ஸ்வதந்திர கர்ஜனை- 2(15)

-தஞ்சை.வெ.கோபாலன்

பகுதி: 2.14

ராஜாஜி

பாகம்-2 : பகுதி 15

காந்திஜி விலகினார்!

1932. மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. கள்ளுக்கடை மறியலும் அதனால் கைது நடவடிக்கைகளும், சிறைவாசமுமாக போராட்டக் களம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது.

நாட்டில் சிறைச்சாலைகள் எல்லாம் சத்தியாக்கிரகிகளால் நிரப்பப்பட்டிந்தன. காந்தியடிகளும் சிறையில் இருந்த காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் பல அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தது. அதன்படி ஹரிஜனங்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்கப்பட்டது.

எரவாடா சிறையில் இருந்த காந்திஜி, முன்னமேயே அப்படி மக்களைப் பிரித்து ஹரிஜனங்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்குவார்களானால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லியிருந்தார் அல்லவா?  அதையொட்டி அவர் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைச் சிறையிலேயே துவக்கினார்.

அதனை முடிவுக்குக் கொண்டுவர பல தலைவர்களும் எரவாடா சென்று காந்திஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்படி எரவாடாவில் முயற்சி எடுத்த தலைவர்களில் டாக்டர் அம்பேத்கர், எம்.சி.ராஜா, மதன்மோகன் மாளவியா, பிர்லா, ராஜாஜி ஆகியோர் முக்கியமானவர்கள்.

காந்தி விடாப்பிடியாக மக்களின் ஒற்றுமையை- ஜாதியைச் சொல்லி பிரிப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு மேலே உயர்த்த வேண்டுமே தவிர,  ஒதுக்கி வைத்து தனிச் சலுகைகள் மூலம் பிரிவை நிலைநாட்டிக் கொண்டிருப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. பின்னர் ‘எரவாடா ஒப்பந்தம்’ எனும் ஒரு சமரச உடன்படிக்கை ஏற்பட்டது. காந்திஜி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து வெளிவந்த காந்திஜி தீண்டத் தகாதவர்கள் என  ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு இறைவன் பெயரால் ‘ஹரிஜனங்கள்’ என்று பெயரிட்டு அழைத்தார்.

‘யங் இந்தியா’ என்ற பெயரில் நடத்தி வந்த தனது பத்திரிகைக்கு ‘ஹரிஜன்’ என்று பெயரை மாற்றினார். ‘ஹரிஜன சேவா சங்கம்’ எனும் அமைப்பை ஏற்படுத்தி நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காக பல சேவைகளை செய்யத் தூண்டினார். அந்தச் சேவைகளைச் செய்ய ஒரு நிதியும் தொடங்கி,  நாடு முழுவதிலிருந்தும் வசூல் செய்யப்பட்டு எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் ஹரிஜன சேவைகளில் ஈடுபடலாயினர்.

அதுவரை தாழ்த்தப்பட்ட மக்களையும், இந்துக்களில் வேறு சில சாரார்களையும் ஆலயத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமையை மாற்ற காந்திஜி பெரு முயற்சி எடுத்தார். சாதியின் பெயரால் மக்களின் உரிமைகளைப் பறிக்க அவர் இடம் கொடுக்க மறுத்தார். அவர்களும் ஆலயங்களினுள் நுழைந்து இறைவனை வழிபட வழிவகைகள் செய்யப்பட வேண்டுமென்றார்.

சென்னை மாகாணத்தில், மதுரையில் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர், பி.கக்கன் ஆகிய தொண்டர்கள் தலைமையில் ஏராளமான தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்தினுள் அழைத்துச் சென்று இறைவனை வழிநடத்தச் செய்தார் ராஜாஜி.

ஒரு புதிய விழிப்புணர்வு நாட்டில் தென்படலாயிற்று. தீண்டாமை எனும் அரக்கன் இந்துக்களின் மனங்களில் குடிகொண்டிருந்ததை வழிப்புணர்வு மூலம் விரட்டியடிக்கத் தொடங்கினர். இந்த வரலாறுகள் எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக சீர்திருத்தங்களாக வெளிவர காங்கிரஸ் இயக்கமும், மகாத்மா காந்தியடிகளின் தூண்டுதலே காரணம் என்பதை மக்கள் புரிந்து கொளல் வேண்டும்.

