-பேரா.வ.வே.சு.
திரு. வ.வே.சு., சென்னை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர், பாரதி அன்பர். சென்னையில் வானவில் பண்பாட்டு மன்றம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருபவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…

டிசம்பர் 24-ஆம் நாள் 1892. அன்னை கன்னியாகுமரி நித்தம் தவமிருக்கும் பாரதத் திருநாட்டின் தென்கோடி. அவள் திருப் பாதங்களை வணங்கி அதில் மனநிறைவின்றி மீண்டும் மீண்டும் வருவனபோல் துள்ளி விழுந்தெழும் அலைக் கரங்கள். கரையிலிருந்து இருநூறு மீட்டர் தொலைவிலுள்ள கடற்பாறை மீது இருபத்தியொன்பது வயதான ஓர் இளந்துறவி; மூன்று நாள்கள் இடைவிடாத தியானத்தில் மூழ்கி அமர்ந்துள்ளார். சுயநல உணர்வோடு தன்னுடைய ஆன்ம விடுதலைக்கும் முக்திக்குமா அவர் அவ்வாறு செய்தார்?
இல்லை, தாழ்வுற்று வறுமை மிஞ்சிக் கிடக்கின்ற இந்நாட்டுக்காகவும், முன்னைப் பெருமையை மறந்து, மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியைக் காண இயலாதவர்களாக, எந்த எதிர்கால நம்பிக்கையும் இன்றி அடிமைகளாக உறங்கிக் கிடக்கின்ற இந்திய மக்களைத் தட்டி எழுப்புவதற்காகவும், நமது சனாதன மதத்தின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச்சென்று அதன் மூலம் தேசப் பெருமையை உயர்த்துவதற்காகவும் தன்னையே மறந்து தவமிருந்தார் அத்துறவி. யாருமே அறியாத அத்துறவி தான் அமெரிக்கா செல்ல பம்பாயிலிருந்து கப்பல் ஏறும் முன் ‘விவேகானந்தர்’ என்ற துறவுப் பெயரை ஏற்றுக் கொண்டார்.
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டுத் தேவைகளுக்கும், சமுதாய மாற்றங்களுக்கும் கூட சுவாமிஜியின் வாழ்க்கையும் அறிவுரைகளும் தான் வழிகாட்டிகளாக விளங்குகின்றன. அவரது அறிவுரைகளைப் படிக்கும் முன்பே, அவரது தோற்றப் பொலிவும் வீரத் திருவுருவமும், நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு நம்பிக்கையையும் புத்துணர்வையும் கொடுக்கின்றன என்றால் அது மிகையில்லை.
காவி உடையிலே, தலைப்பாகையோடு கைகளைக் கட்டிக்கொண்டு, நெஞ்சு நிமிர்த்தி ஒருபுறம் லேசாகத் திரும்பிப் பார்ப்பது போலிருக்கும் சுவாமிஜியின் ஆண்மை நிறைந்த திரு உருவமும், காந்தக் கண்களும், இந்திய நாட்டு இதயங்களை மட்டுமன்றி, உலக மக்களையும் தன்பால் ஈர்த்து இன்றும் வழிநடத்தி வருகின்றன.
இந்த ஆண்மைத் தோற்றம், பிறரை அடங்கச் சொல்லும் ஆண்மையல்ல; நான்தான் தலைவன்; என் சொல்லைக் கேளுங்கள் எனச் சொல்லும் இறுமாப்புப் பார்வையல்ல; எளியோரை ஒடுக்கும் வலிமைப் பார்வையல்ல; இது வள்ளுவன் சொன்ன பேராண்மை; ஆண், பெண், சாதி, மதம், இனம் என்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு ஆன்மிக அனுபவம் பெற்ற அரவணைப்புப் பார்வை; வன்முறைகளாலும், சுயநலங்களாலும் துண்டாடப்பட்டு, காயப்பட்டுக் கிடக்கின்ற சமுதாயத்திற்கு அருமருந்தாய் அமைந்துள்ள அன்புப் பார்வை; அகிலத்தையே பிடிக்குள் கொண்டு வரும் அருட்பார்வை.
செப்டம்பர் 11-ஆம் நாள், 1893. ஒரே வாக்கியம். உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்ட ஒற்றை வரி. இந்தியப் பாரம்பரியத்தையும் இந்துமதப் பெருமையையும் உலகம் கேட்டுணர வழிகோலிய சொற்கள். ஆம், அமெரிக்கச் சிகாகோவிலே ஐயாயிரத்திற்கு மேற்பட்டோர் அமர்ந்திருக்கும் அனைத்து சமய உலக மாநாட்டிலே சுவாமி விவேகானந்தர் முதன்முறையாகத் தன் வாய் திறந்து உதிர்த்த, “அமெரிக்காவின் சகோதரிகளே, சகோதரர்களே” என்ற ஒற்றை வாக்கியம் பெற்றுவிட்ட வரலாற்றுச் சிறப்பு, விந்தைக்குரியது.
