பாஞ்சாலி சபதம்- 1.2.8

-மகாகவி பாரதி

சூதாட்டத்தின் தீமையைக் கூறும் தருமனிடம்,  ‘சாத்திரம் பேசாதே, மன்னர்களை சூதாட அழைத்தால் மறுப்பது மரபல்ல’ என்கிறான் சகுனி.

முதல் பாகம்

1.2. சூதாட்டச் சருக்கம்

1.2.8. சகுனி வல்லுக்கு அழைத்தல்


வேறு

‘சாத்திரம் பேசுகின்றாய்’-எனத்
      தழல்படு விழியடு சகுனிசொல் வான்;
‘கோத்திரக் குலமன் னர்- பிறர்
      குறைபடத் தம்புகழ் கூறுவ ரோ?
நாத்திறன் மிக உடை யாய்!- எனில்
      நம்மவர் காத்திடும் பழவழக் கை
மாத்திர மறந்துவிட் டாய்;- மன்னர்
      வல்லினுக் கழைத்திடில் மறுப்பதுண்டோ?       175

‘தேர்ந்தவன் வென்றிடு வான்;- தொழில்
      தேர்ச்சிஇல் லாதவன் தோற்றிடு வான்;
நேர்ந்திடும் வாட்போரில்- குத்து
      நெறி அறிந் தவன்வெலப் பிறனழி வான்;
ஓர்ந்திடு சாத்திரப் போர்- தனில்
      உணர்ந்தவன் வென்றிட,உணரா தான்
சோர்ந்தழி வெய்திடு வான்;- இவை
      சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ?       176

‘வல்லவன் வென்றிடு வான்,- தொழில்
      வன்மைஇல் லாதவன் தோற்றிடு வான்;
நல்லவ னல்லா தான்- என
      நாண மிலார்சொலுங் கதை வேண்டா;
வல்லமர் செய்திடவே- இந்த
      மன்னர் முன்னேநினை அழைத்துவிட்டேன்;
சொல்லுக வருவதுண் டேல்- மனத்
      துணிவிலை யேலதுஞ் சொல்லு’கென்றான்.       177

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s