என்றும் இந்தியாவுக்கு வழிகாட்டி

-பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்

கோவையைச் சார்ந்த தொழிலதிபரும், கல்வியாளரும், கோவை பாரதீய வித்யாபவன் தலைவருமான முனைவர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் சுவாமி விவேகானந்தர் குறித்து 2012-இல் எழுதிய கட்டுரை இங்கே...

சுவாமி விவேகானந்தரை சந்யாசி என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் வரையறுக்க முடியாது.  அவர் துறவியை விடப் பல மடங்கு சிறந்தவர்.  பன்முக ஆளுமை கொண்ட ஒரு சிந்தனையாளர்; சீர்திருத்தவாதி; தேசியவாதி; மனிதநேயவாதி; சிறந்த இயக்க அமைப்பாளர்; மாபெரும் ஊக்க சக்தியாளர்; பெரும் இயக்கத்தின் தலைவர்; அனைத்திற்கும் மேல் அவர் ஓர் உலகக் குடிமகன்.

ஒரு மனிதனின் மேன்மை என்பது,

1. அவருக்கு அமையும் குருவின் தன்மை,
2.  அவர் பெறும் ஞானத்தின் சிறப்பு,
3.  அவர் வாழும் காலகட்டம்,
4.  பல துறைகள் பற்றிய அறிவைப் பெறும் வாய்ப்பு,
5.  அவரிடமுள்ள சமுதாய உணர்வு – இவற்றை அடிப்படையாகக் கொண்டது.

சுவாமிஜி இவற்றைப் பெருமளவில் பெற்றவர்.  அவரது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ணரைவிடச் சிறந்த ஆசானை நினைத்தாவது பார்க்க முடியுமா?

ஞானத்தில் சுவாமிஜி இமயம்.  அவர் வாழ்ந்த காலகட்டம், இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமானது.  இந்தியா தன் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலம்.  அறிவியலும், தொழில்நுட்பமும் உலகில் பெரும் சக்திகளாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலம்.

சுவாமிஜி பல வெளிநாடுகளைக் காணும் வாய்ப்பு பெற்றவர்.  சமுதாயத்தைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் அக்கறையும் ஒருங்கே கொண்டிருந்தார்.  குறிப்பாக நலிந்தவர்களுக்காகவும் ஏழைகளுக்காகவும் அவர் மனம் உருகியது.

ஒரு சுனாமி என்பது ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டு போல 1000 குண்டுகளுக்குச் சமம் என்கிறார்கள்.  விவேகானந்தரோ 1000 சுனாமி சக்திகளுக்கு இணையானவர்.  ஆனால் இந்த சுனாமி சக்தி அழிக்கும் சக்தியல்ல.  உலக நாகரிகம் உதயமான காலம் முதல் இன்றுவரை மனித இனம் காணாத மாபெரும் ஆக்க சக்தியின் சொரூபம் அவர்.

அவர் இந்தியாவின் நிலை பற்றி ஆழ்ந்த கவலையும் கவனமும் கொண்டிருந்தார்.  மகத்தான பாரம்பரியமும் சீரும் சிறப்பும் பெற்றிருந்த ஒரு தேசம், அதன் மக்களின் அறியாமையால் தன் பெருமைகளை எல்லாம் இழந்து நிற்பது அவருக்குப் பெரும் வேதனையை அளித்தது.

‘இந்தியாவில் படித்தவரிடையே அதிக பொறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  பாமரர்களின் அறியாமையை நீக்க வேண்டும்.  விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும் ஒருங்கே எந்தச் சமுதாயத்தில் இருக்கிறதோ, அச்சமுதாயம் மட்டுமே மேலோங்கி நிற்கும்’ என சுவாமிஜி கூறுகிறார்.

சுவாமிஜி எதிலும் நல்லதையே அன்றி தீமையைக் காணாதவர்.  ‘அமர பாரதத்தின் மேற்பரப்பில் சற்றே தூசு படிந்துள்ளது.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்  அத்தூசினை நீக்க வேண்டியது மட்டுமே.  பாரதத்தின் அமரத்துவம் மாறவில்லை’. இது சுவாமிஜி அடிக்கடி கூறும் கருத்து.

