-மௌலானா வஹிதுதீன் கான்
அமரர் மௌலானா வஹிதுதீன் கான் (1925- 2021), பாரதத்தின் இஸ்லாமியப் பேரறிஞர்களுள் முதன்மையானவர். உத்தரப்பிரதேசத்தின் அஸம்கார் பகுதியில் வாழ்ந்தவர். திருகுர்ஆனுக்கு நவீன நோக்கில் உரை எழுதியவர்; முஸ்லிம் மார்க்க சிந்தனையாளர்களால் மிகவும் போற்றி மதிக்கப்படுபவர். பாரதம் உயர வேண்டுமானால் இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற சமரசக் கருத்தை ஓயாமல் முன்வைத்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

புதிய இந்தியாவைக் கட்டமைத்ததில் சுவாமி விவேகானந்தரின் பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் விளங்குகிறது. இந்தியாவை உயர்த்துவதற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சில உயர்ந்த ஆன்மாக்களில் அவரும் ஒருவர்.
1893-ல் மிகவும் கடினமான சூழ்நிலையில் உலக அரங்கில் உயர்ந்த ஆன்மிக, மனிதநேய செய்தியைத் தெரிவிப்பதற்காக அவர் சிகாகோ சென்றார். அங்கு அவர் அளித்த செய்தி உயர்வானது. அதை உலக அரங்கிலிருந்தோர் மிகவும் வரவேற்றார்கள்; பாராட்டினார்கள். அதனால் மாநாட்டுக்குப் பிறகும் அவர் அங்கு தங்கியிருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் புகழ்பெற்றவை.
நைனிடாலிலிருந்த முகமது சர்ஃப்ராஸ் உசேன் என்பவருக்கு சுவாமி விவேகானந்தர் 1898 ஜுன் மாதம் 10-ஆம் நாள் அல்மோராவிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “ஒட்டுமொத்த மனித இனத்தையும் தன்னுடைய சொந்த ஆன்மாவாகக் கருத வேண்டும். அதை செயலில் காட்ட வேண்டுமென்பதே செயல்முறை அத்வைதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “இந்தத் தத்துவத்தை மற்ற இனத்தவரை விட முன்னதாக ஹிந்துக்கள் கண்டடைந்தனர் என்ற புகழ் அவர்களுக்கு இருந்தாலும் அது ஹிந்துக்களிடையே பரவி வளரவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். “இதற்கு மாறாக எனக்குத் தெரிந்த வரையில், இந்த சமத்துவத்தை குறிப்பிடத்தக்க வகையில் எந்த சமயமாவது அணுகி உள்ளதா என்று பார்த்தால் அது இஸ்லாம், இஸ்லாம் மட்டுமே”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் சொந்த தாய்நாட்டிற்குள்ள ஒரே நம்பிக்கை ஹிந்துயிசம், இஸ்லாம் என்ற அந்த மகத்தான இரண்டு முறைமைகளின் சங்கமமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்தக் குழப்பம், சச்சரவுகளிலிருந்து விடுபட்டு வேதாந்த அறிவுடன் இஸ்லாமிய உடலுடன் எழுச்சி மிகு இந்தியா வெளிப் படுவதை என் மனக்கண்ணால் நான் காண்கிறேன்” என்று அவர் எழுதியுள்ளார்.
இதே கருத்தை பிரபல முஸ்லிம் சீர்திருத்தவாதியான சர் சையத் அகமத் கானும் (1817 – 1898) கூறியுள்ளார். “ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவின் இரு கண்கள்” என்று அவர் கூறியுள்ளார். சுவாமி விவேகானந்தரைப் போலவே சர் சையத்தும், இந்தியாவில் மகத்தான இருபெரும் சமுதாயமான ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும். மிகவும் வளர்ச்சியடைந்த முன்னேறிய நாடாக விரைவில் இதை ஆக்க வேண்டும் என்று கனவு கண்டார்.
ஆனால் அது நனவாவதற்கு முன்பாக வரலாற்றையே பின்னடையச் செய்த மிகப் பெரிய துயரம் நிகழ்ந்தது. ஹிந்துஸ்தான், பாகிஸ்தான் என நாடு பிளவுபட்டது. இரண்டு சமுதாயத்தினரின் சக்தியும் இணைந்து நாட்டை உயர்த்துவதற்குப் பதிலாக, அந்த சக்தியானது சவால்- பதில் சவாலென விரயமாகிறது.
