ஸ்வதந்திர கர்ஜனை- 1(1)

-தஞ்சை வெ.கோபாலன்

அமரர் திரு. தஞ்சை.வெ.கோபாலன், திருவையாறில்  ‘பாரதி இலக்கியப் பயிலரங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கி, மகாகவி பாரதி குறித்து இளம் தலைமுறைக்கு அஞ்சல் வழி பாடம் நடத்தியவர்; தேசபக்தி மிளிரும் எழுத்தாளர். ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரியான இவர்  நமது தேசமே தெய்வம் இணையதளத்தில் எழுதிய தொடர் கட்டுரை இங்கு மீள் பிரசுரம் ஆகிறது. 

இத்தொடர் நமது நாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தங்கள் இன்னுயிரை ஆஹூதியாக்கிய மாவீரர்களின் சரித்திரத்தை சுருக்கமாக விவரிக்கிறது. இத்தொடர் வாரம் இரு முறை நமது தளத்தில் வெளியாகும்.

பாகம்- 1: பாரத தேசத்தின் எழுச்சி வரலாறு

பகுதி -1: முதல் சுதந்திரப் போர்

 “பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!” என்று குரல் கொடுத்தான் பாரதி. இந்த பாரத தேசத்தின் பழம்பெருமையைச் சொல்லப் புகுந்தால் வரலாற்றின் ஏடுகள் போதாது. எனினும் அந்நியர் படையெடுப்புகள், பல நூற்றாண்டு காலம் அந்நியர் ஆட்சி என்றிருந்த பாரத தேசத்தின் நிலைமை என்ன ஆயிற்று?

தில்லியின் சக்கரவர்த்தியாகக் கொடிகட்டிப் பறந்த ஒளரங்கசீப் காலமான பிறகு ஒரு நூறாண்டு காலம் இந்த தேசம் துண்டு துண்டாகப் பல சிற்றரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அப்படி தனித்தனியாக ஆண்ட சமஸ்தானாதிபதிகளும் தங்களுக்குள் ஒற்றுமையாகவாவது இருந்தார்களா என்றால், இல்லை! அவர்களுக்குள் அடிதடி, சண்டை, போர். இதில் யார் யாரோடு சேர்ந்துகொண்டு யாரைத் தாக்குவார்கள் என்பதைக்கூட கணிக்க முடியாதபடிக்கு இந்த குறுநில மன்னர்களின் ஆட்சிகள் இருந்து வந்தன.

மன்னர்கள் வசதியாக, ஆள், படை, ரத, கஜ, துரக பதாதிகள் என்று வானில் பறந்தார்கள். செல்வம் கொட்டிக் கிடக்கத் தங்கள் பிள்ளைகளை துன்பம் தெரியாமல் வளர்த்தார்கள். விலைமதிப்பற்ற தங்க, வைர ஆபரணங்கள் கொட்டிக் கிடந்தன. ஆனால்? பாவம், அந்தந்த நாட்டு மக்கள் வறுமை, பிணி, ஆளுவோர் கொடுமைகள் என்று திக்குத் தெரியாத காட்டில் வாழவும் முடியாமல், இறக்கவும் முடியாமல் திண்டாடித் தெருவில் நின்றார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தான் வாணிபம் செய்வதற்கென்று புதிய இடங்களைத் தேடி ஐரோப்பிய நாடுகள் பலவற்றினின்றும் கும்பல் கும்பலாக பாரத புண்ணிய பூமியில் வந்திறங்கினர். வந்தவர்கள் இந்த நாட்டு மன்னர்கள் மனம் மகிழும்படியான வாசனைத் திரவியங்களையும் வேறுபல பொருட்களையும் இந்திய குறுநில மன்னர்களின் தலையில் கட்டிவிட்டு, இங்கிருந்த விலைமதிப்பற்ற செல்வங்களைச் சுரண்டிக் கொண்டு சென்றனர். எத்தனை அள்ளிச் சென்றாலும் மேலும் மேலும் அள்ளித் தரும் அட்சய பாத்திரமாகவும், கேட்டவை கிடைக்கும் கற்பக விருட்சமாகவும் பாரத தேசம் அன்னியர்களுக்கு காட்சியளித்து வந்தது.