இந்தியா மீதான அவரது அளவற்ற அன்பு, நம்பிக்கை எப்போதும் பூரணமானது.  விவேக தேவதை உலகின் வேறெந்தப் பகுதிக்கும் செல்வதற்கு முன் இந்தியாவைத் தன் நிரந்தர இருப்பிடமாகக் கொண்டாள் என்று அவர் கூறி வந்ததற்கு, அன்பும், நம்பிக்கையுமே காரணமாகும்.  தமது மகத்தான புண்ணியத் தாய்நாட்டைக் கண்டு அவர் வியந்தார்.

மதம் என்பதற்கு நாம் கூறும் சாதாரணக் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட சிந்தனையை அவர் கொண்டிருந்தார்.

‘சமயம் என்பது அனுபூதி’ (Religion is Realisation)  என்பது அவர் கருத்து. சமயம் என்ற பெயரில் உள்ள சிந்தாந்தங்களும் கொள்கைகளும் அவரை ஈர்க்கவில்லை.  சமயமானது வழிபாட்டுத் தலங்களிலிருந்து வெளிவந்து மனிதனை நெறிப்படுத்தக்கூடிய சக்தியாக மாற வேண்டும் என அவர் விரும்பினார்.

கடவுளை மையமாகக் கொள்வதைவிட மனிதனை மையமாகக் கொள்வதே சமயம் என்பது அவரது பரந்து விரிந்த கருந்து.  ‘அறிவிலி, யாரை மனிதன் என அழைக்கிறானோ, அவனையே நான் இறைவன் என வழிபடுகிறேன்’ என்றார் அவர்.  இவ்வளவு துணிவுடன் ஒரு அரசியல் தலைவரோ, சமுதாயத் தலைவரோகூட கூறியதில்லை.

‘துறவும் தொண்டுமே இந்தியாவின் லட்சியங்கள்’ என்பது அவரது கருத்து.  இந்தியாவில் ஏழ்மையும் அறியாமையும் இல்லாத நிலை பற்றி அவர் கனவு கண்டார்.  நாட்டின் மீது எல்லையற்ற அன்பு கொண்டிருந்தாலும் அவர் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையும் கொண்டு விளங்கினார்.

அதனால் தான் அவர், ‘உன் சமயத்தை விரும்புவதற்காக நீ வேறெந்த சமயத்தையும் வெறுக்க வேண்டியதில்லை.  எல்லா மதங்களையும் உன்னால் நேசிக்க முடியும்; போற்றி மதிக்க முடியும்’ என்றார்.

‘எனது மதம் பிற மதங்களைச் சகித்துக் கொள்வதோடு, மற்ற மதங்களும் உண்மை என ஏற்றுக் கொள்ளவும் கற்பித்துள்ளது’  என்று சர்வ சமய மாநாட்டில் அவர் கூறினார்.  இதற்கு முன் இத்தகைய கருத்தை எவரும் கூறியதில்லை.

இந்தியாவின் பலவித கலாச்சாரங்களை அன்புடன் ஏற்றார் சுவாமிஜி,  ‘ஆன்மிகமே நம் நாட்டின் எல்லா கலாச்சாரங்களையும் இணைக்கும் சக்தி’ என்றார்.

சுவாமி விவேகானந்தரின் மற்றொரு முற்போக்கான சிந்தனை அறிவியல் சார்ந்த மனப்பான்மை ஆகும்.  ‘சமயம் என்பதை வெறும் நம்பிக்கையாகப் பார்க்கக் கூடாது,  தர்க்கத்திற்குத் தாக்குப் பிடிக்காத மதம் தேவையில்லை;  அது இருக்கத் தகுதியற்றது’ என்பது அவர் கூறியது.

தன்னம்பிக்கை, துணிவு போன்றவற்றின் ஊற்றுக்கண் சுவாமிஜி.  அவர் இந்தியாவை ஒரு வல்லரசாக ஆக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார்.

இந்திய வரலாற்றிலேயே சாமானிய குடிமகனைக் குறித்து தியானம் செய்த ஒரே சந்யாசி அவர்தான்.  கன்னியாகுமரிக்குச் சென்று அவர் தியானித்தது நாட்டின் பாமரக் குடிமகனின் மேம்பாட்டிற்காகத் தான்.

