-மகாத்மா காந்தி

நான்காம் பாகம்
21. போலக் துணிந்து இறங்கினார்
போனிக்ஸில் நான் குடியேற்றத்தை ஆரம்பித்துவிட்ட போதிலும் அங்கே நான் நிரந்தரமாக வசிக்க முடியாமல் இருந்தது, எப்பொழுதும் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. நாளாவட்டத்தில் வக்கீல் தொழிலிலிருந்து விலகி, இக்குடியேற்றத்தில் வசித்து, என் உடலுழைப்பினால் என் ஜீவனத்திற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு, போனிக்ஸ் பூரணத்துவத்தை அடைய நான் செய்யும் சேவையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆரம்ப எண்ணம். ஆனால், அது நிறைவேறவில்லை. நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், அதே சமயத்தில் முடிவான லட்சியம், சத்தியத்தை நாடுவதாக மாத்திரம் இருந்து விடுமானால், மனிதன் போடும் திட்டம் எவ்வளவு தான் தவறிப் போனாலும், முடிவு தீமையானதாக ஆவதில்லை என்பதுடன், சில சமயங்களில் எதிர்பார்த்ததை விட அதிக நன்மையானதாகவும் முடிந்துவிடுகிறது. போனிக்ஸ் குடியேற்றம் எதிர்பாராத விதமாக மாறுதல் அடைந்ததும், எதிர் பாராமல் நேர்ந்த சில நிகழ்ச்சிகளும், நாங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட மேலாக முடிந்தன என்று சொல்லுவது கஷ்டமேயானாலும், தீமையாக மாத்திரம் முடியவில்லை.
நாங்கள் எல்லோரும், உடல் உழைப்பினாலேயே ஜீவனம் செய்வது சாத்தியமாக வேண்டும் என்பதற்காக, அச்சுக்கூடத்தைச் சுற்றி இருந்த நிலத்தை ஆளுக்கு மூன்று ஏக்கர் வீதம் பிரித்துக் கொண்டோம். இதில் ஒரு பகுதி என் பங்குக்கு விழுந்தது. இந்த ஒவ்வொரு பகுதி நிலத்திலும், எங்கள் விருப்பத்திற்கு மாறாகவே இரும்புத் தகடு போட்டு வீடுகளைக் கட்டினோம். நாங்கள் விரும்பியதெல்லாம், வைக்கோல் வேய்ந்த மண் குடிசைகளைக் கட்டிக்கொள்ளுவதுதான். இல்லாவிட்டால், சாதாரண விவசாயி வசிக்கக் கூடிய வகையில் சிறு செங்கல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவது என்பதே. ஆனால், அது நிறைவேறவில்லை. அப்படிக் கட்டுவதாக இருந்தால் அதிகச் செலவாகும்; அதிக காலமும் பிடிக்கும். நாங்களோ, கூடுமான வரையில் சீக்கிரத்திலேயே குடியேற்றத்தில் நிலைபெற்றுவிட வேண்டும் என்பதில் அதிக ஆவலுடன் இருந்தோம்.
மன்சுக்லால் நாஸரே இன்னும் பத்திரிகை ஆசிரியராக இருந்தார். புதிய திட்டத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘இந்தியன் ஒப்பீனியனு’க்கு டர்பனில் ஒரு கிளைக் காரியாலயம் இருந்தது. அங்கே இருந்து கொண்டே அவர் இப் பத்திரிகைக்கு வேலைசெய்து வந்தார். அச்சுக் கோர்ப்போருக்குச் சம்பளம் கொடுத்து வந்தோம். ஆனால், குடியேற்றத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும், அச்சுக் கோர்க்கக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்பது என் அபிப்பிராயம். அச்சுக்கூடத்தில் இந்த வேலை அலுப்புத் தட்டும் வேலையானாலும் சுலபமான வேலையே. ஆகையால், இதற்கு முன்னால் இந்த வேலையைக் கற்றுக் கொள்ளாதிருந்தவர்கள், இப்பொழுது கற்றுக்கொண்டோம். ஆனால், இந்த வேலையில் நான் கடைசி வரையில் திறமை இல்லாதவனாகவே இருந்தேன். மகன்லால் காந்தி இதில் எங்களெல்லோரையும் விட முதன்மையாய் இருந்தார். இவர், இதற்கு முன்னால் அச்சுக்கூடத்தில் வேலையே செய்ததில்லையென்றாலும், அச்சுக் கோர்ப்பதில் அதிக சமர்த்தராகி விட்டார். அதிக வேகமாக அச்சுக் கோர்ப்பவராகி விட்டதோடு மாத்திரமல்லாமல், அச்சுக் கூடத்தின் எல்லா வேலைகளையுமே வெகுவிரைவில் கற்றுக் கொண்டுவிட்டார். இது எனக்கு அதிக ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அவருடைய ஆற்றல் அவருக்கே தெரியாது என்பதுதான் எப்பொழுதும் என் அபிப்பிராயம்.
கட்டிடங்களைக் கட்டி முடித்து நாங்கள் அங்கே நிலை பெற ஆரம்பித்தவுடனேயே, புதிதாக அமைந்திருந்த கூட்டை விட்டுவிட்டு நான் ஜோகன்னஸ்பர்க்கிற்குப் போக வேண்டியதாயிற்று. அங்கே இருந்த வேலைகளை நான் கவனிக்காமலேயே அதிக காலத்திற்கு விட்டுவைத்துவிட என்னால் ஆகவில்லை.
ஜோகன்னஸ்பர்க்கிற்குத் திரும்பியதும், நான் செய்திருக்கும் முக்கியமான மாறுதல்களைக் குறித்து ஸ்ரீ போலக்கிடம் கூறினேன். அவர் இரவல் கொடுத்த புத்தகம் இவ்வளவு பலனுள்ளதாக ஆயிற்று என்பதை அறிந்ததும் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. “இப் புதிய முறையில் நானும் பங்கெடுத்துக் கொள்ளச் சாத்தியப்படாதா?” என்று கேட்டார். “நிச்சயமாகச் சாத்தியமே. நீங்கள் விரும்பினால் நீங்களும் குடியேற்றத்தில் சேர்ந்து கொள்ளலாம்” என்றேன். “என்னைச் சேர்த்துக் கொள்ளுவதாக இருந்தால் நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
அவருடைய உறுதி என்னைக் கவர்ந்துவிட்டது. ‘கிரிடிக்’ பத்திரிகையில் தாம் செய்து வந்த வேலையிலிருந்து ஒரு மாதத்தில் விலகிக்கொள்ள அனுமதிக்குமாறு பிரதம ஆசிரியருக்கு எழுதினார். பின்னர் அதிலிருந்து விலகிப் போனிக்ஸுக்கு வந்து சேர்ந்தார். தமது இனிய சுபாவத்தினாலும், எல்லோருடனும் நன்றாகப் பழகும் குணத்தினாலும், வெகு சீக்கிரத்தில் அவர் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்துவிட்டார். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் ஆகிவிட்டார். எளிமை அவருடைய சுபாவத்திலேயே இருந்தது. போனிக்ஸ் வாழ்க்கை அவருக்கு விசித்திரமானதாகவோ, கஷ்டமானதாகவோ தோன்றவில்லை. நீரிலிருப்பது மீனுக்கு எவ்விதம் இயற்கையோ அதேபோல் இவ்வாழ்க்கை அவருக்கு ஒத்ததாக இருந்தது. ஆனால், அவரை அங்கேயே அதிக காலம் நான் வைத்திருப்பதற்கில்லை. இங்கிலாந்துக்குப் போய்த் தமது சட்டப் படிப்பை முடிக்க ஸ்ரீ ரிச் விரும்பினார். எனவே, என் அலுவலகத்தின் வேலை பளுவை நான் ஒருவனே சமாளித்து விடுவதென்பது அசாத்தியம். ஆகவே, என் அலுவலகத்தில் சேர்ந்து அட்டர்னியாகப் பயிற்சி பெறுமாறு போலக்குக்கு யோசனை கூறினேன். முடிவில் நாங்கள் இருவருமே அத் தொழிலிலிருந்து விலகி போனிக்ஸில் நிலைத்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அது நிறைவேறாமலேயே போய்விட்டது. நம்பும் சுபாவமுள்ளவர், போலக் ஒரு நண்பரிடம் நம்பிக்கை வைத்து விடுவாரானால், அவரோடு விவாதித்துக் கொண்டிருப்பதைவிட ஒத்துப் போகவே அவர் முயல்வார். போனிக்ஸிலிருந்து எனக்கு எழுதினார். அங்கே இருக்கும் வாழ்க்கை தமக்கு இன்பமாக இருக்கிறதென்றாலும், தாம் சந்தோஷமாகவே இருப்பினும், குடியேற்றத்தை அபிவிருத்தி செய்யலாம் என்று நம்பினாலும், இதை விட்டுவிட்டுக் காரியாலயத்தில் சேர்ந்து அட்டர்னிக்குப் பயிற்சி பெறுவதனால் நாங்கள் எங்கள் லட்சியத்தை வெகு சீக்கிரத்தில் அடைந்து விடமுடியும் என்று நான் நினைத்ததால் அப்படியே செய்யத் தாம் தயார் என்று எழுதினார். இக்கடிதத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். போலக், போனிக்ஸிலிருந்து கிளம்பி ஜோகன்னஸ்பர்க்கிற்கு வந்து பயிற்சி பெறத் தஸ்தாவேஜில் கையெழுத்தும் இட்டார்.
