-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
6ஈ. திருவாவடுதுறை வாஸம்
மகாமகம்
அப்பால் ஆங்கிரஸ வருஷம் (1872) மாசி மாதம் கும்பகோணத்தில் ஸ்ரீ மகாமக புண்ணிய காலமானதால் ஸ்நானத்தின் பொருட்டுத் திருக்கூட்டத்தோடும் மற்றப் பரிவாரங்களோடும் சுப்பிரமணிய தேசிகர் அந்நகருக்கு விஜயஞ்செய்து அங்கே பேட்டைத் தெருவிலுள்ள ஆதீன மடத்தில் தங்கினார். தம்முடைய மாணாக்கர் பலரோடும் இக்கவிஞர்கோமானும் உடன் சென்று அங்கே சில தினம் இருந்து சிறப்பித்தார்.
தமிழ்நாட்டின் பல பாகங்களிலுள்ள ஜமீன்தார்களும் மிட்டாதார்களும் பிரபுக்களும் சிஷ்ய கோடிகளும் அங்கு வந்து தேசிகரைத் தரிசித்து மகிழ்வடைந்தார்கள்; அந்த நகரிலுள்ள சைவப் பிரபுக்களிற் பலர் மகேசுவர பூஜையும், பட்டணப் பிரவேசமும் மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் ஒரு பெரிய சபை கூட்டி வித்துவான்களுக்கெல்லாம் ஏற்றபடி ஸம்மானம் செய்தனர்.
வந்தவர்களில் தமிழ்ப் பாஷையில் அபிமானமுள்ள பெரும்பாலோர் இவரைப் பார்த்து இவருடைய வாக்கின் பெருமையையும் அருமையையும் பாராட்டித் தங்களுடைய இடத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று இவரைக் கேட்டுக்கொண்டு சென்றனர். சில தினங்கள் சென்றபின் தேசிகர் பரிவாரங்களுடன் திருவாவடுதுறைக்கு விஜயம் செய்தமையால் இவரும் உடன் வந்து அங்கே தங்குவாராயினர்.
சிறப்புப் பாயிரங்கள்
கும்பகோணத்துக்கு வந்த பிரபுக்களிற் சிலரும், வித்துவான்களிற் சிலரும் உடன் வந்து திருவாவடுதுறையில் தங்கிச் சுப்பிரமணிய தேசிகரை நாள்தோறும் தரிசிப்பதுடன் பிள்ளையவர்களோடு சம்பாஷணை செய்தும் வந்தனர். அப்போது இருதிறத்தாருக்கும் உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர்களில் மதுரை இராமசாமி பிள்ளையென்பவர் செய்யுள் நடையாகத் தாம் இயற்றிய ‘சிவாலய தரிசன விதி’ என்னும் நூலையும் வடமொழியிலுள்ள பர்த்ருஹரி சதகங்களின் மொழிபெயர்ப்பான நூல்களையும் படித்துக்காட்டிச் செப்பம் செய்துகொண்டு சிறப்புப் பாயிரங்களும் பெற்றனர். திருநெல்வேலியைச் சார்ந்த பேட்டையிலுள்ள *29 சுப்பிரமணியபிள்ளை யென்பவர் தம் வழிபடுகடவுளாகிய சருக்கரை விநாயகர்மீது தாம் இயற்றிய ஒரு பதிகத்தையும் வேறு சில நூல்களையும் படித்துக்காட்டித் திருத்திக்கொண்டு சிறப்புப் பாயிரங்களும் பெற்றனர். அவற்றுள் எனக்குக் கிடைத்த சருக்கரை விநாயகர் பதிகச் சிறப்புப்பாயிரம் வருமாறு:-
(விருத்தம்) “பூமேவு நங்கைவளர் மங்கைநக ரைங்கையுடைப் புத்தேண் மேனிப் பாமேவு மருக்கரைநேர் சருக்கரைவி நாயகற்கோர் பதிகஞ் சொற்றான் மாமேவு சொக்கலிங்க வள்ளன்முன்றோன் றிடத்தோன்றி வந்த செம்மல் நாமேவு பெரும்புகழ்சார் கலையுணர்சுப் பிரமணிய நாவ லோனே”.
இங்ஙனம் தாங்களியற்றிய நூல்களை இவரிடம் படித்துக் காட்டிச் சிறப்புப் பாயிரம் பெற்றுச் சென்றோர் வேறு சிலரும் உண்டு.