அந்தச் சிறிய உரையைக் கேட்டு, தம்மை மறந்த அமெரிக்க மக்கள், அதன் பிறகு பதினேழு நாள்கள் நடந்த அந்த மாநாட்டிலும், கண்காட்சியிலும், பிறகு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் சுவாமிஜியின் உரையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். பாரதத்தையும், நமது சனாதன மதப் பண்பாடுகளையும் அகிலமே அறிந்து கொண்டது.
இதுவரை யாரும் பயன்படுத்தாதவையா அச் சொற்கள்? இல்லை, அம்மாநாட்டிலே வேறு யாரும் இச்சொற்களைப் பயன்படுத்தாமல் இருந்தனரா? அப்படியொன்றும் இல்லை; சுவாமிஜி பேசுவதன் முன், சில பேச்சாளர்கள் இப்படித்தான் அவையோரை விளித்தனர். அப்படி என்றால் பிறரைப் போலவே சுவாமிஜியும் பயன்படுத்திய இந்தச் சொற்களுக்குக் கிடைத்த வேகத்தின் பின்னணி என்ன?
அந்த வேகத்தின் ஆதாரம், சுவாமிஜியின் ஆன்ம சக்தி; கொந்தளிக்கும் குமரிக் கடல் நடுவே கடல் பாறையோடு பாறையாக மூன்று நாள்கள் மோனத் தவமிருந்து பெற்ற வரம்; தக்ஷிணேஸ்வர மாமுனிவரான பரமஹம்ஸர் தன் பூத உடல் நீக்கிப் போகுமுன் நீர் தெளித்து தத்தம் செய்து கொடுத்த தவ வலிமை; இமயம் முதல் தென்கோடி வரையில் பரிவ்ராஜகராக, ஒரு பரதேசியாக, எளிய துறவியாக இம்மண்ணைக் காலால் அளந்த தன் தவப் புதல்வனுக்கு பாரத அன்னை உச்சி முகர்ந்து கொடுத்த அன்புப் பரிசு; ஆம்! சொற்களுக்கென்று தனி வலிமை ஏதுளது? அவை சொல்பவராலும், சொல்லப்படும் இடம், பொருள், ஏவல் ஆகியவற்றாலும் அன்றோ வலிமை பெறுகின்றன!
அதுமட்டுமல்ல. “எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை அயராதுசெல்மின்” என்பன போன்ற சுவாமிஜியின் அரிய உபதேசச் சொற்கள் எல்லாம் நமது வேதத்திலும் உபநிடதங்களிலும் காணப்படுபவை தான். ஆனால், சுவாமிஜி அவற்றைப் பயன்படுத்தும்போது, ஒரு தனியான ஆற்றல் சக்தி அவற்றுள் புகுந்துகொண்டது. சுவாமிஜி இவற்றையெல்லாம் வெறும் மேற்கோள்களாகப் பயன்படுத்தவில்லை. வாழ்க்கை அனுபவத்திலே நாளும் நயந்து பயன்கொள்ளக்கூடிய மந்திரச் சொற்களாகப் பயன்படுத்தினார்.
சடங்குகளில் முடங்கிக் கிடந்த இந்துமத தத்துவச் செல்வங்களை, எளிய பாமரனும் உணர்ந்து வீறுகொள்ளச் செய்தவர் விவேகானந்தர். மூடப் பழக்கங்கள், சமுதாயப் பிரிவினைகள், பழமைவாதிகளின் திரை மறைத்த பார்வைகள் ஆகியவற்றால் பட்டுப்போய்க் கொண்டிருந்த இந்து மதப் பண்பாடுகளைக் களையெடுத்து, மாசு நீக்கி உண்மையான பார்வையோடும் ஏற்றத்தோடும் கொடுத்தவர் சுவாமிஜி. எனவேதான் அவர் பயன்படுத்தும்போது பழைய சொற்களுக்குள்ளும் ஒரு புதுமை வந்து சேர்ந்தது.
‘மாத்ரு தேவோபவ’; ‘பித்ரு தேவோ பவ’; ‘ஆச்சார்ய தேவோ பவ’; ‘அதிதி தேவோ பவ’; என்று அன்னை, தந்தை, ஆசான், விருந்தினர் ஆகியோரைக் கடவுளர்களாக வணங்கு என்ற மறைமொழிகளோடு, இன்னும் இரண்டினை சுவாமிஜி சேர்த்துக் கொண்டார். அவை: ‘தரித்ர தேவோ பவ’; ‘மூர்க்க தேவோ பவ’. ‘கஞ்சியும் கிடைப்பதற்கில்லா வறியவர்களையும், எழுதப் படிக்கத் தெரியாத எளியவர்களையும் வணங்கி அவர்களுக்குச் சேவை செய்’ என்று அவர் முழங்கினார்.
