களில் இருந்த உத்தியோகஸ்தர்களும், பண்டிதர்கள் பலரும் வந்து கூடினார்கள்.

குறிப்பிட்டிருந்த நல்ல முகூர்த்தத்தில் திருப்பெருந்துறைப் புராணத்தின் ஏட்டுப்பிரதியை ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமியின் திரு முன்பு பீடத்தில் வைத்துப் பூசித்துப் பிள்ளையவர்களிடம் *5 ஒரு நம்பியார் கொண்டுவந்து கொடுத்தனர். விபூதிப் பிரசாதத்தைக் கொடுத்து மாலை சூட்டிச் சிரத்திற் பட்டுக்கட்டுவித்த பின்பு இவரை உபசாரத்துடனழைத்து வந்து *6 குதிரைஸ்வாமி மண்டபத்தில் இருக்கச்செய்து தொடங்கச்சொன்னார்கள். இவர் கட்டளைப்படி முதலிலிருந்து பாடல்களை நான் படித்தேன். ஒவ்வொன்றற்கும் அழகாகப் பதசாரஞ் சொல்லி இவர் உபந்யசித்தார். கேட்டு எல்லோரும் இன்புற்றார்கள்.

சுப்பிரமணிய தம்பிரானது கோபம்

நாள்தோறும் பகல் மூன்று மணி தொடங்கி ஐந்துமணி வரையில் அரங்கேற்றுதல் நடைபெறும். நாகபட்டினத்திலிருந்து வந்து அந்தத் தலத்தில் வாசஞ்செய்துகொண்டிருந்தவர்களும் வடமொழி தென்மொழிகளிற் பயிற்சியுள்ளவர்களும் சிவபக்தியுடையவர்களுமாகிய சைவச் செல்வர்களிருவரும் வன்றொண்டர் முதலியோரும் நாள்தோறும் தவறாமல் வந்து வந்து மற்றவர்களுடன் கேட்டுக்கேட்டு மகிழ்ச்சியுறுவார்கள். ஒருநாள் வழக்கப்படி எல்லோரும் வந்தும் வன்றொண்டரும் மேற்கூறிய இருவரும் வருவதற்குத் தாமதித்தமையால் அவர்கள் வரும்வரையில் படிக்கத் தொடங்கவேண்டாமென்று இக்கவிஞர் கோமான் சொன்னார்; அதனால் நான் படிக்கத் தொடங்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வந்தார்கள். வந்தவுடன் புராணப் பிரசங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அங்ஙனம் தாமதித்ததில் சுப்பிரமணிய தம்பிரானுக்கு இவர்மீது மிகுந்த கோபமுண்டாகிவிட்டது. வாசித்து முடியும்வரையில் பூமியை நோக்கிக்கொண்டே ஒருமாதிரியாக இருந்து நிறுத்தியவுடன் ஒன்றும் பேசாமல் திடீரென்று எழுந்து சென்றுவிட்டார். போனதுமுதல் இவரிடம் பேசவேயில்லை

வழக்கப்படியே மறுநாள் அரங்கேற்று மண்டபத்திற்கு இவர் சென்றார். புத்தகத்தை எடுத்துக்கொண்டு நான் இவருடன் சென்றேன். அங்கே பலர் காத்திருந்தார்கள். தம்பிரானவர்கள் வரவில்லை. இன்ன காரணத்தால் வரவில்லையென்று தெரியாத இவர் புராணப் பிரசங்கத்தைத் தொடங்காமல் அழைத்து வருவதற்கு அவரைத் தேடிச் சென்றபொழுது அவர் கோயிலின் பின்புறத்தில் நடந்துகொண்டிருந்த திருப்பணி வேலையைக் கண்காணித்துக்கொண்டே நின்றார். அங்கே ஸமீபத்தில் போய் இவர் அஞ்சலி செய்து பார்த்தபொழுது ஏறிட்டுப் பாராமலும் யாதொன்றும் பேசாமலும் சரேரென்று அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்குப் போய்விட்டார். தொடர்ந்து செல்ல மனமில்லாமல் இவர் நின்று விட்டார்.

அப்பால் இவருடைய குறிப்பறிந்து நான் மட்டும் அவரிடம் சென்று மனத்திலுள்ள கவலையை முகத்தில் நன்றாகப் புலப்படுத்திக்கொண்டு வாட்டத்தோடு அருகில் நின்றேன். நின்றதை அறிந்த அவர், “என்ன ஐயா! உங்கள் பிள்ளைக்கு மரியாதையே தெரியவில்லை? நான் வந்து காத்திருக்கையில் யாரோ சிலபேர்கள் வரும்வரையிற் பொறுத்திருமென்று சொன்னாரே. அப்படிச் சொல்லலாமா? ஊரார் என்ன நினைப்பார்கள்? என்னை மதிப்பார்களா? அவர் செய்தது என் முகத்திற் கரியைத் தீற்றியதுபோலவே இருந்தது. அவரைப் புராணம் பாடும்படி செய்து அரங்கேற்றுதற்கு வருவித்து உபசரிக்கின்றவன் நானா, அவர்களா?” என்று சொல்லி மண்டபத்திற்கு வாராமல் நின்று விட்டார். அதனால் சிலநாள் வரையில் புராணம் அரங்கேற்றப்படாமல் நின்றிருந்தது. அப்பால் சிலர் வேண்டுகோளால் அவர் சாந்தமடைந்து வழக்கம்போலவே வந்து படிப்பிக்கச்செய்து கேட்டு வருவாராயினர். தம்பிரானுக்குக் கோபம் ஒருவகையாகத் தணிந்தாலும் இப்புலவர்பிரானுக்கு அவர் செய்த அவமதிப்பால் உண்டான வருத்தம் தீரவே இல்லை. அது மனத்தினுள்ளே வளர்ச்சியுற்று வந்தது.

மனவருத்தத்தோடு இயற்றிய செய்யுட்கள்

அது வரையில் புராணத்தில் பாடப்பட்டிருந்த பகுதிகள் அரங்கேற்றப்பட்டு முடிந்து விட்டமையால் மேலே உள்ள பகுதிகள் காலையிற் பாடி மாலையில் அரங்கேற்றப்பட்டு வந்தன. ஒருநாட் காலை தொடங்கி இவர் பாடிவருகையில் அப்புராணத்தின் உபதேசப் படலத்தில் மாணிக்கவாசகர் குருந்தமூல குருமூர்த்தியைத் துதிக்கும் செய்யுட்களைப் பாடும் சந்தர்ப்பம் வந்தமையின் நேரமாகியும் நிறுத்தாமல் மேலே எழுதும்படி செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அப்பொழுது தவசிப்பிள்ளைகள் வந்து ஸ்நானம் செய்வதற்கு வற்புறுத்தி அழைத்தும் எழாமல் துதிப்பாடல்களை ஒரு தடையுமின்றி இவர் சொன்னார்; நான் எழுதிக்கொண்டே வந்தேன். அப்போது இவருக்குத் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக்கொண்டேயிருந்தது. முன்னமேயிருந்த வருத்தமிகுதியே அப் பாடல்களாக வெளிப் போந்ததென்று உடனிருந்தவர்கள் அறிந்து மனமுருகினார்கள். அப்பாடல்கள் வருமாறு:

(ஆசிரிய விருத்தம்)  

1. "தொழுபவ ரொருபால் துதிப்பவ ரொருபால்
      துதித்துளம் நெக்குநெக் குருகி
அழுபவ ரொருபால் இவரெலாம் நிற்க
      அடியனேன் தனைப்பிடித் தாண்டாய்
பழுதில்நின் கருணைத் திறத்தையென் புகல்கோ
      பாண்டிநா டியற்றிய தவத்தால்
கொழுமலர்ச் சோலைத் திருப்பெருந் துறையில்
      குருந்தடி யிருந்தருள் பரனே!"