சேற்றூர் ஜமீன்தார்
சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களுக்குப் பொருளுதவி செய்ய விரும்பியும், அவ்வாறு செய்தால் மடத்திலுள்ளவர்கள் மடத்துப் பணத்தை வரையறையின்றி இவருக்குத் தாம் கொடுத்துச் செலவிடுவதாகத் தம்மைக் குறைகூறக் கூடுமென்றெண்ணினார். அதனால் இவருக்கு வேறு வகையான ஆதரவை உண்டாக்கக் கருதி, யாரேனும் பிரபுக்கள் வந்தால் இவரைப் பார்க்கச் செய்தும் அவர்களைக்கொண்டு இவருக்கு உதவி செய்வித்தும் வந்தார். அவ்வப்பொழுது அந்தப் பிரபுக்களால் இவருக்குப் பொருளுதவி கிடைத்து வந்ததுண்டு.
தமிழில் நல்ல பயிற்சியுள்ளவரான சேற்றூர் ஜமீன்தாராகிய முத்துச்சாமி பாண்டியரவர்கள் ஒரு சமயம் அங்கே வந்து சில தினமிருந்தனர். இவரோடு பழக வேண்டுமென்னும் விருப்பம் அவருக்கு இருந்தமையின் அவரைச் சந்தித்துச் சம்பாஷணை செய்து வந்தால் தமக்குத் திருப்தியாக இருக்குமென்று இவருக்குச் சுப்பிரமணியதேசிகர் சொல்லியனுப்பினார். அப்படியே இவர் அந்த ஜமீன்தாரைக் கண்டு நெடுநேரம் சம்பாஷித்து அவருடைய நற்குணங்களில் ஈடுபட்டு,
(விருத்தம்) “திருவியலுஞ் *30 சேறைநக ரிராசதா னித்தலமாத் திங்கள் போல உருவியலுங் கவிகைமுத்துச் சாமிபாண் டியனுயிர்கள் உவப்ப மேவி மருவிய *31 சுந் தரமகா லிங்கவே ளமைச்சியற்ற வழிந டாத்தும் பொருவியலா வரசுரிமைக் கொப்பதென்னென் றியாவர்களும் புகலு வாரே”
என்னும் பாடல் ஒன்றை இயற்றிப் படித்துக்காட்டும்படி செய்தார்.
ஜமீன்தார் கேட்டு இன்புற்று இவருக்குத் தக்க ஸம்மானம் செய்து பாராட்டினார்; சேற்றூருக்கு வந்து சில தினங்களிருந்து தம்மையும் மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டுமென்றும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். அங்ஙனம் செய்வதாக வாக்களித்து இவர் தம்முடைய விடுதிக்கு வந்து விட்டார்.
திருவாவடுதுறைக்கு நான் திரும்பிவந்தது
சூரியமூலைக்குச் சென்றிருந்த நான் மாசி மாதம் 17-ஆந் தேதி புதன்கிழமை (26-2-1873) மாலையில் என் தந்தையாரோடும் துறைசை சென்று மடத்திற் பல அறிஞர்களிடையே ஸல்லாபம் செய்துகொண்டு விளங்கிய இவரைக் கண்டேன். உடம்பின் அம்மை வடுக்கள் இவர் கண்ணுக்குப் புலப்படாதபடி அதிகமாக விபூதியைத் தூளனம் செய்துகொண்டிருந்தேன்; என்னைக் கண்டதும் அருகே யழைத்து இருக்கச்செய்து இவர், “அம்மை வடுக்கள் புலப்படாதபடி விபூதிக் கவசம் தரித்திருக்கிறீர்போலும்; அடையாளம் தெரியவில்லையே, உம்முடைய ஞாபகமாகவே யிருந்தேன். நீர் இல்லாமையினால் பெரிய புராணப் பாடத்தை நிறுத்திவைக்கும்படி ஸந்நிதானம் கட்டளையிட்டது. அதனால் அது நடைபெறவில்லை. இனித்தான் நடைபெற வேண்டும்” என்றனர். பின்பு அங்கே வந்திருப்பவர்களுள் ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் செய்வித்தார். நான் பலநாளாகக் கேள்வியுற்றிருந்த அவர்களை அன்று தெரிந்துகொண்டேன்.
அதன்பின்பு பெரிய புராணத்தில் எஞ்சிய பாகமும் நன்னூல் விருத்தியுரை முதலியனவும் முறையே எங்களாற் பாடங் கேட்கப்பட்டு வந்தன. மற்றொரு வகையாருக்கு நன்னூற் காண்டிகையுரை முதலியன இவராற் பாடஞ் சொல்லப்பட்டு வந்தன.