வாணிபம் செய்ய வந்திறங்கிய அன்னிய சக்திகள் இங்கு மெல்ல மெல்ல தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். பொருட்களை விற்க வந்தவர்கள் இங்கு மெல்ல நாடு பிடிக்கத் தொடங்கினர். மேலைநாட்டின் வர்த்தக நிறுவனங்கள் அன்னிய மண்ணில் வந்திறங்கி இங்கிருந்த மக்களை அடிமைப்படுத்தியதோடு இந்த மண்ணையும் சிறுகச் சிறுக வஞ்சனையால் தம்வசப்படுத்திக் கொள்ளும் அக்கிரமமும் அரங்கேறிக் கொண்டிருந்தது.

அந்த அரங்கேற்றத்தின் நாயகன் டல்ஹவுசி எனும் வெள்ளைக்காரன் . வாரிசு இல்லாமல் மன்னன் மாண்டால், அந்த நாட்டை கம்பெனி எடுத்துக் கொள்ளுமாம்; என்னவொரு விசித்திரமான சட்டம். எந்தத் தவற்றைச் செய்தாலும் அதை சட்டத்திற்கு உட்பட்டுத் தான் செய்வோம் என்று வாய்கிழியப் பேசிய இந்த வர்த்தகர்கள், தங்கள் தவறுகளை நியாயப்படுத்தும் விதத்தில் சட்டங்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

‘தட்டிக் கேட்க யாரும் இல்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்’ என்றொரு சொல்வழக்கு இந்த நாட்டில் உண்டு. இங்கு யாரும் எதிர்க்க ஆள் இல்லாமையால் ஆங்கில வர்த்தக கம்பெனி ராஜ்யங்களைப் பிடுங்கிக்கொள்ள நல்லதொரு காரணத்தைக் கண்டுபிடித்தது. அதுதான் வாரிசு இல்லாத ராஜ்யங்களை கபளீகரம் செய்துவிடுவது.

இதில் பலியான ராஜ்யங்கள் தான் எத்தனையெத்தனை? அயோத்தியின் சுல்தானுக்குப் பிறகு வாரிசு இல்லையென்று அயோத்தியை அபகரித்தது. பேஷ்வா பாலாஜி பாஜி ராவ் 2 நானா சாஹேப் என்பவரை தத்து எடுத்துக் கொண்டது செல்லாது என்று நாட்டை அபகரித்தது. ஜான்சி மன்னனுக்குப் பிள்ளை இல்லை என்பதால் லக்ஷ்மி பாயை வஞ்சகமாய்க் கொன்று நாட்டை எடுத்துக் கொண்டது, இப்படி தொடர்ச்சியாக எத்தனையெத்தனை வஞ்சக நாடகங்கள்?

கம்பெனியின் படைகளில் வெள்ளைக்காரர்கள் பிரிவுக்கு ராஜ உபசாரம், ராஜ மரியாதை. அதே இந்தியச் சிப்பாய்களுக்கு ஆடு மாடுகளுக்குத் தரும் மரியாதைகூட கிடையாது. ஊதியத்தில் வேற்றுமை, சீருடையில் ஏற்றத் தாழ்வு, நடத்தப்படும் விதத்தில் வித்தியாசம், இப்படி இரண்டு விதமான படைகளை வைத்துக்கொண்டு, பிழைக்க வந்த நாட்டில் வசிப்பவர்களை மிருகங்களைப் போன்று வைத்துவிட்டு, தாங்கள் ராஜ போகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகள் போன்ற இடங்களில் இவர்கள் நடந்துகொண்ட விதத்தைப் போலவே, நாகரிகத்திலும், கல்வி, உழைப்பு, ஞானம், பாரம்பரிய பண்பாட்டுப் பெருமை இத்தனையும் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணிலும் நம்மை அடிமைகள் போல நடத்தும் பண்பு, அவர்களது ஆணவத்தின் வெளிப்பாடு.

