இருள்

-மகாகவி பாரதி

கடமையைச் செய்- செய்துகொண்டே இரு. இதுவே மகாகவி பாரதியின் இக்கதை உபதேசிக்கும் மந்திரம்.

வித்யா நகரம் என்ற பட்டணத்தில், எண்ணூறு வருஷங்களுக்கு முன் திடசித்தன் என்று ஒரு ராஜா இருந்தான். அவனுடைய பந்துக்களிலே சிலர் விரோதத்தினால் அவனுக்குப் பல தீங்குகள் செய்யலாயினர். ஒரு நாள் இரவில் அவன் நித்திரை செய்யும்போது எதிரிகள் அரண்மனை வேலைக்காரரிலே சிலரை வசமாக்கி உள்ளே நுழைந்து அவன் கால்களைக் கட்டி எடுத்துக் கொண்டு போய் சமீபத்திலிருந்த மலைச்சாரலில் ஒரு குகைக்குள்ளே போட்டு வெளியே வரமுடியாதபடி ஒரு பாறையால் மூடி வைத்து விட்டார்கள். இவ்வளவுக்கு மிடையே அவன் கண் விழிக்காதபடி மூக்கிலே ஒரு மயக்கப் பச்சிலையின் சாற்றைப் பிழிந்து விட்டார்கள்.

நெடுநேரம் கழிந்த பிறகு பச்சிலையின் மயக்கம் தெளியவே அரசன் கண்ணை விழித்துப் பார்க்கும்போது கை, கால்கள் கட்டுண்டு தான் பேரிருளிலே கிடப்பதை உணர்ந்து கொண்டான். எங்கிருக்கிறோம்? என்று சிந்தித்தான். இடம் தெரியவில்லை. நமக்கு யார் இவ்விதமான தீமை செய்திருக்கக் கூடும்? என்று யோசனை செய்து பார்த்தான். ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை. எழுந்து நிற்க முயற்சி செய்தான். சாத்தியப்படவில்லை. தாகம் நாக்கை வறட்டிற்று. கண்கள் சுழன்றன. நெஞ்சு படீல் படீலென்று புடைத்துக் கொண்டது. தெய்வமே என்னைக் கொல்லவா நிச்சயித்து விட்டாய்? என்று கூவினான்.

ஆம் என்றொரு குரல் கேட்டது.

ஆமென்கிறாயே நீ யார்? என்று வினவினான்.

நான் காலன். உன் உயிரைக் கொண்டுபோக வந்திருக்கிறேன் என்று அந்த மறை குரல் சொல்லிற்று.

அப்போது திடதித்தன். நான் யௌவனப் பருவத்தில் இருக்கிறேன். அறிவிலும் அன்பிலும் சிறந்த எனது மனைவியையும், சிங்கக் குட்டி போன்ற என் மகனையும், செழிப்பும் புகழும் மிகுந்த என் நாட்டையும் விட்டுவிட்டு உன்னுடன் வருவதில் எனக்கு ஸம்மதமில்லை. இங்கிருந்து போய்விடு என்றான். மறை குரல் கொல்லொன்று சிரித்தது.

நான் எப்போது கொண்டு போகப்பட்டேன்? என்று திடசித்தன் கேட்டான்.

விடியும் ஒரு ஜாமத்திற்குள்ளே என்று குரல் சொல்லிற்று. இது கேட்ட மாத்திரத்திலே திடசித்தன் அயர்ந்துபோனான். கண்கள் முன்னிலும் அதிகமாகச் சுழன்றன. நெஞ்சு முன்னிலும் விரைவாக அடித்தது. கால்கள் பதறலாயின.

அப்போது அவனுடைய தாய் சொல்லிக் கொண்டிருந்த மந்திரமொன்று நினைப்பு வந்தது. உடனே உச்சரித்தான் தாய் இறந்துபோகும் ஸமயத்தில் அவனை அழைத்து அந்த மந்திரத்தை அவன் காதில் உபதேசம் செய்துவிட்டு, மகனே, உனக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்த சமயத்திலும் நீ இம்மந்திரத்தை உச்சரித்தால் விலகிப் போய்விடும் என்று சொல்லியிருந்தாள்.