சுப்பிரமணிய தேசிகர் விடுதி அமைத்துக் கொடுத்தது
பிள்ளையவர்களுக்கும் படிக்கிறவர்களுக்கும் வசதியான இடங்களில்லை யென்பதை அறிந்த சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைத் தெற்கு வீதியின் தென்சிறகிற் புதியனவாக மூன்று வீடுகள் கட்டுவித்து அவற்றில் நடுவீட்டை இவருக்காக அமைத்து இவர் வருத்தமில்லாதபடி சென்று வருவதற்காக முன் வாயிலின் நிலையை உயரமாக வைக்கும்படி கட்டளையிட்டார். அப்படியே அஃது அமைக்கப்பெற்றது. இப்போதும் அந்த வீடு பிள்ளையவர்கள் வீடென்றே வழங்கி வருகிறது.
அநந்தகிருஷ்ண கவிராயர்
விக்கிரமசிங்கபுரம் ஸ்ரீ நமச்சிவாய கவிராயருடைய வழித்தோன்றலும் சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரிடம் அநேக நூல்களைப் பாடங்கேட்டவருமாகிய அநந்தகிருஷ்ண கவிராயரென்பவர். மகாமகத்திற்காக கும்பகோணம் வந்திருந்து அப்பால் திருவாவடுதுறைக்கும் வந்து இவரிடத்திற் பாடங்கேட்டு வருவாராயினர். அவருடைய பரம்பரைப் பெருமையையும் புத்தி நுட்பத்தையும் அறிந்து அவர்பால் இவர் அதிக அன்பு செலுத்தி வந்தனர். ஒரு நல்ல தினத்தில் அவர் சுப்பிரமணிய தேசிகரிடம் தீட்சை பெற்றுக் கொண்டமையால் ‘அம்பலவாணர்’ என்னும் தீட்சாநாமம் தேசிகரால் அப்பொழுது அவருக்கு அளிக்கப்பட்டது. அப்பெயர் அவருக்கு அமைந்ததைப் பாராட்டிய இவர் அவர்மீது,
(கட்டளைக் கலித்துறை) “நம்பல மாகுந் திருவா வடுதுறை நண்ணிவள ரும்பலர் போற்றும்பஞ் சாக்கர தேவ னுரைத்தபடி *32 கம்பல வான்கண்ண னென்றே தினமுங் கரைவதினும் அம்பல வாண னெனும்பெய ரேநன் கமைந்ததுவே”
என்னும் செய்யுளை இயற்றினர்.
அப்பால் ஸ்ரீமுக வருஷத்தில் தாம்பிரபரணி நதிக்கரையிலுள்ளதாகிய பாபநாசமென்னும் ஸ்தலத்தில் நடைபெறும் ஸ்ரீ கலியாண சுந்தரேசுவர மூர்த்தியின் திருவிழாவிற்கு ஒவ்வொரு தினமும் வாகனகவிகள் சொல்லுவது அவருக்குப் பரம்பரை வழக்கமாதலால் அதற்குப் போக வேண்டுமென்று விடைபெற்றுக் கொள்ளுதற்கு அவர் முயன்றனர். அப்போது இவர், ”போக வேண்டாம்; இங்கே இருப்பது எனக்குத் திருப்திகரமாயிருக்கிறது” என்று சொன்னதுடன், “அங்கே போய்ச் சொல்ல வேண்டிய பாடல்களை நானே செய்து தருவேன். அவற்றை யனுப்பி யாரைக் கொண்டேனும் அங்கே படிக்கச் செய்க” என்று சற்றேறக்குறைய இருபதுக்குக் குறையாத *33 வாகன கவிகளை இயற்றி அவரிடம் கொடுத்து ஊருக்கு அனுப்பச் செய்தனர். அப்படியே அனுப்பிவிட்டு அவர் திருவாவடுதுறையிலிருந்தே பாடங்கேட்டு வந்தனர்.