இவர்கள் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து நமது கல்வி முறை ஒழிக்கப்பட்டது. நமது பாரம்பரிய விழாக்களின் முக்கியத்துவம் மங்கத் தொடங்கியது. நமது பண்பாடு அழிக்கப்பட்டு மேற்கத்திய நாகரிகமே உயர்ந்தது என எண்ணும்படியான தோற்றம் உருவாக்கப்பட்டது. ‘மிலேச்சர்கள்’  என அழைக்கப்பட்டவர்களை துரையென சலாம் போட வைத்துவிட்டது. மொத்தத்தில் இந்தியத் தோற்றம் மறைந்து அடிமைத் தோற்றம் பெறத் தொடங்கினோம்.

மெக்காலே எனும் ஆங்கிலேயன் கொணர்ந்த அடிமைக் கல்வி முறையைப் பயின்ற சிலர் ஆங்கிலேயர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யச் சென்றுவிட்ட போதிலும், கற்றவரில் பலர் தங்கள் நிலைமையை நன்கு உணர்ந்து தேசாவேசம் கொள்ளத் தொடங்கினர். அவமானப்படுத்தப்பட்ட சிப்பாய்கள் தங்கள் அவமானத்தைத் துடைத்தெறிய காலம் வருமென்று காத்திருந்தனர். அந்த சூழ்நிலையில்தான் 1857-இல் வெடித்த ‘சிப்பாய் கலகம்’ என ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் வர்ணிக்கப்பட்ட ‘முதல் சுதந்திரப் போர்’ ஆகாவென்று வெடித்து எழுந்தது.

அந்தப் போரை முதல் துப்பாக்கிக் குண்டை வெடித்து தொடங்கி வைத்த பெருமை மங்கள் பாண்டே எனும் பாரக்பூரில் இருந்த கம்பெனி படையின் சிப்பாய்க்குக் கிடைத்தது. அன்று அவன் வாங்கிய உயிர்ப்பலிக்கு விலையாக அவன் உயிரும் தூக்குக் கயிற்றில் முடிந்து போயிற்று.

1857 சிப்பாய்க் கலகத்தில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்கள் ஆக்கிலேயப் படையால் பீரங்கிகளில் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி. ரஷ்ய ஓவியர்  வசீலி வெரஷாகின்  வரைந்த ஓவியம் இது.

தேசபக்தன் மங்கள் பாண்டே தவிர, குமாரசிம்மன், மெளல்வி அகமதுஷா,  நானா சாஹேப், தாந்தியா தோபே, ராணி லட்சுமி பாய், பேகம் ஹஜரத் மகேள் போன்றவர்களோடு ஆயிரக் கணக்கான பெயர் தெரியாத வீரத்திலகங்கள் களப்பலி கொடுத்து ஒரு மாபெரும் புரட்சியைத் தோற்றுவித்தனர்.

ஏன் இந்தப் புரட்சி? யார் தூண்டிவிட்டது இந்த யுத்தத்தை? உறங்கிக் கிடந்த மக்களின் அறியாமையால், கொழுந்துவிட்டு எரிய வேண்டிய புரட்சித் தீ தொடங்கியவுடனேயே தண்ணீர்விட்டு அவிக்கக் காரணமாய் இருந்த அடக்குமுறைகள் எவை? இவற்றையெல்லாம் விவரமாகப் படிக்க வேண்டுமென்றால், வீரர் சாவர்க்கர் எழுதிய  ‘எரிமலை (அ) முதல் சுதந்திரப் போர்’ நூலை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்.