சுவாமிஜி, ராமகிருஷ்ண மிஷன் என்ற சேவை அமைப்பினைத் தொடங்கியபோது, பரமஹம்ஸரின் நேரடிச் சீடரான அத்புதானந்தா “நரேன், நாமெல்லாம் துறவிகள்; இறை அனுபவத்தையும் முக்தியையும் பெறும் வழியிலே நாளும் தியானமும் பிரார்த்தனையும் மேற்கொள்ள வேண்டியவர்கள். சமூக சேவையில் நாம் ஏன் ஈடுபட வேண்டும்?” என்று கேட்டபோது, சுவாமிஜி பொங்கி எழுந்து பதில் சொன்னார்.
“இதுவா நமது பக்தி? இதையா நமது குரு நமக்குச் சொல்லிக் கொடுத்தார்? ஒருவனை சுயநலவாதியாக்குவதா பக்தி? இல்லவே இல்லை; மக்களுக்குச் சேவைசெய்வதும், பிறர் நலம் பேணுவதும்தான் உண்மை பக்தி” என்றார்.
மேலும் “பிறர் துயர் பொறுக்காத மனம் கொண்டவனே மகாத்மா. பிறரெல்லாம்உயிரின்றித் திரிகின்ற உடற்கூடுகள்” என்றும், “துயரத்தில்வாடுகின்றவருக்குச் சேவை செய்வதால் எனக்கு நரகம் கிடைத்தாலும் அதனைமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்” என்றும், சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் துறவு மனப்பான்மையோடு விளங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
நமது தேசத்திலே உள்ள எந்த மாநிலத்தை விடவும் – ஏன், சுவாமிஜி பிறந்த வங்க மாநிலத்தை விடவும் கூட – ஒரு மாநிலம் சுவாமி விவேகானந்தரை இனங்கண்டு உலகுக்குக் காட்டியது என்றால், அது நமது தமிழகம் தான் என்பதை வரலாறு கூறுகின்றது.
அதற்கு முக்கிய காரணம் சுவாமி விவேகாநந்தரின் அருமைச் சீடராக விளங்கிய- பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலே தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த – அளசிங்கப் பெருமாள்.
சுவாமி விவேகானந்தரின் பணிகளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டு அளசிங்கரின் தலைமையிலே சேவை செய்த சென்னை இளைஞர்கள் டாக்டர் நஞ்சுண்ட ராவ், ‘கிடி’ என அழைக்கப்பட்ட சிங்காரவேலு முதலியார், பேராசிரியர் எம். ரங்காச்சாரியார், ஆர். பாலாஜிராவ், கே. சுந்தரராம அய்யர், பிலிகிரி ஐயங்கார், ஜி.ஜி. நரசிம்மாச்சாரியார், எழுத்தாளர் ராஜம் ஐயர் ஆகியோர் ஆவர். இவர்கள் ‘எனது நண்பர்கள்’ என சுவாமிஜியினாலே அன்போடு அழைக்கப்பட்டவர்கள்.
1893-இல் சிகாகோவில் நடைபெற உள்ள அனைத்து சமய மாநாட்டிற்கு சுவாமிஜியை அனுப்ப இவர்கள் ஏற்றுக் கொண்ட கடின உழைப்பைப் பாராட்ட வார்த்தைகள் கிடையாது. எனவே சுவாமிஜியின் 150-வது ஜயந்தி ஆண்டினை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய கடமை தமிழகத்திற்குள்ளது.
ஜனவரி 1863-இல் பிறந்து ஜூலை 1902-இல் தன் பூத உடல் நீத்து, இவ்வுலகில் 39 ஆண்டுகளே வாழ்ந்த சுவாமிஜி நிறைவேற்றிய பணிகளை நினைத்தால் மனம் வியந்து போகின்றது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
எனினும் ஓர் ஆறுதலை நான் பகிர்ந்து கொள்கின்றேன். நரைத்த தலையோடும், திரைவிழுந்த கண்ணோடும் கையிலே தடி கொண்டு தள்ளாடி நடந்து செல்லும் முதியவராக அவரை நாம் கற்பனை செய்யக்கூட முடியாது. என்றென்றும் இளமையாகவும் வீரப்பார்வையோடும், வலிமை வாய்ந்த உடலோடும்தான் நாம் அவரை நினைக்க முடியும்.
சுவாமிஜியின் 150-வது ஜயந்தி விழா ஆண்டில், பாரதத்தின் ‘ஞானதீப’மாக ஒளிவீசும் அவரது ஒப்பற்ற மனிதநேயக் கருத்துகளைச் செயல்படுத்துவோம் என்று மீண்டும் உறுதி பூணுவோம்.
நன்றி: தினமணி (12.01.2013)
$$$