ஸ்ரீ நமச்சிவாய கவிராயருடைய பாட்டைப் பாராட்டியது
இவருக்குக் கச்சியப்ப ஸ்வாமிகளிடத்தில் மிக்க பக்தியுண்டென்பது *34 முதற்பாகத்தால் அன்பர்களுக்குப் புலப்பட்டிருக்கும்;
எங்களுக்குப் பாடஞ் சொல்லி வருகையில் இடையிடையே அவருடைய கல்விப் பெருமையை இவர் எடுத்துக் கூறிவருவதுமுண்டு. மேற்கூறிய அநந்த கிருஷ்ண கவிராயரைச் சந்திக்கும் காலங்களில் அவர் முன்னோர்களாகிய நமச்சிவாய கவிராயர் முதலியோர்களியற்றிய பிரபந்தங்களிலுள்ள பாடல்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு இவர் இன்புற்று வந்தார். ஒரு சமயத்திற் சில பாடல்களைச் சொல்லி அப்பால்,
(சந்த விருத்தம்) “வாழ்ந்த தென்னவி சாலத லங்களை ஆண்ட தென்னப்ர தாபமி குந்திறு மாந்த தென்னவ்ரு தாவின் தங்கொடு தலைகீழாய் வீழ்ந்த தென்னவை யோபிற கங்கவர் மாண்ட தென்னபொ யோவென விங்கினி வேண்டி யென்னப்ர யோசன நின்பதம் அடைவேனோ சூழ்ந்து பன்னிரு காதம ணங்கமழ் தேன்கள் விம்மியி றால்கள்கி ழிந்திடை தூங்கு தென்மல யாசல நின்றடி யவர்போலத் தாழ்ந்து சன்னிதி யூடுபு குந்தலை மோந்து தண்மலர் மாரிபொ ழிந்திடு தாம்ப்ர பன்னிம காநதி நின்றவென் உலகாளே”
என்ற செய்யுளை அவர் சொன்னார்; இவர் கேட்டு மெய்ம்மறந்து ஆனந்த பரவசராகி, ”இப்படிப் பாடுவதற்குக் கச்சியப்பஸ்வாமிகளாலும் முடியாது” என்று கூறினார். அருகே இருந்த நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “கவிஞரெல்லாரினும் கச்சியப்ப ஸ்வாமிகளிடத்து இவருக்கு உள்ள நன்மதிப்பு வெளியாகிறது” என்று மந்தணமாகப் பேசிக்கொண்டோம்
அண்ணுசாமி முதலியார்
திருநெல்வேலியில் நீதிபதியாக இருந்த புதுச்சேரி அண்ணுசாமி முதலியாரென்பவர் தம் ஊருக்குப் போகும்பொழுது திருவாவடுதுறையில் இறங்கிச் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம். ஒருமுறை அவர் வந்திருந்த பொழுது அவருடைய குண விசேடத்தையும் சுப்பிரமணிய தேசிகர்பால் அவருக்குள்ள அன்பின் மிகுதியையும் அறிந்து பிள்ளையவர்கள் சொல்லிய பாடல் வருமாறு:-
(விருத்தம்) “சீர்பூத்த கல்வியுந்தக் கோர்விழையு மொழுக்கமும்வண் சீர்த்தி தானும் ஆர்பூத்த நடுநிலையுங் கலைஞர்களு நின்பால்வந் தண்ண லானே பேர்பூத்த புதுவையண்ண லேயண்ணு சாமியெனும் பேர்பெற் றாயால் நீர்பூத்த பரங்கருணைக் கடவுளரு ளால்வாழி நீடு மாதோ”.
குற்றாலச் சிலேடை வெண்பா
பிறகு வன்றொண்டச் செட்டியார் வந்து சில தினங்கள் இருந்து ஓய்வு நேரங்களில் தமக்குள்ள சில ஐயங்களைத் தீர்த்துக் கொண்டதன்றித் திருச்சிற்றம்பலக் கோவையாரை முறையே பாடங் கேட்டுக்கொண்டு வந்தனர் குற்றாலச் சிலேடை வெண்பா, சிங்கைச் சிலேடை வெண்பா என்பவற்றின் கையெழுத்துப் பிரதிகளை அவர் கொணர்ந்திருந்தார். அவற்றை நன்றாக ஆராய்ந்து பதிப்பிக்க வேண்டுமென்னும் நோக்கம் அவருக்கு இருந்தது. அதனால் மடத்திலிருந்த பிரதிகளையும் வாங்கி வைத்துப் படிப்பித்து இக் கவிஞர்பிரான் முன்னிலையிற் பொருள் வரையறை செய்து கொண்டே வந்தார். இவருடைய மற்ற மாணவர்களும் பிறரும் உடனிருந்து கேட்டுக்கொண்டும் இவருடைய கருத்தின்படி தமக்குத் தோற்றியவற்றை அப்பொழுதப்பொழுது சொல்லிக் கொண்டும் இருந்தார்கள். குற்றாலச் சிலேடை வெண்பாவை வாசித்து வருகையில்,
“வாடிய மெய்த்தவரும் வாரி மணித்திரளும், கோடி வரம்படைக்குங் குற்றாலம்”
என்னும் செய்யுளில் “கோடி வரம்படைக்குங் குற்றாலம்” என்ற அடிக்குக் கோடி வரங்களை அளிக்கும் குற்றாலமென்ற ஒரு பொருள் மட்டும் விளங்கிற்று; மற்றொன்று விளங்கவில்லை. அதைப்பற்றி யாவரும் யோசித்துக்கொண்டிருக்கையில் அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் திடீரென்று, “கோடு இவர் அம்பு அடைக்கும் என்று சொல்லலாமோ?” என்று அச்சத்தோடு அறிவித்தனர். இக்கவிநாயகரும் மற்றவர்களும் சந்தோஷித்து அவர் கூறியதை அங்கீகரித்தார்கள். வன்றொண்டச் செட்டியார் மட்டும் சிறிதும் வியவாமல், “மறுத்து” என்று சொல்லி மேலே படிக்குமாறு குறிப்பித்தனர். அப்பால் சில பாட்டுக்கள் படிக்கப்பட்டன.
