-உ.வே.சாமிநாதையர்

21. பல நூல்கள் இயற்றல் – ஆ
திருக்குறுக்கைப் புராணம் இயற்றியது
துன்மதி வருடம் தருமபுர ஆதீனத்தலைவர் ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர் விரும்பியதற்கு இணங்கி, இவரால் திருக்குறுக்கைப் புராணம் இயற்றப்பட்டது. அந் நூலை அரங்கேற்றும்பொழுது பல பிரபுக்கள் வந்து கேட்டு ஆதரித்தார்கள். கார்குடியிலிருந்த பிரபுவாகிய சரவணப்பிள்ளை யென்பவர் உடனிருந்து சிறப்பாக நடத்தி வைத்தார். அரங்கேற்றுவதற்கு முன் தருமபுரம் ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர் அவருக்கு அனுப்பிய திருமுகம் வருமாறு:
உ “குருபாதம் துணை. சகலகுண சம்பன்னரான பிள்ளையவர்கள் சரவணப் பிள்ளையவர்களுக்குப் பண்டாரத் திருவுளத்தினாலே சிவஞானமும் தீர்க்காயுளும் அரோக திடகாத்திரமும் சிந்தித மனோரத சித்தியும் சகல பாக்கியமும் மேன்மேலும் உண்டாகும். இந்தத் துன்மதி வருடம் தை மாதம் 22 வரைக்கு நாமும் தம்பிரான்களும் பண்டாரத் திருவுளத்தினாலே பரிணாமத்தில் இருக்கிறோம். இப்போது குறுக்கை ஸ்ரீ வீரட்டேசுர சுவாமிக்குத் தமிழில் தலபுராணம் செய்யும்படி வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுக்கு நாம் சொல்ல அது முற்றுப்பெற்றிருப்பதால் ஸ்திரவார தினம் அரங்கேற்றுதல் செய்யும்படி அவ்விடத்துக்கு அனுப்பியிருக்கிறோம். தாங்கள் கூட இருந்து அரங்கேற்றுதல் செய்யும்படி செய்விக்க வேண்டியது. மகாக்ஷேத்திரமானபடியால் அந்த ஸ்தலத்தைப் பிரகாசம் செய்விப்பது புராணமேயன்றி வேறில்லை. தேவாரங்களிருந்தபோதிலும் புராணமில்லாவிடின் ஸ்தலத்தினுடைய வரலாறு விளங்க மாட்டாது. அன்றியும் ஒரு புராணப் பிரதிட்டை ஒரு ஸ்தலப்பிரதிட்டை செய்வது போலாகும். அதற்குரிய அபிமானிகளாகிய தாங்கள் கூட இருந்து சிறப்பாக நடப்பிக்க வேண்டும். மற்றப்படி தாங்களும் மற்றுமுண்டாகியபேர்களும் சுகமே இருக்கிற செய்தியை யெழுதியனுப்ப வேண்டியது. சதாகாலமும் பண்டாரத் திருவருளே கண்ணாக இருந்து வரும்படி சிந்திக்க. ஞானஸம்பந்தன்.”
குறுக்கைப்புராணம் துன்மதி வருடம் மார்கழி மாதம் 13-ஆம் தேதி வியாழக்கிழமை பகல் 27 நாழிகைக்குப் பாடி நிறைவேறியது என்று புராண ஏட்டுப் பிரதியின் இறுதியில் எழுதப்பட்டிருந்தது.
குறுக்கை யென்பது அட்டவீரட்டானங்களுள் மன்மதனை எரித்த தலம்; தேவாரம் பெற்றது. தீர்க்கவாகு வென்னும் ஒரு முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஸ்தலங்கடோறும் சென்று அவ்வத் தலத்திலுள்ள இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக்கொண்டே திருமஞ்சனம் செய்யுமியல்புடையவர். அவர் இத் தலத்தை அடைந்து அங்ஙனமே அபிஷேகம் செய்ய விரும்பித் தம் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கையென்றே வழங்கலாயிற்று. இத்தலத்திற்கு *13 அரிதகிவனம், யோகீசபுரம், ஞானாம்பிகாபுரம், காமதகனபுரம், கம்பகரபுரமென வேறு திருநாமங்களும் வழங்கும்.
இத்தலத்துச் சிவபெருமான் திருநாமம் யோகீசரென்பது. அம்பிகையின் திருநாமம் ஞானாம்பிகை. தலவிருட்சம் கடு.
இந் நூலிலுள்ள மாணிக்கவாசகர் துதி மிகச் சுவையுள்ளது:
“மன்னுமருட் குரவனாய்க் குருந்துறையும் பெருந்துறையில் வதிந்த கோமான் கொன்னுமொலி மலிகுதிரைச் சேவகனாய் மண்சுமக்குங் கூலி யாளாய்
இன்னுமொரு தரஞ்சொலெனக் கேளாமற் சொற்றபடி எழுது வோனாய்த்
துன்னும்வகை நெக்குருகு வாதவூ ரண்ணலடி தொழுது வாழ்வாம்.”