2. "உள்ளுதோ றிழிபை யுள்ளுபு பவஞ்சத்
      துழிதரூஉ வொதுங்கிய வெனக்கும்
அள்ளுதோ றன்பூ றாக்கையொன் றருளி
      ஆண்டுகொண் டனையிது தகுமே
விள்ளுதோ றப்பா லாய்ப்பொலிந் தோங்கும்
      விமலனே விமலமார் சிந்தை
கொள்ளுதோ றுவக்குத் திருப்பெருந் துறையிற்
      குருந்தடி யிருந்தருள் பரனே!"

3. "வழிவழி யடிமை யுவந்திலேன் மலடு
      மலர்க்கரங் கன்றிடக் கறந்து
கழிதுய ரடைந்து கிடக்கின்ற வெனையும்
      கண்டுகொண் டாண்டதெத் திறமோ
மொழிதடு மாற நெஞ்சநெக் குருக
      முனிவரத் தொடர்பவர் முதலே
கொழிமலர்ப் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
      குருந்தடி யிருந்தருள் பரனே!"

4. "ஏலவே யொருப்பட் டெற்றைக்கும் பாழுக்
      கிறைத்தொரு பயனுமில் லேனைச்
சீலமார் முனிவர் திருக்குழாத் தோடும்
      சேர்த்துநீ யாண்டது தகுமே
காலகா லாகங் காளவே தாள
      கணம்புடை சூழ்தர நடிப்பாய்
கோலமார் செல்வத் திருப்பெருந் துறையிற்
      குருந்தடி யிருந்தருள் பரனே!"

5. "கனிவிள விருக்கக் காய்கவர்ந் துண்ட
   .கள்வனா மென்னையும் பற்றி
முனிவரு முனிவர் கூட்டத்து ளொருசார்
   .முனிவரக் கூடுமா றளித்தாய்
புனிதமென் கனியே புந்தியூ றமுதே
   .பொங்குமா னந்தவான் பெருக்கே
குனிகொடி மாடத் திருப்பெருந் துறையில்
   .குருந்தடி யிருந்தருள் பரனே!"

6. "சுவைபடும் அவல்நீத் துமியுணாக் கொள்ளும்
      தொழுத்தையேன் தனைவலிந் திழுத்து
நவையிலா னந்த வமுதமூட் டினையால்
      நகைவிளைத் திடுமடி யேற்கும்
கவையழ லடைந்த மெழுகென வுருகக்
      கற்றநற் றவருளத் துணையே
குவைமலர்ப் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற் "
      குருந்தடி யிருந்தருள் பரனே!"

7. "திருநெடு மாலன் றொருகரு மாவாய்த்
      திண்புவி பாதல மிடப்புற்
றொருவற முயன்றுங் காணரு மலர்த்தாள்
      ஊத்தையேன் தலைக்கெளி தாமோ
அருமணி விளக்கே யானந்தப் பிழம்பே
      அளிகனிந் தெழுசுவைக் கனியே
குருமணி மாடத் திருப்பெருந் துறையிற்
      குருந்தடி யிருந்தருள் பரனே!"

8. "அண்டரு முனிவர் கணங்களு மற்றை
      யவர்களு நறுமுறுப் படைய
வண்டரு மலர்த்தா ளென்கருந் தலைக்கு
      மணிமுடி யாயதற் புதமே
பண்டரு மொழியாள் பங்கவோ மேலாம்
      பரமவோ பரவியெஞ் ஞான்றும்
கொண்டலின் முழவார் திருப்பெருந் துறையில்
      குருந்தடி யிருந்தருள் பரனே!"

9. "என்னைநான் அறியேன் ஐயகோ பகலோ
      டிரவெனப் படுவதும் அறியேன்
முன்னைநான் செய்த தவமெவ னென்னை
      முழுமதோன் மத்தனாக் கினையால்
அன்னையே அப்பா ஒப்பிலா மணியே
      அடியவர்க் கெய்ப்பினில் வைப்பே
கொன்னைமா மதில்சூழ் திருப்பெருந் துறையிற்
      குருந்தடி யிருந்தருள் பரனே!"

10. "செம்மையொன் றில்லாச் சிறியனேன் கவலை
      தீர்தர யோகநா யகியாம்
அம்மையோ டெழுந்து வந்தினி தாண்டாய்
      ஆன்மநா யகவதற் கடியேன்
இம்மையே செயுங்கைம் மாறெவன் மறுமை
      யேனுமொன் றில்லையென் செய்கோ
கொம்மைமா மதில்சூழ் திருப்பெருந் துறையிற்
      குருந்தடி யிருந்தருள் பரனே!" 

         (உபதேசப்படலம், 70 - 79.)

[யோகநாயகி : இத்தலத்து அம்பிகையின் திருநாமம்; ஆன்ம நாயகர் : ஸ்வாமியின் திருநாமம்.]

ஸ்ரீ மாணிக்கவாசகர் சரித்திரம்

இப் புராணத்தில் மாணிக்க வாசகர் சரித்திரமாகிய திருவாதவூரர் திருவவதாரப் படலம் முதலியன வடமொழியிலுள்ள ஸ்ரீ ஆதிகைலாஸ மாஹாத்மியம், மணிவசன மாஹாத்மியம், திருப்பெருந்துறைப் பழைய தமிழ்ப் புராணங்கள், திருவாதவூரடிகள் புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய இவற்றை ஆராய்ந்தே செய்யப் பெற்றன. அரங்கேற்றுகையில் ஒரு நாள் திருவாதவூரடிகள் புராணத்தை ஆராய்ந்து வருங்காலையில் பாண்டியனுடைய தண்டற்காரர்கள் மாணிக்க வாசகரைத் துன்புறுத்தியபொழுது அவர் மனமுருகிச் சிவபெருமானை நினைந்து முறையிட்டனவாக அமைக்கப்பெற்ற,

(விருத்தம்)

"ஊனுடம் புடைய வாழ்க்கை யொழித்துனக் கடிமை யென்று
மாநிலம் புகலு மாறு வந் துனை யடைந்தேன் றன்னை
மீனவன் றன்பான் மீள விடுத்தனை வேலை நீருள்
ஆனபி னந்நீ ராற்று நீரென வாவ துண்டோ"

"அறத்தனிச் செல்வி பாக வன்பிலே னின்பா லென்று
வெறுத்திடி னடியேற் கிங்கு வேறொரு துணையு மில்லை
செறுத்துயர் புரங்க ளெல்லாஞ் செற்றவ னடியான் றன்னை
நிறுத்தினர் வெயிலி லென்றா னின்புகழ்க் கேற்ற மாமோ"

"வானநா டவர்க்கு மேலோய் வந்துனக் கடிமை யிப்போ
தானநா னிடும்பை யுற்றா லாருனக் கடிமை யாவார்
நானெனா மனத்தார் சொல்லு நல்லுரை யன்றி நின்ற
ஈனனா மொருவன் சொல்வ தேறுமோ வுளத்தி லென்றார்"

          (திருப்பெருந்துறைச் சருக்கம், 131 - 3)

என்னும் பாடல்களைப் படிக்கையிற் கேட்டுக்கேட்டு இவர் மனமுருகினார்; கண்ணீர் உகுத்தார்; அதன் பொருளமைதியையும் நடையழகையும் பக்திச் சுவையையும் பாராட்டியதன்றி அந் நூலாசிரியர் அகத்திய முனிவருடைய அருள் பெற்றவரென்றும் அதனாலேதான் அந்நூற் செய்யுட்கள் அவ்வளவு சுவையுள்ளனவாக அமைந்திருக்கின்றனவென்றும் சொன்னார்.