தாம் சொன்ன பொருளைச் செட்டியார் சிறிதும் பாராட்டவில்லையேயென்ற வருத்தம் மேற்சொன்ன மாணவருக்கு இருந்தது. எழுந்து செல்லுகையில் அம்மாணவரை நோக்கி இவர், “செட்டியார் மதிக்கவில்லையென்ற வருத்தம் உமக்கு இருப்பதாகத் தெரிகிறது. உண்மைப் பொருளுக்கு எப்பொழுதும் மதிப்புண்டு. அவர் மதியாவிட்டால் அதற்கு இழிவொன்றுமில்லை. பிறருடைய மதிப்பையும் அவமதிப்பையும் கவனிக்கக் கூடாது” என்று ஆறுதல் கூறினார். இக்கொள்கை பிறருக்குக் கூறப்படுவது மட்டுமன்று. பிறர் மதித்தாலும் மதியாவிட்டாலும் அதைக் கவனியாதவராகி உண்மைப் பொருளை வெளியிடலையே இவர் தமது வாழ்வின் பயனாகக் கொண்டிருந்தார்.
வீரபத்திர பிள்ளை
சுப்பிரமணிய தேசிகர் கல்லிடைக் குறிச்சியிலிருந்தபொழுது மிக்க உபகாரியும் சிறந்த கல்விமானுமாயிருந்த சிரஸ்தேதார் வீரபத்திர பிள்ளை யென்பவரைத் திருவாவடுதுறைக்கு வருவித்து சிலநாள் வைத்திருந்து உபசரித்து ஸல்லாபம் செய்யவேண்டுமென்றெண்ணி அவர் வரவை எதிர்பார்த்ததுண்டு. வருவதற்குப் பிரியமிருந்தும் தளர்ச்சி மிகுதியால் வீரபத்திர பிள்ளைக்கு துறைசைக்கு வர இயலவில்லை. தம்முடைய அன்பர்களிடத்திற் பிரியத்தைச் செலுத்துவதிற் சிறந்த தேசிகருக்கு அவரைப் பார்க்கவேண்டுமென்னும் ஆவல் மிகுதியாக இருந்தது; அதைத் தெரிந்து இவர் அதனைப் புலப்படுத்திக் கற்பனையுள்ள *35 12-பாடல்களை இயற்றி அவருக்கு அனுப்பினார். அவர் அயலூருக்குச் செல்லுவதில்லையென்னும் உறுதியுடையவராக இருந்தும் அப்பாடல்களைப் பார்த்து அவற்றில் ஈடுபட்டு உடனே புறப்பட்டுத் தபால்வண்டி வழியே திருவாவடுதுறை வந்து தேசிகரைத் தரிசித்தும் இவரோடு ஸல்லாபம் செய்துகொண்டும் சிலதினம் இருந்து மகிழ்ந்து விடைபெற்றுத் தம்மூர் சென்றார்.