அதே சமயத்தில் ஸ்காட்லாந்துக்காரரான ஒரு பிரம்மஞான சங்கத்தினரையும் போலக்கைப் பின்பற்றும்படி அழைத்தேன். உள்ளூர்ச் சட்டப் பரீட்சைக்குப் போவதற்காக அவர் என்னிடம் முன்பு பயிற்சி பெற்று வந்தார். இப்பொழுது என் அழைப்பை ஏற்றுக்கொண்டு வக்கீல் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். ஸ்ரீ மெக்கின் டயர் என்பது அவர் பெயர்.
இவ்வாறு, போனிக்ஸில் லட்சியங்களைச் சீக்கிரத்தில் அடைந்துவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் பேரில், நான் வேறு ஒரு திக்கில் மேலும் மேலும் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. கடவுள் மாத்திரம் வேறுவிதமாக எனக்கு அருள் செய்யாதிருந்தால், எளிய வாழ்க்கையின் பெயரால் விரித்திருந்த வலையில் நான் சிக்கிக் கொண்டிருந்திருப்பேன்.
யாருமே எண்ணியோ, எதிர்பார்த்தோ இராத வகையில், நானும் என்னுடைய லட்சியங்களும் எவ்வாறு காப்பாற்றப் பட்டன என்பதை இன்னும் சில அத்தியாயங்களுக்குப் பிறகு நான் விவரிப்பேன்.
$$$
22. கடவுள் யாரைக் காக்கிறார்?
வருங்காலத்தில் இந்தியாவுக்குத் திரும்புவது என்ற நம்பிக்கையை எல்லாம் இப்பொழுது அடியோடு கைவிட்டுவிட்டேன். ஓர் ஆண்டில் திரும்பி வந்துவிடுவேன் என்று என் மனைவிக்கு வாக்களித்திருந்தேன். நான் திரும்புவதற்கான ஏது எதுவுமில்லாமலேயே அந்த ஓராண்டும் முடிந்துவிட்டது. ஆகையால், அவளையும் குழந்தைகளையும் வரவழைத்துக் கொள்ளுவது என்று தீர்மானித்தேன்.
அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்துகொண்டிருந்த கப்பலில் என் மூன்றாவது மகன் ராமதாஸ், கப்பல் காப்டனுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் விழுந்து கையை முறித்துக் கொண்டான். காப்டன் அவனை நன்றாகக் கவனித்துக் கொண்டதோடு கப்பல் டாக்டர் அவனுக்குச் சிகிச்சை செய்யும்படியும் ஏற்பாடு செய்தார். கட்டுப்போட்ட கையோடு ராமதாஸ் கப்பலிலிருந்து இறங்கினான். வீட்டுக்குப் போனதும் தக்க டாக்டர் ஒருவரைக் கொண்டு அவன் காயத்திற்குக் கட்டுக்கட்ட வேண்டும் என்று கப்பல் டாக்டர் ஆலோசனை கூறினார். மண் சிகிச்சையில் நான் பூரணமாக நம்பிக்கை வைத்திருந்த சமயம் அது. என்னுடைய அரைகுறை வைத்தியத்தை நம்பிய என் கட்சிக்காரர்கள் சிலரையும் மண், நீர் சிகிச்சை செய்து கொள்ளும்படி தூண்டிவந்தேன்.
இந்த நிலைமையில் ராமதாஸ் விஷயத்தில் நான் என்ன செய்வது? அப்பொழுது அவனுக்கு எட்டு வயது. அவனுக்கு நான் கட்டு கட்டிவிடுவதில் சம்மதந்தானா என்று அவனைக் கேட்டேன். அவன் சிரித்துக்கொண்டு சம்மதம் என்றான். தனக்கு நல்லது இன்னது என்பதை அந்த வயதில் அவன் முடிவு செய்து கொள்ளுவது சாத்தியமில்லை. ஆனால், அரை குறையான வைத்தியத்திற்கும் சரியான வைத்திய சிகிச்சைக்கும் உள்ள பேதம் அவனுக்குத் தெரியும். என்னுடைய வீட்டு வைத்தியப் பழக்கத்தை அவன் அறிவான். தன்னை என்னிடம் ஒப்படைத்து விடுவதில் அவனுக்கு நம்பிக்கையும் இருந்தது. பயந்து நடுங்கிக்கொண்டே அவனுக்குப் போட்டிருந்த கட்டை அவிழ்த்தேன். புண்ணை அலம்பினேன். அதன்மீது சுத்தமான மண் பற்றும் போட்டேன். பிறகு கைக்குக் கட்டுப் போட்டேன். புண் முற்றும் ஆறிவிடும் வரையில் ஒரு மாத காலம் இவ்விதம் கட்டுப்போடுவது தினந்தோறும் நடந்து வந்தது. எந்தத் தொந்தரவுமே இல்லை; சாதாரண சிகிச்சையினால் எவ்வளவு காலத்தில் இப் புண் ஆறிவிடும் என்று கப்பல் டாக்டர் கூறியிருந்தாரோ அதைவிட இப்பொழுது அது ஆறுவதற்கு அதிக காலம் ஆகவில்லை.
இதுவும், என்னுடைய மற்ற பரீட்சைகளும், வீட்டு வைத்திய முறையில் எனக்கு இருந்த நம்பிக்கையை அதிகப்படுத்தின. நான் இப்பொழுது அதிகத் தன்னம்பிக்கையுடன் இம்முறைகளை மேற்கொண்டும் கையாளலானேன். மற்றும் பல நோய்களுக்கும் இம்முறையைக் கையாண்டேன். புண்கள், ஜுரங்கள், அஜீரணம், காமாலை ஆகிய நோய்களுக்கெல்லாம் மண், நீர் வைத்தியம் செய்து வந்தேன். அநேகமாகக் குணமாகிக் கொண்டே வந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இதில் எனக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை. இந்தச் சிகிச்சைகளில் அபாயங்களும் உண்டு என்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். ஆகையால், இந்தச் சோதனைகளைக் குறித்து நான் இங்கே கூறியிருப்பது, அவற்றின் வெற்றியை எடுத்துக்காட்டுவதற்காக அன்று. எந்தச் சோதனையும் முழுமையான வெற்றியைக் கண்டது என்று நான் கூறிக் கொள்ளுவதில்லை. வைத்தியர்கள்கூட, தங்கள் சோதனை பூரண வெற்றியை அளித்தது என்று சொல்ல முடியாது. புதிய சோதனைகளைச் செய்ய முற்படுகிறவர், முதலில் அவற்றைத் தம்மிடமே செய்துகொண்டு பரீட்சிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே என் நோக்கம். இதனால், உண்மையைத் துரிதமாகக் கண்டுபிடிப்பது சாத்தியமாகிறது. அத்துடன் யோக்கியமாகப் பரிசோதனை செய்பவரைக் கடவுள் எப்பொழுதும் காப்பாற்றுகிறார்.