சுவாமிஜி கடவுளிடம் இந்தியாவை மேம்படுத்தும்படியும், நாட்டிலிருந்து ஏழ்மை, எழுத்தறிவின்மை, பசி, பட்டினி போன்றவற்றை ஒழித்தருளவும் பிரார்த்தித்தார்.  இந்த இன்னல்கள் அனைத்திற்கும் நம் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கும் அறியாமையே உண்மையான காரணம் என்று அவர் கருதினார்.

பக்தி பற்றியும் அவரது கருத்து நவீனமானது.  ‘பக்தி என்பது மனதை மேலானவற்றில் ஒருமுகப்படுத்தி ஆழ்மனதில் பயணிப்பது;  இடையில் வரும் தடங்கல்களை ஒதுக்கி, அவற்றை வென்று கடவுளையே இலக்காகக் கொண்டு அவனை அடைவது’ என்கிறார்.

மூடநம்பிக்கைகளையும் அர்த்தமற்ற சடங்குகளையும் அவர் அறவே வெறுத்தார்.  அவர் ஜாதிப்பிரிவினைகளைச் சற்றும் மதிக்காதவர்.  அடக்கி ஒடுக்கப்படுவதிலிருந்து பெண்களை விடுவிக்க, பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார்.  ஆனால் அதே சமயத்தில் அவர் இந்தியப் பெண்களைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா?

சுவாமிஜி ஒருமுறை, ‘நான் உலகின் மகா காவியங்களை எல்லாம் படித்துள்ளேன்.  ஆனால் ராமாயண சீதையைப் போன்ற இன்னொரு சீதையை நான் எங்கும் காணவில்லை’ என்றார்.  பெண்கள் எந்த அளவுக்கு விடுதலை அடைந்தாலும், பெண்களின் லட்சியமாக விளங்குபவர் சீதையே என்றார் அவர்.

இந்தியாவை இந்தியர்களுக்குப் புதிதாக அறிமுகப்படுத்த விரும்பினார் சுவாமிஜி.  இன்று சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆன பிறகும், எத்தனையோ மருத்துவர்கள், பொறியாளர்கள் தோன்றிவிட்ட நிலையிலும் நம் இளைஞர்களுக்கு நாட்டைப் பற்றிய உண்மை ஞானம் இல்லை.  இது ஒரு வேதனை தரும் நிலை.

அடுத்து,  கல்வி என்ற பெயரில் மூளையில் செய்திகளைத் திணிப்பது விவேகானந்தரைப் பொறுத்தளவில் கல்வியே அல்ல.  ‘எது மனிதனை விடுவித்து, நிலையான சிறந்த பணியைச் செய்ய அறிவையும் திறமையையும் அளிக்குமோ, அதுவே உண்மையான கல்வி’ என்கிறார் அவர்,

எனவேதான் சுவாமிஜி ‘மனிதனை உருவாக்கும் கல்வியே தேவை’ என்று உறுதியாக இருந்தார்.  அவரைப் பொருத்த வரை கல்வியே மனிதனை உருவாக்குகிறது.  ‘மனிதர்கள்; மனிதர்கள்; மனிதர்களே இன்று முக்கியம்.  மற்றவையெல்லாம் தன்னாலே நடக்கும்’ என்றார் அவர்.

சுவாமிஜி நம் இளைஞர்களிடம் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்.  உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள இளைஞர்களுக்கு இந்திய இளைஞர்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று அவர் கருதினார்.  எனவே தான், ‘எனக்கு நூறு இளைஞர்களைத் தாருங்கள்.  நான் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன்’ என்றார் சுவாமிஜி,

சுவாமிஜியைப் பொருத்த வரை, மதமும் கல்வியும் மனிதவள மேம்பாட்டிற்காகத் தான்.  இவ்வுண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  நம் ஒவ்வொருவரிடமும் ஏராளமான ஆற்றல்  புதைந்துள்ளது என்று அவர் நம்பினார்.  இளைஞர்கள் உணர்ந்து அதை வெளிக் கொணர, கல்வியும் மதமுமே சாதனங்களாகும்.