திருக்குற்றாலப் புராணம் படித்தது
ஒருசமயம் திருக்குற்றாலப்புராண அச்சுப்பிரதி கிடைத்தது. அதனிடத்து நெடுங்காலமாக இருந்த பிரீதியால் இவர் அதனை படிப்பித்துக் கேட்டு முதலிலிருந்து பொருள் வரையறை பண்ணிக்கொண்டே சென்றார். அப்பொழுது மகாவைத்திய நாதையர், மேலகரம் *36 சண்பகக் குற்றாலக் கவிராயர் முதலியோர் உடனிருந்தார்கள். அப்படிக் கவனித்து வருகையில் ஸ்ரீ சண்டிகேசுவர ஸ்துதியாகிய,
(விருத்தம்) “தான் பிறந்த தந்தையையும் இனிப்பிறக்கும் நிந்தையையும் தடிந்து சேயென் றான்பிறங்கு மழவிடைமே லொருவரழைத் திடவிருவர் அயிர்ப்ப வேகிக் கான்பொலிதா ரரிபிரமா தியர்க்குமெய்தா இருக்கையெய்திக் கடவுட் சேடம் வான்புலவர் பெறாப்பேறு பெற்றவனை நற்றவனை வழுத்தல் செய்வாம்”
என்னுஞ் செய்யுளில், ‘சேயென்று ஒருவரழைத்திட இருவர் அயிர்ப்பவேகி’ என்ற பகுதியில் இருவரென்பதற்குப் பொருள் விளங்காமையால் இவர் யோசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மகாவைத்தியநாதையர், ”இருவரென்பதற்கு விநாயகர் சுப்பிரமணியரென்று சொல்லலாமோ?” என்று மெல்லச் சொன்னார். அப்பொருள் மிகவும் பொருத்தமுள்ளதாக இருந்தது; கேட்ட இக்கவிஞர் கோமான், ”ஐயா, நிரம்ப நன்றாயிருக்கின்றது. உங்களுடைய ஈசுவர பக்தியே இவ்வாறு தோற்றச் செய்கிறது” என்று மனமுருகிக் கொண்டாடினார்.
இரண்டு புறங்கூற்றாளர் பாடங்கேட்டது
இவர் இயற்றிய திருவிடைமருதூருலாவைப்பற்றிப் பொறாமையாற் பலவகையான புரளிகளை அங்கங்கே யுண்டாக்கி இவருக்கும் இவருடைய மாணாக்கர் முதலியவர்களுக்கும் மனவருத்தத்தை யுண்டுபண்ணி அதனாற் பலராலும் அவமதிப்பை அடைந்தவர்களில் முக்கியமானவர் இருவர். அவர்கள் எப்படியாவது தம் குறைவைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றெண்ணி, அதற்கு உபாயம் இக்கவியரசருடைய அன்பைப் பெறுவதுதானென்றும் அதனைப் பெறுவதற்கு உபாயம் பாடங்கேட்பதாக இவர்பாற் செல்வதுதானென்றும் தம்முள் நிச்சயித்துக்கொண்டு ஒரு நாட் காலையிற் கையுறையுடன் இவர்பால் வந்தனர். சாந்தமூர்த்தியாகிய இவர் வந்தவர்களுடைய இயல்பை நன்றாக அறிந்திருந்தும் விசாரித்து அவர்களுடைய நோக்கத்தையறிந்து சிறிதும் வருத்தத்தைப் புலப்படுத்தாமல் அங்கீகரித்து மற்ற மாணாக்கர்களோடு சேர்த்து அவர்களுக்குப் பாடஞ்சொல்லி வந்தார்; அப்போது மாணவர்களிற் சிலர் அவ்விருவர் முன்பு செய்துள்ள தீங்குகளையெல்லாம் நினைந்து நினைந்து மனம் பொறாதவர்களாகி அவர்களைக் கண்டிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு சமயத்தை எதிர்பார்த்திருந்தவர்களாதலால், இடையிடையே கேள்விகளைக் கேட்டு அவ்விருவரையும் விழிக்கச்செய்து அடிக்கடி வருத்துவாராயினர். இக்கவியரசர் சும்மா இருக்கும்படி குறிப்பித்தும் அவர்கள் கேட்கவில்லை.
அதனைக்கண்ட இவர் ஒருநாள் திடீரென்று தனியே சுப்பிரமணிய தேசிகரிடம் சென்று அதனை விண்ணப்பித்தனர். அவர் உடனே பழைய மாணாக்கர்களை மட்டும் அழைப்பித்து நன்றாக விசாரித்து, “ஒருவன் தமக்குப் பரம விரோதியாக இருந்தாலும் தம்பால் வருவானாயின் அவனை ஏற்றுக்கொண்டு முன்னையிலும் நன்கு மதித்துப் பாராட்ட வேண்டுமென்பது பெரியோருடைய கொள்கை. அதனை அறியாமல் நீங்கள் வழுவி ஒழுகுவீர்களாயின் உங்களை மட்டுமன்றி உங்கள் ஆசிரியரையும் உலகம் அவமதிக்கும்; நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் மடத்திற்கும் அகௌரவம் உண்டாகும்; ‘இணரெரி தோய்வன்ன வின்னா செயினும், புணரின் வெகுளாமை நன்று’ என்னும் திருக்குறளை யறியீர்களோ? அதற்குச் சங்கர நமச்சிவாயரெழுதிய அருமையான உரையை நோக்குங்கள்” என்று பல நியாயங்களை எடுத்து மொழிந்தனர். அன்றியும் உடனே விருத்தியுரையில் உள்ள *37 அந்தப் பகுதியைப் படிப்பிக்கச் செய்து இடையிடையே வேண்டியவற்றையும் சொல்லி அறிவுறுத்தினார்.