இயற்கை வைத்திய சோதனையில் எவ்வளவு ஆபத்துக்கள் உண்டோ, அவ்வளவு ஆபத்துக்கள் ஐரோப்பியர்களுடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொள்ளுவதற்குச் செய்யும் சோதனைகளிலும் இருக்கின்றன. அந்த அபாயங்கள் வேறு வகையானவை என்று மட்டுமே சொல்லலாம். ஆனால், இந்தத் தொடர்புகளை உண்டாக்கிக் கொள்ளுவதற்குச் செய்த முயற்சியில் ஆபத்துக்கள் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை.
என்னுடன் வந்து தங்குமாறு போலக்கை அழைத்தேன். சொந்தச் சகோதரர்கள் போல நாங்கள் வாழ ஆரம்பித்தோம். சீக்கிரத்தில் ஸ்ரீமதி போலக் ஆகவிருந்த பெண்ணுக்கும் அவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே விவாகம் நிச்சயமாகியிருந்தது. ஆனால், அனுகூலமான வேளையை எதிர் பார்த்துத் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மண வாழ்க்கையில் நிலைபெறுவதற்கு முன்னால் கொஞ்சம் பணம் சம்பாதித்து வைத்துக் கொள்ளலாமென்று ஸ்ரீ போலக் விரும்பினார் என்பது என் அபிப்பிராயம். ரஸ்கினின் நூல்களை என்னைவிட அவர் நன்றாக படித்திருந்தார். ஆனால், அவருடைய மேனாட்டுச் சூழ்நிலை, ரஸ்கினின் உபதேசங்களை உடனே அனுபவத்திற்குக் கொண்டு வருவதற்குத் தடையாக இருந்தது. அவரிடம் நான் பின்வருமாறு கூறி வாதாடினேன்: “உங்கள் விஷயத்தில் உங்கள் இருவருக்கும் இத்தகைய ஒற்றுமை ஏற்பட்டிருக்கும்போது, பொருளாதாரக் காரணங்களுக்காக விவாகத்தை ஒத்தி வைத்துக்கொண்டு போவது நியாயமே அல்ல. வறுமை ஒரு தடையாக இருக்குமாயின், ஏழைகள் மணம் செய்து கொள்ளவே முடியாது. மேலும், இப்பொழுது நீங்கள் என்னுடன் தங்கியிருக்கிறீர்கள். வீட்டுச் செலவைப் பற்றிய கவலையும் இல்லை. ஆகையால், எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் மணம் செய்துகொண்டுவிட வேண்டும்.”
முந்திய ஓர் அத்தியாயத்தில் நான் கூறியிருப்பதைப்போல, ஸ்ரீ போலக்குடன் ஒரு விஷயத்தைக் குறித்து நான் இரு முறை விவாதிக்க வேண்டி வந்ததே இல்லை. என் வாதத்திலுள்ள நியாயத்தை அவர் ஒப்புக் கொண்டார். அச்சமயம் இங்கிலாந்தில் இருந்த ஸ்ரீமதி போலக்குக்கு இதைக் குறித்து உடனே கடிதம் எழுதினார். அவரும் இந்த யோசனையைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். சில மாதங்களில் ஜோகன்னஸ்பர்க் வந்து சேர்ந்தார். கல்யாணத்திற்குச் செலவு செய்யும் எண்ணம் இல்லை. விசேட ஆடைகள் அவசியம் என்றும் கருதப்படவில்லை. தமது பந்தத்திற்கு முத்திரையிட இவர்களுக்கு எந்த மதச் சடங்குகளுங்கூட அவசியப்படவில்லை. ஸ்ரீமதி போலக் பிறப்பினால் கிறிஸ்தவர்; போலக், யூதர். நீதியின் தருமமே இவர்கள் இருவருக்கும் பொதுவான மதம்.
இந்த விவாக சம்பந்தமாக நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைக் குறித்துச் சிறிது கூற விரும்புகிறேன். டிரான்ஸ்வாலில் இருக்கும் ஐரோப்பியரின் கல்யாணங்களைப் பதிவு செய்து கொள்ளும் அதிகாரி, கறுப்பு அல்லது மற்ற நிறத்தினரின் விவாகங்களைப் பதிவு செய்யக் கூடாது. இந்தக் கல்யாணத்தில் நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தேன். இதற்கு ஓர் ஐரோப்பியர் எங்களுக்குக் கிடைக்க மாட்டார் என்பதல்ல. ஆனால், அந்த யோசனையைப் போலக் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால், நாங்கள் மூவரும் கல்யாணப் பதிவு அதிகாரியிடம் சென்றோம். நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒரு விவாகத்தில், தம்பதிகள் வெள்ளைக்காரர்கள்தான் என்று அவர் எப்படி நிச்சயமாக நம்பி விடமுடியும்? தம்பதிகள் வெள்ளையர்தானா என்பதை விசாரிப்பதற்காக விவாகப் பதிவை ஒத்தி வைப்பதாக அந்த அதிகாரி கூறினார். மறுநாளோ, ஞாயிற்றுக்கிழமை. அதற்கு அடுத்த நாள் புது வருடப் பிறப்பு நாளாதலால் விடுமுறை நாள். பக்தியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமணத்துக்கு இத்தகைய அற்பமான சாக்குப்போக்குக் கூறி தேதியை ஒத்திவைப்பதென்றால், அதை யாரும் சகித்துக்கொண்டிருக்க முடியாது. பதிவு இலாகாவின் தலைவரான பிரதம மாஜிஸ்டிரேட்டை எனக்குத் தெரியும். தம்பதிகளுடன் அவர் முன்பு சென்றேன். அவர் சிரித்தார். பதிவு அதிகாரிக்கு ஒரு குறிப்பும் கொடுத்தார். அதன் பேரில் முறைப்படி திருமணம் பதிவாயிற்று.
இதுவரையில் எங்களுடன் வசித்து வந்த ஐரோப்பியர்கள், அநேகமாக எனக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்தான். ஆனால் இப்பொழுதோ எங்களுக்கு முற்றும் புதியவரான ஓர் ஆங்கிலப் பெண் எங்கள் குடும்பத்தில் பிரவேசித்தாள். புதிதாக மணமான இத் தம்பதிகளுக்கும் எங்களுக்கும் எப்பொழுதேனும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஸ்ரீமதி போலக்கும் என் மனைவிக்கும் சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது இருந்தது உண்டு. ஆனால், அவை சிறந்த வகையில் ஒழுங்காகவும் ஒற்றுமையாகவும் உள்ள குடும்பங்களில் சாதாரணமாக ஏற்படும் மனஸ்தாபங்களைவிட எந்த விதத்திலும் அதிகமானவை அல்ல. இன்னும் ஒன்றும் நினைவில் இருக்க வேண்டும். முக்கியமாக என் குடும்பம் பற்பல வகையானவர்கள் சேர்ந்த கலப்புக் குடும்பம் என்றே கருத வேண்டும். எல்லா வகையானவர்களும், வெவ்வேறு குணாதிசயங்களுள்ளவர்களும் தாராளமாக இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதைக் குறித்தும் நாம் நினைக்கும்போது ஒரே சாதி, வெவ்வேறு இனம் என்பதற்கிடையே உள்ள பேதமெல்லாம் வெறும் கற்பனையே என்பதைக் கண்டு கொள்ளுகிறோம். நாம் எல்லோரும் ஒரே குடும்பமே.
