இன்னொரு விவேகானந்தர்!

-நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்

உச்ச நீதிமன்ற  நீதிபதியாக உள்ள நீதியரசர் திரு.வெ.இராமசுப்பிரமணியன், இலக்கிய ஆர்வலர்; நாட்டுநலம் விழையும் நற்பண்பாளர்; சிறந்த மேடைப் பேச்சாளர். அன்னாரது இக்கட்டுரை, தினமணி நாளிதழில் (12.01.2014)  விவேகானந்தரின் 151வது ஜெயந்தியை ஒட்டி வெளியானதாகும்.

இந்திய மற்றும் உலக ஆன்மிக வரலாற்றில் மாபெரும் மறுமலர்ச்சியையும், புதிய எழுச்சியையும் உண்டாக்கிய சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள், 2013, ஜனவரி 12-இல் தொடங்கி, ஓராண்டுக் காலம் கோலாகலமாக உலகம் முழுவதும் நடந்தேறி, நேற்றோடு (2014இல் எழுதியது) முடிவடைந்தன. இன்னொரு விவேகானந்தரின் அவதாரத்திற்காக இந்த உலகம் தவம் கிடக்கிறது என்பதை, இந்த ஓராண்டு காலக் கொண்டாட்டங்களும், அவை எழுப்பிய எழுச்சியும் நமக்குத் தெளிவாகக் காட்டிவிட்டன.

1863-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் நாள் விஸ்வநாத தத்தா மற்றும் புவனேஸ்வரி தேவிக்கு நரேந்திரநாத் தத்தாவாகப் பிறந்த சுவாமி விவேகானந்தர், 39 ஆண்டுகளே வாழ்ந்து, 1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

1892-ஆம் ஆண்டு, சென்னையில் அளசிங்கப் பெருமாளையும், பின்னர் மதுரையில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியையும் சுவாமி விவேகானந்தர் சந்தித்தது ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

கன்னியாகுமரிக்குச் சென்று, தற்போது விவேகானந்தர் பாறை என்றழைக்கப்படும் பாறைக்கு நீந்திச் சென்று, தவமியற்றி, தனது இறைவன், குரு, அன்னை ஆகியோரின் ஆசிகளோடு திரும்பி வந்த சுவாமி விவேகானந்தர், 1892-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் மேற்கொண்ட மேற்கத்தியப் பயணம், கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஒரு மிகப் பெரிய பாலம் அமைக்க உதவியது.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சிகாகோ கலைக்கழகத்தில், உலக மதங்களின் பாராளுமன்றம் 1893, செப்டம்பர் 11-இல் தொடங்கியது. இந்த உலகிலுள்ள அனைத்து மதங்களையும், நம்பிக்கைகளையும் சார்ந்த பிரதிநிதிகள் தங்களது மதங்களின் சிறப்பான அம்சங்களை உலகத்தின் முன் எடுத்தியம்புவதற்காக அங்கே கூடியிருந்தனர். அத்தாட்சிப் பத்திரங்கள் ஏதுமில்லாமல், வெறுங்கையோடு, ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட் என்பவர் முன்னால் சுவாமி விவேகானந்தர் நின்றபோது, ரைட் சொன்னார்: “உங்களைப் பார்த்து அத்தாட்சிப் பத்திரங்களைக் கேட்பதென்பது, சூரியனைப் பார்த்து அது உதயமாவதற்குள்ள உரிமையைக் கேட்பது போலாகும்”.

கற்றறிந்த சான்றோர் ஏழாயிரம் பேர் குழுமியிருந்த அவையில், சுவாமி விவேகானந்தர் மட்டும் தான் ஏற்கெனவே எழுதித் தயாரிக்கப்பட்ட உரை ஏதும் கையில் இல்லாமல், மேடையில் வீற்றிருந்தார். ஒரு சாதாரண மனிதனைப் போன்று, நடுக்கத்துடனும், உலர்ந்து போன நாக்குடனும், ஒலிபெருக்கியின் முன்னால் நின்ற சுவாமி விவேகானந்தர், சில வினாடிகள் கண்களை மூடிக் கலைவாணியை வேண்டி, “அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே” என்று அறைகூவல் விடுத்தபோது, அரங்கத்தில் ஏற்பட்ட அதிர்வலைகள் அடங்குவதற்கு இரண்டு நிமிடத்திற்கு மேலானது.