மாணாக்கர்கள் அவர் முகமதியினின்றும் தோன்றிய வசனாமிர்தத்தையுண்டு சாந்தமுற்றுச் சென்று அவ்விருவரோடும் நட்புற்று மனங்கலந்து பழகுவாராயினர். அவ்விருவரும் பின்பு திருச்சிற்றம்பலக் கோவையார், கல்லாடம், திருநாகைக்காரோணப் புராணம் முதலிய சில நூல்களைப் பாடம் கேட்டுத் தங்கள் எண்ணத்தை முடித்துக்கொண்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
வேலுஸாமி பிள்ளை
பிள்ளையவர்களோடு கூடப் படித்த ஒரு சாலை மாணாக்கராகிய சென்னை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் தம்மிடம் படித்துக்கொண்டிருந்தவரும், தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளையின் பரம்பரையினருமாகிய வேலுஸாமி பிள்ளை யென்பவரை மேலும் நன்றாகப் படிப்பிக்க நினைந்து தமக்கும் பிள்ளையவர்களுக்கும் உள்ள சிநேகபாவத்தைப் புலப்படுத்தி, ‘இவரைப் படிப்பித்து முன்னுக்குவரச் செய்யவேண்டும்’ என்று ஒரு கடிதமெழுதிக் கொடுத்தனுப்பினார். அவர் வந்து இவரை வணங்கி அக் கடிதத்தைக் கொடுத்தனர். அதைப் பார்த்துவிட்டு இவர் அவரை அங்கீகரித்து அப்படியே பாடஞ்சொன்னார். நாளடைவில் அவருடைய கல்வி மிகப் பெருகியது. இவரிடத்திற் படித்தமையாற் கவித்துவ சக்தியும் நன்றாக அவருக்கு உண்டாயிற்று. பெரும்பாலும் வெண்பாவே பாடுவார். பாடுவதிற் கஷ்டமென்று சொல்லப்படும் அந்தப் பாவை விரைவாகப் பாடுவதைத் தெரிந்து உடன் படிக்கும் மாணாக்கர்கள் ‘வெண்பாப்புலி’ என்று அவரை அழைப்பாராயினர். அதுவே பின்பு அவருக்குரிய பட்டப் பெயராக அமைந்து வழங்கலாயிற்று. அவர் பிற்காலத்திற் காஞ்சீபுரம் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்தனர்.
பு.சபாபதி முதலியாருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது
சென்னையைச் சார்ந்த கோமளீச்சுவரன் பேட்டையிலுள்ள திருவாதவூரடிகள் பக்தஜன சபையின் தலைவராகிய நாராயணசாமி முதலியாரென்பவர் சேக்கிழார் புராணத்திற்கும் திருமுறைகண்ட புராணத்திற்கும் உரை செய்து தரும்படி புரசப்பாக்கம் வித்துவான் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரைக் கேட்டுக் கொண்டனர். அவரும் அப்படியே இரண்டிற்கும் உரைசெய்து முடித்துவிட்டு அவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் அனுப்பவேண்டுமென்று பிள்ளையவர்களுக்குக் கடிதம் எழுதினர். வேலைகளின் மிகுதியால் இவரால் அது செய்யப்படவில்லை. திரும்பவும் சீக்கிரம் பாடல்கள் செய்து அனுப்பினால் தமக்கு அநுகூலமாயிருக்குமென்று அவர் ஞாபகப்படுத்திக் கடிதம் எழுதினர். ஒருநாள் பிற்பகலிற் பாடம் முடிந்தவுடன் அதனை நினைவுறுத்தினேன். அநுஷ்டானம் செய்து கொண்டு வந்து சயனித்துக் கொண்ட பொழுது என்னை நோக்கி எழுதும்படி ஐந்து பாடல்களை இடையீடின்றிச் சொல்லிக்கொண்டு வந்தார். அவற்றை நான் எழுதியவுடன் வேறொரு கடிதம் எழுதுவித்து மறுநாள் சபாபதி முதலியாருக்கு அனுப்பிவிட்டார்; அப்பாடல்கள் வருமாறு:-