கல்வியைப் பற்றி சுவாமிஜியின் கருத்து இதுவே:

‘உங்களது உண்மை இயல்பைப் புரிந்து கொள்ளுங்கள்;  ஒவ்வொருவருக்கும் அதைப் புரிய வையுங்கள். உறங்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்று காணுங்கள், உறங்கும் ஆன்மா தன்னுணர்வுடன் செயல்படும் நிலைக்கு உயரும்போது சக்தி வரும்; புகழ் வரும், நல்ல குணம் வரும், சிறந்தவை அனைத்தும் வரும்’.

கல்வியையும் சமயத்தையும் பற்றி இவ்வளவு அழகாக எவரும் கூறியதில்லை.  சுவாமிஜியின் இந்த வாக்குகளை ஒவ்வொரு பள்ளியிலும் எழுதிவைக்க வேண்டும்,

பண்டித நேரு சுவாமிஜியை  ‘சூறாவளித் துறவி’ என்று வர்ணித்தார்.  தன் மோட்சத்தை மட்டும் தேடும் சாதாரண சந்யாசி அல்ல அவர்.  அவர் ஒரு பெரும் புயற்காற்று,

ஒருமுறை அமெரிக்காவில் சுவாமிஜியிடம் ஒருவர், ‘உங்கள் நாட்டில் மட்டும் எப்படி ஒவ்வொருவரும் மதத்தில் ஆழ்ந்து, அமைதியாக உள்ளார்கள்?’  என்று கேட்டார்.

அதற்கு சுவாமிஜி, ‘அது தான் எனக்கும் கவலை.  எங்கள் மக்கள் அவ்வாறு இருக்கக் கூடாது.  அவர்கள் அநீதிக்கு எதிராகப் பொங்கி எழ வேண்டும்.  வெளியிலிருந்து வந்த எவரோ போடும் உத்தரவுகளுக்கு அடிபணிந்து அவர்கள் நடக்கக் கூடாது.  நாடு விழித்தெழுந்து அநீதிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க வேண்டும் என்பதே என் விருப்பம்’ என்றார்.

சுவாமிஜி ஒரு பெரும் உந்துசக்தி ஆவார்.  மனம் சற்றே தளர்ச்சியுறும்போது சுவாமிஜியின் நூல்களிலிருந்து ஒரு பக்கம், ஒரு பத்தி மட்டும் படித்தாலே போதும்.  புது ஊக்கம் பெறுவீர்கள்.

‘நீங்கள் அழியாதப் பேரானந்தத்தின் சொரூபங்கள்;  படைப்புகளிலே நீங்கள் பெருமையை உடையவர்கள்;  உங்கள் விதியை நிர்ணயிப்பவர்கள் நீங்களே!  நீங்கள் எதுவாக விரும்பினாலும் உங்களால் முடியும்;  உங்களைத் தடுப்பவர் எவரும் இல்லை!’

இவ்வாறு சுவாமிஜியைத் தவிர, வேறு யார் நம்மை ஊக்கப்படுத்துவார்கள்?

நவீன அறிவியலை சுவாமிஜி வரவேற்றார்.  அதன் நன்மை, தீமைகளையும் அவர் அறிந்திருந்தார்.  நவீன அறிவியலே இந்தியாவை முன்னேற்றும் என்று திடமாக எண்ணிய அவரே ‘அறிவியலின் பின் பைத்தியமாக அலையாதீர்’ என்று எச்சரிக்கையும் செய்தார்.

அவரது வார்த்தைகளைக் கேட்டு நடக்கத் தவறியதே நம் இன்றைய துன்பங்களுக்குக் காரணம்.

சுவாமிஜி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ளவில்லை.  ஆனால் காந்திஜி முதல் கடைநிலை சத்தியாகிரகி வரையில் அனைவரும் சுவாமிஜியின் பேருரைகளைக் கேட்டும் படித்துமே தேசிய உணர்வையும், எழுச்சியும் பெற்றனர் என்பது சரித்திர உண்மை.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு மிகச் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பே ‘இன்றிலிருந்து மற்ற எல்லாக் கடவுளையும் வழிபடுவதை நிறுத்தி, இந்தியத் தாயை மட்டுமே வழிபடுங்கள்.  அடுத்த 50 வருடங்களில் இந்தியா சுதந்திரம் பெறும்’ என்றார் சுவாமிஜி.