ஆத்மநாத பாகவதர்

அந்த ஸ்தலத்தில் ஆத்மநாத பாகவதரென்று ஒருவர் இருந்தார். அவர் சிவகங்கை ஸமஸ்தானத்தைச் சார்ந்த பெருங்கரை யென்னும் ஊரிலிருந்த கவிகுஞ்சர பாரதியாரின் மருகர்; ஒவ்வொரு நாளும் மாலையில் பூஜாகாலத்தில் ஆத்மநாத ஸ்வாமியின் ஆலயத்தில் கீர்த்தனங்கள் முதலியவற்றைப் பாடும் பணியைப் பெற்றவர்களுள் ஒருவர்; சிவபக்தி வாய்ந்தவர்; அவர் சாரீரம் யாதொரு தடையுமின்றி மூன்று ஸ்தாயிகளிலும் செல்லும் வன்மையுடையதாதலின் அவர் வஜ்ரகண்ட பாகவதரென்றும் கூறப்படுவார். அவர் இக் கவிஞர்பிரானிடம் அடிக்கடி வந்து போவதுண்டு. அக்காலங்களில் கவி குஞ்சர பாரதியாரியற்றிய கந்தபுராணக் கீர்த்தனத்திலிருந்து சில கீர்த்தனங்களையும் வேறு கீர்த்தனங்கள் சிலவற்றையும் இவருடைய விருப்பத்தின்படி பாடிக் காட்டுவார். இவர் கேட்டு இன்புற்று அனுப்புவார். உடனிருப்பவர்களும் கேட்டு மகிழ்வதுண்டு. இங்ஙனம் அக்காலத்தில் வந்து பாடி மகிழ்வித்துச் செல்லும் ஸங்கீத வித்துவான்கள் அங்கே சிலர் இருந்தனர்.

சுப்பு பாரதியாருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது


ஒருநாள் சிங்கவனம் சுப்பு பாரதியார் தாம் இயற்றிய மதுரைச் சுந்தரேசர் நெஞ்சமாலை முதலிய மூன்று நூல்களை இவரிடம் படித்துக்காட்டித் திருத்தஞ்செய்துகொண்டு அவற்றிற்குச் சிறப்புப்பாயிரங்களையும் பெற்றுச் சென்றார். அவற்றுள் நெஞ்சமாலையின் சிறப்புப்பாயிரம் மட்டும் கிடைத்தது; அது வருமாறு:

(கட்டளைக் கலித்துறை)

"ஆரதித் தன்மைய தென்றுரைப் பாரிவ் வகிலத்துளோர்
நாரதி யாய திதைப்படித் தென்பர்பன் னாவலரும்
பேரதி கார முதல்யாவுந் தேர்சுப் பிரமணிய
பாரதி கூட லிறைநெஞ்ச மாலை பகர்ந்தனனே."

[அது இத்தன்மையது என்று உரைப்பார் ஆர். நார்அதி ஆயது – அன்பு அதிகரித்தது. பேரதிகாரம் – தொல்காப்பியம் முதலியவை.]

சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் சிறப்புப்பாயிரம்

தஞ்சைச் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரென்பவர் வந்து சில தினமிருந்து திருப்பெருந்துறைப்புராணப் பிரசங்கத்தைக் கேட்டு இன்புற்று ஒன்பது பாடல்களைச் சிறப்புக் கவிகளாகச் செய்து சபையிற் படித்துக்காட்டிச் சென்றனர். அவற்றுள் இவரைப் பற்றிப் பாராட்டிய பாடல்களுள் ஒன்று வருமாறு:

(ஆசிரிய விருத்தம்) 

"நாற்கவியாம் நாற்படையா லழுக்காற்றுக் கவிகளென
      நவில் குறும்பு
தோற்கவலங் கொண்டவர்பின் துதிக்குறுபாத் திறைகொண்டு
      தொல்பார் முற்றும்
கோற்கியலும் புலமையெனு மாழியுருட்டிப் புகழ்வெண்
      குடைக்கீழ்க் காத்து
மாற்குநிகர் மீனாட்சி சுந்தரனென் றுரைசெயும்பா
      மன்னர் கோவே."

[நாற்கவி – ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரமென்பன. நாற்படை – சதுரங்க சேனை. குறும்பு – குறுநில மன்னர். வலம் கொண்டு – வெற்றி கொண்டு. பா திறை – பாடல்களாகிய கப்பங்களை. கோற்கு – செங்கோலுக்கு. ஆழி – சக்கரம்; இங்கே ஆஞ்ஞாசக்கரம். புகழாகிய வெண்குடையின். பாமன்னர் கோ – கவிச்சக்கரவர்த்தி.]

எனக்கு ஜ்வரநோய் கண்டது

இப்படியிருக்கையில் அப்பொழுது எனக்கு ஜ்வரநோயும் வயிற்றில் ஜ்வரக்கட்டியும் உண்டாகி மிகவும் வருத்தின. அதனால் தளர்ச்சியுடன் படுக்கையிலேயே இருந்து விட்டேன். தக்க பரிகாரங்களை வைத்தியர்களைக் கொண்டு இவர் செய்வித்து வந்தும் ஜ்வரநோய் சிறிதும் தணியவில்லை. அதனால் புராணத்தை ஏட்டிலெழுதும் பணியைக் கும்பகோணம் பெரியண்ணம் பிள்ளை யென்பவரும், அரங்கேற்றும் காலத்துப் படிக்கும் பணியைச் சவேரிநாத பிள்ளையும் ஏற்றுக் கொண்டார்கள்.

புராணம் அரங்கேற்றும் காலமல்லாத மற்றக் காலங்களில் இக்கவிநாயகர் என் பக்கத்திலே இருந்து என்னைக் கவனித்துக் கொண்டும் மேலே அரங்கேற்றுவதற்குரிய பாடல்களைப்பாடி எழுதச்செய்தும் வந்தார்.

ஒருநாள் அரங்கேற்றுதல் ஆனவுடன் பிற்பகலில் என்பால் வந்த இவர் என் பக்கத்திலிருந்து மயக்கம் நீங்கி நான் விழித்துக்கொண்டபொழுது என்னை நோக்கி, “புராணப் பிரசங்கத்தைப் பற்றி மஹாஸந்நிதானத்தினிடமிருந்து (சுப்பிரமணிய தேசிகரிடமிருந்து) கட்டளைச் சாமிக்கு இன்று திருமுகம் எழுந்தருளியிருக்கிறது. அதில், ‘புராணப் பாடல்கள் தமக்குத் திருப்தியை யுண்டு பண்ணுவதன்றி அச்செய்யுட்களைச் சாமிநாதையர் படித்தல் தமக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கக்கூடுமே’ என்று கட்டளை யிட்டிருக்கிறது. உமக்கு உடம்பு இப்படியிருக்கிறதே!” என்று வருத்தம் அடைந்து சொன்னார்.

