-திருநின்றவூர் ரவிகுமார்

பக்கத்து வீட்டில் கண்ணாடி ஜன்னல். வெப்பத்தைத் தணிக்க அதன் மீது உருவத்தை பிரதிபலிக்கும் குளிர் ஒட்டி (Reflective Cooling Sticker) பதித்திருந்தார்கள். ஓரிரு மாதங்கள் கழித்து மூடி இருந்த ஜன்னல் ஓரத்தைப் பிடித்தபடி ஒரு கரிய நிறக் குருவி தன் பிரதிபலிப்பைப் பார்த்து அதை அலகால் கொத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிறகு அடிக்கடி அதேபோல நடப்பதையும் பார்த்தேன். அந்த பக்கம்தான் பறவைகளுக்காக சட்டியில் தண்ணீர் வைத்திருப்போம். காக்கைகளும் குருவிகளும் மைனாக்களும் வரும். ஆனால் எந்தக் காக்கையும் அந்த கரிய நிற குருவியைப் போல தன் பிரதிபலிப்பைக் கொத்திப் பார்க்கவில்லை.
காரணம், காக்கை புத்திசாலி. மனிதனுக்கும் மனிதக் குரங்குக்கும் அடுத்தபடியாக காக்கை தான் புத்திசாலி என்று கண்ணாடிப் பரிசோதனைக்கு (Mirror Test) பிறகு அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இதனால் மட்டுமே காக்கையை புத்திசாலி என்று கூறிவிட முடியுமா?
2010 ஆண்டில் தென்பசிபிக் பகுதியில் ஓர் ஆய்வு செய்யப்பட்டது. சட்டென்று உள்ளே புகுந்து எடுக்க முடியாதபடி ஒரு பொந்தில் உணவு வைக்கப்பட்டது. காக்கைகள் அந்த மரத்தின் இலைகளைக் கிள்ளிப் போட்டுவிட்டு கிளைகளை ஒடித்து, அதைப் பயன்படுத்தி பொந்துக்குள் இருந்த உணவை வெளியே இழுத்துத் தள்ளி பிறகு அதைக் கொத்தி சாப்பிட்டன. மனிதக் குரங்குக்கு அடுத்தபடியாக கருவிகளை உருவாக்கவும் அதைப் பயன்படுத்தவும் கூடிய புத்திசாலி காக்கை என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தனக்கு உணவு எங்கு கிடைக்கும், எங்கு கிடைக்காது என்று அதற்குத் தெரியும். தான் உணவைப் பதுக்கி வைத்த இடத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகும் மறக்காமல், சரியாக அதை எடுக்கும் நினைவாற்றல் அதற்கு உண்டு என்று அந்த ஆய்வில் தெரியவந்தது. ஆனால் நமக்கு அதன் நினைவாற்றலை வேறு விதமாகப் புரிய வைத்திருக்கிறது. தன்னைத் துரத்துபவர்களை, தான் சாப்பிடும் போது சாப்பிட விடாமல் விரட்டுபவர்களை காக்கை எதிர்பாராத நேரத்தில் சரியாக தலையில் கொட்டி தன் நினைவாற்றலை வெளிப்படுத்தி உள்ளது.
காக்கைகள் கூட்டமாக இருக்கும். குறிப்பாக மாலை நேரத்தில் மின்சாரக் கம்பி அல்லது வீட்டின் சுற்றுச் சுவற்றில் வரிசையாக உட்கார்ந்து (நின்று) கொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். பணி முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நண்பர்கள் கடையில் தேநீர் அருந்தியபடி கதைப்பதைப் போல அது இருக்கும். மாலைக் கூட்டத்தில் மற்ற காக்கைகளுக்கு ஏற்ப அது தன் நடவடிக்கைகளை பொருத்தமாக மாற்றிக் கொள்கிறது என்கிறார்கள் பறவையியலாளர்கள். மனித இனத்தின் சமூக பரிணாம வளர்ச்சியுடன் காக்கையின் நடவடிக்கைகளை ஒப்பிட்டு, இரண்டுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதைக் காண்கிறார்கள் அவர்கள்.
