-பொன்.பாண்டியன்
திரு. பொன். பாண்டியன் குடியாத்தத்தில் வசிக்கிறார்; அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...

‘ஆத்மவத் ஸர்வ பூதேஷு’ – எல்லா உயிர்களையும் உன்னைப் போலவே கருது என்ற வேத வாசகம் வெறும் அறிவுரை மட்டும் தானா? பசித்த வயிற்றுக்கு ஒரு கவளம் சோறு போடாமல் வெறுமனே வேதம் ஓதுவதால் அனைவருக்கும் முக்தியை எங்ஙனம் அளிக்கமுடியும்?
எழுந்திருங்கள். ஆண்மையுடன் பிறருக்குத் தொண்டு புரிவதில் ஈடுபடுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்பர்கள் சிலருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஓர் அன்பர் ”ஜீவே தயா” – உயிர்களிடத்து கருணை காட்ட வேண்டும் என்று உரைத்தார்.
இது கேட்ட மாத்திரத்தில் குருதேவர் பரவச நிலையை அடைந்து, ”உயிர்களுக்குக் கருணை காட்ட நாம் யார்? ஜீவே சேவா – உயிர்களுக்கு சேவை செய்யவே உரிமை பெற்றவர் நாம்” என அருள்மொழி புகன்றார். அருகில் இருந்து இதைக் கவனித்த நரேந்திரனாகிய சுவாமி விவேகானந்தர், ”என்னுடைய குருநாதரிடம் இருந்து மகத்தான செய்தி ஒன்றினை- உபதேசத்தினை இன்று பெற்றிருக்கிறேன். குருநாதர் ஆசியும் இறையருளும் இருக்குமானால் இந்த உபதேசத்தினை உலகெங்கும் பரப்புவேன்” என்று சூளுரைத்தார்; சாதித்தும் காட்டினார்.
ஒரே கடவுள் சித்தாந்தம் உலகை சின்னாபின்னப் படுத்திவந்த சூழ்நிலையில், கடவுள் ஒருவரே என்னும் ஹிந்து தர்ம அடிப்படைக் கோட்பாட்டை உலகம் முழுவதும் அவர் கொண்டு சென்றார்; உலகை வென்றார்.
இந்து தர்மம் என்பது ஒரு குறுகிய கட்டம் கட்டப்பட்ட மதமன்று. அது ஒரு பரந்த சிந்தனை படைத்த வாழ்வியல் ஆகும் என்றும், பண்பாடு, கலாச்சார அடிப்படையில் ஆத்திகர்- நாத்திகர் என இரு சாராருக்கும் இயைந்து வாழ்வைச் செம்மைப்படுத்துகின்ற சீரிய அமைப்பு என்றும், அது உலகிற்கு பாரதம் வழங்கிய கொடை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் கடவுளாகக் கருதுகிற கண்ணோட்டம் நம்முடையது. கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங்குகின்ற பிற மனிதரைப் பேணா விட்டால், கண்ணுக்கும் அறிவுக்கும் புலனாகாத கடவுளை வழிபடுவது எங்ஙனம்?” என்று நமது சிந்தனையைத் தூண்டுகிறார் சுவாமிஜி.
“மனிதர்கள்- மனிதர்களே நமக்கு வேண்டும். அவர்களின் மேன்மைக்காக எதையும் தியாகம் செய்ய முன்வருகிற உத்தமப் புதல்வர்களே வேண்டும்” என்று கூவி அழைக்கிறார்.
“ஏழை, எளியோர், துன்பப்படுவோர் நமது தெய்வங்களாகட்டும். அவர்களுக்காகப் பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். செயல்பட வேண்டும்” என்று நம்மை முடுக்கி விடுகிறார்.
‘யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:’ என்பது மனுஸ்மிருதி. எங்கெல்லாம் பெண்கள் உயர்வாக நடத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் தேவர்கள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்வார்கள் என்பதே இதன் பொருள். இந்த அரிய தத்துவத்தை மறந்து, பெண்களை வெறும் போகப்பொருளாக, எந்திரமாக அடிமையாக நடத்தத் துவங்கியதில் இருந்தே நமது வீழ்ச்சி தொடங்கி விட்டது.