முன்பு குற்றாலம் சென்றபோது ஆலயங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்ட காந்திஜி, அவர்கள் என்று ஆலயங்களுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப் படுகிறார்களோ அது வரை நாமும் ஆலயங்களுக்குள் செல்வதில்லை என்று விரதம் மேற்கொண்டார்.

மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் நடைபெற்ற போது அவருக்குப் பலத்த எதிர்ப்பு உண்டானது. நிலைமையை வைத்தியநாத ஐயர் ராஜாஜிக்குத் தெரிவிக்க “அவர் தக்க ஏற்பாடு செய்கிறேன், நீங்கள் ஆலயப் பிரவேச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

மதுரை மீனாட்சி அம்மன் வாசலுக்கு தொண்டர்கள் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்கள். ஆலயத்தின் வாயிலில் ஒரு பெருநிலக் கிழாரின் அடியாட்களுடன் கோயில் பூசாரிகளும், சநாதனிகளும் கழி, கட்டை முதலான ஆயுதங்களுடன் எதிர்த்துத் தடுக்கத் தயாராக இருந்தனர். திடீரென்று அப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய ஆட்கள் வண்டிகளில் கும்பல் கும்பலாக வேல்கம்பு, வீச்சரிவாள் முதலான ஆயுதங்களுடன் வந்து குதித்தனர். அடுத்த விநாடி ஆலயத்தின் வாசல் ஈ காக்கை இன்றி காலியாகிவிட்டது.

தொண்டர்கள் ஆலயத்தில் சந்நிதிகளின் சாவியைத் தன்னிடம் வைத்திருந்த கோயில் குருக்கள் ஒருவர் வழிகாட்ட அனைவரும் எல்லா சந்நிதிகளுக்கும் சென்று வழிபட்டனர். அதன் பின்னர் மதுரை வந்த காந்திஜி அந்த கோயிலுக்கும் வந்து தரிசனம் செய்தார். இப்படியொரு சமூகப் பிரச்சனை சத்தியாக்கிரகிகளால் தீர்க்கப்பட்டது என்பது தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களின் கவனம் அரசியல் போராட்டங்களோடு சமூக சீர்திருத்த விஷயங்களிலும் திரும்பலாயிற்று. ஹரிஜனத் தொண்டு என்பது மிகவும் அவசர அவசியத் தேவையாக சுதந்திரப் போராட்டம் வலுப்பெற வேண்டுமானால் நாட்டினுள் சாதிப் பிரிவுகளினால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும், இழந்த சமூக கெளரவம் அந்தஸ்தைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற ஆர்வம் பெருகலாயிற்று.

மகாத்மா காந்தியடிகள் இந்த சமூகப் பொறுப்பை தலையாய கடமையாகக் கருதி அல்லும் பகலும் நாடு முழுதும் சுற்றி பாடுபட்டு வந்தார். நாடு அந்நியர்களை விரட்டி தூய்மையாக ஆவதற்கு முன்பு இங்குள்ள சமூக அவலங்கள் அகற்றப்பட்டு நாடு தூய்மையாக வேண்டுமென காந்திஜி நினைத்தார்.

இதற்கிடையே 1933-இல் கல்கத்தாவில் காங்கிரசின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையையும் மீறி காங்கிரஸ்காரர் சென் குப்தா என்பவரின் மனைவியும் ஆங்கிலப் பெண்மணியுமான நல்லி சென் குப்தா என்பவர் தலைமையில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது.

காந்தி தன்னுடைய ஆன்ம சுத்திக்காக ஒரு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். அந்த உண்ணாவிரதம் 1933 மே மாதம் 8-ஆம் தேதி தொடங்கி 21 நாட்கள் நடந்தது. அதே மாதம் 29-ஆம் தேதி உண்ணாவிரதத்தை புனாவில் முடித்தார். அதே ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அன்னிபெசன்ட்டும், வல்லபபாயின் அண்ணன் வித்தல்பாய் படேலும் காலமானார்கள்.

1934-ஆம் ஆண்டில் பிகார் மாநிலத்தில் ஒரு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. பூமி பிளந்ததில் மக்கள் ஆயிரக் கணக்கில் உயிரிழந்தனர். வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து பூமிக்குள் அழுந்திவிட்டன. பீகாரில் சுமார் 15,000 சதுர மைல் பரப்புக்கு இந்த பூகம்பத்தின் பேயாட்டத்தின் அழிவுகள் காணப்பட்டன. காந்திஜியின் ஆலோசனைப்படி சட்டசபையில் டாக்டர் அன்சாரி தலைமையில் ஒரு நிவாரணக் குழு அமைக்கப்பட்டது.