நான் ஊர் சென்றது

புராணப் பிரசங்கம் சிறப்பாக நடைபெற்று வந்தது. ‘தினந்தோறும் இப்புலவர் கோமானுடைய பிரசங்கத்தைக் கேட்க முடியவில்லையே!’ என்ற வருத்தம் என் மனத்தில் வளர்ந்து வந்தது. எனக்கு இருந்த ஜ்வரம் தணியவில்லை. வருபவர்களோடு பேசிக்கொண்டிருப்பதிலும் அரங்கேற்றத்திற்கு வேண்டியவற்றைக் கவனிப்பதிலும் இவருக்கு நேரம் போயினமையின் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லையென்ற வருத்தம் இவருக்கும் இருந்துவந்தது.

பலவகை வேலைகளுக்கு இடையில் என்னைப்பற்றிய கவலையையும் இவர் மேற்கொண்டதை அறிந்து நான், “உத்தமதானபுரத்திற்குப்போய்ப் பரிகாரஞ் செய்துகொண்டு ஸெளக்கியம் உண்டான பின்பு வருவேன்” என்று கூறி விடைபெற்றுக்கொண்டேன். இவருக்கு என்னைப் பிரிவதில் வருத்தம் உண்டாயிற்று. நானும் வருந்தினேன். வெண்பாப்புலி வேலுஸாமி பிள்ளையை எனக்குத் துணையாகச் சேர்த்து வேண்டிய செளகரியம் செய்வித்து என்னை இவர் அனுப்பினார். நான் உத்தமதானபுரம் சென்றேன்.

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

இக் கவிசிகாமணியின் பக்கத்திலிருந்து நாள்தோறும் புராணப் பிரசங்கங்கேட்டு வந்த வன்றொண்டச் செட்டியார் மாணிக்க வாசகர் சரித்திரத்தை இவர் அருமையாகச் செய்திருப்பதை அறிந்து ஒருநாள் இவரிடம், “திருத்தொண்டர்களுடைய பெருமைகளை நன்றாக யாவரும் அறியும்படி பெரியபுராணத்தின் வாயிலாகப் புலப்படுத்தியருளிய சேக்கிழார் திறத்தில் பிள்ளைத்தமிழொன்று ஐயா அவர்கள் செய்தருள வேண்டும்” என்று மிகவும் வணக்கமாய்க் கேட்டுக்கொண்டனர். அப்போது ‘பெரிய புராணத்திற்கு வன்றொண்டர் வாய்மொழியாகிய திருத்தொண்டத்தொகை காரணமாக இருந்தது; அப்புராணத்தை இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழுக்கு வன்றொண்டச் செட்டியாரது வாய்மொழியே காரணமாயிற்று. இது நல்ல அறிகுறி’ என்று இவர் எண்ணி எண்ணி மகிழ்ந்தனர். அவர் கேட்டுக்கொண்டவாறே சேக்கிழார் பிள்ளைத்தமிழைச் செய்யத் தொடங்கி மிக ஆராய்ந்து சில தினங்களிற் பாடி முடித்தனர்

பெரிய புராணத்திலுள்ள பலவகை நயங்களையும் அறிந்து பலவருடம் அனுபவித்து இன்புற்றும் இன்புறுவித்தும் வந்தவராதலின் இக்கவிஞர் பிரானுக்குச் சேக்கிழார்பாற் சிறந்த பக்தியிருந்ததென்பதை யாவரும் அறிவார். இயல்பாகவே நாயன்மார்களுடைய வரலாற்றைப் பலவகையில் எடுத்தாண்டு தம்முடைய நூற்பகுதிகளை அழகுபடுத்தும் இயல்புடைய இவருக்கு அந்நாயன்மார் சரிதையை விரிவுறவெளியிட்ட சேக்கிழார் பால் அத்தகைய அன்பு மிக்கிருத்தல் தக்கதன்றோ?

சேக்கிழாருடைய குலம், குணம், அதிகாரம், கல்வி, பக்தி, ஞானம் முதலியவற்றின் பெருமைகளைப் பலபடியாக அப்பிள்ளைத் தமிழில் இக்கவிஞர் கோமான் செவ்வனே பாராட்டியிருக்கிறார்.

"மண்டலை வேலைப் புவியிற் பத்தி செய் மார்க்க மறிந்தவரார்
வண்சுவை யமுத வொழுக்கென வார்த்தை வழங்கத் தெரிகுநரார்
கொண்டலை நேர்பக டூர்தரு கூற்றங் குதித்துய்ந் திடவலர்யார்
கொற்றக் கைலைக் கணநா தர்களொடு கூடுபு மகிழ்பவரார்
விண்டலை யாரும் பெறலரு மின்பம் விராவுந் திறலினரார்
விமலா நீயவ தாரஞ் செய்யா விடின்” (தாலப். 10)

        [வார்த்தை - சைவ பரிபாஷை]

என்பதனால் சேக்கிழாரை எத்தகையவராக இவர் கருதியிருந்தா ரென்று அறிந்து கொள்ளலாம். பெரியபுராணம் பக்தியை மிகுவிக்குமென்பது இவர் அனுபவத்தாலறிந்த உண்மையாதலின் அதனையே பலவிடத்தும் பாராட்டுவார்:

”என்றும் பத்தி ரசங்கனி கனியே" (செங்கீரைப், 7)
பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ " (தாலப். 8)
"புலஞ்சார் பத்தி விளைநிலமே" (முத்தப். 5)
"ஒழியாப் பத்திக் கடல் வருக." (வாரானைப். 10.)

பெரிய புராணப் பாயிரத்தில், “எடுக்கு மாக்கதை” என்னும் திருவிருத்தத்தின்கண், ‘தடக்கை யைந்துடைத் தாழ்செவி நீண்முடிக், கடக் களிற்றைக் கருத்து ளிருத்துவாம்’ என்னும் பகுதியிலுள்ள ’நீண்முடி’ என்ற குறிப்பினால் அக்காப்பு ஸ்ரீ விநாயகமூர்த்தியின் விசுவரூபத் திருக்கோலத்தைத் தியானித்துச் சேக்கிழார் பாடியிருத்தல் வேண்டுமென்று இவர் கொண்டனர்; பெரிய புராணம் ‘மாக்கதை’ ஆதலின் அதற்கேற்ப விநாயகமூர்த்தியின் விசுவரூபத்தைத் தியானித்தாரென்று பொருத்தங்காட்டி இவர் பொருள் கூறுவதுண்டு. அக்குறிப்பை நினைந்து அப் பிள்ளைத் தமிழ்க் காப்புச் செய்யுளில் விநாயகக் கடவுள் வணக்கத்தில் அவரது விசுவரூபத்தையே எடுத்துப் பாராட்டியுள்ளார். அன்றியும் *7 “உலகெலாம்” என்னும் பெரியபுராணச் செய்யுளுக்குப் பொருள் கொள்ளவேண்டிய முறையையும் அக்காப்பிற் புலப்படுத்தியிருக்கிறார்.