‘காக்கைகளுடன்’ (In the Company of Crows & Ravens) என்ற நூலில், காக்கைகளுடன் – குறிப்பாக அண்டங்காக்கைகள் – மனித இனத்தின் உறவு நல்லவிதமாகப் போற்றப்படுவதாக இருந்தது. மனித இனம் விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகு அந்த உறவு மாறியது. காக்கைகள் போட்டியாளர்களாகப் பார்க்கப்பட்டன. அவற்றை விரட்ட ஸ்கேர்குரோ (Scarecrows) என்ற வார்த்தை பயன்பாட்டில் வந்தது (சோளக்கொல்லை பொம்மை) என்கிறது அந்த நூல்.
பின்னாளில் பிளேக் நோயில் இறந்தவர்களை, போரில் மாண்டவர்களை காக்கைகளும் கொத்தித் தின்பதைப் பார்த்தவர்கள் அதை மரணத்தின், தீமையின் வடிவமாகக் கருதினார்கள் என்கின்றனர் அந்த நூல் ஆசிரியர்களான ஜான் மார்ஷ்லப், டோனி ஆன்ஜில் .
நம்மூரில் காக்கை சனீஸ்வரனின் வாகனமாக இருப்பதை இத்துடன் இணைத்துப் பார்க்க முடியும்.
காக்கைகள் குழந்தைக்கு அருகில் மெதுவாக தத்தித் தத்தி நடந்து வந்து அதன் கையில் இருந்து ரொட்டி, பிஸ்கட்டுகளை பிடுங்கிக் கொண்டு போகும். ஆனால் இதெல்லாம் குழந்தைக்கு ஐந்து வயது ஆகும் வரைதான். அதன் பிறகு மனிதக் குழந்தை ஆபத்தானது என்று காக்கைகளுக்கு (எப்படியோ) தெரிந்து விடுகிறது. அதன்பிறகு அதன் அருகில் போவதில்லை.
காக்கைகளின் நடத்தை ஊருக்கு ஊர் மாறுபடும். அந்த ஊர் மக்களின் தன்மையைப் பொருத்து அது மாறுபடுகிறது என்கிறார் ‘காக்கை’ கோபால். இவர் தமிழ்த் திரை யுலகுடன் தொடர்புடைய எளிய மனிதர்; காக்கைப் பிரியர். ராயபுரம் காக்காய்கள் திமிர் பிடித்தவை என்று கூறும் இவரது யூ-டியூப் நேர்காணல் காக்கைகளைப் பற்றிய பல சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொண்டது.
காக்கைகள் சோம்பி இருப்பதில்லை. எப்போதும் (நம் பார்வைக்கு) உற்சாகமாக இருக்கும் பறவை அது. மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. மரத்தின் உச்சியில் உள்ள கிளியை குறிப்பாகச் சொல்லுவார் துரோணாச்சாரியார். துரியனுக்கு மரம், மரக்கிளை, இலைகள், அதன் உச்சியில் உள்ள கிளி தெரியும். ஆனால் அர்ஜுனனுக்கு கிளியின் கண் மட்டுமே தெரியும். கிளி இருக்கும் இடத்தில் காக்கையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அர்ஜுனனுக்கும் குறி தப்பும். நம்மூர் குருவிக்காரர்கள் (நரிக்குறவர்கள்) கூட ஒற்றைக் காக்கையை குறி பார்த்து சுட்டதாகச் சொல்ல முடியாது. காக்கைக் கூட்டத்தை பார்த்து சுடுவார்கள். குருட்டு அதிஷ்டத்தில் ஒன்று விழும்; விழாமலும் போகலாம்.
காக்கை பறந்து செல்லும் போக்கே தனி விதம். ஒரே திசையில் நேர்கோட்டில் போகாது. திடீர் திடீரென்று திசை மாறும். அதைக் குறி வைத்து வீழ்த்த முடியாது. ஆனால் (வில்லுக்கு) விஜயனும் தோற்கக்கூடிய இடத்தில் வெற்றி பெற்றவர் ரகு குல திலகமான ஸ்ரீ ராமபிரான்.
வனவாசத்தின் போது பிராட்டியை காக்காசுரன் இச்சித்து இம்சை செய்தான். கார்மேக வர்ணன் புல்லை எடுத்து மந்திரமோதி அவன் மீது ஏவினார். அவனும் கத்திக் கொண்டே தேவலோகம், பிரம்மலோகம், சிவலோகம் என ஏழு உலகக்கும் சென்ற போதிலும் ராமபாணம் விடாமல் துரத்தியது. பிராட்டியின் சரண் பற்றினான். அதனால் உயிர் பிழைத்தான். ஆனால் ராமபாணத்தின் சிறப்பே இலக்கைத் தாக்காமல் திரும்பாது என்பதுதான். எனவே காக்கைகளுக்கு ஒன்னரைக் கண்ணானது என்பது ஜெயந்தன் (காக்காசுரன்) நிகழ்வுக்குப் பின்னர் என்பது ஐதீகம்.

