தராசு கட்டுரைகள்- 6

-மகாகவி பாரதி

6. சுதேசமித்திரன் 29.05.1916

தராசுக் கடையின் வெளிப்புறத்திலே சில தினங்களின் முன்பு பின்வரும் விளம்பரம் எழுதி ஒட்டப்பட்டது.

இங்கு நீடித்த விலைமதிப்புள்ள சாமான் மாத்திரமே நிறுக்கப்படும். விரைவிலே அழிந்து போகக்கூடிய, விலை குறைந்த சாமான்கள் நிறுக்கப்பட மாட்டா.

இந்த விளம்பரத்தைப் படித்துவிட்டு, ஜிந்தாமியான் சேட் என்னிடத்தில் வந்து,  ‘உமது வியாபாரத்திலே கொள்கைகளும், சிந்தனைகளும், மனோதர்மங்களுந்தானே சரக்கு? இதில், நீண்ட மதிப்புடையதென்றும், விரைவில் அழிந்து போகக்கூடிய வஸ்து வென்றும் பிரிந்ததெப்படி? மனதைப் பற்றிய விஷயமெல்லாம் நீடித்ததுதானே?’ என்று கேட்டார்.

அறிவுத் துணிவுகள், தர்மக் கொள்கைகள் இவற்றிலும் பொன்னைப் போலே நீடித்து நிற்பனவும், வெற்றிலையைப் போலே விரைவில் அழிவனவும், ஓட்டாஞ்சல்லி போலே பயனற்றனவும் உண்டு என்றேன்.

பயனற்றதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்லும் என்றார்.

சிறையூர் ஜமீந்தார் தர்ம ப்ரசங்கம் என்றேன்.

அதென்ன கதை? என்று சேட் கேட்டார்.

தென்னாட்டிலே சிறையூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கே பழைய காலத்தில் க்ஷத்ரியராக இருந்து இப்போது மாட்சிமை குறைந்து போயிருக்கும் மறக்குலத்திலே பழம்புலித் தேவர் என்ற ஒரு ஜமீன்தார் இருக்கிறார். அவர் சிறிது காலமாக தர்மோபதேசம் செய்யத் தொடங்கி, ‘மூச்சு விடத் தகுதியுள்ளவர் யார், தகுதியில்லாதவர் யார்? பல்நகம் தரிக்கத் தக்கோர் யார், தகாதோர் யார்?’ என்ற விஷயங்களைப் பற்றி உபந்யாசங்கள் செய்து வருகிறார். இதுபோன்ற வீண் சங்கதிகளை நமது தராசு கவனிக்க மாட்டாது என்றேன்.

நேற்றுக் காலை, தராசுக்கடைக்கு வெளி ஜனங்கள் யாரும் வரவில்லை. ஜிந்தாமியான் சேட் வந்து உட்கார்ந்தார். வழக்கம் போல வேடிக்கை பார்க்க வந்தாரென்று நினைத்தேன்.

சேட் ஸாஹேப், என்ன விசேஷம்? என்று கேட்டேன்.

தராசினிடம் சில கேள்விகள் கேட்க வந்தேன் என்றார்.

சரி கேளும் என்றேன்.

தர்ம ப்ரசங்கம் செய்யத் தகுதியுடையோர் யார்? என்று கேட்டார்.

தராசு சொல்லிற்று:- கலங்காத நெஞ்சுடைய ஞான தீரர்.

அப்படியில்லாதோர் தர்ம ப்ரசங்கம் செய்யத் தலைப்பட்டாலோ? என்று சேட் கேட்டார்.

தராசு மற்றோர் அதை கவனிக்கக் கூடாது என்றது.

பிறகு ஜிந்தாமியான்:- “ஆண்களுக்கு விடுதலையைப் பற்றிப் பேசலாமோ?”

தராசு:- “பேசலாம்.”

சேட்:- “முயற்சி கைகூடுமா?”

தராசு:- “தொடங்குமுன்னே எந்த முயற்சியும் கைகூடுமோ கூடாதா என்று ஜோதிஷம் பார்ப்பதிலே பயனில்லை; தொடங்கி நடத்தினால் பிறகு தெரியும்.”

சிறிது நேரம் ‘சும்மா‘யிருந்துவிட்டு, ஜிந்தாமியான் மறுபடி பின்வரும் கேள்வி கேட்டார்:-

“வருகிறேனென்று சொல்லி வாராதவர்களையும் தருகிறேனென்று சொல்லித் தாராதவர்களையும் என்ன செய்யலாம்?”

தராசு, “சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி” என்றது.