அவருடைய பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தை அந்தப் பாராளுமன்றத்தின் தலைவர் ஜான் ஹென்றி பாரோஸ் இப்படிச் சொன்னார்: “மதங்களின் தாயாகிய இந்தியாவிலிருந்து காவியுடை அணிந்து வந்த துறவி சுவாமி விவேகானந்தர் பார்வையாளர்கள் மேல் ஓர் அற்புதமானத் தாக்கத்தை ஏற்படுத்தினார்”. சில நாளேடுகள் இந்தியாவிலிருந்து புயல்போல் வந்த துறவி என்று அவரை வர்ணித்தன. நியூயார்க் ஹெரால்டு பத்திரிக்கை “சந்தேகத்திற்கிடமில்லாமல் சுவாமி விவேகானந்தர்தான் உலக மதங்களின் பாராளுமன்றத்தின் மிகப் பெரும்புள்ளி” என்றது. ‘பாஸ்டன் மாலைமலர்’ என்னும் நாளேடு விவேகானந்தரை அப்பாராளுமன்றத்தின் நட்சத்திர நாயகனாகவும், வெறுமனே மேடையில் தோன்றினாலே கைதட்டல்களைப் பெறக் கூடியவராகவும் வர்ணித்தது.

1894-இல் நியூயார்க் நகரில், வேதாந்த சங்கத்தைத் தோற்றுவித்து, பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த விவேகானந்தர், 1896, மே மாதம் மாக்ஸ் முல்லரைச் சந்தித்தார். ஹார்வார்டு மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள் அவரை கௌரவப் பேராசிரியராக ஏற்றுக்கொள்ள முன்வந்தபோது, அவர் அதை மறுதலித்தார்.

கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்குப் பின்னால், ஐரோப்பாவிலிருந்து திரும்பிய சுவாமிஜிக்கு, 1897, ஜனவரி 15-ஆம் நாள் இலங்கையின் கொழும்புவில் மிகப் பெரிய வரவேற்பளிக்கப்பட்டு, அதன் பின்னர், ஜனவரி 26-இல் அவர் இந்திய மண்ணில் மீண்டும் காலடி வைத்தார். மிகச் சரியாக 53 ஆண்டுகளுக்குப் பின்னால், அதே நாளில், அதாவது 1950, ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு ஆகியது.

கொழும்புவிலிருந்து பாம்பனுக்குக் கப்பலில் வந்திறங்கிய சுவாமி விவேகானந்தரை ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வரவேற்று, தேரில் அமரவைத்து, குதிரைகளை அவிழ்த்துவிட்டுத் தானும், தன் பரிவாரங்களும் சேர்ந்து கொண்டு, அத்தேரை இழுத்துக் கொண்டுபோனார். கல்கத்தாவிலிருந்து சென்னைக்குப் புகைவண்டியில் பயணமான விவேகானந்தரின் தரிசனத்தைப் பெற்றே ஆக வேண்டும் என்ற வெறியில், மக்கள் வெள்ளம் தண்டவாளங்களில் அமர்ந்து, புகைவண்டி நிற்காத இடங்களில் எல்லாம் அவ்வண்டியை நிற்கச் செய்தது.

1897-ஆம் ஆண்டு, மே மாதம் 1-ஆம் நாள், கல்கத்தாவில், சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ணா மிஷன் நிறுவனத்தைத் தோற்றுவித்தார். ஆனால், அந்த நிறுவனத்தைத் தானே முன்னின்று நடத்த வேண்டும் என்று எண்ணாமல், மற்றவர்களை நியமித்தார். அப்போது சுவாமி விவேகானந்தர் எழுதிய வார்த்தைகள், நாம் கவனிக்கத்தக்கவை: “ஏற்கெனவே பிரிவுகளால் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் மற்றுமொரு மதப் பிரிவை உண்டாக்குவதற்காக நான் பிறக்கவில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்னும் உத்வேகமும் எழுச்சியும் இப்போதெல்லாம் என் மனதில் எழுந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இதன் விளைவாக இந்தியாவில் இன்னொரு மதப்பிரிவு தோன்றிவிடுமோ என்று அஞ்சுகிறேன். எனவே மிகுந்த எச்சரிக்கையோடு நான் செயல்பட வேண்டியுள்ளது” என்றார்.

“செயல்திறத்தாலோ, பணத்தாலோ, புகழாலோ, அந்தஸ்தாலோ அல்ல, தியாகத்தினாலேயே ஒருவன் அமரத்துவம் எய்துகிறான்” என்னும் கூற்றைத் தன் 39 ஆண்டுகால வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர் விவேகானந்தர்.