அது அப்படியே நடந்தது.

இப்படிப்பட்ட உன்னதத் துறவி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும்போது நாம் எதற்கும் மனம் கலங்கத் தேவையில்லை.  நம் நாடு வழி தவறிப்போக முடியாது.

இந்தியாவில் சுனாமி ஏற்பட்டபோது நமது பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘உதவி ஏதாவது வேண்டுமா?’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கேட்டார்.

அதற்கு நமது பிரதமர், ‘எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம்.  வேறெந்த நாட்டுக்காவது தேவைப்பட்டால் சொல்லுங்கள்.  நாங்கள் உதவி புரிவோம்’  என்றார்.

நம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ‘2020-ல் இந்தியா வல்லரசாகும்’ என்று பறைசாற்றுகிறார்.  இவ்வாறு விவேகானந்தரின் தீர்க்க தரிசனம் மெய்யாகிவருகிறது,

‘பழம்பெருமையின் சிறப்பு அம்சங்களை எடுத்துக்கொண்டு, இன்றைய சவால்களைச் சந்திப்பதற்குத் தேவையான துணிவையும் தன்னம்பிக்கையையும் தெளிவையும் பெற்று இந்தியா முன்னேற வேண்டும்’  என்று சுவாமிஜி கூறியுள்ளார்.

இது சுவாமி விவேகானந்தர் நமக்கு அளித்துச் சென்ற தீர்மானமான ஓர் அறிவுரை:  ‘ஆன்மிகத்தால் மட்டுமே இந்தியா வல்லரசாக முடியும்’.

தகவல் தொடர்புத் துறையின் சிறந்த காலகட்டத்தில் நாம் உள்ளோம்.  2000 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரியதோர் அறிவுப் புரட்சி இங்கு தோன்றியது.  அதன் வெளிப்பாடே வேதாந்தம்.  இன்றைய புரட்சியின் விளைவுகளை மேம்படுத்த நாம் அன்றைய வேதாந்தப் புரட்சியைக் கைக்கொள்ள வேண்டும்.

ஒரு சரியான வழிகாட்டி தான் இன்றைய இளைஞர்களின் அவசர, அவசியத் தேவை.

முனைவர் பிகே.கிருஷ்ணராஜ் வாணவராயர்

அதற்கு சுவாமிஜியைத் தவிர வேறு யார் உளர்?  அவரை ஒவ்வோர் இளைஞனுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.  இளைஞர்களுக்கான பாடத்திட்டத்தில்  ஒவ்வோர் இளைஞனும் விவேகானந்தருக்கு அறிமுகமாகும் நாள் வரவேண்டும் என்பதே என் ஒரே கனவு.

அத்தகைய நாளில் தான் இந்தியாவின் உண்மையான கலாச்சார மறுமலர்ச்சி ஏற்படும்.  வீரியம் பொருந்திய அவரது வாக்கு ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிமையானது.

ஒருமுறை நான் கிரிக்கெட் வீரர் கபில்தேவைச் சந்தித்தேன்.  அவர் ‘இன்று நான் நானாக இருப்பதற்குக் காரணம் சுவாமி விவேகானந்தர் தான்’ என்றார்.

நமது நாட்டுப் பெரும் அறிவியல் அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் அனைவருமே, சுவாமிஜியின் அரிய செய்திகளை அறிந்திருந்ததால் தான் சிறப்படைந்துள்ளார்கள்.

இன்று இளைஞர்கள் விரும்பிப் படிப்பது சுவாமிஜியின் செய்தியைத் தான்.  காரணம், அவரே இன்றைய இளைஞனின் மனநிலைக்கு ஏற்பப் பேசியவர்.

நாம்  புரிந்து கொண்டுள்ள மதம் இன்றைய இளைஞனிடம் இனி எடுபடாது.  நவீனமான, அறிவியல் பார்வை கொண்ட ஒரு சமயத்தையே அவன் தேடுகிறான்.  அதை உருவாக்கி அளித்தவர் சுவாமிஜியே.

நன்றி:

விவேகானந்தரைக் கற்போம்-  
தொ.ஆ: சுவாமி விமூர்த்தானந்தர், 
ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை- 2012.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s