பாஞ்சாலி சபதம் – 1.1.22

-மகாகவி பாரதி

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை முன்வைத்து, தங்கள் பெரிய தந்தையார் மன்னர் திருதராஷ்டிரனின் அழைப்பை ஏற்பதாக அறிவிக்கிறான் தருமன். துரியன் சூது செய்யினும் மன்னரின் அழைப்பை ஏற்பது தங்கள் கடன் என்று தருமன் சொல்வதாகக் கூறுகிறார் மகாகவி பாரதி.

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.22. தருமபுத்திரன் தீர்மானம்

தருமனும் இவ்வள வில்-உளத்
      தளர்ச்சியை நீக்கியொர் உறுதி கொண்டே
பருமங்கொள் குரலின னாய்-மொழி
      பகைத்திட லின்றிஇங் கிவைஉரைப் பான்;
‘மருமங்கள் எவைசெயினும்-மதி
      மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடினும்,
கருமமொன் றேஉள தாம்-நங்கள்
      கடன்;அதை நெறிப்படி புரிந்திடு வோம்.       130

‘தந்தையும் வரப்பணிந் தான்;-சிறு
      தந்தையும் தூதுவந் ததைஉரைத் தான்,
சிந்தை யொன்றினி இல்லை’-எது
      சேரினும் நலமெனத் தெளிந்து விட்டேன்,
முந்தையச் சிலைரா மன்-செய்த
      முடிவினை நம்மவர் மறப்பது வோ?
நொந்தது செயமாட் டோம்;-பழ
      நூலினுக் கிணங்கிய நெறிசெல் வோம்.       131

‘ஐம்பெருங் குரவோர் தாம்,-தரும்
      ஆணையைக் கடப்பதும் அறநெறி யோ?
வெம்பெரு மத யானை-பரி
      வியன்தேர் ஆளுடன் இருதினத் தில்
பைம்பொழில் அத்திநகர்-செலும்
      பயணத்திற் குரியன புரிந்திடு வாய்,
மொய்ம்புடை விறல் வீமா!’-என
      மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந்தான்.       132

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s