இந்தப் புரட்சி தோன்றக் காரணங்கள் எவை? கேட்கத் தோன்றுகிறதல்லவா? இந்தப் புரட்சியைத் தோற்றுவித்தார்களா? தானாகப் புகைந்து, கனிந்து, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதா? ஆத்மார்த்தமாக தங்கள் உயிரை ஆஹூதியாகக் கொடுத்த சிப்பாய்களின் நெஞ்சில் தேசபக்தித் தீ எரியக் காரணம் என்ன? இவற்றை விரிவாகக் காண்பதற்கு முன்பாக இந்தப் போர் நடக்கக் காரணங்களின் பட்டியலைப் பார்க்கலாம்:

1. தன்மானமுள்ள, பாரம்பரியப் பெருமையும், கல்வியும், பண்பாடும் உடைய இந்திய சிப்பாய்கள், ஆங்கிலேயர்களின் கொள்ளையையும், தங்களை இழிவுபடுத்தும் செயலையும் கண்டு பொங்கி இயல்பாக எழுந்த புரட்சி இது.

2. இந்தியாவில் ஏற்கனவே இருந்து வந்த ஹிந்து, இஸ்லாமிய மதங்களை அழித்துவிட்டுத் தங்கள் கிறிஸ்துவ மதத்தை கட்டாயமாகத் திணிப்பதற்காகச் செய்த சூழ்ச்சிகளையும், அதிகார பலம் கொண்டு நுழைத்துவிட முயன்றதையும் எதிர்த்துக் கனன்று எழுந்த புரட்சித் தீ இது.

3. அவர்கள் செய்ய வந்ததோ வியாபாரம். ஆனால் அவர்கள் இங்கு செய்ததோ மோசடி வேலை, சூழ்ச்சி, நாடு பிடித்தல், சுதேசி மக்களைக் கேவலமாக நடத்தியது;  இதனை எதிர்த்துப் பொங்கிய கோபத்தீ இது.

4. நாகரிகத்தின் உச்சியில் இந்தியர்கள் நடைபயின்ற காலத்தில், காட்டிலும், மலையிலும் நாடோடிகளாய்த் திரிந்து வந்த கூட்டத்தார், இந்த புண்ணிய பூமியில் வந்து தங்கிக் கொண்டு, இங்கிருந்த சுதேசி மக்களுக்குக் குறிப்பாக காசி, ரோகில்கண்ட் ஆகிய இடங்களில் வாரன்ஹேஸ்டிங்க்ஸ் எனும் ஆங்கில அதிகாரியும், மைசூர், புனே போன்ற இடங்களில் வெல்லெஸ்லி என்பானும் செய்த அக்கிரமங்கள் இப்படிப்பட்ட புரட்சிக்கு வித்திட்டன.

5. வாரிசு இல்லாமல் போன சின்னஞ்சிறிய ராஜ்யங்களை அரச குடும்பத்தாரிடமிருந்து பிடுங்கித் தங்கள் வசம் ஆக்கிக் கொண்ட அராஜகச் செயல். உலகத்தில் எங்குமே இல்லாத வகையில் ஒரு பகல்கொள்ளை சட்டம் இது.

6. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றக் காரணமாக இருந்த 1757-ஆம் ஆண்டு பிளாசி யுத்தத்தின்போது, ஆங்கிலேய கம்பெனி படைகள் கடைபிடித்த நேர்மைக்குப் புறம்பான காரியங்கள்.

7. அதே பிளாசி யுத்தத்தில் ஆங்கில கம்பெனியாருக்காகப் போராடிய இந்திய சிப்பாய்கள் காயமடைந்து போரிடும் சக்தி இல்லாமல் இருந்த நேரத்தில், அவர்களை மருத்துவம் செய்துகொள்ள எடுத்துச் செல்லாமல், ஆர்தர் வெல்லெஸ்லி எனும் காட்டுமிராண்டி வெள்ளை அதிகாரியின் ஆணையின்படி காயமடைந்த இந்திய சிப்பாய்களை பீரங்கிகளின் வாயில் வைத்து சுட்ட அரக்கத்தனம்.

8. ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்களுக்குத் தான் இந்த நிலை என்றில்லை. அவர்களை ஆதரித்துக்கொண்டு நல்ல பிள்ளையாக இருந்த நாகபுரி ராஜா இறந்து போனதும், அந்த நாட்டை அபகரித்துக் கொண்டதோடு, அரண்மனைப் பெண்மணிகளை வெளியே இழுத்து வந்து அவமானப்படுத்திய செயலும், அவர்களுடைய அணிகலன்களை அரண்மனை வாசலில் நின்று சிறுதொகைக்கு ஏலம்விட்டு அவமானம் செய்ததும்.

9. சிப்பாய்களுக்குக் கொடுத்த என்ஃபீல்டு துப்பாக்கித் தோட்டாக்களில், பசுவின் கொழுப்பையும், பன்றியின் கொழுப்பையும் தடவி, அந்த தோட்டாக்களை உபயோகிக்க அதன் மீதிருந்த மூடியை பற்களால் கடித்து இழுக்கச் செய்து, பசுவை புனிதமாகக் கருதும் ஹிந்து சிப்பாய்களையும், பன்றியை இழிவாகக் கருதும் இஸ்லாமிய சிப்பாய்களின் மத உணர்வுகளையும் அவமதித்து ஆத்திரத்துக்கு ஆளாக்கியது அடிப்படைக் காரணம்.

10. மீரட் நகரில் சிப்பாய்கள் பசு, பன்றி கொழுப்புகள் தடவிய தோட்டாக்களை வாங்க மறுத்த காரணத்துக்காக அவர்களைச் சிறைப்படுத்தி, ராணுவ நீதிமன்றத்தில் 8 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுத்த அக்கிரமத்தை எதிர்த்துப் பொங்கி எழுந்த புரட்சி இது.

11. மீரட்டில் முன்கூட்டியே வெடித்த புரட்சியைத் தொடர்ந்து, தில்லி, அயோத்தி, கான்பூர், லக்னோ, பாட்னா, காசி, அலகாபாத், ஜான்சி முதலான இடங்களிலும் இந்திய சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.

இப்படி நாடே அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தும்,  சீக்கியர்களும், பஞ்சாபில் இருந்த சீக்கிய மன்னர்களும் இந்தியர்களுக்கு உதவவில்லை. ராஜஸ்தானத்து ரஜபுத்திர மன்னர்கள் நடுநிலை வகித்தனர். சிலர் ஆங்கிலேயர் பக்கம் உதவி செய்து போரிட்டனர். உத்தரப்பிரதேசம், அயோத்தி, ரோகில்கண்ட், பிகார், வங்கம், பந்தேல்கண்ட், மத்திய இந்தியா, தில்லி ஆகிய இடங்கள் மட்டுமே புரட்சித் தீயில் எரிந்தது.

வட இந்தியாவில் ஆட்சி புரிந்து வந்த மராத்திய மன்னர்கள் முழுமூச்சில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டனர். இதில் கொடுமை என்னவென்றால், 1808-லேயே வேலூர்க் கோட்டையில் எழுச்சி பெற்ற சிப்பாய் புரட்சி இந்த 1857-இன் போது எந்த விளைவுமே இல்லாமல் போனது. தெற்கில் மைசூரும், ஐதராபாத் நிஜாமும் ஆங்கிலேயர் பக்கமிருந்து உதவி செய்தனர்.

வடக்கில் இருந்த கூர்க்கா படை ஆங்கில ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகப் போர் புரிந்தது. புரட்சி ஓராண்டு காலம் நடந்தும் அது முறியடிக்கப்பட்டது. இந்த புரட்சித் தீயில் தங்களை ஆஹூதியாக்கிக் கொண்ட ஒருசில புரட்சியாளர்களைப் பற்றிய விவரங்களை அடுத்தடுத்த கட்டுரையில் காணலாம்.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

One thought on “ஸ்வதந்திர கர்ஜனை- 1(1)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s