அவருடைய தாயும், சகோதரர்களும் அன்னக் காவடிகளாகப் பட்டினியில் தவித்தபோது, விவேகானந்தர் ஓர் உறுதி பூணுகிறார். அது இதோ: “உயர்ந்த கருத்துகளை இந்த உலகிலிருந்து மறைய விடுவதைவிட, ஒரு சிலர் துன்பப்படுவதால் எந்த நஷ்டமும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். தாயும் இரண்டு சகோதரர்களும் இறந்து போனால் தான் என்ன? அதுவொரு தியாகம். எந்தவொரு மகத்தான பணியும் தியாகம் இல்லாமல் நடந்ததில்லை. இதயத்தை அப்படியே பறித்தெடுத்து ரத்தம் சொட்டச் சொட்ட பலிபீடத்தில் வைக்க வேண்டும். அதன் பிறகே உலகில் மகத்தான காரியங்கள் ஆற்றப்பட்டுள்ளன”.

அவரது அர்ப்பணிப்பைப் பற்றி அவரே கூறியது: “வாழ்நாளெல்லாம் நான் இந்த உலகத்திற்காக உழைத்து வந்துள்ளேன். ஆனால் ஒரு பவுண்டு மாமிசத்தை என்னிடமிருந்து எடுக்காமல் ஒரு துண்டு ரொட்டி கூட அது எனக்குத் தருவதில்லை”. இப்படி மனித குலத்திற்காகத் தன்னை அழித்துக்கொண்ட தியாக தீபம் சுவாமி விவேகானந்தர்.

ஜனவரி 1900-இல் சுவாமிஜியின் தாயார் உடல்நலம் குன்றியபோது, அவர் அருகிலே போய் இருக்க விரும்பிய சுவாமி விவேகானந்தர் அதைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்: “1884-இல் என் தாயாரை விட்டு வந்தது பெருந்துறவு. இப்போது திரும்பவும் என் தாயாரிடம் போவது அதைவிடப் பெரிய துறவு என்பது இப்போது எனக்குக் காட்டப்படுகிறது. ஒருவேளை அன்று ஆதிசங்கரருக்கு எந்த அனுபவத்தைக் கொடுத்தாளோ, அதை நானும் அனுபவிக்க வேண்டுமென்று தேவி விரும்புகிறாள் போலும்!”

வாழ்க்கை தரும் பாடங்களைப் பற்றி விவேகானந்தர் இப்படிக் கூறினார்: “நாம் நூல்களைப் படிக்கலாம், சொற்பொழிவுகள் கேட்கலாம், பெரிதாகப் பேசலாம் – ஆனால் அனுபவம் என்ற ஒன்று உள்ளதே, அது ஒன்று தான் ஆசிரியர், கண்ணைத் திறந்து விடுகின்ற ஒன்று. உள்ளபடியே இருப்பதுதான் மிகச் சிறந்தது. நாம் கற்றுக் கொண்டேயிருக்கிறோம், புன்னகைகளின் வழியாகவும், கண்ணீர்த்துளிகளின் வழியாகவும் கற்றுக் கொண்டேயிருக்கிறோம். அது ஏன் என்று தெரிவதில்லை, ஆனால் அது அப்படித்தான் என்பதைக் காண்கிறோம், அது போதும்.. கலையாத நல்ல கனவுகளை நாம் அனைவரும் காணக் கூடாதா என்று நான் விரும்புகிறேன்.”

கல்வி, ஒழுக்கம், பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, தேசபக்தி, அறிவியல் பார்வை, உண்மையான, தூய்மையான ஆன்மிகம் இப்படி சுவாமி விவேகானந்தர் தொடாத துறைகளே இல்லை. எனவேதான், விவேகானந்தரின் ஒட்டுமொத்தப் பரிமாணத்தையும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கீழ்க்கண்டவாறு பாட்டில் வடித்தார்:

“ஆண்மை உருக்கொண்ட அந்தணன்
  எங்கள் அண்ணல் விவேகானந்தரின்
மாண்பை அளந்திட எண்ணினால்- இந்த
  மண்ணையும் விண்ணையும் பண்ணலாம்!
வீரத்துறவறம் நாட்டினான்- திண்ணை
  வீணர் வேதாந்தத்தை ஓட்டினான்;
தீரச் செயல்களை நாடினான்- இந்த
  தேச நிலை கண்டு வாடினான்!
பெண்ணின் பெருமையைப் போற்றினான்- ஆண்கள்
  பேடித்தனங்களைத் தூற்றினான்
மண்ணின் சுகங்களை விட்டவன்- ஏழை
  மக்களுக்காய்க் கண்ணீர் கொட்டினான்!”
நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்