“விளக்கிச் சொல்லு” என்று சேட் வற்புறுத்தினார். தராசு சொல்வதாயிற்று:-

தருகிறேனென்று சொல்லும்போதே பின்னிட்டுத் தம்மால் கொடுக்க முடியாதென்பதை அறிந்துகொண்டு சொல்வோர் புழுக்கள். அவர்களைப் படுக்கவைத்துக் கைகால்களைக் கட்டி மேலே ஒரு மூட்டை கட்டெறும்பைக் கொட்டிக் கடிக்கவிட வேண்டும். தருகிறேனென்று சொல்லும்போது உண்மையாகவே கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சொல்லிவிட்டுப் பின்பு சௌகர்யமில்லாமையால் கொடுக்காதிருப்போர் முன்யோசனையற்றவர்கள். இவர்களை நல்ல சவுக்கினால் இரண்டடி அடித்துவிட்டுப் பின் முகதரிசனமில்லாமல் இருக்க வேண்டும். வருகிறேனென்று சொல்லி வராதவர்களையும், இதைப்போலவே இரண்டு பகுதிகளாக்கிக் குற்றத்திற்குத் தக்கபடி சிட்சை விதிக்க வேண்டும்.”

இதைக் கேட்டு ஜிந்தாமியான் சில நிமிடங்கள் வரை ஒன்றும் பேசாமல் யோசனை செய்து கொண்டிருந்தார். பிறகு நான் அவரை நோக்கி, “இன்னும் ஏதேனும் கேள்வியுண்டா?” என்றேன். “ஒன்றுமில்லை” என்று சொல்லி விட்டார்.

* *

தராசைக் கட்டி உள்ளே வைத்து விட்டுக் கடையை மூடிய பிறகு நானும் ஜிந்தாமியான் சேட்டும் வீட்டுக்குத் திரும்பினோம். வரும் வழியிலே நான் சேட்டைப் பார்த்து சேட் சாஹேப், ‘வருகிறேனென்று வாராதவர், தருகிறேனென்று தராதவர்’ என்பதாக ஏதோ நீண்ட கேள்வி கேட்டீரே; மனதில் எதை வைத்துக்கொண்டு கேட்டீர்? என்றேன்.

சேட் மறுமொழி சொல்லாமல் புன்சிரிப்புச் சிரித்தார்.

வியாபார விஷயமோ? என்றேன்.

இல்லை என்று தலையை அசைத்தார்.

குடும்ப விவகாரமோ? என்றேன்.

மறுபடியும் இல்லை என்றார்.

அப்படியானால் விஷயந்தானென்ன? சொல்லுமே என்றேன்.

சேட் பின்வரும் கதை சொல்லலானார்:-

ஒரு வாரத்துக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு ஒரு தமிழ்ப் பரதேசி வந்தான். எனக்கு இந்தப் பரதேசிகளிடம் நம்பிக்கை கிடையாது. எங்கள் மாமா ஒரு கிழவர் இருக்கிறாரே, அவருக்கு பயித்தியம் அதிகம். அவருடன் நெடுநேரம் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தான். நானும் பொழுது போக்குக்காக சமீபத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு மணிநேரத்துக்குள், மாமா மனதில் இந்தப் பரதேசி பெரிய யோகியென்ற எண்ணம் உண்டாய்விட்டது. கதையை வளர்த்துப் பிரயோஜனமில்லை. நம்பக் கூடாத, சாத்தியமில்லாத, அசம்பாவிதமான இரண்டு மூன்று சாமான்கள் மூன்று தினங்களுக்குள் கொண்டு வருவதாகச் சொல்லி, அவரிடமிருந்து ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு போய்விட்டான். குறிப்பிட்ட நாளில் வரவில்லை. அதை நினைத்துக்கொண்டு கேட்டேன்.

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

உஸ், சேட் சாஹேப், யாரிடத்திலே காணும் இந்த மூட்டை அளக்கிறீர்? ஐம்பது ரூபாய், பரதேசி, பாட்டி கதை. சம்மதமுண்டானால் மனதிலுள்ளதைச் சொல்லும். இல்லாவிட்டால், சௌகர்யப்படாதென்று சொல்லிவிடும் என்றேன்.

சேட் சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, உம்முடைய தராசுக்குப் புத்தியில்லை. என் மனதிலிருந்ததை சரியாகக் கண்டுபிடித்து மறுமொழி சொல்லவில்லை. நானும் அதை உம்மிடத்திலே சொல்ல முடியாது. வேண்டுமானால் தராசையே கேட்டுத் தெரிந்து கொள்ளும் என்றார்.

நான் சிறிது நோயுடன், “தராசு பிறர் மனதிலிருப்தைக் கண்டு சொல்லாது. நேரே கேட்டால் நேரே மறுமொழி சொல்லும்” என்றேன். “அப்படியானால் அடுத்த வியாழக்கிழமை வந்து சரியானபடி கேட்கிறேன்” என்று சொல்லிப் பிரிந்து விட்டார் . விஷயம் போகப் போகத் தெரியும்.

  • சுதேசமித்திரன் (29.05.1916)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s