அவையடக்கங் கூறுகையில், மொழிமுதலாகாத ஙகரம் அகரவுயிரொடு கூடிச் சுட்டு முதலிய எழுத்துக்களின் பின்னே வருதல் போலத் தம் பாடலும் யோகீசருடைய கதையைச் சார்ந்தலால் சிறப்புப் பெறுமென்பதை அமைத்து,
“மொழிமுதலா காதஙக ரமுமகரஞ் சார்ந்துமுத லாய்ச்சுட் டாதி
வழிவரல்போன் மொழிமுதலா காதவென்பா டலுங்குறுக்கை வளர்மா தேவன்
பழிதபுகா தையைச்சார்ந்து முதலாய்ச்சுட் டாதிவழி படரு மாலி
தழிவிலிய லுணர்ச்சியரோர் குவரதனால் யானவர்க்கொன் றறைவ தில்லை”
என்னும் பாடலைப் பாடியுள்ளார்.
மேகம் மாதமும் மாரி பெய்ய அந்த நீர் காவிரியைச் சார்ந்து ஓடிக் கடலில் விழுந்து அதை நிரப்புதலால் கடல் முந்நீரென்று பெயர் பெற்றது போலும் என்னும் கருத்து அமைய,
“மழைவரை முகட்டி லேறி மாதமும் மாரி பெய்யத் தழைதரு புனல்கா வேரி சார்ந்தோருங் கோடி வீரை விழைதிர நிறைத லாலவ் வீரைக்கு முந்நீ ரென்று பழையநூ லுணர்ந்தோர் கூறும் பரிசிஃ துணர்ந்து போலும்” (நாட்டுப். 17)
என்று பாடியிருக்கின்றனர்.
பேரளவென்னும் பொருளுள்ள பனை பொருந்தியுங் கடைப்பட்ட நெய்தல் போலாகாமல் சிறிய அளவென்று கூறப்படும் தினை விளைவிக்கப்பட்டும் குறிஞ்சி முதன்மையாயிற்றென்னும் கருத்து,
“கரைசெய் பேரள வாம்பனை பொருந்தியுங் கடையாந் திரைசெய் நெய்தல்போ லாதறி வாளர்சிற் றளவென் றுரைசெய் நுண்டினை பொருந்தியு முதன்மையுற் றோங்கும் வரைசெய் வான்றிணை போல்வது மற்றெது மண்மேல்” (மேற்படி. 24)
என்னும் செய்யுளில் அமைந்துள்ளது.
உழவர்கள் காவிரியில் புது வெள்ளத்தைக் கண்டு மகிழ்ந்ததற்கு அப்பூதி நாயனார் திருநாவுக்கரசு நாயனாரைக் கண்டு மகிழ்ந்ததையும் ஸ்ரீ மாணிக்கவாசகர் குருந்த மரத்திலெழுந்தருளிய சிவபெருமானைக் கண்டு மகிழ்வுற்றதையும் பின்வரும் பாடலில் உவமையாகக் கூறியுள்ளார் :
“ஆன்றவப் பூதி நாயனார் நாவுக் கரையரைக் கண்டது போலும் கான்றசோ றென்றே யிருமையுங் கண்டு கழிக்குநா லாவது சாத்தி ஊன்றநேர் வாத வூரர்கோன் குருந்தி னொருவனைக் கண்டது போலும் ஈன்றதா யனைய காவிரி நறுநீ ரெதிருறக் கண்டனர் களமர்.” (மேற்படி. 46)
சிவாலயங்களின் திருமதில் முதலியவற்றில் ஆல் அரசு முதலியன தோன்றி அவற்றை அழிவடையும்படி செய்வது இவருடைய மனத்தைத் துன்புறுத்தியதென்பது,
“நட்டபன் முதலுந் தாம்புதி தடுத்த நானில மகட்குற வணங்கி உட்டழைந் தெழல்போற் சாய்ந்துபி னிமிர்ந்தாங் குமாதர னடியர்கைக் கொடுக்கப் பட்டதன் பலமொன் றனந்தமா வதுபோற் பல்பல கிளைத்தெழும் பொழுதே அட்டமெய் யுடையா னாலயத் திடையால் அரசென முளைத்தபல் களையே” “அறப்பரி பால ரெம்பிரான் கோயில் அகத்தெழு மாலர சாதி உறப்பறித் தெழல்போ னெற்பயிர் வளர்ச்சிக் கூறுசெய் களையெலா மொருங்கு மறப்படை நெடுங்க ணுழத்தியர் வயலுள் வயங்குமோ திமமெனப் புகுந்து நறப்படு களைகள் யாவையுங் களைந்து நகுவரப் பேற்றின ரெழுவார்” (நாட்டுப்.55-6)
என வரும் செய்யுட்களால் விளங்கும்.
“ ‘எம் வினையை அரி; தகி’ என்று எண்ணி அரிதகி வனமாகிய இத்தலத்தை அடைபவர் பெரியர்; போகத்தை விரும்பி அடைபவர் சிறியர். தன் சரீரத்தைச் சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணுக்கு விருந்தாக்க எண்ணி இத்தலத்தை அடைந்த மன்மதனைப் பெரியனென்பேனோ? சிறியனென்பேனோ?” என்னும் கருத்தை அமைத்துப் பாடிய,
“ *14 அரிதகி வனத்தி லையவெம் வினையை அரிதகி யென்றுவந் தடைவார் பெரியவர் சிறியர் போகமே வேட்டுப் பெரிதுவந் தடைவர்தன் மேனி எரியழல் விருந்து செய்திட வுள்ளத் தெண்ணிவந் தடைந்தன னென்றால் தெரிவரு மதனைப் பெரியவ னென்கோ சிறியனென் கோவெது புகல்வேன்” (காமதகனப் படலம், 9)
என்னும் செய்யுளும், சிவபெருமானால் எரிக்கப்பட்டுத் தோற்ற பின்பும் மன்மதன் தோற்றிலனென்பதைச் சமத்காரமாக அமைத்து,
“தனியெழின் மாரன் விடுத்தது *15 முளரி தம்பிரான் விடுத்தது முளரி பனிமதிக் குடையோ னெண்ணமு *16 மருளே பரம்பர *17 னெண்ணமு மருளே கனிவரு மதவே ணீறுடை மெய்யன் கடவுளு நீறுடை மெய்யன் வனிதையோர் பாகத் தெம்பிரான் றனக்கு மனோபவன் தோற்றிலன் போலும்” (மேற்படி. 25)
என்று இயற்றியுள்ள செய்யுளும் படித்து இன்புறற்பாலன.