பிரிவினைக் கருத்து முன்வைக்கப்பட்ட கணமே இந்திய வரலாற்றில் துயரம் தொடங்கி விட்டது. உண்மையைச் சொல்லப் போனால், ஆரம்பத்தில் பிரிவினை இயக்கத்திற்குக் குறைந்த ஆதரவே இருந்தது. ஏனெனில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இணக்கமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வந்ததேயாகும். ஆனால் இந்தியாவை முழுமையாக தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த ஆங்கில ஆட்சியாளர்கள் இரண்டு விதங்களில் அந்த இயக்கத்தை வளர்த்தனர். முதலில் ஒரு சமுதாயத்திற்கு எதிராக மற்றதை தீய செயல் புரியத் தூண்டிவிட்டனர். ஹிந்துக்களுக்கு எதிரான சிந்தனையை முஸ்லிம்களிடம் ஏற்படுத்தினர். ஹிந்துக்களிடமும் அவ்வாறே செய்தனர். இரண்டாவதாக, பிரிவினை கேட்டு பிரசாரம் செய்த முஸ்லிம்களை, ஆங்கில ஆட்சியாளர்கள் நிலையான கட்சியாக அங்கீகரித்தனர். அதன்மூலம் பிரிவினை கோருபவர்களின் கருத்தை வலுப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, விடுதலைக் கோரிக்கையை வலியுறுத்த காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் வைஸ்ராயைச் சந்தித்தபோது அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி போல “இந்தியாவுக்கு சுதந்திரம் தர நாங்கள் தயார். ஆனால் அதற்கு நீங்கள் முகமது அலி ஜின்னாவின் சம்மதத்தைப் பெற்று வாருங்கள்” என்ற கருத்துப்படப் பேசியுள்ளார். இவ்விதமாக ஆங்கில ஆட்சியின் போது உண்மை நிலைக்கு மாறாக, தேவையற்ற முக்கிய நிலையை பிரிவினை கோருபவர்கள் அடைந்தனர்.
இந்தக் கூட்டணியால் 1947-ல் நாடு பிரிவினைக்கு உள்ளானது. பிரிவினையின் மிகவும் முக்கியமான விளைவாக ஹிந்துக்கள், முஸ்லிம்களின் மனதில் தாங்கள் தனித்தனி தேசிய இனங்கள் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்து விட்டது. இரு தேசிய சிந்தனையானது அறிந்தோ அறியாமலோ இரு சமுதாயத்தினரின் மனநிலையில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இது தான் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை ஏற்படாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம். இந்த உரசலினால் தேச வளர்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன. இந்தத் தவறான கொள்கையால் சுதந்திரமடைந்து 45 ஆண்டுகளாகியும் நம் பொன்னான நேரம் வீணாய்க் கழிந்தது.
சுவாமி விவேகானந்தர், சர் சையத் போன்ற மகத்தான சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கு இதுவே சிறந்த நேரம். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்தே ஒரே தேசியம் என்ற கருத்தை இரு சமுதாயத்தினர் இடையேயும் ஏற்படுத்துவதே இப்போது நம்முன் உள்ள மிகப் பெரிய பணி.
இருவருக்கும் பொதுவாக உள்ள விருப்பங்களைக் கொண்டு இதை நிரூபிக்க முடியும். அந்தப் பொதுவானதைக் கொண்டே அவர்களை ஒருங்கிணைக்க முடியும். இணைந்த அந்த சக்தியை தேச நிர்மாணப் பணியில் ஈடுபடுத்த முடியும்.