காப்புப் பருவத்தில் ஏனைய பிள்ளைத்தமிழ்களில் துதிக்கப்பெறும் திருமால் முதலிய தெய்வங்களை இவர் கூறவில்லை. விரியாகிய பெரிய புராணத்திற்கு அதன் தொகையாகிய திருத்தொண்டத் தொகையிலுள்ள பதினொரு திருப்பாசுரங்களுள் ஒவ்வொன்றிற் கூறப்பட்ட நாயன்மார்களை ஒவ்வொரு செய்யுளால் துதித்துள்ளார். இவ்வாறு காப்புப்பருவத்தில் அமைக்கும் *8 புதுமுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழில் இவரால் முதலில் மேற்கொள்ளப்பட்டது. காப்புப் பருவச் செய்யுளின் தொகைக்கு ஏற்ப அம்முறை இந்த இரண்டு நூல்களிலும் பொருத்தமாக அமைந்த வாய்ப்பைத் தியாகராச செட்டியார் அடிக்கடி பாராட்டுவதுண்டு.

‘பெரிய புராணத்திற் பலவகைச் சொல்லணி, பொருளணி, பொருள்கோள்கள் அமைந்தும், பலவகை அழகுகள் நிரம்பியும், முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முதலியவை காப்பிய இலக்கணப்படி பாடப்பட்டுமுள்ளன. தமிழ் நடை செவ்விதாக அமைந்துள்ளது. தேவாரத்திலுள்ள பலவகை மந்தணப்பொருள்கள் அங்கங்கே வெளிப்படுத்தப்பட்டும் தொண்டர்கள் அருமை பெருமைகள், அவரவர் நிலை, சாதி, குணம், மார்க்கம் முதலியவை விளக்கப்பட்டும் இருக்கின்றன’ என்ற செய்திகளை அங்கங்கே அப்பிள்ளைத் தமிழில் இவர் புலப்படுத்தியிருக்கின்றார்:

”செய்யமல ராதன மிருந்துபல சாதியும்
      சேரப் படைத்ததேவும்
செப்பரிய வாயவவ் வச்சாதி குறிகுணம்
      செய்கைகுடி கொளுமிலியல்பு
வெய்யமொழி யுணவுமுன் விரித்தெலா மறியவலர்
      மெய்யறிஞ ரெனல்விளக்கி
மேம்பட்ட வேளாண் குலக்கதி ரெனுங்குன்றை
      விமலனைக் காக்கவென்றே."       (காப்புப். 7)

" ஒப்பரிய தொண்டர்த மருமையும் பெருமையும்
      உவக்குமவ ரவர்செய்கையும்
உவமையில் லாச்செய்கை நுட்பமுந் திட்பமும்
      உம்பர்கோ னருள்தட்பமும்
தப்பரிய செந்தமிழ்த் தொடைநடையு மடையும்
      தவாப்பொரு ளணிச்சிறப்பும்
தமிழ்மறை யடங்குபல மந்தணமும் வெள்ளிடைத்
      தவிரும்வெற் பெனவிளங்க."      (செங்கீரைப். 3.)

" .............. பொருளணி யாயின எவ்விடனும் வீற்று
வீற்றுக் கிடையிறை பட்டன வமைய விளம்பு வனப்பினொடு
மேய முதற்பொரு ளாதிய மூன்றும் வேண்டுமிடத் தெய்த
ஆற்றுப் புனல்நா மப்பொருள் கோண்முத லறைமற் றுள்ளனவும்
அமையத் தொண்டர் புராணம் நவின்றவ."       (தாலப். 9.)

பின்னும் பெரியபுராணத்தில்,

"காலாறு வயற்கரும்பின் கமழ்சானூர் கஞ்சாறூர்"
"மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்க ளுளவயல்கள்"
"எய்தும் பெருமை யெண்டிசையும் ஏறூ ரோமப் பேறூரால்"
"மன்னனா ரருளிச்செய்த மறைத்திரு வாக்கூ ராக்கூர்"

என வரும் பகுதிகளை நினைந்து,

"ஈற்றுத் தலையொரு மவுலி புனைந்தா லென்னச் சொல்லணியொன்
றெய்திப் பொலிய"       (தாலப். 9)

என்பர்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தில் ஐந்திணைகளின் வளத்தைக் கூறுதலுடன் அவ்வத்திணையிலுள்ள சிவதலங்களைச் சொல்லியிருக்கும் முறை முதன்முதலாகப் பெரிய புராணத்திலேதான் காணப்படுகிறது. அதனை இவர் அறிந்தவராதலின் தாம் இயற்றிய புராணங்கள் பலவற்றில் அதனை மேற்கொண்டனர். அம்முறையை அறிவித்தது சேக்கிழார் திருவாக்கே என்பதை,

"படியிடை யொருபை திரவரு ணனைபுரி
      பாவல ரைந்திணையும்
பகுத்தொரு முப்பொரு ளோடும் விரித்துப்
      பயனா கத்தெய்வம்
கடிதலில் சினகர முள்ளன வோதக்
      கற்பித்தவ”       (சப்பாணிப். 8)

[பைதிரம் – நாடு]

என்று புலப்படுத்தியிருக்கிறார். பின்னும்,

" சொல்லும் பொருளு நனிசிறப்பச்
சுருங்கச் சொல்லன் முதலாய
*9 தோட்டி யமைய வமங்கலமாம்
சொற்கள் புணரா தறக்களைந்து
வெல்லுந் தகைய முரண்காட்டி
விலக்கு விலக விதிதழுவி "       (முத்தப். 3)


என்று பாராட்டுவார்.

‘அமங்கலமாம் சொற்கள் புணராது அறக்களைந்து’ என்றது, மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் முத்திநாதன் மெய்ப்பொருள் நாயனாரை வாளால் வீழ்த்தினானென்பதை வெளிப்படையாகக் கூறாமல்,

“பத்திரம் வாங்கித் தான்முன் நினைந்தவப் பரிசே செய்ய” என்று பாடியிருத்தலையும், ஏனாதிநாத நாயனார் புராணத்தில் அதிசூரனென்பவன் ஏனாதிநாத நாயனாரை வாளாலெறிந்ததை அங்ஙனமே, “முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்” என்று கூறியிருத்தலையும், இவைபோன்ற பிறவற்றையும் நினைந்தேயாகும்.

சேக்கிழாரைப்பற்றிக் கூறும் இடங்களில்,

”மூவரும் புகலும் வேதத் தமிழ்க்கணுள்ள
மெய்ம்மையை விரித்துத் தெரித்தருள்செய் குன்றையூர்
வேந்து” (காப்புப். 3.)

"அருண்மூவ ரருண்மறைப் பொருள்தெரிய முன்னொருவர்
அருண்மறைப் பொருள் விளக்கும்
நம்பறா வித்தியா ரணியமுனி வரனும்
நயப்பயாப் புறவிரித்த நாவலர் பிரான்” (காப்புப். 5)

"அவையகம் வியக்குமுப் புலவரருண் முக்கனி
அருந்தமிழ்ச் சுவையனைத்தும்
ஆராய்ந் தெடுத்துப்பல் செய்யுண்முக மாவறிய
அறிவித்த பெருநாவலன்” (சிறுதேர்ப். 9)
எனத் தேவாரத்தின் பொருள்களை அவர் புலப்படுத்தியிருப்பதையும்,
"தமிழ் நாவலரேறே" (செங்கீரைப். 7)
"வலஞ்சார் பெருநா வலரேறே" (முத்தப். 5)