வெஸ்டின் விவாகத்தையும் இந்த அத்தியாயத்திலேயே நடத்திவிடுகிறேன். என் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தில் பிரம்மச்சரியத்தைப் பற்றிய என் எண்ணம் பூரணமாக வளர்ச்சியடையவில்லை. ஆகவே, என் பிரம்மச்சரிய நண்பர்கள் எல்லோருக்கும் மணமாகிவிட வேண்டும் என்பதில் நான் அதிகச் சிரத்தை கொண்டேன். வெஸ்ட், தமது பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவதற்காக லௌத்துக்கு யாத்திரை சென்றார். சாத்தியமானால் விவாகம் செய்துகொண்டு திரும்புமாறு அவருக்குச் சொல்லியனுப்பினேன். போனிக்ஸ் எங்கள் எல்லோருக்கும் பொது வீடு. நாங்கள் எல்லோரும் விவசாயிகளாகவே ஆகி விட்டதாக எண்ணிக்கொண்டதால், விவாகத்தைப் பற்றியும், அதன் சாதாரணமான விளைவுகளைக் குறித்தும் நாங்கள் பயப்படவில்லை. வெஸ்ட் ஸ்ரீமதி வெஸ்ட்டுடன் திரும்பி வந்தார். அவர், லீஸ்டரைச் சேர்ந்த அழகிய இளம்பெண். லீஸ்டர் தொழிற் சாலையில் செருப்புத் தயாரிக்கும் வேலை செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அத் தொழிற்சாலையில் வேலை செய்து ஸ்ரீமதி வெஸ்ட்டுக்கும் கொஞ்சம் அனுபவம் உண்டு. ‘அழகிய பெண்’ என்று நான் அவரைக் கூறியது, அவருடைய குணசீலத்தின் அழகு என்னை உடனே கவர்ந்திருந்ததனால்தான். உள்ளத்தின் தூய்மையிலேயே உண்மையான அழகு இருக்கிறது. ஸ்ரீ வெஸ்டுடன் அவருடைய மாமியாரும் வந்தார். அவ்வயோதிக மாது இன்றும் உயிருடன் இருக்கிறார். தமது உழைப்பு, உற்சாகம், சந்தோஷமான சுபாவம் ஆகியவைகளினால் அவர், நாங்கள் எல்லோரும் வெட்கப்படும்படி செய்துவிட்டார். விவாகம் செய்து கொள்ளுமாறு இந்த ஐரோப்பிய நண்பர்களை நான் தூண்டியதைப் போன்றே, இந்தியாவிலிருக்கும் தங்கள் குடும்பங்களைத் தருவித்துக் கொள்ளுமாறு இந்திய நண்பர்களையும் உற்சாகப்படுத்தினேன். இவ்விதம் போனிக்ஸ் ஒரு சிறு கிராமமாக வளர்ந்தது. ஆறு குடும்பங்கள் அங்கே வந்து குடியேறி வளர ஆரம்பித்தன.
$$$
23. குடும்பக் காட்சி
வீட்டுச் செலவு அதிகமாக இருந்தபோதிலும் எளிய வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனப்போக்கு டர்பனிலேயே ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை முன்பே கவனித்து இருக்கிறோம். ஆனால், ரஸ்கினின் உபதேசங்களை அனுசரித்து ஜோகன்னஸ்பர்க் வீடே கடுமையான மாறுதலை அடைந்தது.
ஒரு பாரிஸ்டரின் வீட்டில் எவ்வளவு எளிமையைப் புகுத்துவது சாத்தியமோ அவ்வளவையும் செய்தேன். ஓரளவுக்கு மேஜை நாற்காலிகள் இல்லாமல் இருக்க முடியாது. புறத்தில் ஏற்பட்ட மாறுதலைவிட அகத்தில் ஏற்பட்ட மாறுதலே அதிகம். உடலுழைப்பு வேலைகளையெல்லாம் நாமே செய்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வளர்ந்தது. ஆகையால், என் குழந்தைகளையும் கூட இவ்விதமான கட்டுத் திட்டங்களின் கீழ் வளர்க்க ஆரம்பித்தேன்.
கடையில் ரொட்டி வாங்குவதை நிறுத்தினோம். கூனேயின் முறைப்படி தவிடு போக்காத கோதுமையைக் கொண்டு வீட்டிலேயே ரொட்டி தயாரிக்க ஆரம்பித்தோம். இதற்குக் கடையில் விற்கும் மில் மாவு பயனில்லை. கையினாலேயே அரைத்த மாவை உபயோகிப்பது அதிக எளிமை ஆவதோடு உடம்புக்கும் நல்லதாகவும் சிக்கனமாகவும் இருக்கும் என்று எண்ணினோம். எனவே கையினால் மாவு அரைக்கும் இயந்திரம் ஒன்றை ஏழு பவுன் கொடுத்து வாங்கினேன். அதன் இரும்புச் சக்கரத்தை ஒருவரே சுற்றுவது கஷ்டம். இரண்டு பேர் சுலபத்தில் சுற்றலாம். வழக்கமாக போலக்கும் நானும் குழந்தைகளும் அந்த இயந்திரத்தில் மாவு அரைப்போம். நாங்கள் மாவு அரைக்கும் நேரந்தான் சாதாரணமாக என் மனைவி அடுப்பங்கரை வேலையைப் பார்க்கப் போகும் நேரம். என்றாலும், மாவு அரைப்பதில் அவ்வப்போது அவளும் எங்களுக்கு உதவி செய்ய வருவாள். ஸ்ரீமதி போலக் வந்து சேர்ந்த பிறகு அவரும் எங்களுடன் சேர்ந்துகொள்ளுவார். மாவு அரைப்பது குழந்தைகளுக்கு நன்மை தரும் தேகப் பயிற்சியாக இருந்தது. இந்த வேலையையோ, வேறு எந்த வேலையையோ செய்ய வேண்டும் என்று குழந்தைகள் கட்டாயப்படுத்தப் படுவதில்லை. தாங்களே வந்து, இதில் எங்களுக்கு உதவி செய்வது குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு. களைத்துப் போனால் அவர்கள் போய்விடலாம். குழந்தைகள் – பின்னால் உங்களுக்கு நான் அறிமுகம் செய்துவைக்கப் போகிறவர்கள் உள்பட – எனக்கு உதவி செய்ய வராமல் இருந்ததே இல்லை. இவ் வேலையில் பின்தங்கியவர்களும் சிலர் உண்டு. ஆனால், அநேகர் உற்சாகமாகவே வேலை செய்தனர். அந்த நாளில் இளைஞர்கள், வேலை செய்யத் தயங்கியதாகவோ, களைப்பாயிருப்பதாகச் சொன்னதாகவோ எனக்கு நினைவு இல்லை.