குறிஞ்சி முதலிய திணைகளை வருணிக்கும்பொழுது அவ்வத் திணையிலுள்ள தலங்களை யெடுத்துப் பாராட்டுவர். அவ்வகையில் ஈங்கோய்மலை, வாட்போக்கி, திரிசிராமலை, கற்குடிமாமலை, எறும்பியூர் என்னும் குறிஞ்சி நிலத்தலங்களும், நெடுங்களம், நியமம், மேலைத்திருக்காட்டுப்பள்ளி, கங்கைகொண்டசோழேச்சுரம் முதலிய முல்லை நிலத்திலுள்ள தலங்களும் எடுத்துப் பாராட்டப் படுகின்றன. தீர்க்கவாகுவென்னும் முனிவர் தலயாத்திரை செய்ததை வருணிக்கும் பகுதியிற் சிவதலங்கள் பலவற்றைக் குறிப்பால் தெரிவித்திருக்கும் அருமை வியக்கத்தக்கது.
இந்நூலிலுள்ள படலங்கள் – 21; செய்யுட்டொகை – 736. இப்புராணம் அச்சிடப்பட்டுள்ளது.
*18 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பதிற்றுப்பத்தந்தாதியும் ஆனந்தக்களிப்பும்
துந்துபி (1862) வருஷத்திற் பல சிவஸ்தலங்களைத் தரிசனம் செய்ய இப்புலவர்பிரான் புறப்பட்டார். அப்பொழுது இராமசாமி பிள்ளையின் வேண்டுகோளின்படி மதுரைக்குச் சென்றனர். அங்கே திருஞானசம்பந்த மூர்த்தியாதீன மடத்தே தங்கி ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளைத் தரிசனம் செய்து கொண்டு சிலதினம் இருந்தனர். அப்போது அங்கே பாடசாலைப் பரிசோதகராக இருந்த பம்மல் விஜயரங்க முதலியாருடைய விருப்பத்தின்படியே, திருஞான சம்பந்தமூர்த்தி பதிற்றுப்பத்தந்தாதியும் திருஞானசம்பந்தர் ஆனந்தக்களிப்பும் இவரால் இயற்றி மடத்தில் அரங்கேற்றி அவராலே அச்சிற் பதிப்பிக்கப் பெற்றன.
மதுரையாதீனத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரையே பூர்வாசாரியராகக் கொண்டு வழிபடுதல் முறையாதலால் இவ்வந்தாதியிலும் ஆனந்தக் களிப்பிலும் அவருடைய அருமைச் செயல்களே எடுத்தாளப்படும்.
அப் பதிற்றுப்பத்தந்தாதியிலிருந்து சில செய்யுட்கள் வருமாறு:-
விருத்தம் “அழகிய மயிலை யத்தியைப் பூவை அரசுசெய் தனையுத வாமை பழகிய பெண்ணை பலவுமின் குரும்பை பலகொளப் பாடினை பற்பல் கழகமுற் றோங்கு மாலவா யமுதே கவுணியர் பெருங்குல விளக்கே மழவிளங் களிறே யென்மனந் திருத்தின் மற்றுமப் புகழொடொப் பாமே.” (16) “ஒன்றுவெங் காமம் வெகுளியுண் மயக்கம் ஓங்குமும் மதமெனக் கொண்டு கன்றுமென் மனமாங் களிறகல் பவஞ்சக் காடெலா முழிதரு மதனை வென்றியா னடக்க வலியிலா மையினான் மேதகு கூடலென் றுரைக்கும் குன்றில்வாழ் தெய்வக் குருபர சமய கோளரி சரணடைந்தேனே.” (17) வேறு அடைய வினிமை யருளுநின்பொன் அடிக ளடைந்தே னதற்கேற்ப இடைய றாத வன்பில்லேன் எனினுங் கூடற் சம்பந்தா தடையி லடியா னினக்கென்றே சாற்றா நிற்ப ரெனையுலகர் மிடைசில் லுறுப்பி லார்தமையும் மக்க ளென்றே விளம்புதல்போல்.(24) வேறு “வானமும் புகழ்திரு மதுரை பாற்கடல் ஞானசம் பந்தனார் நயக்கு நல்லமு தூனமில் சைவர்க ளுவந்த வானவர் தீனவெவ் வமணரே திதிதன் மைந்தர்கள்.” (87)
மதுரையை விட்டு நீங்கி வேறு சில தலங்களைத் தரிசனஞ் செய்துகொண்டு திருவாவடுதுறை வந்து சேர்ந்தார்.