விவேகானந்தரின் கருத்துகளால் கவரப்பட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரெஞ்சு அறிஞர் ரோமா ரோலண்டு, சுவாமிஜியின் உரைகளைப் பற்றிக் கூறியது:

“விவேகானந்தருடைய சொற்கள் சீரிய இசையாகும், அவரது சொற்றொடர்கள் பீதோவனின் இசைக்கு ஒப்பாகும், அவரது சந்தம் ஹாண்டல் குழுவின் சேர்ந்திசைக்கு நிகராகும். இந்தப் புத்தகங்களில் சிதறிக் கிடக்கும் விவேகானந்தரின் பொன்னுரைகளை, இந்த முப்பது ஆண்டு காலத்திற்குப் பின்னும், ஒரு மின்சார அதிர்ச்சி உடம்பில் பாயாமல் என்னால் தொடமுடியவில்லை என்றால், எப்படிப்பட்ட அதிர்வலைகளை, அவரது பேச்சுக்கள் தீப்பிழம்புகளாக அவரது உதடுகளிலிருந்து வந்து விழுந்த போது ஏற்படுத்தி இருக்க வேண்டும்”.

“… புருஷ சிங்கமாகிய விவேகானந்தர் தமது தலையிலே பாகை தரித்து, கையிலே தண்டமேந்தி, ஞான சாந்தி வீசும் முகத்துடன் நிற்பதைப் பார்த்தால் கல்லாலடித்த சிலைகள் கூட அவருடைய திருவடியில் வீழ்ந்து வணங்கும்” என்று மகாகவி பாரதி விவேகானந்தரைப் போற்றிப் புகழ்ந்தார்.

விவேகானந்தரின் தேச பக்தியைப் பார்த்து வியந்துபோன மகாகவி பாரதி, அதை அப்படியே உள்வாங்கி, அப்பர் சுவாமிகள் இறைவனை நினைந்து பாடிய திருத்தாண்டகத்தை தேசபக்திப் பாடலாக மாற்றினார். “நான் ஒரு இந்தியன், இந்தியர் அனைவரும் என் சகோதரர், ஒதுக்கப்பட்ட இந்தியனும், ஏழை மற்றும் ஆதரவற்ற இந்தியனும் என் சகோதரர். இந்தியன் எனது உயிர்சக்தி, இந்தியச் சமூகம் எனது குழந்தைப் பருவத்தொட்டில், எனது இளவயது மகிழ்வின் தோட்டம், எனது சொர்க்கம், வயோதிகத்தில் எனது வாரணாசி. இந்திய மண்ணே எனது மிக உயர்ந்த சொர்க்கம், இந்தியாவின் நன்மையே எனது நன்மை! இந்தப் பிரபஞ்சத்தின் அன்னையே, எனது ஆண்மைக்கு சான்று கொடு வலிமையின் அன்னையே, எனது பலவீனங்களை நீக்கிவிடு” என்ற விவேகானந்தரின் வீர உரையைக் கேட்டு, பாரதி திருத்தாண்டகத்தை, கீழ்க்கண்டவாறு மாற்றிப் பாடினார் :

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
  தரணியொடு வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்,
  மாதாவுக் கேகாந்தர் அல்லர் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகுதொழு நோயராய்,
  ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை பாய்வள நாட்டிற்கு அன்பர் ஆகில்,
  அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே,
    வந்தே மாதரம்!

 – இப்படி, பாரதி, காந்தி, திலகர்,  ரவீந்திரநாத் தாகூர் போன்ற பலருக்கும் உணர்ச்சியூட்டி, அவர்களது கருத்தியல்களைச் செம்மைப்படுத்திய சுவாமி விவேகானந்தர் தனது இறுதி நாள்களில் குறிப்பிட்டார்:

“இனி பயன்படாத ஒரு ஆடையைப் போல், இந்த உடலை விட்டு வெளியேறுவது தான் நல்லது என்று எண்ணுகிறேன். ஆனால், உழைப்பதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். இந்த உலகம் தன் இறைத்தன்மையை உணர்ந்து கொள்ளும் வரை நான் தொடர்ந்து மனிதகுலத்தை ஊக்குவிப்பேன்”.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!  அதனாலன்றோ, கோடானுகோடி மக்கள் உலகம் முழுவதும் அவரை நினைந்து ஓராண்டு காலம் தவம் இருந்தோம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s