இப்போது அதனை உச்சரித்தான். ‘கரோமி’ (செய்கிறேன்) என்பதே அம்மந்திரம். கரோமி, கரோமி, கரோமி என்று மூன்று தரம் சொன்னான்.

காலிலே ஒரு பாம்பு வந்து கடித்தது.

தாயே. உன் மந்திரத்தின் பயன் இதுதானா? என்று அலறினான்.

அஞ்சாதே மந்திரத்தைச் சொல்லு, மந்திரத்தைச் சொல்லு. மந்திரத்தைச் சொல்லு. மந்திரத்தைச் சொல்லு,’ என்று அசரீரி வாக்கு பிறந்தது.

இந்தப் புதிய வாக்கைக் கேட்கும்போது அவனுடைய தாயின் குரலைப் போலே இருந்தது.

கரோமி, கரோமி, கரோமி செய்கிறேன், செய்கிறேன். செய்கிறேன் என்று மறுபடி ஜபிக்கலானான்.

குரு, குரு, குரு (செய்,செய்,செய்) என்றது அசரீரி.

உடனே மூச்சையுள்ளே இழுத்து அமானுஷிகமான வேகத்துடன் கையை உதறினான். கைத்தளைகள் படீரென்று நீங்கின. உடைவாளையெடுத்தான்.

செய், செய், செய், என்று மறுபடி சத்தம் கேட்டது.

பாம்பு கடித்த கால் விரலைப் பளிச்சென்று வெட்டி எறிந்து விட்டான். குரு, குரு, குரு என்ற சத்தம் மீண்டும் கேட்டது.

உடம்பிலிருந்த துணியைக் கிழித்து, மண்ணிலே புரட்டி அதிக கால் ரத்தம் விரலிலிருந்து விழாதபடி சுற்றிக் கொண்டான்.

மறுபடியும் ‘செய்’ என்ற தொனி பிறந்தது. தளைகளை வாளால் வெட்டி விட்டான்.

அப்போது அவனுடைய சரீரத்திலே மறுபடியும் ஆயாஸ முண்டாயிற்று. அப்படியே சோர்ந்து விழுந்தான். ஜ்வரம் வந்து விட்டது. மரணதாக முண்டாயிற்று.

ஐயோ, தாகம் பொறுக்கவில்லையே, என்ன செய்வேன்? என்று புலம்பினான்.

மந்திரத்தை ஜபம் பண்ணு என்றது அசரீரி.

கரோமி, கரோமி, கரோமி என்று தாய் மந்திரத்தை மறுபடி ஜபித்தான்.

செய் என்று கட்டளை பிறந்தது.

என்ன செய்வது? என்றேங்கினான்.

சோர்வடையாதே. செய்கை செய் என்றது தொனி.

என்ன செய்வது?’ என்று பின்னொரு முறை கேட்டான்.

கல்லிலே முட்டு என்று கட்டளை பிறந்தது.

எழுந்து வந்து குகையை மூடியிருந்த பாறையிலே போய் முட்டினான். மண்டையுடைந்து செத்தால் பெரிதில்லையென்று துணிவு கொண்டு செய்தான். மண்டையுடையவில்லை குகையை மூடிச் சென்றவர்கள் அவஸரத்திலே அந்தக் கல்லை மிகவும் சரிவாக வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். பாறை சரிந்து கீழே விழுந்துவிட்டது. வெளியே வந்து பார்த்தான். சூர்யோதயம் ஆயிற்று, கரோமி, கரோமி, கரோமி; செய்கிறேன், செய்கிறேன் செய்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டு தனது ராஜதானி போய்ச் சேர்ந்தான். பிறகு அவனுக்கோர் பகையுமில்லை.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s