*19 குரு பரம்பரை அகவல்
திருவாவடுதுறையிலிருக்கையில் சில அன்பர்களுடைய வேண்டுகோளின்படி அந்த ஆதீனத்து முன்னோர்களாகிய ஸ்ரீ மெய்கண்டதேவர் முதல் வேளூர்ச்சுப்பிரமணிய தேசிகரிறுதியாக இருந்த ஞானாசிரியர்கள் சிவபதமடைந்த மாதம், நட்சத்திரம், சமாதித்தல மென்பவற்றை முறையே யமைத்து, ‘திருவளர் கைலைச் சிலம்பு’ என்னும் தலைப்பையுடைய அகவலொன்றை இயற்றி அளித்தனர். அது குரு பரம்பரை அகவலென வழங்கும்; அவ்வகவல் அச்சிற் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.
மண்ணிப்படிக்கரைப் புராணம்
திருவாவடுதுறை ஆதீனத்துப் பெரிய காறுபாறும் வித்துவானுமாகிய கனகசபைத் தம்பிரானவர்களுடைய விருப்பத்தின் படி மண்ணிப்படிக்கரைப் புராணம் இவரால் இயற்றப்பெற்றது.
“வானளவு புகழ்த்திருவா வடுதுறையிற் குருநமச்சி வாய மூர்த்தி ஆனபர சிவனருளான் ஞானகலை முதற்பிறவு மமையக் கற்று மோனமிகு சாத்தியனாய் மிளிர்கனக சபாபதிமா முனிவர் கோமான் கூனன்மதி முடித்தபிரான் மதூகவனப் புராணநீ கூறு கென்ன” (பாயிரம்)
என்னும் செய்யுளாலும் இது விளங்கும்.
இரக்தாட்சி வருடம் (1864) சித்திரை மாதத்தில் அப்புராணம் அந்தத் தலத்தில் ஸ்வாமி சந்நிதியில் பலர் முன்னிலையில் அரங்கேற்றப் பெற்றது. அதனை இயற்றும்படி அடிக்கடி தூண்டிவந்தவரும் அரங்கேற்றதற்குப் பலரிடத்துஞ் சென்று பொருளீட்டிக் கொடுத்துதவியவரும் அந்தக் கோயிற் காரியஸ்தர் கோதண்டராமைய ரென்பவராவர்.
மண்ணிப்படிக்கரையென்பது மாயூரத்துக்கு வடபாலுள்ள தேவாரம் பெற்ற தலம்; மண்ணியாற்றின் படிக்கரையில் முற்காலத்து இருந்தமையின் இப்பெயர் பெற்றது. இக்காலத்தில் இலுப்பைப்பட்டென வழங்கும். இத்தல விருட்சம் இருப்பை.
இத்தலத்திற்குரிய விநாயகமூர்த்திகள் வலம்புரி விநாயகர், நடன விநாயகரென இருவர். சிவபெருமான் படிக்கரைநாயகர், நீலகண்டேசர், முத்தீசர், பரமேசர், மகதீசரென ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளார். மங்கல நாயகி, அமுதகரவல்லி யென அம்பிகைகள் இருவருளர். இவர்களுக்குத் தனித்தனியே துதிகள் கூறப்பட்டுள்ளன.
அப்புராணச் செய்யுட்களும் சில வருமாறு:-
மகதீசர் துதி “ஒப்பாரும் மிக்காரு மில்லானென் றாரணங்கள் உரைத்தற் கேற்ப இப்பாரும் விண்ணுலகு மெடுத்தேத்து மகதீசன் எனும்பேர் பூண்டு தப்பாரு மறிவினருஞ் சங்கையறத் தழலங்கைத் தலத்தி னேந்திக் கப்பாரு மதூகவனங் குடிகொண்ட பெருமானைக் கருதி வாழ்வாம்.” (கடவுள் வாழ்த்து) தலவிருட்சமாகிய இருப்பையின் சிறப்பு “இனிய நீழலெங் குஞ்செய் தருக்குலம் நனிய வாந்தளி ராதிக ளேநல்கும் கனிய மைந்தவிக் காம ரிருப்பைதான் மினிய நாளும் விளக்கமும் நல்குமே.” (திருநகரப் படலம், 31) “காம தகன நினைத்தொழுதேன் கால கால நினைத்தொழுதேன் சோம சூட நினைத்தொழுதேன் துணைவி விடாது வீற்றிருக்கும் வாம பாக நினைத்தொழுதேன் மதூக வனத்தாய் நினைத்தொழுதேன் ஏம வுருவ நினைத்தொழுதேன் என்று நடனம் புரிகின்றான்.” (நடனவிநாயகப் படலம், 13) “வானமுழு வதுங்காத்த மணிகண்டர் பேரருளால் ஆனநய வுணர்வுற்ற வக்காகம் பிரமதடத் தூனமில்வண் புனன்மூழ்கி யோங்குசின கரஞ்சூழ்ந்து கானமுறா தடியேனைக் காகாவென் றுறக்கரையும்.” (காகம் முத்தியடைந்த படலம், 28)
கருமசேனன் முத்தியடைந்த படலமென்பது முழுவதும் வஞ்சித்துறையாலே இயற்றப் பெற்றுள்ளது; அதிலுள்ள செய்யுட்களும் சில வருமாறு:
“அன்ன வன்னிவன் தன்னை நோக்கியே பொன்னை நேடினேன் என்ன செய்குவேன்.” “உங்கள் பேரினாற் கங்கை யாடிநான் திங்க ளாறினில் இங்கு மேவுவேன்.” (கருமசேனன் முத்தியடைந்த படலம், 7, 10)
இப்புராணத்திலுள்ள படலங்கள் – 20; செய்யுட்கள் – 501; இஃது அச்சிடப் பெற்றுளது.
