-மகாகவி பாரதி
அமைச்சர் விதுரன் தனது அரசனின் தூதையும் கடமையாகச் சொல்ல வேண்டும்; சூது நல்லதல்ல என்று அறிவுரைக்கவும் வேண்டும் என்ற இருதலைக்கொள்ளி எறும்பாகிறார். சூது நல்லதல்ல என்று மன்னர் பலமுறை கூறியும் இணங்காத துரியனின் தீய உள்ளத்தைக் கூறும் அமைச்சர், ‘இதில் நீயே முடிவெடு’ என்கிறார் தருமனிடம்....

முதல் பாகம்
1.1. அழைப்புச் சருக்கம்
1.1.21. விதுரன் பதில்
வேறு
விதுரனும் சொல்லு கிறான் ‘இதை
விடமெனச் சான்றவர் வெகுளுவர் காண்;
சதுரெனக் கொள்ளுவ ரோ?-இதன்
தாழ்மை யெலாமவர்க் குரைத்து விட்டேன்;
இதுமிகத் தீதென்றே-அண்ணன்
எத்தனை சொல்லியும் இள வரசன்,
மதுமிகுத் துண்டவன் போல்-ஒரு
வார்த்தையை யேபற்றிப் பிதற்றுகிறான். 128
கல்லெனில் இணங்கி விடும்-அண்ணன்
காட்டிய நீதிகள் கணக்கில வாம்;
புல்லனிங் கவற்றை யெலாம்-உளம்
புகுதவொட் டாதுதன் மடமையினால்
சல்லியச் சூதினி லே-மனம்
தளர்வற நின்றிடுந் தகைமை சொன்னேன்;
சொல்லிய குறிப்பறிந்தே-நலந்
தோன்றிய வழியினைத் தொடர்க’என்றான். 129
$$$