பிகார் பூகம்ப நிவாரணப் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வந்து நேரடியாகக் கலந்து கொண்டனர். மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் எடுத்துக் கொண்ட முயற்சிகளை மக்கள் வெகுவாகப் பாராட்டினர். காங்கிரசின் நிவாரணப் பணிகளில் பிகாரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் முனைப்புடன் செயல்பட்டு சுயநலமில்லாமல் இரவு பகலாக உழைத்தார்.

அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-இல் பம்பாயில் பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் காங்கிரஸ் கூடியது. அதுவரை காங்கிரஸ் என்றால் காந்திஜி என்ற நிலையில் அவர் இருந்து வந்தார். அப்போது காங்கிரசில் அடிப்படை உறுப்பினராக இருக்க நான்கு அணா செலுத்த வேண்டும். இந்த நிலைமை சுதந்திரத்துக்குப் பிறகும் கூட வெகுகாலம் நாலணா தான் உறுப்பினர் சந்தாவாக வசூலிக்கப்பட்டது. காந்திஜி காங்கிரசின் நாலணா உறுப்பினரிலிருந்தும்- அதாவது அடிப்படை உறுப்பினரிலிருந்தும்- விலகிக் கொண்டார்.

எப்போதெல்லாம் தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் காங்கிரசுக்குத் தான் ஆலோசனைகளைக் கூறுவதாகத் தெரிவித்து விட்டார். காந்திஜி காங்கிரசிலிருந்து விலகிய செய்தி தேசபக்தர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த சூழலில் மத்திய சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றி கிட்டியது.

காந்திஜி தீவிர அரசியலில் காங்கிரசில் இருந்து பாடுபட்டுக் கொண்டிருந்ததிலிருந்து சற்று விலகி தேச நிர்மாணத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தலானார். கிராம கைத்தொழில்களை வளர்க்க வேண்டியதை வற்புறுத்தி புதிய கைத்தொழில்களைத் தொடங்க ஆலோசனை கூறினார்.

உணவுப் பழக்கத்தில் மக்களுக்குத் தேவையான சத்தான உணவுகளை உண்ணவும், ஹிந்தி மொழியைப் பரப்ப ஆங்காங்கே ஹிந்தி பிரசார சபைகளை உருவாக்குவதிலும், அதன்மூலம் ஹிந்தி பேசாத பிரதேசங்களிலும் ஹிந்தி மொழியைப் பரப்பவும், கதர் தொழில் அபிவிருத்திக்காக நூல் நூற்றல், கதராடைகளை நெய்தல், கதர் துணிகளை அணிதல் என்ற பழக்கத்தை காந்திஜி தொடங்கவும், நாட்டில் மக்கள் அதிகமாகக் கதரை ஆதரிக்கவும், கிராமத் தொழிலை வளர்க்கவும் பாடுபடத் தொடங்கினார்கள்.

ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகி, தங்கள் பாரம்பரிய கைத்தொழில்களை இழந்து, பெருமைகளை இழந்து, இந்திய மொழிகள் ஆங்கிலத்துக்கு அடிமையாகி இந்தியர்கள் தங்கள் சொந்த அடையாளங்களையே இழந்திருந்த நேரத்தில், காந்திஜி அவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.

1935-ஆம் வருஷம் டிசம்பர் 28-ஆம் தேதி காங்கிரசின் பொன்விழா நாடெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த பொன்விழாவையொட்டி காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை விரிவாக எழுத பட்டாபி சீத்தாராமையா எனும் ஆந்திர தேசத்துக் காங்கிரஸ் தலைவரிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மகாத்மாவுக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த பட்டாபி சீத்தாராமையா. அவர் எழுதிய ‘இந்திய தேசிய காங்கிரஸ் வரலாறு’ எனும் நூல்- அது 1885 முதல் 1935 வரையிலான காலகட்டத்தை விவரிக்கும் நூல்- இந்த மாநாட்டில் காங்கிரஸ் வெளியிட்டது.

1936-ஆம் வருஷம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் லக்னோ நகரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ஜவஹர்லால் நேரு தலைவர். மகாத்மா காந்தி தீவிர அரசியலில் இருந்து சற்று விலகி ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டிருந்தமையால் தன் பணிகளை நடத்த அமைதியான ஒரு இடம் தேவைப்படவே, நாகபுரிக்கு மிக அருகில் வார்தா எனும் இடத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் இருந்த சேவா கிராமத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டார். வரலாற்றில் மிகப் புகழ் பெற்றுவிட்டது இந்த வார்தா ஆசிரமம். காந்திஜியின் பல நடவடிக்கைகள் இந்த ஆசிரமத்திலிருந்து தொடங்கப் பெற்றன.