சேற்றூர்க் *20 கந்தசாமிக் கவிராயர்
சேற்றூர் சமஸ்தான வித்துவான்களின் பரம்பரையினரும், சுப்பிரமணிய தேசிகரிடம் பாடங்கேட்டவரும், விரைவாகச் செய்யுள் செய்பவருமாகிய கந்தசாமிக் கவிராயரென்பவர், சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்கும் பொருட்டு வழக்கம்போலவே திருவாவடுதுறைக்கு வந்தார். பிள்ளையவர்களுடைய புகழைக் கேள்வியுற்றவராதலின் இவரைக் கண்டு அளவளாவ வேண்டு மென்னும் விருப்பம் அவருக்கு மிகுதியாக இருந்துவந்தது. சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துவிட்டு இவரைப் பார்க்க வந்தார். அப்பொழுது இவர் ஏதோ ஒரு நூலின் பகுதிக்குரிய செய்யுட்களை இயற்றி எழுதுவித்துக் கொண்டிருந்தார். ஒரு செய்யுள் செய்வதற்கே பல நாழிகை யோசித்து உபகரணங்களைத் தேடிவைத்துக் கொண்டு பாடுபவர்களை அக் கந்தசாமிக் கவிராயர் பார்த்தவராதலின், இவர் அநாயாஸமாகப் பாடுதலையும் இடையிடையே நண்பர்களோடு பேசுவதையும் அப்பேச்சினால் செய்யுள் இயற்றுதலில் யாதொரு தடையும் நேராமையையும் கண்டு அளவற்ற ஆச்சரியம் அடைந்தார். உடனே வியப்பு மிகுதியால்,
(கட்டளைக் கலிப்பா) “ஓலை தேடி யெழுத்தாணி தேடியான் ஓய்ந்தி ருக்கு மிடந்தேடி யேயொரு மூலை தேடி யிருந்துதன் மூக்குக்கண் ணாடி தேடி முகத்திற் பொருத்தியே மாலை தேடி வருமட்டு மோர்கவி வந்த தென்று வரைந்து வழுத்துவன் சாலை நீடிய பாப்பாங் குளத்துக்குத் தக்க சொக்கலிங் கக்கவி ராயனே”
என்னும் பழைய தனிப்பாடலை அங்கே உள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்லி இவரை மிகவும் பாராட்டினார். சில நாள் இருந்து இவருடன் சல்லாபம் செய்துவிட்டுச் சென்றார். இப்படியே வரும் பொழுதெல்லாம் இவரோடிருந்து இவருடன் பழகி இவரது கவித் திறத்தைப் பாராட்டிச் செல்லுவார்.
திருவாவடுதுறைக் கந்தசாமிக் கவிராயர் இவர் பாடும் நூல்களிற் பங்கு கேட்டது
இவர் புராணங்களைப் பாடி வரும்பொழுது இயல்பாகவே முன்பு திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்த கந்தசாமிக் கவிராயரென்பவர், “நீங்கள் பாடும் புராணத்திற் சில பாகத்தை என்னிடம் கொடுத்தால் நான் பாடி முடிப்பேன். இந்த இடத்திலேயே காத்துக் கொண்டிருக்கும் என் பெயரும் பிரகாசப்படுவதற்கு வழியாகும்” என்று வற்புறுத்திப் பலமுறை கேட்டுக் கொண்டே வந்தார். இவர் நேரில் மறுப்பதற்குத் துணியாமல், “ஆயிரக் கணக்கான பாடல்கள் அமையக்கூடிய புராணமாக இருந்தால் உங்களுக்கும் சில பாகங்களைப் பகிர்ந்து கொடுப்பேன். இவை நூற்றுக்கணக்கான பாடல்களாற் செய்யப்படுவனவே. ஆகையால் என்னுடைய நாவின் தினவைத் தீர்ப்பதற்கே போதியனவாக இல்லை. உங்களுக்குப் புராணம் செய்யும் விருப்பம் இருந்தால் வேறே ஒரு ஸ்தலத்திற்குத் தனியாகச் செய்யலாமே” என்பார். அவர் பின்னும் வற்புறுத்துவார். இவர் இவ்வாறே விடையளிப்பார். அவர், “நான் வருந்திக்கேட்டும் கொடுக்கவில்லை” என்று அயலிடங்களிற் சென்று குறை கூறுவர். இவ்வாறு அவர் கேட்பதும் இவர் விடை கூறுவதும் அடிக்கடி நிகழும்.