வீட்டு வேலையைக் கவனித்துக் கொள்ளுவதற்காக ஒரு வேலைக்காரரை நியமித்திருந்தோம். குடும்பத்தில் ஒருவராக அவரும் எங்களுடன் வசித்தார். அவருடைய வேலைகளில் குழந்தைகளும் அவருக்கு உதவியாக இருப்பார்கள். முனிசிபல் தோட்டி மலத்தை அப்புறப்படுத்தி விடுவார். ஆனால், கக்கூசுகளை அலம்பும் வேலையை வேலைக்காரர் செய்யும்படி விடாமல், அவர் செய்வதை எதிர்பார்த்துக் கொண்டிராமல் நாங்களே செய்து வந்தோம். குழந்தைகளுக்கு இது நல்ல பயிற்சியாயிற்று. இதன் பலனாக, என் புதல்வர்கள் எல்லோருக்கும் தோட்டி வேலையில் அருவருப்பு ஏற்படாமல் இருந்தது. சுகாதார விதிகள் சம்பந்தமாகவும் நல்ல பயிற்சி பெற்றார்கள். ஜோகன்னஸ்பர்க் வீட்டில் யாருக்கும் நோய் என்பதே இல்லை. யாருக்காவது நோய் வந்தால், குழந்தைகள் மனம் உவந்து பணிவிடை செய்வார்கள். குழந்தைகளின் புத்தகப் படிப்பு விஷயத்தில் நான் அசிரத்தையாக இருந்தேன் என்றும் சொல்ல மாட்டேன். என்றாலும், அதைத் தியாகம் செய்துவிட நிச்சயமாக நான் தயங்கவில்லை. ஆகையால், என் புதல்வர்கள் என் மீது குறை சொல்லுவதற்குக் கொஞ்சம் காரணமும் இருக்கிறது. சில சமயங்களில் இதை அவர்கள் தெரிவித்தும் இருக்கிறார்கள். இதில் ஓரளவுக்கு என் குற்றத்தையும் நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும். அவர்களுக்கு இலக்கியக் கல்வி அளிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. நானே அதைச் சொல்லிக் கொடுக்கவும் முயன்றேன். ஆனால், ஒவ்வொரு சமயமும் இதற்கு ஏதாவது ஓர் இடையூறு வந்துகொண்டே இருந்தது. வீட்டில் அவர்களுக்குப் போதிக்க நான் வேறு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. என்றாலும், தினமும் என் அலுவலகத்திற்குப் போகும் போதும், வீடு திரும்பும்போதும், அவர்கள் என்னுடன் நடந்துவரும்படி செய்துவந்தேன். இப்படி நடக்கும் தூரம் மொத்தம் ஐந்து மைல்கள். இது எனக்கும் அவர்களுக்கும் நல்ல தேகாப்பியாசமாயிற்று. இவ்விதம் நடந்து போகும்போது, வேறு யாரும் என் கவனத்தைக் கவராது போனால், பேசிக்கொண்டே போவதன் மூலம் அவர்களுக்குக் கல்வி போதிக்க முயல்வேன். இந்தியாவில் தங்கியிருந்த மூத்த மகன் ஹரிலாலைத் தவிர மற்ற என் புதல்வர்கள் எல்லோரும் ஜோகன்னஸ்பர்க்கில் இந்த வகையில் வளர்ந்தவர்கள்தான். தினமும் ஒரு மணி நேரம் ஒழுங்காக அவர்களுடைய இலக்கியப் படிப்புக்குச் செலவிட என்னால் முடிந்திருக்குமானால், மிகச் சிறந்த படிப்பை நான் அவர்களுக்கு அளித்திருப்பேன் என்பது என் கருத்து. அவர்களுக்குப் போதுமான இலக்கியப் பயிற்சியை அளிக்க நான் தவறி விட்டது, அவர்களுக்கும் எனக்கும் கூடத் துயரம் தருவதாயிற்று. என் மூத்த மகன், தனது வருத்தத்தைத் தனிமையில் என்னிடத்திலும் பகிரங்கமாகப் பத்திரிகைகளிலும் அடிக்கடி தெரிவித்து வந்திருக்கிறான். ஆனால் என் மற்ற புதல்வர்கள், என் தவறு தவிர்க்க முடியாதது என்று எண்ணித் தாராளத்துடன் என்னை மன்னித்து விட்டனர். இதற்காக நான் மனம் உடைந்து போய் விடவில்லை. இதில் எனக்கு ஏதாவது வருத்தமிருந்தால், அது ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி, நான் இல்லாது போய் விட்டேனே என்பதற்காகத்தான். சமூகத்திற்குச் சேவை என்று நான் எதை நம்பினேனோ அது தவறானதாகவும் இருந்து இருக்கக்கூடும். என்றாலும், நான் உண்மையாகவே நம்பிய அந்தச் சேவையில் என் புதல்வர்களின் இலக்கியப் பயிற்சியை நான் தியாகம் செய்துவிட்டேன் என்றே கருதுகிறேன். அவர்களுடைய ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு அவசியமானவை எவையோ அவைகளை நான் அலட்சியம் செய்துவிட்டதில்லை என்பது நிச்சயம். இதற்குச் சரியான ஏற்பாடு செய்யவேண்டியதே ஒவ்வொரு பெற்றோரின் முக்கியமான கடமையும் என்று நம்புகிறேன். இதில் நான் எவ்வளவு முயன்றிருந்தும், என் புதல்வர்களிடம் குறைபாடுகள் தோன்றும் போதெல்லாம், அவற்றைக் குறித்து எனக்கு நிச்சயமாகத் தோன்றும் முடிவு ஒன்று உண்டு. அவர்களுடைய குறைபாடுகளுக்குக் காரணம். நான் போதிய கவனம் செலுத்தத் தவறியது அல்ல. ஆனால், அவர்களுடைய பெற்றோர் இருவரிடமும் இருக்கும் குறைகள்தான் என்பதே என் உறுதியான முடிவு.
குழந்தைகள், பெற்றோரின் உடற்கூற்றை மாத்திரமேயன்றி அவர்களுடைய குணத்தின் தன்மைகளையும் பிதுரார்ஜிதமாகப் பெறுகின்றனர். சுற்றுச் சார்பிலுள்ள நிலைமைகளும் குழந்தைகளின் குணங்கள் அமைவதில் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. என்றாலும், குழந்தைகள், மூதாதையர்களிடமிருந்து அடைந்ததையே ஆரம்ப மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. மூதாதையர்களிடமிருந்து பெறும் தீய தன்மைகளை வெற்றிகரமாகத் தள்ளிவிட்டு வளரும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். ஆன்மாவுக்குத் தூய்மையே இயற்கையான குணமாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது.
குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அளிப்பது விரும்பத் தக்கதா என்பதைக் குறித்து போலக்கும் நானும் அடிக்கடி கடுமையான விவாதம் செய்திருக்கிறோம். ஆங்கிலத்திலேயே சிந்தித்து, ஆங்கிலத்திலேயே பேசுமாறு தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்தியப் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்தவர்கள் ஆவார்கள் என்பது எப்பொழுதுமே என் திடமான அபிப்பிராயமாக இருந்து வந்திருக்கிறது. இதன் மூலம் நாட்டின் ஆன்மீக, சமூக பாரம்பரியச் செல்வம் குழந்தைகளுக்கு இல்லாது போகும்படி செய்து, அந்த அளவுக்கு நாட்டின் சேவைக்குத் தகுதியில்லாதவர்களாகவும், அவர்களை செய்து விடுகிறார்கள். இவ்விதத் திடமான கருத்துக்களை நான் கொண்டிருந்ததால், குழந்தைகளிடம் குஜராத்தியில் தான் பேசுவது என்று வைத்துக்கொண்டேன். இது போலக்குக்குப் பிடிப்பதே இல்லை. அவர்களுடைய எதிர்காலத்தை நான் நாசமாக்குகிறேன் என்று அவர் கருதினார். தம் முழுவலிமையுடனும், அன்புடனும் என்னோடு விவாதிப்பார். ஆங்கிலம் போன்ற உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு மொழியை, மழலைப் பருவத்திலிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளுவதாக இருந்தால், வாழ்க்கைப் போராட்டத்தில் மற்றவர்களை விட அதிக அனுகூலங்களைச் சுலபமாக அவர்கள் பெறுவார்கள் என்பார் போலக். ஆனால், என் மனத்தை அவரால் மாற்ற முடியவில்லை. என் போக்குத்தான் சரி என்பதை அவர் அறிந்து கொள்ளும்படி செய்துவிட்டேனா, அல்லது நான் அதிகப் பிடிவாதக்காரன் என்று அவர்தான் விட்டுவிட்டாரா என்பது எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. இது, இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.
என் கருத்துக்கள், அனுபவத்தினால் இப்பொழுது அதிகப் பலப்பட்டே இருக்கின்றன. முழு இலக்கியப் படிப்பும் இல்லாததனால் என் புதல்வர்கள் நஷ்டமடைந்திருந்தாலும், இயற்கையாகவே தாய்மொழியில் அவர்கள் அடைந்த அறிவு, அவர்களுக்கும் நாட்டுக்கும் நன்மையானதாகவே இருக்கிறது. இதனாலேயே, தங்கள் சொந்த நாட்டில் அந்நியரைப் போல் தோன்றியிருக்க வேண்டியவர்கள், இன்று அப்படித் தோற்றமளிக்காமல் இருக்கிறார்கள். இயற்கையாகவே அவர்கள் இரு மொழிகளை அறியலாயினர். ஏராளமான ஆங்கில நண்பர்களுடன் தினமும் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தாலும், முக்கியமாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகவே இருந்த நாட்டில் அவர்கள் இருந்தாலும் எளிதில் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் கூடியவர்களாக இருக்கின்றனர்.