என அவரது நாவன்மையையும்,

"சகலா கமபண் டிததெய்வச் சைவா" (தாலப். 2)
"சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்" (தாலப். 6)
"உலவா தமைந்த சிவபோகம்
கொள்ளுஞ் சைவப் பயிர்வளர்க்கும்
கொண்டல் வருக வருகவே" (வாரானைப். 10)
“வயங்குஞ் சைவப் பெருவாழ்வே" (சிற்றிற். 10)

என அவர் சைவசமயத்திற்குச் செய்த பேருதவியையும்,

"நெஞ்சம், கனியக் கனியக் கண்ணீர் வாரக்
      கவிபா டியவிறைவ" (சப்பாணிப். 7)
"கல்லுங் கரையக் கவிபாடுங்
      கனிவாய் முத்தந் தருகவே" (முத்தப். 3)

என அவருடைய செய்யுட்கள் மனத்தை உருக்கும் தன்மையை உடையனவென்பதையும்,

"அறுபதின்மர் மேலு மூவர் சரித்திரமாம்
கருப்பஞ்சாறு பொழிமதுரக் கனிவாய்" (முத்தப் . 1)

"பிதிருந் தரமற வின்பா லளவிப் பிழிசுவை மதுவிரவிப்
      பிறங்கிய புல்ல கண்டநி றீஇச்சுவை பெறுகண் டுங்கூட்டி
எதிரும் பொருளில் பலாக்கனி மாங்கனி இவைவா ழைக்கனி முன்
      இயையு முழுக்கனி முந்திரி கைக்கனி இவ்விர தமுநாட்டி
அதிருங் கடலமிர் தமுமு ளுறுத்தி அவாங்குழல் வீணையிசை
      அத்தனை யும்புக வைத்துச் சிவமணம் அகலா தேகமழ
முதிரு மருட்கவி பாடிய புலவன் " (சிறு பறைப், 6)

என அவருடைய பாடல்களின் இனிமையையும்,

"அத்தி தருங்கவி யென்மரு நன்றா வறைகுதி ரம்மட்டோ
      அவாவிய புத்தி தருங்கவி யென்மரு மதுமட் டோவின்னும்
சித்தி தருங்கவி யென்மரு மெல்லாத் தீர்த்தங் களுமுறுமா
      செய்யாச் சுத்தி தருங்கவி யென்மருஞ் செப்பிய வம்மட்டோ
பத்தி தருங்கவி யென்மரு மாகிப் பாரிற் புலவரெலாம்
      பல்லா ரோதுபு பாராட் டக்கதி பற்றிய பல்லோர்க்கு
முத்தி தருங்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே
      முழுமணி மாடக் குன்றத் தூரன் முழக்குக சிறுபறையே" (சிறுபறைப். 7)

என அவற்றின் விசேடத்தையும் எடுத்துப் பாராட்டியுள்ளார்.

அவருடைய பலவகை ஆற்றல்களைப் பாராட்டும் பின்வரும் செய்யுள் அறிந்து இன்புறற்குரியது :

”நாடிய விரிநூல் சொற்றிடு திறனால்
      நன்னூ லாசிரியன்
நகுபா சுரமுத லுரைசெய் தலினால்
      நவிலுரை யாசிரியன்
நீடிய பரசம யக்குழி வீழ்ந்தவர்
      நீப்பப் போதனைசெய்
நிலையாற் போத காசிரி யன்னிவை
      நிகழ்தொறு நிகழ்தோறும்
ஆடிய ஞானத் திறனுற லான்ஞா
      னாசிரி யனுநீயென்
றான்றோர் பலரும் புகழப் படுபவ." (சப்பாணிப். 9)

*10 சேக்கிழார் பிள்ளைத்தமிழை இவர்பால் வரும் வித்துவான்களும் பிறரும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்து பாராட்டி வந்தனர். இவரே அதனை மீண்டும் மீண்டும் படிப்பித்துக் கேட்டு இன்புறுவதுமுண்டு. இவர் இயற்றிய பிள்ளைத் தமிழ்களுள் இறுதியிற் செய்தது அதுதான். தேவாரம் பெரிய புராணம் முதலிய நூல்களில் ஈடுபட்டுள்ள வித்துவான்கள் அந்தப் பிள்ளைத் தமிழில் ஈடுபடாமலிரார்.

அப்புசாமிப் புலவருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது

திருப்பெருந்துறையைச் சார்ந்த ஏம்பலென்னும் ஊரிலுள்ள அப்புசாமிப் புலவரென்னும் பரம்பரைக் கல்விமான் ஒருவர் தம்முடைய குமாரரான அருணாசலப் புலவரென்பவரை அழைத்துக்கொண்டுவந்து இவரிடம் விட்டு, “சில வருடம் இவனை உடன் வைத்துப் படிப்பித்து அனுப்பவேண்டும்” என்று பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்; அவ்வாறே அவருக்கு இவர் பாடஞ் சொல்லிவந்தார்; அப்பால் அப்புசாமிப்புலவர் ஏம்பலிலுள்ள முத்தையனென்னும் ஐயனார் மீது தாம் பாடியிருந்த பிள்ளைத் தமிழொன்றைப் படித்துக்காட்டிச் செப்பஞ் செய்து கொண்டதன்றி இவருடைய சிறப்புப் பாயிரமொன்றையும் பெற்றுச் சென்றார். அச்சிறப்புப் பாயிரம் வருமாறு:

(விருத்தம்)

"குவளையரு கதன்முதலல் லவைகூடப் பிறையெனவுட் கொண்டு நாணித்
தவளைகுதித் திடுதடஞ்சா ரேம்பல்நகர் முத்தையன் தன்றாட் கேயன்
புவளைதரும் படிபிள்ளைத் தமிழ்சொற்றா னியற்சொல்லும் பொருளும் வாய்ப்பத்
திவளையிலக் கணமுந்தே ரப்புச்சா மிப்புலவன் திறன்மிக் கோனே."

[குவளையருகு – குவளை மலரின் பக்கத்தே. குவளையென்னுஞ் சொல்லின் முதலெழுத்தல்லாத எழுத்துக்கள்: வளை; வளை – சங்கு. அன்பு வளை தரும். திவள் ஐயிலக்கணம் – விளங்குகின்ற பஞ்சலட்சணம்.]

சிங்காரவேலுடையார்

திருப்பெருந்துறைக்கு அருகிலுள்ள தம்முடைய கிராம மொன்றைப் பார்க்கவந்த *11 தண்ணீர்க்குன்றம் சிங்காரவேலுடையாரென்னும் பிரபு ஒருவர் இவர் திருப்பெருந்துறையில் இருப்பதை அறிந்து சில அன்பர்களுடன் வந்தார். ஒரு தினம் இருந்து புராணப்பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியதோடு, “இந்தப் புராணத்தை முடித்துவிட்டுத் திருவாவடுதுறைக்குச் செல்லும்பொழுது தண்ணீர்க்குன்றத்திற்கு வந்து சில தினம் இருக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்; அன்றியும் தம்முடைய ஊருக்கு அருகிலுள்ள திருவெண்டுறையென்னும் ஸ்தலத்துக்கு ஒரு பிரபந்தமாவது புராணமாவது செய்து சிறப்பிக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டு சென்றார்.