இங்ஙனம் நிகழ்ந்துவருங் காலத்தில் ஒருநாள் பகற் போசனத்தின் பின் இவர் மடத்தின் முகப்பிலிருந்து பலருடன் பேசிக் கொண்டிருக்கையில் கந்தசாமிக் கவிராயர், தமக்குத் தெரிந்தவர் பலர் அங்கே இருப்பதைக் கண்டார். இது தான் கேட்பதற்கு நல்ல சமயமென்றெண்ணி வந்து வழக்கம்போற் பாடுவதிற் பங்கு கேட்டார். கேட்டபொழுது அங்கே இவரைப் பார்த்தற்கு வந்திருந்த சேற்றூர்க் கந்தசாமிக் கவிராயர், ‘இந்தப் போராட்டத்தை இப்பொழுதே எவ்வாறேனும் நாம் ஒழித்துவிட வேண்டும்’ என்றெண்ணி அவரை நோக்கி, “நீங்கள் என்ன என்ன நூல்கள் படித்திருக்கிறீர்கள்?” என்று விசாரித்துக் கடினமான சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அவர் தெளிவாக விடைகூற மாட்டாமல் விழித்துக்கொண்டேயிருந்தார். சேற்றூர்க் கவிராயர் பின்னும் அவரைப் பார்த்து, “பிள்ளையவர்களுக்கும் உங்களுக்கும் படிப்பிற் பலவகை வேறுபாடுகள் உண்டு. அவ்விஷயத்தை நீங்கள் அறிந்துகொள்ளாமல் இவர்களைக் காணும் பொழுதெல்லாம் இந்த வண்ணம் துன்புறுத்துவது சிறிதும் நன்றாயில்லை. உங்களுடைய நிலைமையை நீங்களறியாமல் இவர்களை ஏன் நோவச் செய்கிறீர்கள்? உங்களுக்கு இயற்கையில் திறமை இருந்தால் எத்தனையோ விதத்தில் அதனை வெளிப்படுத்தலாமே. இனி இவ்வாறு இவர்களிடம் வாக்குவாதம் செய்தால் ஸந்நிதானத்தினிடம் விண்ணப்பம் செய்துவிடுவேன்” என்றார். ஸந்நிதானத்தினிடம் தெரியப்படுத்துவதாகச் சொன்ன வார்த்தைதான் அவர் மனத்தைக் கலக்கிவிட்டது. பழைய காலத்து மனிதராகிய அவர் இயற்கையிலேயே பயந்தவர். கடிந்து பேசுவாரின்மையாற் பிள்ளையவர்களிடம் அவ்வளவு காலம் போராடினார். இந்தச் சேற்றூர்க் கவிராயர் எங்கிருந்தோ முளைத்து, ‘ஸந்நிதானம்’ என்று பயமுறுத்தினால் அவர் அஞ்சமாட்டாரா? “இனி இந்த வழிக்கே வருவதில்லை; என்னை விட்டுவிடுங்கள்” என்று சொல்லிப் போய்விட்டார். அதுமுதல் இந்த விஷயத்தைப்பற்றிக் கேட்பதற்குப் பிள்ளையவர்களிடம் வருவதை அவர் நிறுத்திக்கொண்டார்.
இரக்தாட்சி வருஷம் (1864) வைகாசி மாதம் இரண்டாந் தேதி திருவாவடுதுறையாதீனம் காறுபாறு கண்ணப்பத் தம்பிரானவர்களுக்கும் இவருக்கும் அம்பலவாண தேசிகரவர்களால் நிர்வாண தீக்ஷை (தீக்ஷைக் குறை) நடந்தேறியது.
பந்தர்ப் பாட்டு
அப்பொழுது மடத்திற் சிலநாள் காறுபாறாயிருந்த ஒருவர் பிள்ளையவர்களிடத்தில் அழுக்காறும் விரோதமும் உள்ளவராக இருந்தார். அதற்குக் காரணம் மடத்தில் இவருக்கு அதிக உபசாரம் நடந்துவருதலும், வருபவர்கள் தம்மைப் பாராட்டாமல் இவரைப் பாராட்டி வந்தமையுமே. அது பற்றி இவருக்கு ஆக வேண்டிய காரியங்கள் சுப்பிரமணிய தேசிகருடைய கட்டளையின் படியே நடைபெறும். இவர் இருந்த விடுதியின் முற்றம் விசாலமாக இருந்தமையால் கோடைக்காலத்து வெப்பம் தாங்க முடியாமல் இருந்தது. அது பற்றி ஒரு பந்தர் போட்டுக் கொடுக்கும்படி கட்டளையிட வேண்டுமென்று இவர் விண்ணப்பித்துக் கொண்டார். அப்படியே சுப்பிரமணிய தேசிகருடைய உத்தரவினால் கீற்று, பந்தர்க்கழி முதலியன மெய்க்காட்டுக் கணக்குப் பிள்ளையால் கொணர்ந்து சேர்க்கப்பட்டன. அதை எப்படியோ தெரிந்து கொண்டு மேற்கூறிய அதிகாரி தம்முடைய அனுமதியில்லாமல் இச்செயல் நிகழ்ந்துவிட்டதேயென நினைந்து ஏதோ ஒரு காரணத்தைக் காட்டிக் கீற்று முதலியவற்றை எடுத்துப் போகும்படி செய்துவிட்டார். அது தெரிந்த பிள்ளையவர்கள் மனவருத்தமுற்றுப் பின்வரும் பாடலை இயற்றிச் சுப்பிரமணிய தேசிகருக்கு விண்ணப்பம் செய்யும்படி ஒரு மாணாக்கரை அனுப்பினார்:-
“மந்தரச் சிகரி *21 நீலிமா வனத்து வாகீசர் வரவுதேர்ந் திடைநீ பந்தரொன் றமைத்துப் பொதியுண வளித்த பான்மைதேர்ந் தீண்டிருப் பேனுக் கிந்தவெங் கோடை தனிற்பந்தர்க் காக எய்திய பொருள்கணீங் கியவென் சுந்தரத் துறைசைச் சுப்பிர மணிய தூயதே சிக்குணக் குன்றே.”
