-மகாகவி பாரதி
நல்லமைச்சனுக்கு அழகு மன்னருக்கு வரும் இடர் உரைத்தல். அதன்படி, சூதாட்டத்தின் திசைவழி பாண்டவர்களை அழிப்பதே என்பதை உணர்ந்த அமைச்சரும் சித்தப்பனுமான விதுரன், மன்னர் திருதராஷ்டிரனுக்கு இதனை இத்துடன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறான். கெட்ட எண்ணம் கொண்ட துரியனால் குருகுலம் அழியப்போகிறது. அதைத் தடுக்காமல், “கேட்குங் காதும் இழந்துவிட்டாயோ?” என்கிறான். “நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம் - நேரு மென்று நினைத்திடல் வேண்டா” என்று அறுதியிட்டு உரைக்கிறான். இவை அனைத்தும் விழலுக்கு இறைந்த நீரென்று தெரிந்திருந்தும் கூட. சூதாட்டச் சருக்கம் இங்கே நிறைவெய்துகிறது....

முதல் பாகம்
1.2. சூதாட்டச் சருக்கம்
1.2.11. நாட்டை வைத்தாடுதல்
வேறு
‘ஐய கோஇதை யாதெனச் சொல்வோம்?
அரச ரானவர் செய்குவ தொன்றோ?
மெய்ய தாகவொர் மண்டலத் தாட்சி
வென்று சூதினி லாளுங் கருத்தோ?
வைய மிஃது பொறுத் திடுமோ?மேல்
வான் பொறுத் திடுமோ?பழி மக்காள்!
துய்ய சீர்த்தி மதிக்குல மோ நாம்?
தூ!’வென் றென்னி விதுரனும் சொல்வான். 196
‘பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும்,
பைந்து ழாயனும் பாஞ்சாலத் தானும்
மூண்ட வெஞ்சினத் தோடுநஞ் சூழல்
முற்றும் வேரறச் செய்குவ ரன்றோ?
ஈண்டி ருக்குங் குருகுல வேந்தர்
யார்க்கு மிஃதுரைப் பேன்,குறிக் கொண்மின்;
”மாண்டு போரில் மடிந்து நரகில்
மாழ்கு தற்கு வகைசெயல் வேண்டா.” 197
‘குலமெ லாமழி வெய்திடற் கன்றோ
குத்தி ரத்துரி யோதனன் றன்னை
நலமி லாவிதி நம்மிடை வைத்தான்;
ஞால மீதி லவன்பிறந் தன்றே
அலறி யோர்நரி போற்குரைத் திட்டான்;
அஃது ணர்ந்த நிமித்திகர்’வெய்ய
கலகந் தோன்றுமிப் பாலக னாலே
காணு வீ”ரெனச் சொல்லிடக் கேட்டோம். 198
‘சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு
சொர்க்க போகம் பெறுபவன் போலப்
பேதை நீயு முகமலர் வெய்திப்
பெட்பு மிக்குற வீற்றிருக் கின்றாய்;
மீது சென்று மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு நழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான். 199
‘மற்று நீருமிச் சூதெனுங் கள்ளால்
மதிம யங்கி வருஞ்செயல் காணீர்!
முற்றுஞ் சாதி சுயோதன னாமோர்
மூடற் காக முழுகிட லாமோ?
பற்று மிக்கஇப் பாண்டவர் தம்மைப்
பாத கத்தி லழித்திடு கின்றாய்;
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே!
கடலிற் காயங் கரைத்ததொப் பாமே? 200
‘வீட்டு ளேநரி யைவிடப் பாம்பை
வேண்டிப் பிள்ளை எனவளர்த் திட்டோம்;
நாட்டு ளேபுக ழோங்கிடு மாறிந்
நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்;
மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று
மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்;
கேட்டி லேகளி யோடு செல் வாயோ?
கேட்குங் காதும் இழந்துவிட் டாயோ? 201
‘தம்பி மக்கள் பொருள் வெஃகு வாயோ
சாதற் கான வயதினில் அண்ணே?
நம்பி நின்னை அடைந்தவ ரன்றோ?
நாத னென்றுனைக் கொண்டவ ரன்றோ?
எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின்
யாவுந் தான மெனக்கொடுப் பாரே;
கும்பி மாநரகத்தினி லாழ்த்துங்
கொடிய செய்கை தொடர்வதும் என்னே? 202
‘குருகு லத்தலை வன்சபைக் கண்ணே,
கொற்ற மிக்க துரோணன் கிருபன்
பெருகு சீர்த்திஅக் கங்கையின் மைந்தன்
பேதை நானும் மதிப்பிழந் தேகத்
திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
செப்பு மந்திரஞ் சொல்லுதல் நன்றே!
அருகு வைக்கத் தகுதியுள் ளானோ?
அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே! 203
‘நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா,
பொறி இழந்த சகுனியின் சூதால்
புண்ணி யர்தமை மாற்றல ராக்கிச்
சிறியர் பாதகர் என்றுல கெல்லாம்
சீ என் றேச உகந்தர சாளும்
வறிய வாழ்வை விரும்பிட லாமோ?
வாழி,சூதை நிறுத்துதி’என்றான். 204
$$$