அரங்கேற்றத்தின் பூர்த்தி

அப்பால் ஒரு நல்ல தினத்தில் திருப்பெருந்துறைப்புராண அரங்கேற்றத்தின் பூர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. அதற்காக அழைக்கப்பட்டுப் பட்டுக்கோட்டைத் தாலூகாவிலுள்ள பாலைவனம், நகரம் முதலிய சில ஜமீன்களிலிருந்து பிரதிநிதிகளும், உத்தியோகஸ்தர்களும், புதுக்கோட்டையிலிருந்து பல உத்தியோகஸ்தர்களும், நாட்டுக்கோட்டைத் தனவைசியப் பிரபுக்களிற் பலரும், வேறு சிலரும் வந்து சிறப்பித்தார்கள். அப்புராணம் ஒரு சிவிகையில் வைத்து ஊர்வலம் செய்விக்கப்பெற்றது. அச் சிறப்பு ஓர் அரசருடைய விவாக ஊர்வலம் போலவே நடைபெற்றது. அப்போது சுப்பிரமணிய தம்பிரான் முதலில் வாக்களித்திருந்தபடியே ரூபாய் இரண்டாயிரம் இவருக்கு ஸம்மானம் செய்ததன்றி உடன் இருந்த மாணாக்கர்களுள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய தகுதிக்குத் தக்கபடி மரியாதை செய்தார். அத்தொகைகள் அவருடைய சொந்தச் சம்பளத்திலிருந்து மிகுத்து வைக்கப்பெற்றவை.

அந்த விசேஷத்திற்கு வந்திருந்த கனவான்கள் ஊருக்குச் செல்லுகையில் இக்கவிச்செல்வரைக் கண்டு திருவாவடுதுறைக்குப் போகும்பொழுது தத்தம் இடங்களுக்கு வந்து சில தினங்கள் இருந்து சிறப்பித்துச் செல்லவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

அக்காலத்தில் இருந்த ஜமீன்தார்களும் பிரபுக்களிற் பெரும்பான்மையோரும் கல்விமான்களோடு பழகுதலையும் அவர்களை ஆதரித்தலையும் தங்களுடைய கடமையாகக் கருதி வந்தார்கள். வித்துவான்களோடு சம்பாஷித்தலே அவர்களுக்குப் பொழுதுபோக்காக இருந்தது. ஒவ்வொருவரிடத்திலும் வடமொழியிலும் தமிழிலும் ஸங்கீதத்திலும் வல்ல ஒவ்வொருவர் இருந்தே வருவார். அவரவருடைய வருவாயில் வேறு செலவுகள் அக்காலத்தில் அதிகமாக இல்லாமையால் வித்துவான்களை ஆதரிப்பதில் விஞ்சவேண்டுமென்று ஒருவரைவிட ஒருவர் ஊக்கங் காட்டியும் வந்தனர். ஆதலால், பிள்ளையவர்கள் தங்கள் ஊருக்கு வந்து போதலை அவர்கள் பெரிய பாக்கியமாகவே கருதினார்கள்.

திருப்பெருந்துறைப் புராண அமைப்பு

திருப்பெருந்துறைப் புராணத்தில் முதலில் 27-செய்யுட்களடங்கிய கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும் திருநாட்டுப் படலம் முதலிய 32-படல உறுப்புக்களும் அமைந்துள்ளன. இதிலுள்ள செய்யுட்களின் தொகை 1659 .

உருவம், அருவம், அருவுருவமென்னும் மூவகைத் திருமேனிகளுள்ளே சிவபெருமான், அம்பிகையும் தாமும் அருவத் திருமேனிகொண்டு எழுந்தருளி விளங்கும் இடம் இந்தத் திருப்பதியே. இதனை இப்புராணத்தில் பல இடங்களிற் புலப்படுத்தியிருக்கிறார் ; அவற்றுள் ஒன்று வருமாறு:

(விருத்தம்)

"தூயநா மத்தருவ முருவமெவை யெனினுமொரு தோன்றல் போன்றே
பாயநா னிலவரைப்பின் கணுமமர்வா ளெனல்தெரித்த படியே போல
ஆயநா தங்கடந்த வான்மநா தக்கடவுள் அமர்தற் கேற்ப
மேயநா யகிசிவயோ காம்பிகைதன் விரைமலர்த்தாள் மேவி வாழ்வாம்."

       (கடவுள் வாழ்த்து, 5)

பிரமதேவர், திருமால், காலாக்கினி யுருத்திரர், மாணிக்க வாசகர், சோழராசன், அதர்மன், இலக்குமி, ஒரு வேடன் என்பவர்கள் செய்தனவாக இந்நூலில் உள்ள துதிச் செய்யுட்கள் மனத்தை உருக்கி அன்பை மிகுவிக்கும்.

இப் புராணத்திலுள்ள அருமையான செய்யுட்களிற் சில வருமாறு:

(சபாநாயகர் துதி)
(விருத்தம்)

“அரைப்புலித்தோல் மயிருகுப்பக் காற்புலித்தோல் மயிர்முகிழ்ப்ப
      அணிபல் பாம்பும்
வரைப்பகன்று குலையவொரு பாம்புநிலை நின்றுநனி
      மகிழ மேக்குத்
திரைப்பயமா தலைஇக்கவலக் கிழக்கிளங்கன் னிகையின்பந்
      திளைப்ப நீர்சூழ்
தரைப்பயனா மணிமன்றுள் நடநவிலு மொருமுதலைச்
      சரணஞ் சார்வாம்."


[இச்செய்யுள் விரோதவணி. அரைப்புலித்தோல்: அரை – இடை; காற்புலி – காலாற்புலியாகிய வியாக்கிரபாதமுனிவருடைய; இவற்றில் அரை, காலென்னும் பின்ன எண்களின் பெயர்கள் தொனிக்கின்றன. வரைப்பு – எல்லை. ஒரு பாம்பு – பதஞ்சலி முனிவர். மேக்கு திரை பயம் மாது – திருமுடி மேலுள்ள அலையையுடைய நீராகிய கங்கை; மேக்கு – மேல்; இதில் திரையையும் அச்சத்தையும் உடைய முதியவளென்னும் வேறொரு பொருள் தோற்றுகின்றது. அலைஇ – அலைந்து. கிழக்கு – கீழ். இளங்கன்னி – சிவகாமியம்மை.]

(குமாரக்கடவுள் துதி)

"புரமுதல்வென் றுறுபுகழ்மாத் திரங்கொண்ட தந்தையினும்
      பொருமோர் யானை
உரனறவென் றதனொடுமூர் தியுங்கொண்டு மிகுசிறப்பை
      உறுமுன் னோனும்
பரவுறச்சூர் தடிந்தவற்றோ டோங்குகே தனமொருகை
      பற்றப் பெற்ற
விரவுமல மருந்துறையும் பெருந்துறைக் குமாரனடி
      மேவி வாழ்வாம்."

[ஓர்யானை – கயமுகாசுரன். அதனொடு – புகழோடு. முன்னோன் – விநாயகக் கடவுள். அவற்றோடு – புகழோடும் வாகனத்தோடும். திரிபுரம் முதலியவற்றை வென்ற சிவபெருமான் புகழை மட்டும் அடைந்தனர்; கயமுகாசுரனை வென்ற விநாயகக் கடவுள் அதனோடு ஊர்தியையும் பெற்றனர்; சூரபன்மனை வென்ற முருகக் கடவுள் அவ்விரண்டனோடு கொடியையும் பெற்றனரென்பன இங்கே அறியற்பாலன.]

(அவையடக்கம்)

"வென்றசீ ரான்ம நாதர் எனும்பெயர் விழைந்தார் ஞான
நன்றிலா வெனைவி லக்கார் நாவலூ ரருக்கு வெண்ணெய்
அன்றருள் செய்தா ரென்றும் அருச்சனை பாட்டே யென்றார்
ஒன்றநின் பாட்டே யென்னார் உறுதியென் னிதன்மேல் வேண்டும்."