பிரிவினை கோரும் மனப்பான்மையை அடியோடு அகற்ற வேண்டியது முற்றிலும் அவசியம். எல்லா நிலைகளிலும் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் ஏற்பட வேண்டும் என்ற ஆவலை வலுப்படுத்த வேண்டும். இந்த ஆவல் இல்லாவிட்டால் நமக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் வாய்ப்புள்ளது. ஆனால் இதைத் தவிர்க்க முடியாததென்றோ, மாற்ற முடியாததென்றோ கருதவேண்டியதில்லை. இதன்மூலம் நம்மிடையே உள்ள வேற்றுமையைத் தவிர்க்கவும், மாற்றவும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள முடியுமா என்பதே கேள்வி. அதன்மூலம் நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
1893ல் சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று சர்வசமய மாநாட்டில் தோன்றியதே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. (*பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா 15/623/1984). அவர் மாநாட்டிற்கு எப்படிச் சென்றார், அங்கு அவர் நடந்து கொண்ட முறை ஆகியவற்றைப் பற்றி நீண்ட சுவாரசியமான பதிவுகள் உள்ளன. அதில் ஒரு பகுதி ‘இந்திய சமயங்கள்’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையின் துவக்க வார்த்தைகள் பற்றியது. அந்த வார்த்தைகள் “அமெரிக்க சகோதர, சகோதரிகளே”. இந்த வார்த்தைகளுடன் உரையைத் துவங்கியது அங்கிருந்த சூழ்நிலையில் அசாதாரணமானதாக விளங்கியது.
வழக்கமாக மேற்கத்திய மரபுகளின் படி, ஒவ்வொரு பேச்சாளரும் உரை நிகழ்த்தும் போது சீமான்களே சீமாட்டிகளே (லேடீஸ் அண்டு ஜென்டில்மேன்) என்றுதான் துவங்குவார்கள். இது போன்ற சூழ்நிலையில், சுவாமி விவேகானந்தரின் துவக்க வார்த்தைகளைக் கேட்டவுடன் அரங்கிலிருந்தோர் மனக்கிளர்ச்சி அடைந்து மகிழ்ச்சியுடன் தொடர்ந்து நீண்ட நேரம் கைதட்டினர். அங்கிருந்த மற்றெந்த பேச்சாளரையும் விட சுவாமி விவேகானந்தர் தான் அதிக வரவேற்பையும் கைத்தட்டலையும் பெற்றார்.
அவர் சிகாகோவில் ஒரே ஒரு உரை நிகழ்த்தத் தான் சென்றார். ஆனால் அந்த முதல் உரையால் ஏற்பட்ட தாக்கத்தால் அவர் நீண்ட காலம் அங்கே தங்கியிருக்க வேண்டுமென அனைவரும் வேண்டினர். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அவர் உரையாற்றியது இவ்வாறு தான் நிகழ்ந்தது.
‘உலகெங்குமுள்ள ஆண்களும் பெண்களும் சகோதர, சகோதரிகளே’ என்ற செய்தியைத் தான் சுவாமி விவேகானந்தர் தலைமையில் இந்தியா உலகிற்கு தெரிவித்தது. இந்த உலக சகோதரத்துவத்தின் தூதராகத் தான் சுவாமி விவேகானந்தர் உலக அரங்கில் தோன்றினார். ஆனால் இன்றோ அவர் செய்தியின் சாரத்தை நாம் இழந்துவிட்டோம்.
நம் சொந்த நாட்டிலுள்ள ஆண்களையும் பெண்களையுமே சகோதர, சகோதரிகளாகப் பார்க்க மறுக்கிறோம். நூறாண்டுகளுக்கு முன்பு, சுவாமி விவேகானந்தர் தன் சுய தியாகத்தினால் இந்தியா உலகின் தலைமைக்குச் செல்ல வழிவகுத்தார். அவர் ஏற்படுத்திய வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காரணம் நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொண்டு வீழ்ந்து விட்டோம்.
சுவாமி விவேகானந்தரின் லட்சியப் பணியை நாம் மேற்கொள்ள இதுவே தக்க தருணம். தேச அளவில் நாம் சகோதர சகோதரிகளாக வாழவும், சர்வதேச அளவில் மனித நேயத்துடனும் உலகளாவிய சகோதரத்துவடனும் வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும். இதைப் புரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டியதன் தேவை வேறெப்போதையும் விட இப்போது மிகவும் அவசியம்.
ஆசிய நாடுகளான இந்தியாவும் ஜப்பானும், ஏறத்தாழ ஒரே நேரத்தில், அதாவது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நவீனப் பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தன. 45 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொழில் துறையில் மிகவும் முன்னேறிய நாடாக ஜப்பான் உலகளவில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு எந்தவிதமான வரவேற்பும் இல்லை. உலக அரங்கில் அது தாழ்வான நிலையில் தான் உள்ளது.