$$$
24. ஜூலுக் கலகம்
ஜோகன்னஸ்பர்க்கில் நான் நிலைபெற்றுவிட்டேன் என்று நினைத்த பிறகும் எனக்கு நிலையான வாழ்க்கை ஏற்படவில்லை. இனிமேல் கொஞ்சம் அமைதியாக இருக்க முடியும் என்று நான் எண்ணிய சமயம், எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நேட்டாலில் ஜூலுக் ‘கலகம்’ ஆரம்பமாயிற்று என்று பத்திரிகைகளில் செய்தியைப் படித்தேன். ஜூலுக்களிடம் எனக்கு எந்த விதமான விரோதமும் இல்லை. அவர்கள் இந்தியருக்கு தீமை செய்துவிடவும் இல்லை. ‘கலகம்’ என்று சொல்லப்பட்டதைக் குறித்து எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகத்தின் நன்மைக்காகவே இருக்கிறது என்று நான் அப்பொழுது நம்பினேன். எனக்கு இருந்த உண்மையான விசுவாசம், அந்தச் சாம்ராஜ்யத்திற்கு ஒரு கெடுதலைக்கூட எண்ண முடியாதபடி என்னைத் தடுத்தது. ஆகையால், ‘கலகம்’ நியாயமானதுதானா, நியாயமில்லாததா என்பதும் கூட என்னுடைய தீர்மானத்தைப் பாதித்து விடவில்லை. நேட்டாலில் தொண்டர் பாதுகாப்புப் படை ஒன்று இருந்தது. அதில் அதிகம் பேரைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு இடமிருந்தது. ‘கலகத்தை’ அடக்குவதற்காக இப்படை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பத்திரிகைகளில் படித்தேன்.
நேட்டாலுடன் நான் நெருங்கிய தொடர்பு கொண்டவன். ஆகையால், என்னை அதன் பிரஜையாகவே கருதினேன். எனவே, அவசியமானால், இந்திய வைத்தியப் படை ஒன்றை அமைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அறிவித்து கவர்னருக்கு எழுதினேன். என் யோசனையை ஏற்றுக்கொண்டு அவர் உடனே பதில் எழுதினார்.
இவ்வளவு சீக்கிரமே என் யோசனை ஏற்றுக்கொள்ளப் பட்டுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, கடிதம் எழுதுவதற்கு முன்னாலேயே, அவசியமான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தேன். என் யோசனை ஏற்கப்பட்டுவிடுமானால், ஜோகன்னஸ்பர்க் ஜாகையை எடுத்துவிடுவது, வேறு ஒரு சிறு வீட்டுக்குப் போலக் குடி போய்விடுவது, என் மனைவி போனிக்ஸுக்குப் போய் அங்கேயே இருப்பது என்று நான் தீர்மானித்தேன். இம் முடிவு குறித்து என் மனைவி பூரண சம்மதம் அளித்தாள். இதுபோன்ற காரியங்களில் என் தீர்மானத்திற்கு அவள் என்றாவது ஒரு சமயமேனும் குறுக்கே நின்றதாக எனக்கு ஞாபகமே இல்லை. ஆகையால், கவர்னரிடமிருந்து பதில் வந்ததுமே, வீட்டைக் காலி செய்வதற்கு வீட்டுச் சொந்தக்காரருக்கு வழக்கமான ஒரு மாத முன்னறிவிப்புக் கொடுத்தேன். வீட்டிலிருந்த சாமான்களில் சிலவற்றைப் போனிக்ஸு க்கு அனுப்பிவிட்டு மீதியை போலக்கிடம் விட்டுச் சென்றேன்.
டர்பனுக்குச் சென்று, ஆள் தேவை என்று கோரிக்கை வெளியிட்டேன். பெரிய படை எதுவும் தேவைப்படவில்லை. இருபத்து நான்கு பேரைக் கொண்ட ஒரு குழு எங்கள் படை. இதில் என்னைத் தவிர மற்றும் நான்கு குஜராத்திகள் இருந்தனர். சுயேச்சையான ஒரு பட்டாணியரைத் தவிர மற்றவர்களெல்லாம் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்; முன்னால் ஒப்பந்தத் தொழிலாளராக இருந்தவர்கள்.
எனக்கு ஓர் அந்தஸ்தை அளிப்பதற்காகவும், வேலை எளிதாக நடப்பதற்காகவும், அப்பொழுது இருந்த சம்பிரதாயத்தை அனுசரித்தும், பிரதம வைத்திய அதிகாரி என்னைத் தற்காலிக சார்ஜண்டு மேஜராக நியமித்தார். நான் தேர்ந்தெடுத்த மூவரை சார்ஜண்டுகளாகவும், ஒருவரை கார்ப்பொரலாகவும் நியமித்தார். இவற்றிற்குரிய ஆடைகளையும் அரசாங்கத்தினர் எங்களுக்கு அளித்தனர்.
எங்கள் படை ஆறு வாரம் சேவை செய்தது. ‘கலக’ப் பிரதேசத்தை அடைந்ததும், ‘கலகம்’ என்ற பெயர் அதற்குச் சரி என்பதற்கான நியாயம் எதையும் நான் அங்கே காணவில்லை. கண்ணால் பார்க்கக்கூடிய வகையில் எதிர்ப்பு என்பதே இல்லை. சிறு கலவரம், பெறும் புரட்சியாக மிகைப்படுத்தப்பட்டதன் காரணம் இதுதான்: ஜூலுக்கள் மீது புது வரி விதித்தார்கள். அதைக் கொடுக்க வேண்டாம் என்று ஒரு ஜூலுத் தலைவர் தம் மக்களுக்கு கூறினார். வரி வசூலிக்கப் போன ஒரு சார்ஜண்டை ஈட்டியால் குத்திவிட்டனராம். விஷயம் எப்படி இருந்தாலும், என் அனுதாபம் ஜூலுக்கள் பக்கமே இருந்தது.
எங்களுடைய முக்கியமான வேலை, காயமடைந்த ஜூலுக்களுக்குப் பணிவிடை செய்வதே என்று, தலைமைக் காரியாலயத்திற்குப் போனதும் நான் அறிந்து ஆனந்தமடைந்தேன். அங்கிருந்த வைத்திய அதிகாரி எங்களை வரவேற்றார். காயமடைந்த ஜூலுக்களுக்கு வெள்ளைக்காரர்கள் மனமாரப் பணிவிடைகள் செய்வதில்லை என்றும், அவர்கள் புண்கள் அழுகிக்கொண்டு வருகின்றன என்றும், என்ன செய்வதென்று தெரியாமல் தாம் திகைத்துக் கொண்டிருந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார். நாங்கள் வந்தது, ஒரு பாவமும் அறியாத ஜூலுக்களுக்குத் தெய்வ சகாயம்போல் ஆயிற்று என்று அவர் ஆனந்தம் அடைந்தார். புண்களுக்கு மருந்து வைத்துக் கட்டுவதற்கு வேண்டியவைகளையும், கிருமி ஒழிப்பு மருந்துகளையும் எங்களுக்குக் கொடுத்தார். தாற்காலிக ஆஸ்பத்திரிக்கும் எங்களை அழைத்துச் சென்றார். எங்களைப் பார்த்ததும் ஜூலுக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எங்களுக்கும் வெள்ளைக்காரச் சிப்பாய்கள் இருந்த இடத்திற்கும் மத்தியில் கம்பிக் கிராதி போட்டிருந்தனர். அதன் வழியே வெள்ளைக்காரச் சிப்பாய்கள் எங்களை எட்டிப் பார்த்து, ஜூலுக்களுக்குச் சிகிச்சை செய்ய வேண்டாம் என்று எங்களைத் தூண்ட முயன்றனர். அவர்கள் சொல்லுவதை நாங்கள் கேட்காது போகவே ஜூலுக்களைச் சொல்லொணாத கேவலமான பாஷையில் திட்டினார்கள்.