அதே ஆண்டின் இறுதியில் பெய்ஸ்பூர் எனும் இடத்தில் மற்றொரு காங்கிரஸ் மாநாடு, ஜவஹர்லால் தலைமையில் நடந்தது. அது ஒரு கிராமப் பகுதி. முதன் முதலாக காங்கிரஸ் மாநாட்டை நகரம் அல்லாத ஒரு கிராமப் பகுதியில் நடத்தியது இதுதான் முதல் தடவை.

1937-இல் மாகாண சட்டசபைகளுக்கு தேர்தல்கள் நடந்தன. காங்கிரஸ் எல்லா மாகாணங்களிலும் சட்டசபைக்குப் போட்டியிட்டு அமோக வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள மாகாணங்கள் 11, அதில் 8-இல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2 மாகாணங்களில் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது. ஒரு மாகாணத்தில் ஒரு பிரதேசக் கட்சி ‘யூனியனிஸ்ட் கட்சி’ என்ற பெயரில் வெற்றி பெற்றது.

மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் அவர்கள் அமைச்சரவை அமைத்தால் அதை சுதந்திரமாக நடத்த பிரிட்டிஷ் அரசு அனுமதிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. மாகாண கவர்னர்கள் மூலம் மாகாண சர்க்காரின் முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் கவர்னர்கள் முட்டுக்கட்டைப் போடுவார்களோ எனும் ஐயப்பாடும் இருந்தது. ஆகையால் காங்கிரசார் தங்கள் கவலையை அரசாங்கத்துக்கு எடுத்துச் சொன்னார்கள்.

அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம், ‘மாகாணத்தின் அன்றாட பிரச்னைகளில் கவர்னர்கள் தலையிட மாட்டார்கள்’ என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து காங்கிரசார் ஆங்காங்கே மந்திரி சபையை அமைக்கத் தொடங்கினார்கள். இந்த அரசியல் மாற்றத்தைப் பற்றி காந்தி சொன்னார்:

“யோக்கியப் பொறுப்பும், தன்னலமில்லா உழைப்பும், விழிப்புணர்வும் உடைய அமைச்சர்களுக்கு, கோடிக் கணக்கான ஏழை எளிய மக்களின் உண்மையான நல்வாழ்வுக்காகப் பாடுபடுவதற்கு, இப்போது அரியதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது”.

1937-இல் காந்திஜி அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்காரர்களில் அமைச்சர்களாக நியமிக்கப்படவிருப்பவர்களின் கடமையை மிக எளிமையாக எடுத்துச் சொல்லிவிட்டார். காந்திஜியின் இந்த அறிவுரை அப்போது பதவிக்கு வந்த காங்கிரசாருக்கு மட்டுமல்ல, பின்னாளில் இதுபோன்ற பதவிகளுக்கு வரக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்குமே பொருந்தும் அல்லவா?

அந்த நேரத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் அப்படி பொதுநல நோக்கோடு தான் பணியாற்றினார்கள். ஆனால், வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி, காந்திஜியின் இந்த அறிவுரை பின்னாளில் யாராலும் கடைபிடிக்கப்படவில்லை என்பது ஒரு வருத்தமான செய்திதான். இனியாவது அந்த நிலைமை மாறி அவர் சொன்னதைப் போல மக்களுக்காகப் பாடுபடும் உண்மையான பிரதிநிதிகள் பதவி வகிக்கப் பாடுபடுவோம்.

அந்த ஒரு அறிவுரை மட்டுமல்லாமல் காந்திஜி இன்னொரு விஷயத்தையும் வற்புறுத்திச் சொன்னார்.

“மதுவிலக்கு, குடியானவர்களுக்கு கஷ்ட நஷ்ட நிவாரணங்கள், குழந்தைகளுக்கு அடிப்படை ஆதாரக் கல்வி, சிறைச்சாலை சீர்திருத்தங்கள், சிறைகளை வாழ்வுக்கு வழிகாட்டும் கலாசாலைகளாக மாற்றுதல் போன்றவை அவசரமாகச் செய்ய வேண்டிய சீர்திருத்தக்கள்”

சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. கூடிய வரை காந்திஜி சொன்ன செயல் திட்டங்கள் அமல் செய்யப்பட்டன. சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வந்து சாதனை படைத்தார் ராஜாஜி.