“அவர்கள் மீண்டும் புராண காலத்துப் பெண்கள் போல கல்வி, அரசியல், சமுதாயம் என எல்லா வகைகளிலும் முன்னேற முனைந்து செயல்பட வேண்டும். அதுவே நாடு முன்னேறுவதற்கான அடையாளம்” என்று சுவாமி விவேகானந்தர் எச்சரிக்கிறார்.
“கடவுளுக்கும் சாத்தானுக்கும் ஒரே வேறுபாடு தான். சுயநலமற்ற தன்மை கடவுளாகும். சுயநலத்தின் வடிவம் சாத்தானாகும். சுயநலமற்ற மனிதனே தெய்வத் தன்மை உடையவனாகின்றான். சுயநலம் ஓர் ஒழுக்கக் கேடு; எல்லா நன்மைகளுக்கும் கேடு. சுயநலமற்ற தன்மை சிறந்த ஒழுக்கம். அது பிரம்மச்சரியத்தாலே மிக உன்னதமான நிலையை அடைகிறது”
– என வேதாந்த அடிப்படையில் தெய்வத் தன்மைக்கு இலக்கணம் வகுக்கிறார்.
“வலிமை- வலிமை ஒன்றே ஞான சாதனத்துக்கு முதல்படி. உடல் வலிமை, மனவலிமை இரண்டும் தேவை. கால்பந்து விளையாடுவதைத் தவிர்த்து வீரம் பொதிந்த பகவத்கீதையைப் படிப்பதனால் மட்டும் என்ன பயன்?” என நம்மைச் சிந்திக்கச் செய்து, சாத்திரங்கள் கூறுபவற்றை சரித்திரங்களாகச் சாதிக்கும் செயல்முறை வேதாந்தத்தை வலியுறுத்துகிறார்.
உலக நாடுகள் அனைத்திலும் ஒரே வகையான ஆட்சிமுறை தான் நடைமுறையில் உள்ளது. பணம்- படை- தனிமனித வலிமை படைத்தவர்கள் கட்டளை இடுகிறார்கள். மற்றவர்கள் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல தலை மட்டுமின்றி உடலையே சாய்க்கிறார்கள். இது குடியாட்சி, முடியாட்சி இரண்டுக்கும் பொருந்தும். ஆக யாரும் வீரனை உருவாக்க முடியாது.

‘ஸ்வயம் மேவ ம்ருகேந்த்ரதா’ – சிங்கம் எப்படி இயல்பாகவே காட்டுக்குத் தலைவனாகும் இயல்பான வலிமை படைத்திருக்கிறதோ, அதுபோல புற உலகத்தையும் உடலுக்குள் உறைந்திருக்கும் புலன் உலகத்தையும் வென்று வாழ்வது மனிதனுக்குள் இயல்பாகவே புதைந்திருக்கும் வலிமை ஆகும்.
‘வலிமை படைத்தவனே வாழ்கிறான்’ என்று மெய்யான வாழ்க்கைக்கு விளக்கம் அளிக்கிறார் சுவாமிஜி.
ஆக, தன்னடக்கம், வலிமை, உறுதி, சேவை, தொண்டு, நேர்மறை எண்ணம், நம்பிக்கை, தன்னம்பிக்கை, வீரம், தியாகம், துணிச்சல் என எண்ணற்ற நற்பண்புகளையும் நல்ல ஒழுகலாறுகளையும் கடைபிடிப்பதே ஞானப்பேருலகின் வாயிலை அடையும் வழியாகும்.
இதையே திருவள்ளுவப் பெருந்தகை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின் நாமம் கெடக்கெடும் நோய். (திருக்குறள்- மெய்யுணர்தல் – 360)
வள்ளுவரின் வான்மறைக்கேற்ப , ஆசை, சினம், அறியாமை ஆகியவற்றின் வேரறுத்து ஈடில்லா மெய்ஞான வீட்டிற்கு வழிகாட்டும் வெளிச்சமாக, அஞ்ஞான அந்தகாரத்தில் மூழ்கியுள்ள உலக ஆன்மாக்களுக்கு ஞான வானத்து வைகறையாக விளங்குகிறார் சுவாமி விவேகானந்தர்.
அவருடைய 150-ஆவது ஆண்டிலேனும்* நாம் துயிலெழுவோம்! விழிப்புணர்வு பெறுவோம்! இலக்கை அடையும் வரை ஓயாது பணி செய்வோம்!
வந்தே மாதரம்! வாழ்க பாரதம்!
- குறிப்பு: * 2013-இல் விவேகானந்தம் இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது.
$$$