நாளாவட்டத்தில் இந்தச் சிப்பாய்களுடன் நான் நெருங்கிப் பழகலானேன். பிறகு எங்கள் வேலையில் தலையிடுவதை அவர்கள் நிறுத்தி விட்டனர். ராணுவத்தில் பெரிய உத்தியோகத்தில் கர்னல் ஸ்பார்ஸும், கர்னல் வைலியும் இருந்தனர். 1896-இல் இவர்கள் என்னை அதிகக் கடுமையாக எதிர்த்தவர்கள். இப்பொழுது என் போக்கைக்கண்டு ஆச்சரியமடைந்தனர். என்னைப் பார்ப்பதற்கென்றே வந்து, எனக்கு நன்றியும் தெரிவித்தனர். ஜெனரல் மெக்கன்ஸியையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இவர்கள் எல்லோரும் ராணுவ சேவையையே தொழிலாகக் கொண்டவர்கள் என்று வாசகர்கள் எண்ணிவிட வேண்டாம். கர்னல் வைலி, டர்பனில் பிரபலமான வக்கீல். கர்னல் ஸ்பார்கஸ், டர்பனில் ஒரு பெரிய கசாப்புக்கடையின் சொந்தக்காரர் என்ற வகையில் பிரபலமானவர். ஜெனரல் மெக்கன்ஸி, நேட்டாலில் பிரபல விவசாயி. இவர்கள் எல்லோரும் தொண்டர்களாகப் படையில் சேர்ந்தவர்கள். இதனால், ராணுவப் பயிற்சியையும் அனுபவத்தையும் இவர்கள் பெற்றனர்.
எங்கள் பராமரிப்பில் இருந்த காயம்பட்டோர், யுத்தத்தில் காயமடைந்தவர்களல்ல. இவர்களில் ஒரு பகுதியினரைச் சந்தேகிக்கப்பட்டவர்கள் என்று சிறைப்படுத்தினர். இவர்களுக்குச் சவுக்கடி தண்டனை அளிக்கும்படி ஜெனரல் தீர்ப்பளித்தார். சவுக்கடியால் இவர்களுக்குப் பலமான புண்கள் ஏற்பட்டன. புண்களுக்கு எந்தச் சிகிச்சையுமே செய்யாது போனதால் அழுகிவிட்டன. மற்றவர்களோ, சிநேகமான ஜூலுக்கள். விரோதிகளிலிருந்து இவர்களைப் பிரித்துக் காட்டுவதற்காக இவர்களுக்குப் பட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தும் தவறாக இவர்களைச் சிப்பாய்கள் சுட்டுவிட்டனர்.
இந்த வேலையல்லாமல், வெள்ளைக்காரச் சிப்பாய்களுக்கு மருந்து கலந்து கொடுக்கும் வேலையும் எனக்கு இருந்தது. டாக்டர் பூத்தின் சிறிய வைத்தியசாலையில் ஒரு வருடம் நான் இதில் பயிற்சி பெற்றிருந்ததால், இந்த வேலை எனக்கு எளிதாக இருந்தது. இந்த வேலையின் காரணமாக அநேக ஐரோப்பியருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
அதிக வேகமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய்க்கொண்டிருந்த ஒரு படையுடன் நாங்கள் இணைக்கப் பட்டிருந்தோம். எங்கெங்கே ஆபத்து இருப்பதாகத் தெரிந்ததோ அங்கே போகும்படி இப்படைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் பெரும்பகுதியினர் குதிரை வீரர்கள். எங்கள் முகாம் நகர்ந்ததும் காயமடைந்தவர்களைத் தூக்குவதற்குள்ள டோலிகளைத் தோளில் சுமந்துகொண்டு நாங்கள் நடந்தே போக வேண்டும். இரண்டு மூன்று தடவைகளில் ஒரே நாளில் நாற்பது மைல்கள் நாங்கள் நடந்து போக வேண்டி வந்தது. ஆனால், நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் எங்களுக்குத் தெய்விகத்தொண்டு இருந்ததற்காக நன்றியுள்ளவனாகிறேன். தவறுதலாகச் சுடப்பட்டு விடும் சிநேக ஜூலுக்களை நாங்கள் டோலிகளில் தூக்கிக்கொண்டு முகாம்களுக்குப் போய்த் தாதிகளாக அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தோம்.
$$$
25. இதய சோதனை
ஜூலுக் ‘கலக’த்தில் நான் அநேக புது அனுபவங்களைப் பெற்றேன். அது என்னை ஆழ்ந்து சிந்திக்கும்படியும் செய்தது. போரின் பயங்கரங்களைக் குறித்து ஜூலுக் ‘கலக’த்தில் நான் அறிந்து கொண்டதைப் போல் போயர் கலகத்தின் போது நான் தெரிந்து கொள்ளவில்லை. இது மனித வேட்டையேயன்றிப் போர் அல்ல. இது என்னுடைய அபிப்பிராயம் மாத்திரமல்ல, நான் இதைக் குறித்துப் பேச நேர்ந்தபோது ஆங்கிலேயர் பலரும் இதே அபிப்பிராயத்தையே கூறினார்கள். ஒரு பாவமும் அறியாத மக்கள் வாழ்ந்த குக்கிராமங்களில், சிப்பாய்களின் துப்பாக்கிகள் பட்டாசுகள் போல் வெடித்தன என்ற செய்தியை ஒவ்வொரு நாள் காலையிலும் கேட்டுக் கொண்டு, அவர்கள் மத்தியிலும் வசித்து வருவது என்பது, பெருஞ் சோதனையாகவே இருந்தது. ஆனால், இந்த வேதனையை நான் ஒருவாறு சகித்துக்கொண்டேன். ஏனெனில் முக்கியமாக, காயமடைந்த ஜூலுக்களுக்குப் பணிவிடை செய்வது என்பது மாத்திரமே எங்கள் படையின் வேலை. நாங்களும் இல்லாதிருந்தால், அந்த ஜூலுக்களை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள் என்பதையும் கண்டேன். ஆகவே, இந்த வேலை என் மனத்திற்குச் சமாதானமாக இருந்தது.
ஆனால், சிந்திக்க வேண்டிய வேறு விஷயங்களும் அநேகம் இருந்தன. அந் நாட்டில் மிகக் குறைவான ஜனத் தொகையைக் கொண்ட பகுதி அது. குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஒன்றுக்கொன்று தொலைதூரத்தில் ‘அநாகரிகர்கள்’ என்று சொல்லப்படும் ஜூலுக்களின் கிரால்கள் எனப்படும் கிராமங்கள் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்களைத் தூக்கிக்கொண்டோ, சும்மாவோ இந்த ஏகாந்தமான பகுதிகளில் நடந்து போகும்போதே அடிக்கடி தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்துவிடுவேன்.
பிரம்மச்சரியத்தைக் குறித்தும், அதன் விளைவுகளைப் பற்றியும் யோசித்தேன். அது சம்பந்தமான என் கருத்துக்கள் ஆழ வேர் ஊன்றின. எனது சக ஊழியர்களுடன் அதைக் குறித்து விவாதித்தேன். ஆன்ம ஞானத்தை அடைவதற்குப் பிரம்மச்சரியம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அப்பொழுது நான் அறிந்து கொண்டிருக்கவில்லை. ஆனால், தனது முழு ஆன்ம சக்தியுடன் மனித வர்க்கத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர், பிரம்மச்சரியம் இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்பதை நான் தெளிவாகக் கண்டேன். பிரம்மச்சரியத்தை அனுசரித்தால், நான் செய்து வருவதைப் போன்ற தொண்டுக்கு, மேலும் மேலும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதையும், குடும்ப வாழ்க்கையின் இன்பத்திலும் பிள்ளைகளைப் பெறுவதிலும் அவற்றை வளர்ப்பதிலுமே நான் ஈடுபட்டிருந்தேனாயின் என் வேலைக்கு நான் தகுதியுடையவனாக மாட்டேன் என்பதையும் உணர்ந்தேன்.
சுருங்கச் சொன்னால், உடலை நாடுவது அல்லது ஆன்மாவை நாடுவது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றிற்காகவே நாம் வாழ முடியும். உதாரணமாக, இச் சமயம் என் மனைவி பிள்ளைப்பேற்றை எதிர்பார்க்கும் நிலையில் இருந்திருப்பாளாயின், இப் போரின் சேவையில் நான் குதித்திருக்க முடியாது. பிரம்மச்சரியத்தை அனுசரிக்காத குடும்ப சேவை, சமூக சேவைக்குப் பொருந்தாகதாகவே இருக்கும். பிரம்மச்சரியத்தை அனுசரித்தால் அது முற்றும் பொருந்துவதாக இருக்கும்.