நிவாரணங்களைப் பொறுத்த வரை ஒரேயொரு நிகழ்வைச் சொல்லி விளக்கிவிடலாம். ஆந்திராவில் நெல்லூர் பகுதியில் காலரா பரவி பல உயிர்களை பலிகொண்டது. ராஜாஜி தில்லியில் இருந்தார். உடனே சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் தி.சே.செள.ராஜன் அவர்களுக்குத் தகவல் கொடுக்க அவர் நேரில் சென்று காலரா பரவ காரணங்களைக் கண்டு அதனை சரிசெய்து காலரா நோய் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்ட செய்தியை ராஜாஜிக்கும் தெரிவித்து விட்டார். அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு தான் காந்திஜி விரும்பி மேலே சொன்ன கருத்து.

சிறைச்சாலை சீர்திருத்தங்கள் அன்றைய நிலைமையில் மிக அவசியமாகத் தேவைப்பட்டது. கிரிமினல் குற்றவாளிகளோடு தான் அரசியல் கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க சிறை அறையினுள் வசதி கிடையாது. ராஜாஜி கைதியாக தஞ்சை சிறையில் இருந்த் போது ஓர் ஆங்கிலேயர் ஜெயிலராக இருந்தார். காலையில் கைதிகள் பேரேடு நடக்கும். வரிசையாக கைதிகள் நிற்பர். அவர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் ஒரு கையை மட்டும் முழங்கை வரை முன்பாக நீட்ட வேண்டும். கைதிகளைப் பார்வையிட்டு வரும் அதிகாரி என்னவென்று விசாரிப்பார், ஆனால் எந்த கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதில்லை.

அதுபோல ஒரு நாள் ராஜாஜி தஞ்சை சிறையில் தன் கையை முன்னால் நீட்டிக் கொண்டு நின்றார். வெள்ளைக்கார ஜெயிலர் என்ன வேண்டுமென்றார். அப்போது ராஜாஜி சில சீர்திருத்தங்களை, அதாவது இரவில் சிறுநீர் கழிக்க ஒரு பானை வேண்டும் என்றார். அதற்கு அவர் தன் கையில் வைத்திருந்த சிறிய தடியினால் ராஜாஜியின் கையை தள்ளி கீழிறக்கிவிட்டு உன் தலையில் தான் அதிகமாக இடம் இருக்கிறதே என்று பழித்துக் கூறினார்.

1937 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி முதல்வர் (அப்போது பிரதமர் என்பார்கள்) ஆன பின் திருச்சி சென்றிருந்தார். அங்கு பிரபல காங்கிரஸ்காரரான ரத்தினவேலு தேவர் வீட்டில் உறையூரில் தங்கினார். அவரைக் காண அரசாங்க அதிகாரிகள் பலரும் வந்தனர். மேலே ராஜாஜியைக் அவமானப்படுத்திய ஜெயிலரும் வந்திருந்தார். அப்போது அவர் திருச்சி ஜெயிலில் அதிகாரியாக இருந்தார்.

எல்லா அதிகாரிகளையும் ராஜாஜியைச் சந்தித்து அவரவர் துறையில் செய்ய வேண்டியவற்றைக் கேட்டுக் கொண்டு போய்விட்டனர். வெள்ளைக்கார ஜெயிலர் மட்டும் தயங்கித் தயங்கி நின்றுவிட்டு கடைசியாக உள்ளே போய் ஒரு சல்யூட் அடித்து தான் திருச்சி ஜெயிலர் என்றார்.

ராஜாஜி ஒன்றுமே நடக்காதது போல அவரிடம்,  சிறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் எல்லாம் சொல்லி செய்துவிடுங்கள் என்றார். ராஜாஜி பழைய நிகழ்ச்சியைப் பற்றி ஏதேனும் கேட்பாரோ என்று தயங்கித் தயங்கி நின்றுவிட்டு, ‘வேறு ஏதேனும்?’ என்றார். ராஜாஜி சுருக்கமாக ‘வேறொன்றும் இல்லை, நீங்கள் போகலாம்’ என்று சொல்லிவிட்டார். ஆக, ராஜாஜி காந்திஜி சொன்ன அறிவுரைகளின்படி சிறை சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியதோடு, தன்னுடைய பெருந்தன்மையையும் வெளிப்படுத்தி விட்டார்.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(15)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s