இதைப் பார்த்த உடனே சுப்பிரமணிய தேசிகர் இன்னாரால் ஏற்பட்டிருக்குமென்று நினைத்து, மெய்க்காட்டுக் கணக்குப் பிள்ளையை அழைத்து வரச் செய்து, “இந்த நிமிஷமே பிள்ளையவர்களுடைய விடுதியின் முற்றத்தில் பந்தரைப் போட்டுவிட வேண்டும்; இல்லையெனில் உமக்குக் கட்டளையிட்டவருடைய வேலை நிலைபெறாதென்று அவருக்கு அறிவியும்” என்று கட்டளையிட்டார். பின்னர் வெகுசீக்கிரத்திற் பந்தர் போடப்பட்டது.
ஒருமுறை திருவாவடுதுறைக்கு ஆறுமுக நாவலர் வந்திருந்தபொழுது மடத் திற் படித்துக்கொண்டிருந்த நமச்சிவாயத் தம்பிரானைக் கண்டு, “அங்குத்தி பிள்ளையவர்களிடம் பல நூல்களைப் பாடங்கேட்டுக் கொள்ளவேண்டும். அவர்கள் இங்கே இருப்பது பெரும்பாக்கியம். அவர்களைப்போல இப்பொழுது பாடஞ் சொல்பவர்கள் இல்லை” என்று சொல்லிப் போனார்.
கோயிலூர்ப் புராணம்
இவருக்கு அடிக்கடி நேரும் பொருள் முட்டுப்பாட்டினால் இவர் வருந்துவதை இவரிடம் பாடங்கேட்டுவந்த தேவிகோட்டை நாராயண செட்டியார் அறிந்து இவருக்கு எவ்வகையிலேனும் பொருள் வருவாய் கிடைக்கும் வண்ணம் செய்விக்க வேண்டுமென எண்ணினார். பாண்டிநாட்டில் நகரவட்டகையிலுள்ள சிவ ஸ்தலங்கள் சிலவற்றிற்கு இவரைக் கொண்டு புராணம் இயற்றுவிக்கலாமென்றும் அங்கங்கேயுள்ள பிரபுக்களைக் கொண்டு அவை காரணமாக இவருக்குத் தக்க பரிசில்கள் கொடுக்கச் செய்யலாமென்றும் நிச்சயித்து அதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்து வருவாராயினர். நகர வைசியப் பிரபுக்கள் இக்கவிஞர் கோமானது பெரும் புகழை அறிந்திருந்தவர்களாதலின் நாராயண செட்டியாருடைய முயற்சிகள் பயனுற்றன. அப்பொழுது கோயிலூர் வேதாந்தமடத்துத் தலைவராக இருந்த ஸ்ரீ சிதம்பர ஐயாவின் விருப்பப்படி கோயிலூர்ப் புராணம் இவராற் பாடப்பெற் றது. இவரைக் கோயிலூருக்கு வருவித்துத் தக்கவர்கள் கூடிய சபையில் அந்நூலை அரங்கேற்றுவித்து ஸ்ரீ சிதம்பர ஐயா இவருக்கு உயர்ந்த சம்மானம் செய்ததன்றிப் பலவகையான உதவிகளும் செய்வித்தார்.
கோயிலூரிலிருந்து திருவாவடுதுறைக்கு வந்தவுடன் மடத்திலிருந்த சில தம்பிரான்கள் அப்புராணத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டபொழுது அதனை ஆக்குவித்தோராகிய சிதம்பர ஐயாவைச் சிதம்பர தேசிகரென்று கூறியிருத்தலை அறிந்தார்கள்; “சைவரும் இந்த மடத்து வித்துவானுமாகிய இவர் அவரைத் தேசிகரென்று சொல்லுதல் முறையா? பணங்கொடுத்தால் வித்துவான்கள், யாரையும் எப்படியும் புகழ்வார்கள்” என்று தம்முள் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனைச் சிலராலறிந்த இப்புலவர் கோமான் அவர்களுள் முக்கியமானவரைச் சந்தித்த பொழுது, “இந்த மாதிரி அங்குத்தி சொல்லிக்கொண்டிருந்ததுண்டோ?” என்று கேட்டார். “ஆம்” என்றார் அவர். இவர், “பதினோராவது நிகண்டு ஞாபகத்தில் இருக்கின்றதா? தேசிகனென்பதற்கு அதிற் பொருளென்ன கூறியிருக்கிறது?” என்று கேட்டார். அவர், “தேசிகன் வணிக னாசான்” என ஒப்பித்தார். “அந்த நிகண்டின் பொருளைத்தான் நானும் பின்பற்றிச் சொல்லியிருக்கிறேன். அடியேன் சொன்னதில் ஒன்றும் தவறில்லையே” என்றார் இவர். அவர் இக் கவிஞர்பிரானது சமத்காரமான விடையைக் கேட்டு ஒன்றும் கூற இயலாமல் வறிதே சென்றார். அன்று முதல் யாரும் இவ் விஷயத்தைப் பற்றிக் குறைகூறுவதில்லை.
கோயிலூரென்பது சமிவனம், கழனியம்பதி, வன்னிவனம், சாலிவாடி, ஸ்ரீவல்லபமெனவும் வழங்கும். இத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் திருநாமங்கள் திரிபுவனேசர், கொற்றவாளீசர், கழனிநாதரென்பன. அம்பிகையின் திருநாமங்கள் திரிபுவனேசை, நெல்லைநாயகி யென்பன. இத்தலத்து விருட்சம் வன்னி.