இவ்வாறு சிந்தித்ததனால், முடிவான விரதம் கொண்டுவிட வேண்டும் என்று ஒருவகையில் அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். இவ்விரதத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே ஒரு வகையான ஆனந்தத்தை உண்டாக்கியது. கற்பனா சக்தியும் சுதந்திரமாக வேலை செய்ய ஆரம்பித்தது. சேவை செய்வதற்கு எல்லையற்ற துறைகள் தோன்றலாயின.
இவ்வாறு கடுமையான உடலுழைப்பின் நடுவிலும், மன உழைப்பின் நடுவிலும் இருந்த சமயத்தில், ‘கலகத்தை’ அடக்கும் வேலை அநேகமாக முடிந்துவிட்டது என்றும், நாங்கள் சீக்கிரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விடுவோம் என்றும் ஒரு செய்தி வந்தது. இரண்டொரு நாட்களுக்குப் பிறகு நாங்கள் விடுவிக்கப்பட்டோம் பிறகு சில தினங்களில் எங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம்.
கொஞ்ச நாட்கள் கழித்துக் கவர்னரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தில், எங்கள் வைத்தியப் படையின் சேவைக்குப் பிரத்தியேகமாக நன்றி கூறியிருந்தார்.
போனிக்ஸ் போய்ச் சேர்ந்ததும், பிரம்மச்சரிய விஷயத்தைக் குறித்து சகன்லால், மகன்லால், வெஸ்ட் முதலியவர்களிடம் பேசினேன். இந்த யோசனை அவர்களுக்கும் பிடித்திருந்தது. இவ் விரதத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொண்டார்கள். ஆனால், அதிலிருக்கும் கஷ்டங்களையும் எடுத்துக் கூறினர். சிலர், இதை அனுசரிக்கத் தைரியமாக முன்வந்தார்கள். இதில் சிலர் வெற்றி பெற்றார்கள் என்பதையும் அறிவேன்.
நானும் துணிந்து இறங்கினேன். வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை அனுசரிப்பது என்று விரதம் பூண்டேன். ஆனால் நான் மேற்கொண்ட இக் காரியம் எவ்வளவு மகத்தானது, கடுமையானது என்பதை அப்பொழுது நான் உணரவில்லை அதிலுள்ள கஷ்டங்கள் இன்றும்கூட என் எதிரே மிரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த விரதத்தின் முக்கியத்துவமும் நாளுக்கு நாள் எனக்கு நன்றாகப் புலனாகிக் கொண்டு வருகிறது. பிரம்மச்சரியம் இல்லாத வாழ்க்கை, சாரமற்றதாகவும் மிருகத்தனமாகவும் எனக்குத் தோன்றுகிறது. மிருகத்திற்கு இயற்கையிலேயே புலனடக்கம் என்பது இன்னதென்பது தெரியாது. இதற்குரிய சக்தி இருப்பதனால் புலனடக்கத்தை அனுசரிக்கும் வரையிலும், மனிதன் மனிதனாக இருக்கிறான். பிரம்மச்சரியத்தின் பெருமையைக் குறித்து நமது மத நூல்களில் புகழ்ந்து கூறப் பட்டிருப்பதெல்லாம் மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பதாக முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பிரம்மச்சரியத்தைக் குறித்து நாளுக்கு நாள் நான் தெளிவடைந்து வருவதால் சமய நூல்கள் கூறுவதெல்லாம் சரியானவையே என்பதையும், அனுபவத்தில் கண்டு கூறப்பட்ட உண்மைகள் என்பதையும் இன்று காண்கிறேன்.
எவ்வளவோ அற்புதமான சக்தியையுடையதான பிரம்மச்சரியம், எளிதான காரியமும் அன்று என்பதையும் கண்டேன். அது நிச்சயமாக உடலைப்பற்றிய விஷயம் மாத்திரம் அல்ல. உடலின் அடக்கத்தோடு அது ஆரம்பமாகிறது. ஆனால், அதோடு அது முடிந்துவிடுவதில்லை. பூரணமான பிரம்மச்சரியம், அசுத்தமான எண்ணத்திற்கே இடம் தராது. உண்மையான பிரம்மச்சாரி, சரீர இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக் கனவிலும் எண்ண மாட்டான். அந்த நிலையை அவன் எய்திவிட்டால் அன்றிப் பிரம்மச்சரியத்தை அடைவதற்கு அவன் வெகுதூரம் கடக்க வேண்டி இருக்கும்.
எனக்கோ சரீர அளவில் பிரம்மச்சரியத்தை அனுசரிப்பதிலும் கூடக் கஷ்டங்கள் அதிகம் இருந்தன. அநேகமாக அபாய எல்லையைத் தாண்டிவிட்டேன் என்று நான் இன்று சொல்லலாம். ஆயினும், இதில் மிகவும் அத்தியாவசியமான – சிந்தையை வசப்படுத்துவதில் – நான் இன்னும் முழு வெற்றியையும் அடைந்து விடவில்லை. இதில் உறுதியோ, முயற்சியோ இல்லாமலில்லை. ஆனால், விரும்பத்தகாத எண்ணங்கள் எங்கிருந்து எழுந்து வஞ்சகமாகப் படையெடுக்கின்றன என்பதை அறிந்துகொள்ளுவது இன்னும் எனக்கு ஒரு பிரச்னையாகவே இருந்துவருகிறது. விரும்பத்தகாத எண்ணங்களைத் தடுத்து மனக் கதவைப் பூட்டி விடுவதற்கு ஒருசாவி இருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அதை அவரவரே தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மகான்களும் முனிவர்களும் தங்கள் அனுபவங்களை நமக்குச் சொல்லிப் போயிருக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் ஏற்றதாகவும், தவறாமல் பலிக்கக் கூடியதாகவும் உள்ள மருந்து எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை. பரிபூரணத்துவம் அல்லது தவறே இழைக்காமலிருக்கும் சக்தி கடவுளின் அருளினால் மாத்திரமே கைகூடும். அதனாலேயே கடவுளை நாடிய பக்தர்களும் ஞானிகளும் தங்களுடைய தவ வலிமையினாலும் தூய்மையினாலும், சக்தி பெற்ற ராமநாமம் போன்ற மந்திரங்களை நமக்கு அளித்திருக்கிறார்கள். அவன் அருளை நாடி அவனே கதி என்று பரிபூரணமாக அடைக்கலம் புகுந்து விட்டாலன்றி சிந்தையை முற்றிலும் அடக்கி விடுவது என்பது சாத்தியமே இல்லை. சிறந்த சமய நூல் ஒவ்வொன்றும் இதையே போதிக்கிறது. பூரணமான பிரம்மச்சரியத்தை அடைந்து விடுவதற்காக நான் பாடுபடும் ஒவ்வொரு கணத்திலும் இந்த உண்மையை உணர்ந்து வருகிறேன்.
அந்த முயற்சி, போராட்டம் ஆகியவற்றின் சரித்திரத்தில் ஒரு பகுதியை இனி வரும் அத்தியாயங்களில் கூறுகிறேன். இம்முயற்சியை எப்படித் தொடங்கினேன் என்பதை மாத்திரம் சுட்டிக்காட்டி இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன். உற்சாகத்தின் ஆரம்ப வேகத்தில், பிரம்மச்சரியத்தை அனுசரிப்பது வெகு எளிதானது என்பதைக் கண்டேன். என் வாழ்க்கை முறையில் நான் செய்த முதல் மாறுதல், என் மனைவியுடன் ஒரே படுக்கையில் படுப்பதையும் அவளுடன் தனிமையை நாடுவதையும் விட்டு விட்டதாகும்.
இவ்வாறு 1900-ஆம் ஆண்டிலிருந்து, விரும்பியும் விரும்பாமலும் நான் அனுசரித்து வந்த பிரம்மச்சரியத்திற்கு, 1906-ஆம் ஆண்டு மத்தியிலிருந்து ஒரு விரதத்தின் மூலம் முத்திரையிட்டேன்.
$$$