-மகாகவி பாரதி

8. சுதேசமித்திரன் 09.09.1916
இன்று காலை தராசுக் கடைக்கு இரண்டு பிள்ளைகள் வந்தார்கள். ஒருவனுக்கு வயது பதினெட்டிருக்கும்: மற்றவனுக்கு இருபது வயதிருக்கலாம்.
“நீங்கள் யார்?” என்று கேட்டேன்.
மூத்தவன் சொல்லுகிறான்:- “நாங்கள் இருவரும் புதுச்சேரிக் கலாசாலையில் வாசிக்கிறோம். தராசுக் கடையின் விஷயங்களைக் கேள்விப்பட்டு, இங்கே சில ஆராய்ச்சிகள் செய்துவிட்டுப் போகலாமென்று வந்தோம்.”
தராசினிடம் விஷயத்தைத் தெரிவித்தேன். தராசு சொல்லிற்று:- மத விஷயமான கேள்விகள் கேட்பதானால் சுருக்கமாகக் கேட்க வேண்டும்.
இதைக் கேட்டவுடன் இரண்டு பிள்ளைகளும் திகைத்து விட்டார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு மூத்தவன் ஒருவாறு மனதைத் திடஞ் செய்து கொண்டு சொல்லுகிறான்:-
நான் சில தினங்களாக ராமாயணம் வாசித்துக் கொண்டு வருகிறேன். அதிலே, விசுவாமித்திரர் என்ற ரிஷி ஆயிர வருஷம் தவம் செய்ததாகவும், அந்த தவத்தில் ஏதோ குற்றம் நேர்ந்து விட்டபடியால் மறுபடி ஆயிர வருஷம் தவம் புரிந்ததாகவும் எழுதப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் மஹா யோகிகளென்றும் ஞானிகளென்றும் சிலரை நமது ஜனங்கள் வழிபடுகிறார்கள். விசுவாமித்திரர் கதையை நான் ஒரு திருஷ்டாந்தமாகக் காட்டினேன். ‘பழைய புராணங்களிலும், இதிகாசங்களிலும் பொய்க் கதைகள் மலிந்து கிடக்கின்றன’ என்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க, ‘ நம்மவர் அவற்றைப் பக்தி சிரத்தையுடன் போற்றத் தகந்த உண்மை நூல்களென்று பாராட்டுதல் பொருந்துமா?’ என்பது என்னுடைய கேள்வி.
தராசு சொல்லுகிறது:- புராணங்கள் முழுதும் சரித்திரமல்ல; ஞான நூல்கள்; யோக சாஸ்திரத்தின் தத்துவங்களைக் கவிதை வழியிலே கற்பனைத் திருஷ்டாந்தங்களுடன் எடுத்துக் கூறுவன. இவையன்றி நீதி சாஸ்திரத்தை விளக்கும்படியான கதைகளும் அந்நூல்களில் மிகுதியாகச் சேர்ந்திருக்கின்றன. சரித்திரப் பகுதிகளும் பல உண்டு. இவ்வாறு பல அம்சங்கள் சேர்ந்து ஆத்ம ஞானத்துக்கு வழிகாட்டி, தர்மநியதிகளை மிகவும் நன்றாகத் தெரிவிப்பதால் அந்த நூல்களை நாம் மதிப்புடன் போற்றி வருதல் தகும்.
பிறகு இளைய பிள்ளை கேட்டான்:- “உடைமை என்பது நம்முடைய ஜன்மாந்திரத்தில் செய்த பாவ புண்ணியத்தின் பயனல்லவா?”
தராசு சொல்லுகிறது:- “இல்லை. ஒருவன் தன் காலத்திலே செய்யும் செய்கைகளும் அவன் முன்னோர் செய்துவிட்டுப் போன செய்கைகளுமே உடைமைக்குக் காரணமாகும். ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் காரணம் தெரிய வேண்டுமானால் அர்த்த சாஸ்திரம் (பொருள் நூல்) பார்க்க வேண்டும். ஜன்மாந்தர விஷயங்களைக் கொண்டு வருதல் வீண் பேச்சு. அதிலே பயனில்லை.”
இளையவன் கேட்கிறான்:- “முன் பிறப்பும் வருபிறப்பும் மனிதனுக்குண்டென்பது மெய்தானா?”
தராசு சொல்லுகிறது:- “அந்த விஷயம் எனக்குத் தெரியாது.”
இளையவன்:- “ஆத்மா உண்டா; இல்லையா?”
தராசு:- “உண்டு.”
இளையவன்:- “அதற்குப் பல ஜன்மங்கள் உண்டா, இல்லையா?”
தராசு:- “உலகத்தினுடைய ஆத்மாதான் உனக்கும் ஆத்மா. உனக்கென்று தனியாத்மா இல்லை. எல்லாப் பொருள்களும் அதனுடைய வடிவங்கள். எல்லாச் செய்கைகளும் அதனுடைய செய்கைகள். அவனன்றி ஓரணுவும் அசையாது.”
இளைய பிள்ளை:- “சரி, அது போகட்டும். இப்போது ஒருவன் செல்வம் சேர்க்க விரும்பினால் முடியுமா?”
தராசு:- “முடியும். இஹலோக சாஸ்திரங்களைக் கற்று, வியாபார விதிகளைத் தெரிந்துகொண்டு, தெளிவுடனும், விடாமுயற்சியுடனும் பாடுபட்டால் முடியும். ‘முயற்சி திருவினை ஆக்கும்’.”
பிள்ளைகள் “இன்னும் பல விஷயங்கள் கேட்க வேண்டும். மற்றொரு முறை வருகிறோம்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
- சுதேசமித்திரன் (09.09.1916)
$$$