கத்திக் கொண்டே ஓடியவனை துரத்திச் சென்றது ராமபாணம் என்ற வர்ணனையைக் கொண்டு காகுந்தன் பயன்படுத்தியது ஒலியை தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணை (Sound Track Missile) என்று ராமாயணப் பேச்சாளர்கள் சிலர் பேசியும் எழுதியும் உள்ளார்கள். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் இஷ்டம்.
நம் நாட்டில் பிரபலமான கேலிச்சித்திரக்காரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண். அவர் காக்கைகளை விதம்விதமாக வரைந்துள்ளார். அவரது மனைவி கமலா, “அவருக்கு என்னை விட காக்காயைதான் ரொம்பப் பிடிக்கும்” என்று கிண்டலாகச் சொல்லி உள்ளார். லஷ்மணனுக்கு காக்கையை மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். காக்கை இவருக்கு ‘பொன்’ குஞ்சு.
வயதான காலத்தில் கார்ட்டூன்ஸ் பற்றிய கேள்வி கேட்பதால் நேர்காணல்களையே தவிர்த்த லஷ்மணனிடம், “நான் கார்ட்டூன் பத்தி பேச வரல, காக்காயை பத்தித் தான் பேச விரும்புறேன்” என்று சொல்லி நேர்காணலுக்கு அனுமதி பெற்றார் ஒரு இளம் பத்திரிகையாளர். அந்த நேர்காணலில் காக்கையுடன் ஒப்பிட தனக்கு மயில் அசிங்கமாக தெரிகிறது என்று கூறி உள்ளார் லஷ்மண்.
அந்த நேர்காணலில் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருந்தது. மின்சார ரயிலுக்கு மின்சாரம் சப்ளை செய்யும் உயர் மின்னழுத்த (ஹை டென்ஷன்) ஒயரைக் கட்டுவதற்கு மெல்லிய வளையக்கூடிய கம்பியைப் பயன்படுத்துவார்கள். காகங்கள் அந்த மெல்லிய ஒயரை தங்கள் கூட்டைக் கட்ட திருடிக் கொண்டு போய்விடுமாம். அந்த வகையில் ரயில்வேக்கு ஆண்டுக்கு ஏழு லட்சம் ரூபாய் வரை இழப்பு என்ற தகவல் உள்ளது. இப்படியும் ஒரு ரயில்வே திருட்டு.
காக்கையின் பல்வேறு உணர்ச்சி பாவனைகளை (Mood) வரைந்து உள்ளார் ஆர்.கே. லஷ்மண். உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் அவர் வரைந்த காக்கைப் படங்களை பணம் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளனர். பிரபல நாவலாசிரியை ஷோபா டே, தனது கணவர் லக்ஷ்மண் வரைந்த வெவ்வேறு பாவனைகளில் காக்கைப் படங்கள் ஐம்பத்திநான்கை ஒரே நேரத்தில் வாங்கினார் என்றும் லக்ஷ்மன் காலமான போது நாங்கள் மட்டும் வருந்தவில்லை அந்த ஐம்பத்திநான்கு காக்கைகளும் வருத்தத்தில் கரைந்தன என்றும், அவரது அஞ்சலிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டில் பலர் சாப்பிடுவதற்கு முன் காக்கைக்கு உணவிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். (குருவி, குயில், கிளி வடிவில் இல்லாமல்) காக்கை வடிவில் தங்கள் முன்னோர் வருவதாக ஹிந்துக்கள் நம்புவதே இதற்குக் காரணம்.
பாட்டியிடம் திருடி நரியிடம் இழந்த அவமானம் ஆண்டுக்கு ஒரு முறை நிச்சயமாக இல்லாமல் போய்விடும். மஹாளய அமாவாசையின் போது எல்லா வீடுகளிலும் காக்கைக்கு வடை கிடைக்கும்.
இன்று மஹாளய அமாவாசை.
கா…கா…கா…
$$$