[ஞானான் மநாத ரென்றன்றிப் பொதுப்பட ஆன்மநாத ரென்னுந் திருநாமத்தைக் கொண்டிருத்தலின் ஞானமில்லாத ஆன்மாவாகிய என்னையும் ஆட்கொண்டருளுவா ரென்றபடி. நாவலூரர் – சுந்தரமூர்த்தி நாயனார். வெண்ணெய் – திருவெண்ணெய் நல்லூர். அன்று – அடிமை யோலையைக் காட்டி ஆட்கொண்ட காலத்தில். ‘அருச்சனை பாட்டே’ என்றதை,”‘மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு நாமம், பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க, அற்சனை பாட்டே யாகும் ஆதலின் மண்மேல் நம்மைச், சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்” (பெரிய. தடுத்தாட். 70) என்பதனாலுணரலாகும்.]

(திருவாதவூர்ப் பெருமை)
(கொச்சகக் கலிப்பா)

”வாதவூர் மறையொழுக்க மல்லான்மற் றொன்றுமரு
வாதவூ ரடைந்தாரை மலக்குரம்பை யகத்தினிரு
வாதவூர் சிவானந்த வாரியிடை யழுத்தலொரு
வாதவூ ரெனப்புகலும் வார்த்தைவா னிடத்துமுள."
(திருவாதவூரர் திருவவதாரப். 11.)

[இருவாத – இருத்தாத. ஒருவாத – நீங்காத.]

படலந்தோறும் முதற்கண் உள்ள திருவாதவூரடிகளின் துதிகளுள்ளே சில வருமாறு:

(விருத்தம்)

"நண்ணிய மூகை பேச நல்லருள் நாட்டம் வைத்த
புண்ணிய வாத வூரர் பொன்னடி சென்னி சேர்த்தாம்
எண்ணிய விப்பு ராண மொன்றுகொ லெல்லாம் பாடத்
தண்ணிய வாக்கு முன்னா யாவையுந் தருவ ரன்றே."

           (புராண வரலாறு, 1.)
   
"சீரடி யாள்செய் நிந்தையில் வெந்தை
      திருத்தக நாடொறு முண்டார்
பாரடி யுள்ளாக் கியநெடு மால்கொள்
      பாகமுள் ளார்க்குமீ னவனால்
ஓரடி கொடுப்பித் தார்நெடு மால்கொள்
      பாகமில் லேற்கொரு தாமே
ஈரடி கொடுத்தார் ஞாயிறெங் கெழினும்
      எவனென இருப்பன்யா னினியே." 

         (பிரமனுபதேசப். 1)

[வெந்தை – பிட்டு. நெடுமால்கொள் பாகம் உள்ளார் – திருமாலை யுடைய திருமேனிப் பாகத்தையுடைய சிவபெருமான். நெடுமால் கொள் பாகமில்லேன் – மிக்க மயக்கத்தைக் கொண்டவனும் பரிபக்குவமில்லே னுமாகிய அடியேன்.]

திருவாதவூரடிகளுடைய வரலாற்றைக் கூறும் பகுதிகள் பெரிய புராணத்தைப் போன்ற அமைதியையும் அழகையும் உடையனவாக விளங்கும். நைமிசமுனிவர் பெருந்துறை யடைந்து பூசித்த படலத்தில், திருப்பெருந்துறையைத் தரிசித்தற்கு வரும்பொழுது சூதமுனிவர் சவுனகாதியருக்கு இடையிலுள்ள தலங்களைக் காட்டுவதாக உள்ள பகுதியில் அறுபத்து மூன்று தலங்கள் வெளிப்படையாகக் கூறாமல் பலவகைக் குறிப்புக்களால் கூறப்பட்டுள்ளன. அவற்றால் அத்தலங்களின் வரலாறுகளுள் அரியனவாகிய சில செய்திகள் புலப்படும்.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1. இவர் பிள்ளையவர்களிடத்துப் படிக்க வந்த சில தினத்திற்குப் பின்பு மற்றவர்களைப்போலே தாமும் இருக்கவேண்டுமென்றெண்ணித் திரு நீறு தரித்துக்கொள்வாராயினர். அதனைக் கண்ட பிள்ளையவர்கள், “இனிச் சவேரிநாதைச் சிவகுருநாத பிள்ளையென்றே அழையுங்கள்” என்று சொன்னார். மடத்திலும் பிற இடங்களிலுமுள்ள யாவரும் அதுமுதல் அவ்வாறே அழைப்பாராயினர்.
2. வேம்பற்றூரெனவும் வழங்கும்.
3. ஒருகாலத்திற் சிவகங்கை ஸமஸ்தானத் தலைவராக இருந்த முத்துவடுகநாத
துரையென்பவர் மீது பிச்சுவையர், காதலென்னும் ஒரு பிராபந்தம் செய்து அரங்கேற்றி ஸம்மானம் பெற்றனர். அப்பொழுது அங்கே ஆஸ்தான பண்டிதராக இருந்த முத்துவீரப்பப்பிள்ளை யென்பவர் அவரைப்பார்த்து, முத்துவடுகநாத துரையென்பதை ஒரு வெண்பாவிலமைத்து ஐந்து நிமிஷத்திற் பாட வேண்டுமென்று கூறினார். பிச்சுவையர் அப்படியே செய்துவிட்டார். அச்செய்யுளின் முன்னிரண்டடிகள் எனக்குக் கிடைக்கவில்லை. பின் இரண்டடிகள் மட்டும் கிடைத்தன. அவை வருமாறு :
“கவடுக நாதனையே கைதொழுது வாழ்முத்
துவடுக நாத துரை”
[கவடு உகத் தொழுதென்க; கவடு – வஞ்சனை. நாதன் – சிவபெருமான்.]
அந்த வரலாற்றை ஒரு சமயம் பிள்ளையவர்கள் கேட்டு வியப்புற்று அது தொடங்கி அவரைக் காணுந்தோறும் ‘துவடுக நாத துரை’ என்றே அன்புடன் அழைப்பாராயினர்.
4. இவரும் பிச்சுவையரும் சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகரிடம் கல்லிடைக்குறிச்சியிற் படித்தவர்கள்.
5. இவர் ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமியை அர்ச்சிப்பவர்; அத்தலத்தில் உள்ள அந்தணர் முந்நூற்றுவர்களைச் சார்ந்தவர்.
6.இதன்பால் ஸ்வாமி அசுவாரூட மூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்றமையின் இஃது இப்பெயர் பெற்றது; இத்தலத்துள்ள ஸபைகள் ஆறனுள் இது கனகஸபையென்று கூறப்படும்.
7. இப்புத்தகம் 116 – ஆம் பக்கம் பார்க்க.
8. முதற்பாகம், 224 – ஆம்பக்கம் பார்க்க.
9. தோட்டி – அழகு.
10. இந்நூல் பிற்காலத்தில் இவருடைய மாணாக்கராகிய ஆறுமுகத் தம்பிரானவர்களால் சிறப்புப்பாயிரத்தோடு தனியே பதிப்பிக்கப் பெற்றது; மீ.பிரபந்தத்திரட்டு, 722-824.
11. இது மன்னார்குடி தாலூகாவிலுள்ளதோரூர்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s