(விருத்தம்) (1) “சொல்லாரும் புனற்பெருக்கார் பாலாறு வளஞ்சுரக்கும் தொண்டை நாட்டில் எல்லாரும் புகழ்சென்னைக் கோமளீச் சுரன்பேட்டை எனுமோர் தேத்தில் நல்லாரும் பரும்போற்றுஞ் சிவானுபவச் செல்வராய் நனிவி ளங்கு தல்லாருந் திருவாத வூரடிகள் பத்தசன சபைக்கு மாதோ” (2) “தலைவராய் நல்லொழுக்க நெறிநின்ற பெருங்குணஞ்சால் தக்கோ ராய நிலைமைசால் புகழ்நாரா யணசாமி மான்முதலாம் நிகரி லாதார் கலைவலார் முடிக்கொளுநஞ் *38 சேக்கிழார் புராணமொடு கருத்திற் கென்றும் மலைவிலா முறைகண்ட புராணமும்யா வருமுணர்ந்து மதிக்கு மாறு” (3) “தங்கள்கருத் திடைமதித்து யாவரைக்கொண் டுரைசெய்தால் தக்க தென்றே திங்கண்முடி யவனடியார் முதலியயர் வருமதித்தல் செய்வா ரென்று பொங்களவி லாராய்ச்சி கொடுதேர்ந்தே யிவனுரைத்தல் பொருந்து மென்றே அங்களவின் மகிழ்ச்சியின்நீ உரையியற்றித் தருகவென அதுமேற் கொண்டு” (4) “பாடமுத லாசிரிய வசனமீ றாகவுள பலவு மாங்காங் கூடமைய வெழுத்துமுதன் மூன்றதிகா ரத்துமியல் உளவோ ரைந்தும் தேடமுய லாதபடி காணிடமெ லாம்விளங்கத் திகழ்யா வோரும் நாடவுரை யாசிரியர் முதலியோ ரினுமுரைநன் னயமாச் செய்தான்” (5) “நிலம்பூத்த நகர்க்கெல்லா மரசையுறு புரசைநகர் நீடு வாழ்வோன் குலம்பூத்த பிறப்பொழுக்கங் கல்வியறி வியற்கைநலம் கூடப் பெற்றோன் நலம்பூத்த வொப்புரவு முதலியநற் குணங்களெலாம் நன்கு வாய்ந்தோன் வலம்பூத்த வட்டாவ தானச்ச பாபதிநா வலவ ரேறே”.
இடையீடின்றிச் சொன்னமையால், பாடஞ் சொல்லியதற்குப் பின்பும் எழுதச் சொல்லுவதற்கு முன்பும் நன்றாகக் சிந்தித்துப் பாடி அவற்றை ஒழுங்குபடுத்தி மனத்தில் வைத்துக் கொண்டிருந்தாரென்று அப்பொழுது எண்ணினேன்.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
29. இவரும் இவர் தமையனாராகிய சொக்கலிங்கம் பிள்ளை என்பவரும் திருவாவடுதுறை ஆதீனத்தில் அப்பொழுது சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரின் பூர்வாச்சிரமத்து உறவினர்கள்.
30. சேறை சேற்றூர்.
31. சுந்தரமகாலிங்கம் பிள்ளை யென்பவர் அக்காலத்திற் சேற்றூர் ஸமஸ்தானத்தில் ஸ்தானாபதி உத்தியோகத்திலிருந்தவர்.
32. கம் பலவான் – பல தலைகளையுடைய ஆதிசேடன்; அநந்தன்.
33. இச் செய்யுட்கள் முழுவதையும் நான் எழுதினமையினாலே பிற்காலத்தில் திருநெல்வேலிப் பக்கம் சென்றபொழுது இரண்டுமுறை இவர் வீடு சென்று தேடிப் பார்த்தும் இப்பாடல்கள் கிடைக்கவில்லை.
34. பக்கம், 27, 73, 225
35. அப் பாடல்கள் இப்பொழுது கிடைக்கவில்லை.
36. இவர் திருவாவடுதுறை யாதீன கர்த்தராக விளங்கிய மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குப் பூர்வாச்சிரமத்தில் தம்பியாவார்.
37. நன்னூல், 300-ஆம் சூத்திரவுரை
38. இந் நூல்கள் இரண்டும் இச் சிறப்புப் பாயிரத்துடன் ஸ்ரீமுக ஆண்டு சித்திரை மாதம் பதிப்பிக்கப்பட்டன.
$$$