இந்நூலைச் செய்வித்தவர் சிதம்பர ஐயாவென்பது,
“தூயமுத்தி ராமலிங்க தேசிகன்பே ரருள்பெற்றோன் சுகுண ஞானம் மேயவரு ணாசலதே சிகனவன்பா லருள்பெற்று விளக்கஞ் சான்ற பாயபுகழ்ச் சிதம்பரதே சிகன்கேட்க வுயர்கழனிப் பதிப்பு ராணம் வாயமையப் புனைந்துரைத்தான் மீனாட்சி சுந்தரநா வலன்மிக் கோனே” வேறு “திகழ்தருசின் மயரூப சிதம்பரதே சிகன்மொழிய இகழ்தருத லிலாதவன்சொ லேற்றபெரும் புண்ணியத்தாற் புகழ்தருமிப் புராணத்தைப் பாடினேன் புன்மையெலாம் அகழ்தருபே ரறமுதல யாவுமடைந்த தனன்யானும்”
என வரும் செய்யுட்களால் அறியப்படும்.
சிதம்பர ஐயாவின் விருப்பத்தின்படி வடமொழியிலுள்ளவாறே இந்நூலுள் வேதாந்த விஷயங்கள் அங்கங்கே பலவகையில் அமைக்கப்பெற்றன.
அப் புராணத்துப் பாடல்களுட் சில வருமாறு:-
ஸ்ரீ நமச்சிவாயமூர்த்தி துதி “கண்ணிய பிறப்பை யாருங் கரிசென வெறுப்பர் மேலோர் அண்ணிய சிறப்பான் மிக்க வாவடு துறைக்கண் மேய புண்ணிய நமச்சி வாய குருபரன் பொற்றாள் போற்ற நண்ணிய பிறப்பை நாயேன் வெறுப்பது நன்றாங் கொல்லோ.” மழை பெய்தலும் பயிர் செழித்தலும் வேறு ''மழையெ னப்படுந் தேசிகன் றிங்கண்மும் மழையாம் விழையு முப்பதப் பொருளினை விருப்பொடு பொழியக் குழைத ரப்படு கோடையா மவித்தைபோய்க் குலைந்து தழையு யிர்ப்பயிர் தம்மியல் படைந்தன மாதோ.” உழவர்கள் வயலின் வரம்பை அரிந்து உயர்த்தல் வேறு “எத்துணைநூல் கொளுத்திடினு மேற்கும்வலி யுண்டாதற் கொத்தபெருங் *22 கட்டளைமுன் னேற்றிவலி யுறுத்துதல்போல் எத்துணைநீர் பாய்த்திடினு மேற்கும்வலி யுண்டாதற் கொத்தகுலைக் கங்கரிந்தாங் கேற்றிவலி யுறுப்பரால்.” களைபறித்தல் “மிடிகெடுக்கும் பயிர்க்கூறாய் மேவியமுண் டகமாம்பல் கடிகெடுக்குந் தன்மையிலாக் கருநீல முதல்யாவும் வடிகெடுக்குங் கருங்கண்ணார் வயலினிடைக் களைந்தெறிந்தார் குடிகெடுக்கு மிராகாதிக் குற்றங்கள் களைவார்போல்.” நகர வணிகரின் இயல்பு வேறு “பொருளினை யீட்டும் போது புத்திரர் முதலோர்க் கென்று மருளுற வீட்டா நிற்கு மடமையோர் நாணுக் கொள்ளத் தெருண்மிகு மன்ன தானஞ் சிவாலய தரும மேற்றோர் வெருண்மிடி யகற்றற் கென்றே யீட்டுவர் விரும்பி நாளும்.” மடத்தின் சிறப்பு “தெளிதரு புகழ்வே தாந்த சிரவணந் திருந்தச் செய்தே ஒளிதரு மனன மாதி யிரண்டினு முரவோ ராகிக் களிதரு பவஞ்ச முற்றுங் கான்றிடு சோற்றிற் கண்டு வெளிதரு பிரம மேயாய் மேவுவார் மடமொன் றுண்டால்.” இலக்கண வமைதி வேறு “கிழக்கிருந்து மேற்கேகிக் கெழுமநடத் தியநாஞ்சில் வழக்கமிகு தெற்கிருந்து வடக்கேக நடத்திடுவார் பழக்கமிகு சுழிகுளமென் றெடுத்திசைக்கு மொருபாவை முழக்கமிகு பெரும்புலவர் மொழிந்துநடத் துதல்பொருவ.”
இப்புராணத்துள்ள படலம் – 14; திருவிருத்தம், 849; இஃது அச்சிடப் பெற்றுள்ளது.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
13. அரிதகி – கடுமரம்.
14. அரிதகிவனம் – கடுமரவனம்.
15. முளரி – தாமரைமலர், நெருப்பு.
16. மருள் – மயக்கம்.
17. எண்ணமும் அருள்.
18. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 2670-2808.
19. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 1049.
20. இவருடைய தம்பியின் குமாரருக்கும் கந்தசாமிக் கவிராயரென்று பெயருண்டு.
21. நீலிமாவனம் – திருப்பைஞ்ஞீலி.
22. கட்டளை – நானாஜீவவாதக் கட்டளை முதலியன; இச்செய்யுள் அந்த மடத்தின் சம்பிரதாயத்தைத் தழுவி இயற்றப்பெற்றது.
$$$