உலகளவில் இந்தியா இன்னும் முக்கியமாக பங்கேற்க வேண்டும். உலகில் இன்று அமெரிக்கா ராணுவ பலம் பொருந்திய வல்லரசாக இருக்கலாம். ஜப்பான் பொருளாதார வல்லரசாக இருக்கலாம். ஆனால் உலகில் மிக முக்கியமான இடமான கருத்தியல் வல்லரசு இன்னமும் காலியாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். அந்த இடத்தில் இந்தியா அமர்வதன் மூலம், உலகியல் சுகங்களே பிரதானம் என்ற இன்றைய நிலைக்கு சரியாக மாற்றாக இருக்க முடியும்.
இயற்பொருள் (உலகியல்) வாதமென நான் எதைக் கருதுகிறேன் என்பதைப் பார்ப்போம். உலகில் எந்த சர்வாதிகாரியும் வைத்திராத அளவுக்கு வேறெப்போதும் இல்லாத அளவுக்கு நாசகார ஆயுதங்கள் இன்று நம்மிடம் உள்ளன. ஆனால் அவை நமக்கு அமைதியைக் கொண்டு வரவில்லை.
நம் உடல் சார்ந்த தேவைகளை நிறைவேற்றத் தேவையான கருவிகளும் சாதனங்களும் வழிமுறைகளும் மிக அதிகமாக இன்று உள்ளன. இருந்தாலும் மனித இனம் ஏதோவொரு வெறுமையில் துன்பப்பட்டுக் கொண்டுள்ளது.
அது கருத்தியல் ரீதியான வெறுமை.
சமய, ஆன்மிக நாடான இந்தியா மட்டுமே அந்த வெறுமையைப் போக்கி, உலகிற்கு அமைதியையும் மனித தன்மையையும் சகோதரத்துவத்தையும் வழங்கக் கூடிய கருத்தியல் கொண்ட ஒரே நாடாகும். இதைத் தான் நூறாண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் உலகிற்குத் தெரிவித்தார்.

அண்மையில் நான் ஒரு ஐரோப்பிய நாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு சுவாமி விவேகானந்தரைப் பற்றியும் அவர் உலகிற்கு அளித்த அமைதி, மனிதநேயம் என்ற செய்தியைப் பற்றியுமான எனது உரையை பொறுமையுடன் கேட்டார் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர். இறுதியில் என்னிடம் அவர் புன்சிரிப்புடன் கூறினார்: “ஆனால் இந்தியாவைப் பொருத்த வரையில் இவையெல்லாம் ஏற்றுமதிக்கான சரக்குகள். சொந்த உபயோகத்திற்கானவை அல்ல.”
இந்த முரண்நகைக்கு சரியான பதில், சுவாமி விவேகானந்தரின் செய்தியை சொந்தப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தான். நூறாண்டுகளுக்கு முன்பு 1893 செப்டம்பரில் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் தன் கருத்தை உலக அரங்கில் முன்வைத்தார். அப்போது அவரது கருத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டப்பட்டது. ஆனால் அதன் பின்பு அதை யாரும் பின்பற்றவில்லை.
நுறாண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தரிடம் ஒரு கனவு இருந்தது. அதனை இன்றும் நனவாக்க முடியும். அந்தக் கனவை நனவாக்கத் தேவைப்படும் எல்லா விஷயங்களும் இன்று இந்தியாவில் அளவுக்கதிகமாகவே உள்ளன. தேவைப்படுவது அதை நனவாக்க வேண்டுமென்ற உறுதியும் துணிவும்தான்.
இப்போது நாம் அந்தத் துணிவையும் உறுதியையும் மேற்கொள்ள வேண்டும். சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்குவதே இன்று நாம் அவருக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதையாகும்.
குறிப்பு: இக்கட்டுரை ‘பிளிட்ஸ்’ பத்திரிகையில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம். ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’ பத்திரிகையில் வெளியான கட்டுரை இது. தமிழில் இதை வழங்கி இருப்பவர், திருநின்றவூர் கே.ரவிகுமார். நன்றி: பிளிட்ஸ் (ஆக. 1993) / விஜயபாரதம் (19.09.2008)
$$$